ஜோ புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் புதிய படம் ‘இளமி’.
இந்த படத்தில் ‘சாட்டை’ யுவன் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக அனு கிருஷ்ணா நடிக்கிறார். மற்றும் முக்கிய வேடத்தில் கிஷோர் நடிக்கிறார். ‘கல்லூரி’ அகில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். மற்றும் ரவி மரியா, தவசி, வெள்ளைபாண்டித் தேவர், பரளி நாகராஜ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – யுகா.எம், இசை – ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள் – பழநிபாரதி, ஜீவன் மயில், ராஜா குருசாமி, கலை – ஜான் பிரிட்டோ, நடனம் – நோபல், சண்டை பயிற்சி – ராக் பாபு, படத் தொகுப்பு – என்.சுதா, தயாரிப்பு மேற்பார்வை – எ.பி.ரவி, தயாரிப்பு – ஜோ புரொடக்ஷன்ஸ், எழுத்து, இயக்கம் – ஜூலியன் பிரகாஷ். இவர் இயக்குநர் ரவிமரியாவின் உதவியாளர். இவர் இயக்கும் முதல் படம் இது.
படம் பற்றி இயக்குநர் ஜூலியன் பிரகாஷ் பேசும்போது, “ஆண்களின் அடையாளமாக கருதப்பட்டது வீரம். அந்த வீரத்தின் வெளிப்பாடாக நமது முன்னோர்கள் ஜல்லிக்கட்டைத்தான் விளையாடியிருக்கிறார்கள். அதுவும் 300, 400 ஆண்டுகளுக்கு மும்பு ஜல்லிக்கட்டுதான் தமிழர்களின் முதன்மையான வீர விளையாட்டு.
கி.பி.1700-ம் ஆண்டுகளில் நடந்த இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை உள்ளடக்கிய ஒரு உண்மைக் கதையை மையப்படுத்திதான், ‘இளமி’ படத்தை உருவாக்கியிருக்கிறேன்.
‘இளமி’ இளமை ததும்பும் காதல் கதையாகவும், அதிரடி ஆக்ஷன் படமாகவும் உருவாகிறது. எதையும் தியாகம் செய்து ஜல்லிக்கட்டில் ஜெயிக்க வேண்டும் என்று போராடுவது வழக்கம். ஏன் தங்களது உயிரே போனாலும் பரவாயில்லை என்கிற போர் குணம் உள்ள இளைஞர்களை பற்றிய கதை இது.
1700-ம் ஆண்டு கால கட்டத்தில் வாழ்ந்த இளைஞர்களின் தோற்றம் வர வேண்டும் என்பதற்காக யுவன் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். பல மாதங்களாக ஜிம்முக்கு போய் பயிற்சி எடுத்து வலுவேற்றிக் கொண்டிருக்கிறார்.
மின் கம்பங்கள், செல்போன் டவர் போன்றவற்றை தவிர்ப்பதற்காக பல இடங்களில் அலைந்து திரிந்து படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்தோம்.
படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி, தலக்கோணத்தில் நரபைலு என்ற இடங்களில் கிராமம் போன்ற அரங்குகளை அமைத்து பிரமாண்டமாக படப்பிடிப்பை நடத்தி உள்ளோம்.
தற்போதைய அவசர யுகத்தில் மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மீண்டும் தமிழ்த் திரையில் புதுப்பிக்கிறோம்..” என்றார்.









