அன்றும், இன்றும், என்றும், என்றென்றும் தமிழக ரசிகர்களின் உள்ளத்தில் கொடி கட்டி பறந்து கொண்டிருப்பது எம்.ஜி.ஆரின் ‘ரிக்ஷாக்காரன்’ திரைப்படம்.
அதிரடி, காமெடி, காதல், செண்டிமெண்ட் என அனைத்து சிறப்பம்சங்ளும் நிறைந்த ‘ரிக்ஷாக்காரன்’, தமிழ் திரையுலகில் அமோக வெற்றி பெற்றது மட்டுமின்றி, எம்.ஜி.ஆருக்கு தமிழ்நாட்டின் சிறந்த நடிகர் என்று இந்திய அரசின் ‘பாரத்’ பட்டத்ததையும் பெற்று தந்தது.
கடந்த 1971-ம் ஆண்டு வெளியான ‘ரிக்ஷாக்காரன்’ திரைப்படம் தற்போது நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் மீண்டும் தமிழகத்தில் வெளியாக உள்ளது.
‘கர்ணன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘சிவகாமியின் செல்வன்’, ‘அடிமைப் பெண்’ வரிசையில் டிஜிட்டல் மயமாக்கலில் வெளியாகும் அடுத்த ஓல்டு இஸ் கோல்டு வரிசை படம் இந்த ‘ரிக்ஷாக்காரன்’தான்.
சத்யா மூவிஸ் தயாரித்து வெளியிட்ட இந்த ‘ரிக்ஷாக்காரன்’ படத்தின் டிஜிட்டல் பதிப்பை ‘குவாலிட்டி சினிமா’ நிறுவனத்தின் உரிமையாளர்கள் பி. மணி, டி.கே.கிருஷ்ணகுமார் மற்றும் ‘பிலிம் விஷன்’ நிறுவனத்தின் உரிமையாளர் கே. ராமு ஆகியோர் இணைந்து வெளியிடுகின்றனர்.
‘ரிக்ஷாக்காரன்’ படத்தின் அனைத்து பாடல்களும் இன்றளவும் எல்லா தலைமுறையினராலும் ரசிக்க கூடியதாக இருந்து வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் ‘ரிக்ஷாக்காரன்’ படத்தின் இசையமைப்பாளர் ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.விஸ்வநாதன்தான்.
‘கடலோரம் வாங்கிய காற்று’, ‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் ஆணவச் சிரிப்பு’, ‘கொல்லிமலை காட்டுக்குள்ளே’, ‘பொன்னழகு பெண்மை’.. கடைசியாக மறக்கவே முடியாத ‘அழகிய தமிழ் மகள் இவள்’ போன்ற பாடல்கள் படத்திற்கு சிகரம் சேர்த்தன. அதுமட்டுமின்றி இந்த படத்தில்தான் நடிகை மஞ்சுளா கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
“நான் சிறுவனாக இருந்தபோது எம்.ஜி.ஆரின் படம் வெளியாகிறது என்று தெரிந்தால் போதும், எப்படியாவதுமுதல் நாளுக்குரிய டிக்கெட்டை அடித்துப் பிடித்து வாங்கிவிடுவேன். அந்த அளவிற்கு எம்.ஜி.ஆரின் தீவிர பக்தன் நான். அந்த வகையில் அவர் நடிப்பில் வெளியான ‘ரிக்ஷாக்காரன்’ இன்றளவும் என் மனதில் ஒன்றியிருக்கிறது.
விரைவில் நாம் அனைவரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ளோம். அந்த விழாவின் முதற் கட்டமாக இந்த ‘ரிக்ஷாக்காரன்’ படத்தை தற்போதைய நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கேற்ப மேலும் மெருகேற்றி, எம்.ஜி.ஆருக்காக அர்ப்பணிக்க இருக்கிறோம். இந்த நவீன டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட ‘ரிக்ஷாக்காரன்’ திரைப்படம், எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘குவாலிட்டி சினிமாவின்’ பங்குதாரர்களில் ஒருவரான டி.கே. கிருஷ்ணகுமார்.
வரட்டும்.. தலைவரை சந்தித்துவிடலாம்..!









