தமிழ்ச் சினிமாவுலகில் ஏற்கெனவே தயாரிப்பாளர்களுக்காக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இருக்கிறது. கூடவே கில்டு எனப்படும் டிவி – சினிமா தயாரிப்பாளர்கள் சங்கமும் இருக்கிறது. இந்த இரண்டு சங்கங்களில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினர் ஆனாலே, கோடம்பாக்கத்தில் படத் தயாரிப்பில் இறங்கிவிடலாம்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக கட்டணம் 1 லட்சம் என்பதால் மிகக் குறைந்த பட்ஜெட் தயாரிப்பாளர்கள் பலரும் கில்டு அமைப்பில்தான் உறுப்பினர்களாக சேருகிறார்கள். அங்கே உறுப்பினர் கட்டணம் 6500 ரூபாய்தான் வரும்.
இப்போது இந்த இரண்டு சங்கங்களையும் தவிர்த்து மூன்றாவதாக, ‘தமிழ் இலக்க திரைப்பட, குறும்பட மற்றும் ஆவணப்பட தயாரிப்பாளர்கள் நல சங்கம்’ என்ற பெயரில் புதிய அமைப்பும் தொடங்கப்பட்டு இருக்கிறது. இது முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் மிகக் குறைந்த செலவில் மூன்று வகை படங்களையும் தயாரிக்க வரும் தயாரிப்பாளர்களுக்கானதாம்.
தயாரிப்பாளர் – விநியோகஸ்தர்- டைரக்டர் மற்றும் நடிகரான ‘கலைப்புலி’ ஜி.சேகரன் இந்த அமைப்பின் தலைவராக உள்ளார், துணைத் தலைவராக பூபதிராஜா, செயலாளராக ஆறுமுகம், துணைச் செயலாளராக செல்வகுமாரன், பொருளாளராக அன்பழகன் ஆகியோர் இருக்கின்றனர்.
“ஏற்கெனவே 2 சங்கங்கள் இருக்கின்ற நிலையில் இப்போது 3-வதாக இந்தச் சங்கமும் எதற்கு..?” என்று தலைவர் கலைப்புலி சேகரனிடம் கேட்டோம்.
அதற்கு, “இப்போவெல்லாம் 30 லட்சம், 40 லட்சத்துல சின்ன பட்ஜெட்ல.. டிஜிட்டல்ல படம் எடுக்க நிறைய பேர் வர்றாங்க. ஆனா அவங்களுக்கு சரியான கவுன்சிலிங் இல்லை. வழிகாட்டுதல் இல்லை.. இந்த மாதிரி படங்களுக்கு எந்த மாதிரியான கேமிராக்களை பயன்படுத்தணும்.? அந்த கேமிராக்கள் எங்க வாடகைக்குக் கிடைக்கும்..? அது பற்றிய நடைமுறைச் சிக்கல்கள் என்ன..? சின்ன பட்ஜெட் படங்களுக்கு எத்தனை நாள்ல ஷூட்டிங் எடுக்கணும்..? ஆர்ட்டிஸ்ட்டை எப்படி செலக்ட் செய்றது..? இப்படி எதுவுமே தெரியாமல் நிறைய பேர் உள்ள வந்து மாட்டிக்கிட்டு போட்ட பணத்தை திருப்பியெடுக்க முடியாமல் அப்படியே திரும்பிப் போயிடறாங்க. அவங்களுக்காகத்தான் இந்தச் சங்கத்தை ஆரம்பிச்சிருக்கோம்..
எங்க சங்கத்துல சேரும்போது அனைத்து உறுப்பினர்களுக்கும் நாங்க கிளாஸ் எடுப்போம். வழிமுறைகளை வகுத்துக் கொடுப்போம். எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வோம். டிஜிட்டல் புரட்சியை உண்மையாகவே இன்றைய இளைய சமுதாயத்தினர் உணர்ந்து பயன்படுத்திக் கொள்ளும்வகையில் எங்களுடைய வழிகாட்டுதல் இருக்கும்..” என்கிறார் கலைப்புலி சேகரன்.
மேலும், “குறும்படம் எடுப்பவர்கள், மற்றும் ஆவணப் படம் எடுப்பவர்களுக்கும் சினிமா உலகின் நடைமுறைச் சிக்கல்களை பற்றிச் சொல்லி அவர்களது வேலையை இலகுவாக்கித் தரவும் எங்களது சங்கம் முனைந்துள்ளது. இந்தச் சங்கத்தில் குறும்படம் மற்றும் ஆவணப் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களும் இணையலாம். அவர்கள் விருப்பப்படும் நபர்களை வைத்து வேலை செய்யும் உரிமையை எங்களது சங்கத் தயாரிப்பாளர்களுக்கு எமது சங்கம் பெற்றுக் கொடுக்கும்..” என்கிறார்.
இந்தச் சங்கத்தில் இணைந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. பிலிம் சேம்பர் தலைவர் கல்யாண், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் ஆகியோர் அடையாள அட்டைகளை உறுப்பினர்களுக்கு வழங்கினார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத்தலைவர் டி.ஜி.தியாகராஜன், செயலாளர் ஞானவேல்ராஜா, பொருளாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் கே.முரளிதரன், பிலிம் சேம்பர் பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன், விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் அருள்பதி, கில்டு துணைத் தலைவர் குட்டி பத்மினி, செயலாளர் ஜாகுவார் தங்கம், பொருளாளர் நந்தகோபால் செட்டியார், பட அதிபர்கள் கே.ராஜன், சித்ராலட்சுமணன், விஜயமுரளி ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள்.
இந்தச் சங்கத்தில் சேர்வதற்கான நுழைவுக் கட்டணம் 6250 ரூபாய். தொடர்புக்கு கலைப்புலி ஜி.சேகரன், 9566253636.









