சபரிமலை ஸ்ரீஐயப்பனின் சர்வ சக்தி மகிமையை விளக்குகின்ற வகையில் ‘கன்னி சாமி’ என்கிற திரைப்படத்தை, ஏ.ஜாகீர் உசேனின் ரோஷன் மூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் சரவணன், அர்ச்சனா சிங், சத்யபிரகாஷ், ‘அவன் இவன்’ ராமராஜன், மாஸ்டர் யோகேஸ்வரன், திருச்சி ஜெகதீசன், கிங்காங், போண்டாமணி, மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – நவ்ஷத், இசை – கண்மணிராஜா, பாடல்கள் – அண்ணாமலை, தமிழ் அமுதன், ஏம்பல் ராஜா, வைர மூர்த்தி, நடனம் – பவர் சிவா, மக்கள் தொடர்பு – பெருதுளசி பழனிவேல், கதை, வசனம் – கே.ஆர். வேலாயுதம், ‘குருசாமி’, ‘அபூர்வ மகான்’ போன்ற படங்களை இயக்கிய கே.ஆர். மணிமுத்து இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார்.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் கே.ஆர்.மணிமுத்து, “சரவணன் ஒரு மேடைப் பாடகர். இவரது குரலில் மயங்கி அவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் அர்ச்சனா சிங். இவர்மீது ஒரு தலைக் காதல் கொண்டவர் சத்ய பிரகாஷ். அர்ச்சனா சிங் இவரது காதலை ஏற்றுக் கொள்ளாமல், சரவணனை காதலித்து திருமணம் செய்திருக்கிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சத்ய பிரகாஷ் ஏதேதோ சதி வேலைகளை செய்து அவர்களை பிரிக்க முயற்சிக்கிறார். ‘மேடைக் கச்சேரிகளில் பாடி வரும் சரவணனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது. ரசிகைகளுடன் சரவணன் ஊர் சுற்றி வருகிறார். உனக்கு துரோகம் செய்கிறார்..’ என்று அர்ச்சனா சிங்கிடம் சொல்லி அவரை நம்ப வைத்து இருவரையும் பிரித்துவிடுகிறார் சத்ய பிரகாஷ்.
பிரித்தது மட்டுமில்லாமல், ஒரு நாள் வீட்டில் தனியாக இருக்கும் அர்ச்சனா சிங்கிடம் தவறாகவும் நடக்க முயல்கிறார் சத்ய பிரகாஷ். இந்த விஷயத்தை சரவணனின் நண்பர்கள் அவரிடம் சொல்கிறார்கள். உண்மையறியும் சரவணனும் தனது மனைவியை எப்படியாவது சத்ய பிரகாஷிடமிருந்து காப்பாற்ற வேண்டுமென்று துடிக்கிறார்.
இறுதியில் நடந்தது என்ன..? சத்ய பிரகாஷ் தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டாரா..? சரவணன் தனது மனைவியைக் காப்பாற்றினாரா..? என்பதுதான் இந்தக் ‘கன்னி சாமி’யின் திரைக்கதை.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை கேரளாவில் சபரிமலை, எரிமேலி, மற்றும் தமிழகத்தில் ஆவுடையார் கோயில், அறந்தாங்கி போன்ற பகுதிகளில் படமாக்கியிருக்கிறோம். அடுத்த மாதம் திரைக்குக் கொண்டு வரவிருக்கிறோம்..” என்றார்.