உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, இந்திய நேரப்படி இன்று காலை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
இன்றைய 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹாலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.
இந்த விருது விழாவில் ‘Dune’ திரைப்படம் சிறந்த தயாரிப்பு, வடிவமைப்பு, ஒளியமைப்பு, விஷுவல் எபக்ட்ஸ் உள்ளிட்ட 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
இந்த ‘Dune’ திரைப்படத்தில் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிக்காக நமித் மல்கோத்ரா என்ற இந்தியருக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இந்தியரான இவரது நிறுவனம் வாங்கும் 7-வது ஆஸ்கர் விருது இதுவாகும்.
மும்பையைச் சேர்ந்த இவர் ஹாலிவுட்டில் ‘DNEG’ என்ற பெயரில் visual effects மற்றும் animation நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் இதுவரையிலும் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
‘டெனெட்’(2021), ‘ஃபர்ஸ்ட் மேன்’(2019), ‘பிளேட் ரன்னர் 2049’(2018), ‘எக்ஸ் மெஷினா’(2016), ‘இன்டர்ஸ்டெல்லர்’(2015) மற்றும் ‘இன்செப்ஷன்’(2011) ஆகிய படங்களில் சிறப்பான விஷூவல் எபெக்ட்ஸ் செய்தமைக்கான ஆஸ்கர் விருதுகளை இவருடைய நிறுவனம் பெற்றுள்ளது.
இப்போது 7-வது முறையாக இந்த ‘Dune’ படத்திற்கும் இவரது நிறுவனத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைபோட்டு வரும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்திலும் நமித் மல்கோத்ரா பணியாற்றியுள்ளார். மேலும் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் உருவாகி வரும் ‘பிரம்மாஸ்திரா’ படத்திற்கும் இவரது நிறுவனம்தான் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.









