full screen background image

சினிமா பாடல்களுக்கான ராயல்டி – இசைஞானி இளையராஜாவுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் வழக்கு..!

சினிமா பாடல்களுக்கான ராயல்டி – இசைஞானி இளையராஜாவுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் வழக்கு..!

வரும் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நல உதவிக்காக இசைஞானி இளையராஜாவின் இன்னிசை கச்சேரியும், இளையராஜாவுக்கு பாராட்டு விழாவும் நடைபெறவுள்ள நிலையில்… அதே தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களில் சிலர் சினிமா பாடல்களுக்கான ராயல்டி தொடர்பான பிரச்சினையில் இசைஞானி இளையராஜாவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.

திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள் மற்றும் காட்சிகள் அனைத்தும் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கே சொந்தம் என்றும், தான் இசையமைத்த படங்களில் இடம் பெறும் பாடல்கள் மீது இசைஞானி இளையராஜா உரிமை கொண்டாடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், “மேடை இன்னிசை கலைஞர்கள் சுமார் 1 லட்சம் பேர் இன்றைக்கு மேடைக் கச்சேரிகளில் பாடித்தான் தங்களது பொழப்பை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் எப்படி ராயல்டி தர முடியும்..?

ஒரு காலத்தில் இதே இளையராஜா தன் தம்பி கங்கை அமரனுடன் இணைந்து மேடைகளில் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகியோர் இசையமைத்த பாடல்களை பாடி கச்சேரி நடத்தினார்கள். அப்போது சம்பந்தப்பட்ட இசையமைப்பாளர்களுக்கு இவர்கள் ராயல்டி கொடுத்தார்களா..? இவர்களுக்கு ஒரு நியாயம்.. மற்றவர்களுக்கு ஒரு நியாயமா..?

இந்த ராயல்டி விஷயத்தில் சட்ட அடிப்படையிலோ, அல்லது தார்மீக அடிப்படையிலோ தயாரிப்பாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமையைப் பெற கடைசிவரையிலும் போராடுவோம்.

எக்கோ இசை நிறுவனம் பல ஆண்டுகளாக தயாரிப்பாளர்களுக்குத் தர வேண்டிய ராயல்டியை தராமல் ஏமாற்றி வருகிறது. இந்த விஷயத்தில் நீதிமன்றத்திற்குச் சென்று நீதியை நிலை நாட்டுவோம். உரிமையை பெறுவோம்.

இசைக் கச்சேரிகள், காலர் டியூன், பாடல் ஒளிபரப்புகள் மூலம் வரும் வருவாயில் தயாரிப்பாளர்களான எங்களுக்கும் உரிய பங்கான 50% ராயல்டியை தர வேண்டும்.

இளையராஜா இந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்ததற்கு யார் காரணம்..? அவருக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள்தானே…? அந்த தயாரிப்பாளர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தால் அந்த குடும்பங்களை கண்கொண்டு பாருங்கள். பஞ்சு அருணாச்சலம் அவர்களின் வீட்டிற்கு சென்று பாருங்கள். இது போன்று பல தயாரிப்பாளர்களை என்னால் கூற முடியும்.

ஆயிரக்கணக்கான தயாரிப்பாளர்கள் இப்போது கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மிகவும் நலிந்த நிலையில் உள்ளனர். தயாரிப்பாளர்கள் என்ற முறையில் பாடல்களில் வரும் ராயல்டி அவர்களுக்கும் சென்றடைய வேண்டும். அந்த உரிமையை விட்டுக் கொடுங்கள். நீங்கள் விட்டுக் கொடுத்தால் நாங்கள் இந்த பிரச்னையை விட்டுவிடுகிறோம்.

இளையராஜா மாதந்தோறும் தான் இசையமைத்த படங்களின் தயாரிப்பாளர்களுக்கு ராயல்டி தொகையில் ஒரு பங்கினை வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் அவரை தெய்வமாக வணங்கி, இதிலிருந்து நாங்கள் விலகிவிடுவோம். அப்படி இல்லை என்றால் நாங்கள் ஒன்றிணைந்து போராடுவோம்…” என்றார்.

ilayaraja-selvaraj-panchu arunachalam

இது தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வகுமார், அன்புச்செல்வன், ஜெபஜோன்ஸ், மீரா கதிரவன், மணிகண்டன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், “திரைப்பட தயாரிப்பாளர்கள் ஏதேனும் திரைப்படத்தை எடுக்க முயற்சிக்கும்போது முதலில் இயக்குநரை தீர்மானிக்கின்றனர். பின்பு இயக்குநரின் அறிவுரைப்படி நடிகர் நடிகைகள், இசையமைப்பாளர் மற்றும் பிற தொழில் நுட்ப கலைஞர்களை முடிவு செய்கிறார்கள். கடந்த 80 ஆண்டுகளாக தமிழ்ச் சினிமாவில் இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது

