‘கவலை வேண்டாம்’ என்ற தலைப்பை உச்சரிக்கும்போதே நமக்குள் ஒருவித நம்பிக்கையான ஆற்றலும், உற்சாகமும் குடிக் கொள்கிறது. தலைப்பிலேயே இவ்வளவு உற்சாகம் இருக்கிறது என்றால், முழு படத்தில் எந்த அளவிற்கு இருக்கும்…?
ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்துள்ள படம் ‘கவலை வேண்டாம்’. நடிகர் ஜீவா மற்றும் நடிகை காஜல் அகர்வால் இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை ‘யாமிருக்க பயமேன்’ படத்தை இயக்கிய டீகே இயக்கியிருக்கிறார்.
இன்றைய காலத்திற்கேற்ற காதல் கலந்த சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இந்தப் படம் உருவெடுத்திருக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் இரண்டு டீசர்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளன.
இதன் கூடவே அடுத்த முன்னேற்றமாக தற்போது இந்த படத்தின் பாடல்களும் வெளியிடப்பட்டுள்ளன. பாடல்கள் அனைத்துமே இசை பிரியர்களை அதிகளவில் ஈர்த்து வருகின்றன.
தென்றல் போல் மனதை வருடும் இசையையும், கேட்பவர்களை ஆட்டம் போட வைக்கும் தாளத்தையும் ஒருங்கிணைத்து, அற்புதமான பாடல்களை ரசிகர்களுக்கு வழங்கி இருக்கிறார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்.
இவருடைய முதல் படமான ‘கோ 2’ படத்தில் ‘கோகிலா’ மற்றும் ‘கண்ணம்மா’ பாடல்கள் ரசிகர்களின் பாராட்டுகளை பெருமளவில் பெற்றது. அதேபோல் இந்த ‘கவலை வேண்டாம்’ படத்தில் அர்மான் மாலிக் பாடியிருக்கும் ‘உன் காதல் இருந்தால் போதும்’ மற்றும் சிட் ஸ்ரீராமின் குரலில் உதயமாகி இருக்கும் ‘நீ தொலைந்தாயோ’ பாடல்களும் கேட்பவர்களின் மனதை வருடிச் செல்கிறது.











