இன்றைய இளம் தலைமுறையினர் தினமும் பயன்படுத்தும் வார்த்தை கடலை. கிராமத்தில் நிலத்தில் விளையும் ‘கடலை’ பேமஸ் என்றால், நகரத்தில் இளசுகளின் வார்த்தையில் விளையும் ‘கடலை’ பேமஸ்.
பிடித்த பெண்ணிடம் காரணமே இல்லாமல், விஷயமே இல்லாமல் நேரத்தைக் கழிப்பதற்காக எதை, எதையோ பேசி மொக்கை போடுவதையே ‘கடலை’ என்று பெயர் சொல்லி அழைக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். அந்தப் பெயரிலேயே நகைச்சுவை, காதல் கலந்து ஒரு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் சஹாய சுரேஷ்.
இதில் கடலை போடும் வாலிபனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், மா.கா.பா.வுடன் இணையும் முதல் படம் இது. மேலும் பொன்வண்ணன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். யோகி பாபு நகைச்சுவையில் கலக்கியுள்ளார். ஜான் விஜய் நகைச்சுவை கலந்த வில்லனாக வருகிறார். இது தவிர மனோபாலா, தவசி, ராதா, சீமா, சென்னியம்மாள் என்று ஒரு பெரிய பட்டாளமே நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – என்.ராகவ், இசை – சாம் C.S, பாடல்கள் – நா.முத்துக்குமார், ரஞ்சித் ஜெயக்கொடி, சாம் சி.எஸ்., படத் தொகுப்பு – ஏ.எல்.ரமேஷ், கலை இயக்கம் – எட்வர்ட் கலைமணி, வசனம் – வா.மு.கோமு, சஹாய சுரேஷ், சண்டை பயிற்சி – லீ.எம்.கே.முருகன், நடனம் – பாபா பாஸ்கர், ராதிகா, தீனா, அஜய் சிவசங்கர், தயாரிப்பு மேற்பார்வை – எம்.செந்தில்.
“இந்தக் ‘கடலை’யை வெறும் பொழுதுபோக்கு படமாக மட்டும் எடுக்கவில்லை; இன்றைய இளம் தலைமுறையினருக்கு தேவையான கருத்துகளும் இப்படத்தில் உள்ளது…” என்கிறார் இயக்குநர் சஹாய சுரேஷ்.