ஊதியம் பெற்று கொண்டு பணியாற்றும் இசையமைப்பாளர்கள் தங்கள் பணிக்காக அதற்கு மேல் எந்த உரிமையும் கோர முடியாது. படத்தில் அவர்களின் பங்களிப்புக்கு முதல் உரிமையாளர் தயாரிப்பாளர்தான். இந்த உரிமையை இந்திய காப்புரிமைச் சட்டம் வழங்கி உள்ளது.

Ilayaraja-04

ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக இசையமைப்பாளர் இளையராஜா, தான் இசையமைத்த படங்களில் இடம் பெற்ற பாடல்களின் முழு காப்புரிமையும் தனக்கே சொந்தம் என்று கூறி வருகிறார்.

இதுவரையிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜாவின் இசையில் சுமார் 5 ஆயிரம் பாடல்கள் வெளியாகி உள்ளன. இந்த பாடல்களின் பாடல் உரிமையும் அந்த பாடல்கள் மூலம் வரும் ராயல்டி தொகை அனைத்து வழிகளும் தனக்கே வர வேண்டும் என்று உரிமை கொண்டாடி வருகிறார் இளையராஜா.

இளையராஜாவை வைத்து ஆரம்ப காலங்களில் பஞ்சு அருணாச்சலம், கே.ஆர்.ஜி., பாலச்சந்தர், பாரதிராஜா இப்படி பல தயாரிப்பாளர்கள் படம் எடுத்துள்ளனர். அவரை வைத்து படம் எடுத்து பாடல்கள் வெற்றி பெற்ற போதிலும் அந்த வருவாய் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்காமலே மாற்றப்பட்டுவருகிறது.

இளையராஜாவின் இசைக்கு முதலீடு செய்த பல தயாரிப்பாளர்கள் மிகவும் கஷ்டமான சூழலில் தற்போது வாழ்ந்து வருகிறார்கள். இளையராஜாவின் பரிந்துரையின்படி பல தயாரிப்பாளர்கள் தங்களது ஆடியோ உரிமையை ‘எக்கோ’ கம்பெனிக்கு வழங்கியுள்ளனர்.

அதில் வரும் ராயல்டியான 50% பங்குத் தொகை இதுவரையிலும் எந்த தயாரிப்பாளர்களுக்கு முறையாக வந்ததில்லை. இனி வரும் காலங்களில் இந்தப் படங்களின் மீதான ராயல்டி உரிமைத் தொகை 25 லட்சம் ரூபாயாவது வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருமானம் படமெடுத்த தயாரிப்பாளர்களுக்குத்தான் வர வேண்டும்.

இதுவரை சுமார் 200 கோடிக்கு மேல் தயாரிப்பாளர்களுக்கு வர வேண்டிய பணம் ஏமாற்றப்பட்டுள்ளது.

இளையராஜாவை இசையமைப்பாளராக நியமித்து படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் காப்புரிமையை அவருக்கு வழங்கி, எந்த ஒப்பந்தமும் போடப்படாத நிலையில் அவர் இசையமைத்த பாடல்கள் மீது அவர் உரிமை கோருவது சட்ட விரோதமானது.

இதை அனுமதித்தால் படத்தின் கதாநாயகன், நகைச்சுவை நடிகர், இயக்குனர் ஆகியோரும் காப்புரிமை கோர நேரிடும். பெரும் தொகையை முதலீடு செய்து படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு இறுதியில் எதுவும் கிடைக்காத நிலை உருவாகும்.

ilayaraja-panchu-mahendiran

எனவே, சம்பந்தப்பட்ட திரைப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களே அந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் காட்சி, பாடல், என அனைத்திற்கு முழுமையான உரிமையானவர்கள் என அறிவிக்க வேண்டும். தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும். திரைப்பட தயாரிப்பாளர்களின் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மூலம் இளையராஜா சம்பாதித்த பணம் குறித்த கணக்குகளை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்…” என்று கோரியிருக்கிறார்கள்.

தற்போது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ளதால் இந்த மனு வரும் ஜனவரி மாதம் விசாரணைக்கு வர உள்ளது.

Our Score