full screen background image

“இசைஞானி இளையராஜா இசையமைத்த படங்களின் முழு பட்டியலையும் தொகுக்க வேண்டும்” – இயக்குநர் கரு.பழனியப்பனின் கோரி்ககை..!

“இசைஞானி இளையராஜா இசையமைத்த படங்களின் முழு பட்டியலையும் தொகுக்க வேண்டும்” – இயக்குநர் கரு.பழனியப்பனின் கோரி்ககை..!

நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்ற ‘ராணி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் கரு.பழனியப்பன் பேசும்போது, “இசைஞானி இளையராஜா இசையமைத்த படங்களின் ஒட்டு மொத்தப் பட்டியலையும் யாரேனும் தொகுத்து அளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

img_1555

விழாவில் இயக்குநர் கரு. பழனியப்பன் பேசும்போது, “நான் யாரிடமும் இதுவரை கோரிக்கைகள் ஏதும் வைத்ததில்லை. ஏனென்றால் கோரிக்கைகள் வைத்தால் ஏதாவது பிரச்சனை வரும், அதனால்தான். ஆனால், இப்போது முதன்முறையாக இசை ஞானி இளையராஜா அவர்களிடம் கோரிக்கை வைக்க போகிறேன்.

சமீபத்தில் யுடியூபில் ஒரு காட்சியை பார்த்தேன். இசைஞானி இசையமைத்த ஒரு பாடலை யுவன்ஷங்கர்ராஜா இசையமைத்து பாடினால் எப்படியிருக்கும் என்று சொல்லி அவரே பாடிக் காட்டியிருக்கிறார். அதைப் பார்த்ததும் அசந்து போனேன். இசைஞானி எக்காலத்திற்கும் பொருந்திய இசையைக் கொடுப்பவர். அவர் ஏன் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் படங்களுக்கெல்லாம் இசையமைக்கவில்லை என்று எனக்கு வருத்தமாகவே உள்ளது.

இசைஞானி, யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கும் கதையம்சம் உள்ள படங்களுக்கு இசையமைக்க வேண்டும். இதுதான் எனது முதல் கோரிக்கை.. ஏனென்றால் பல வருடங்களுக்கு முன்பு அவர் இசையமைத்த பாடல்களைத்தான், நாம் இன்றுவரையிலும் கேட்டு வருகிறோம். அப்படி இருக்கும்போது அவர் இந்த காலகட்டத்துக்கு ஏற்றவாறு இசையமைக்கும்போது, அதை இன்னும் பல ஆண்டுகள் தாண்டியும் அனைவரும் ரசிப்பார்கள் என்பது உறுதி.

முன்பெல்லாம் ஆடியோ கேஸட்டுகளில் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது அப்படியல்ல.. சின்ன மெமரி கார்டே போதுமானது. அதிலேயே பாடல்களை அடக்கி போகும் இடங்களிலெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

அதிலும் இசைஞானியின் பாடல்களை மட்டும் ஒரேயொரு மெமரி கார்டில் அடக்க முடியவில்லை. மெமரி கார்டு-1, மெமரி கார்டு-2 என்று பெயர் வைத்து பதிவு செய்தால்கூட அது நீளமாகப் போய்க் கொண்டேயிருக்கிறது. அத்தனை சிறப்பான, இனிமையான பாடல்களை கொடுத்திருக்கிறார் நமது இசைஞானி.

எனக்கு கார்த்திக் ராஜாவிடமும், யுவன்ஷங்கர்ராஜாவிடம் இரண்டு கோரிக்கைகள் உண்டு.

இசைஞானி இளையராஜா அவர்கள் இதுவரை இசையமைத்த படங்களின் மொத்தப் பட்டியலையும் உருவாக்க வேண்டும். இப்போது அப்படியொரு பட்டியல் யாரிடம் இருக்கிறது என்றே தெரியவில்லை. அனைவருமே இந்தப் படம் இளையராஜா இசையமைத்தது. ஆனால் எந்த வருடம் என்று தெரியவில்லை என்கிறார்கள். இதனை பதிவு செய்து வைக்க வேண்டியது நமது கடமை என்பதால் இதைக் கேட்கிறேன்.

மற்றொன்று ஒட்டு மொத்த திரையரங்கத்தையும் ஒன்று திரட்டி, அவருக்கு மிகப் பெரிய அளவில் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பதுதான்.

இசைஞானிக்கு பாராட்டு விழா ஏனென்றால் ஒட்டு மொத்த ரசிகர்கள் அனைவரும் அதை கொண்டாடி ரசிப்பார்கள். 40 வருடங்களாக சாதனை புரிந்து வரும் அவரை நிச்சயம் கொண்டாட வேண்டும். கண்டிப்பாக அவர் இதற்கும் மறுப்பு தெரிவிப்பார். நான் யுவனிடம் பேசி கொள்கிறேன்…” என்றார்.

இசைஞானி இளையராஜா தான் பேசும்போது இதற்கு பதில் சொல்வார் என்று அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தால் கடைசியில் எதுவும் பேசாமலேயே மேடையைவிட்டு இறங்கி போய்விட்டதை பார்த்து அவரது ரசிகர்கள் பெரிதும் வருத்தமடைந்தனர்.

Our Score