கபடி விளையாட்டை மையமாக வைத்து பல படங்கள் வந்துவிட்டன. ஆனால், லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் வெளியாகும் ‘பட்டத்து அரசன்’ அதே கபடி விளையாட்டில் இருக்கும் நாம் இதுவரை அறியாத விஷயத்தைச் சொல்கிறது.
இயக்குநர் ஏ.சற்குணம் கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் அதர்வா நாயகனாக நடிக்க, நாயகியாக ஆஷிகா ரங்கநாத் நடித்திருக்கிறார். ராஜ்கிரண் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் ராதிகா சரத்குமார், ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ், துரை சுதாகர், சிங்கம் புலி, ராஜ் அய்யப்பா, பால சரவணன், ஜி.எம்.குமார், கன்னட நடிகர் காளே, தெலுங்கு நடிகர் சதுரு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ‘உஸ்தாத் ஹோட்டல்’ புகழ் லோகநாதன் சீனிவாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இப்படம் குறித்து இயக்குநர் சற்குணம் பேசும்போது, “எப்போதும் ‘பட்டத்து இளவரசன்’ என்றுதான் சொல்வார்கள். ஆனால் நான் ‘பட்டத்து அரசன்’ என்று இந்தப் படத்திற்குத் தலைப்பு வைத்ததற்கு காரணம், அந்த இடத்திற்கு இளவரசனே கிடையாது, அரசன்தான் என்பதாகும். வாலி சார்கூட ஒரு பாடலில் “பட்டத்து ராசாவும் பட்டாள சிப்பாயும்” என்று குறிப்பிட்டிருப்பார். அதையே நானும் எடுத்துக்காட்டாக வைத்துக் கொண்டு இந்தத் தலைப்பை வைத்துள்ளேன்.
தஞ்சை மாவட்டத்தை கதைக் களமாக வைத்து படம் எடுத்திருக்கிறேன், இந்தப் படத்தில் கும்பகோணத்தை கதைக் களமாக வைத்துக் கொண்டு, வெற்றிலைத் தோட்டம் மற்றும் அங்கு நடக்கும் பணிகளை பின்புலமாக வைத்திருக்கிறேன்.
வெற்றிலை தோட்டத்தை இதுவரை எந்தப் படத்திலும் பெரிதாக காட்டியிருப்பதாக தெரியவில்லை, இந்த படத்தில் வெற்றிலைத் தோட்டம் மற்றும் அங்கு நடக்கும் பணிகளையும் காட்சிப்படுத்தியிருக்கிறோம். அதுவும் மக்களுக்கு புதிதாக இருப்பதோடு, சுவாரஸ்யமாகவும் இருக்கும்.
நான் ஒரு கபடி விளையாட்டு போட்டிக்கு சிறப்பு விருந்தினராக சென்றேன். அப்போது அங்கே வந்த அணிகளில் ஒரு அணியில் இருப்பவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். அந்த அணியில், தாத்தா, அப்பா, மகன் என மூன்று தலைமுறையினர் இருந்தார்கள்.
அதைக் கருவாக வைத்து ஒரு படம் என்று தோன்றியது. அந்த கதைக்கும் திரைப்படத்திற்காக என்னவெல்லாம் சேர்க்க முடியுமோ அந்த விஷயங்களை சேர்த்து, விளையாட்டு திரைப்படமாக மட்டும் அல்லாமல் குடும்ப திரைப்படமாகவும் இந்தப் படத்தின் கதையை எழுதியிருக்கிறேன்.
ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் கபடி விளையாடுகிறார்கள். அதுவும் அவர்கள் இருக்கும் ஊருக்கு எதிராக கபடி விளையாடுகிறார்கள். அது ஏன் என்பதுதான் கதை. அந்தக் காரணம் மிக, மிக சுவாரஸ்யமாக இருக்கும்.
இதனுடன், தஞ்சை மாவட்டத்தில் வழக்கத்தில் இருக்கும் தாரம் பாகம் விஷயத்தையும் கதைக்குள் வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறேன். ‘தாரம் பாகம்’ என்பது, ஒருவருக்கு இரண்டு மனைவிகள், ஒரு மனைவிக்கு ஒரு குழந்தை, மற்றொருவருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தாலும், அவருடைய சொத்துக்களை தாரத்தின் அடிப்படையில் இரண்டாகத்தான் பிரிப்பார்கள். அதனால், பல சிக்கல்கள் ஏற்படும். அந்த விஷயத்தையும் இந்த படத்தில் வைத்திருக்கிறேன்.
இது முழுக்க, முழுக்க குடும்பப் படமாகத்தான் இருக்கும். அதில் கபடி விளையாட்டையும் சொல்லியிருப்பதோடு, தாத்தா, பேரன் பாசப் போராட்டத்தையும் சொல்லியிருக்கிறேன். பேரன், தாத்தாவுடன் சேர நினைப்பார். ஆனால் தாத்தா, பேரனை தனது குடும்பத்துடன் சேர விடாமல் தடுப்பார். அதற்கான காரணம், பேரனின் பாசப் போராட்டம் எல்லாமே படத்தில் காரண காரியத்தோடு சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தக் கதையை எழுதியவுடன் என் மனதில் தோன்றியவர் அதர்வாதான். மிகவும் சுறுசுறுப்பான இயக்குநர்களுக்கு ஏற்ற நடிகராக இருக்கிறார். அவர் நல்ல ஒத்துழைப்பை கொடுத்தார். மேலும், அதர்வா – ராஜ்கிரண் என்ற கூட்டணி மிக சிறப்பாக இருக்கும். ராஜ்கிரண் சார் வந்தவுடன் இந்த படம் பெரிய படமாகிவிட்டது.
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் சார், கேட்டதை எல்லாம் கொடுத்து மிகப் பெரிய அளவில் படத்தை தயாரித்திருக்கிறார். மிகப் பெரிய நிறுவனம் என்பதால் செலவுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல், படம் சிறப்பாக வருவதற்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
ஜிப்ரானின் இசை மிகப் பெரிய அளவில் பேசப்படும். நான் படத்தை முடித்து அவரிடம் கொடுத்தபோது அவர்கள் நிறைய நாட்கள் எடுத்துக் கொண்டார். ஆனால், பின்னணி இசை மற்றும் பாடல்களில் ஒரு திருத்தத்தைக்கூட என்னால் சொல்ல முடியவில்லை. அந்த அளவு மிக நேர்த்தியாக செய்திருக்கிறார். அப்போதுதான் புரிந்தது, அவர் ஏன் இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டார் என்று..!
படம் நன்றாக வந்திருக்கிறது. நிச்சயம் இளைஞர்களுக்கான படமாக மட்டும் இன்றி குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு படமாகவும் இருக்கும். குடும்ப செண்டிமெண்ட் ரொம்ப நல்லாவே வந்திருக்கிறது. நிச்சயம் லைகா நிறுவனத்துக்கும், எனக்கும் இந்த படம் வெற்றி படமாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது…” என்றார்.
இந்தப் ‘பட்டத்து அரசன்’ படம் வரும் நவம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.