உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ‘மருதநாயகம்’ எப்படியொரு கனவுப் படமோ, அது போல இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு ‘குற்றப் பரம்பரை’ படமும் கனவுப் படம்போல.. பல இடங்களில், பல பேட்டிகளில் தான் அந்தக் கதையை படமாக்கியே தீருவேன் என்று உறுதிபடச் சொல்லியிருக்கிறார்.
ஆங்கிலேயர்கள் காலத்தில் அப்போது தமிழகத்தில் இருந்த 90 வகையான சாதியின மக்களை ‘குற்றப் பரம்பரையினர்’ என்று பட்டியலிட்டு அவர்கள் மீது கைரேகை சட்டத்தை திணித்து கொடுமைப்படுத்தியது ஆங்கிலேய அரசு.
தினமும் இரவு வேளைகளில் அவரவர் ஊர்களின் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருக்கும் கொட்டகையில்தான் அந்தச் சாதியின ஆண்கள் தங்க வேண்டும். தினமும் காலையும், மாலையும் காவல் நிலைய பதிவேட்டில் அவர்கள் தங்களது கைரேகையை பதிவு செய்ய வேண்டியது அவசியம். அவர்களுக்குத் திருமணமானாலும்கூட அன்றைக்கு வந்தேயாக வேண்டும். இப்படியொரு கொடூரமான சட்டத்தைப் பிறப்பித்திருந்தது ஆங்கிலேய அரசு.
இந்த வரலாற்று பின்னணியை மையமாக வைத்துதான் இயக்குநர் இமயம் பாரதிராஜா, இந்தக் கதையை படமாக்க எண்ணியிருந்தார்.
இதே நேரம் இந்தக் குற்றப் பரம்பரை வரலாற்று கதையை மையமாக வைத்து எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி ‘குற்றப் பரம்பரை’ என்ற நாவலை எழுதி வெளியிட்டிருக்கிறார். அது இப்போதும் அதிகமாக விற்பனையாகும் நாவல்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. ஆனால் இதே குற்றப் பரம்பரை கதையை இயக்குநர் ரத்னகுமார், பாரதிராஜாவுக்கு எழுதி தயார் நிலையில் வைத்திருக்கிறார்.
இப்போது இயக்குநர் பாலா எழுத்தாளர் வேல.ராமமூர்த்தியின் ‘குற்றப் பரம்பரை’ நாவலை படமாக்க முனைந்திருக்கிறார். இது இயக்குநர் பாரதிராஜாவுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அவர் பாலாவை தொடர்பு கொண்டு பேசியும் சரியான பதில் இல்லையாம். ஆனாலும் “நான் அந்தக் கதையை படமாக்கியே தீருவேன்..” என்கிற உறுதியுடன் இருக்கிறார் பாரதிராஜா.
மீறி படமெடுத்தால் வழக்கு தொடர்வேன் – இயக்குநர் ரத்னகுமாரின் ஆவேசம்..!
இது தொடர்பாக பாரதிராஜாவுக்கு கதை எழுதி வைத்திருக்கும் கதாசிரியரும், இயக்குநருமான ரத்னகுமார் பேசும்போது, “நான், ‘கிழக்கு சீமையிலே’, ‘கருத்தம்மா’, ‘கடல் பூக்கள்’, ‘தமிழ் செல்வன்’, ‘மணிகண்டா’ ஆகிய படங்களுக்கு கதை-வசனம் எழுதி உள்ளேன். எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘திருமகன்’, மற்றும் ‘சேனாதிபதி’, ‘செங்காத்து பூமியிலே’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறேன்.
1997-ல் ‘குற்றப் பரம்பரை’ படத்தின் கதையை எழுதி அதனை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்துள்ளேன். இந்தக் கதையை படமாக்கும்படி அப்போதே பாரதிராஜாவிடம் சொன்னேன். அவருக்கும் கதை பிடித்திருந்ததால் நடிகர் திலகம் சிவாஜியை தந்தை வேடத்திலும், சரத்குமாரை மகன் வேடத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்து படத்தை இயக்க தயாரானார். இளையராஜா இசையில் இந்த படத்துக்காக ஒரு பாடலும் தயாரானது. ஆனால் திடீரென்று நடிகர் திலகம் சிவாஜிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பட வேலைகள் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து சிவாஜி மரணமடையவும், அந்த வேலைகளை துறந்து, வேறு படங்களை இயக்கப் போய்விட்டார் பாரதிராஜா.
தற்போது பாரதிராஜா மீண்டும் அந்தப் படத்தை எடுக்க தயாராகி வந்த நிலையில், ‘குற்றப் பரம்பரை’ படத்தை பாலா இயக்கப் போவதாக அறிவிப்பு வந்துள்ளது. அந்த படத்தின் கதையை எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி எழுதி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாலாவை பாரதிராஜா தொடர்பு கொண்டு தடுக்க முயற்சித்தும் நடக்கவில்லை. பாரதிராஜாவுக்கு பாலா துரோகம் செய்கிறார். ‘குற்றப் பரம்பரை’ கதை என்னுடையது. நான் எழுதிய கதையை திருடியுள்ளனர். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. ‘குற்றப் பரம்பரை’ படத்தை பாலா இயக்க கூடாது. மீறி அவர் இயக்கினால், அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்…’’ என்று கூறியுள்ளார்.
“வேலையத்தவர் பாரதிராஜா.!” எழுத்தாளர் வேல.ராமமூர்த்தியின் ஆவேசம்..!
இந்த சர்ச்சை குறித்து எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி ‘குமுதம்’ பத்திரிகைக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், “குற்றப் பரம்பரை’ நாவல் நான் எழுதியது. வீட்டுல வளர்க்கிற நாலு மாத நாய்க்குட்டிக்குகூட தெரியும், ‘குற்றப் பரம்பரை’ வேல.ராமமூர்த்தியோட கதைன்னு. 80 வயதான பாரதிராஜாவுக்கு தெரியாதா.. என்ன..? இந்தப் படத்தின் திரைக்கதை முழுவதும் தயாராக உள்ளது. இந்தப் படத்தை பாலாதான் இயக்கப் போகிறார். ஹீரோவைகூட தேர்வு செய்தாகிவிட்டது. கூடிய சீக்கிரம் படத்தின் வேலைகள் துவங்கப் போகிறது. பாரதிராஜா இதில் தேவையில்லாமல் பேசுகிறார். அவர் வேலையத்தவர். சும்மா இருக்கிறார். எனக்கு ஆயிரம் வேலை இருக்கு.” என்று கூறியிருக்கிறார்.
படைப்பாளிகள் தங்களுக்குள் இப்படி மோதிக் கொள்வது தமிழ்ச் சினிமாவுக்கு நல்லதல்ல. பாலாவின் சினிமா பிரவேசத்திற்கு முன்பிருந்தே இயக்குநர் பாரதிராஜா இந்தக் கதையை நிச்சயம் படமாக்குவேன் என்று கூறி வந்திருக்கிறார். ஆக.. இந்தக் கதையை அவர் படமாக்குவதுதான் முறை. அதிலும் அவர் தமிழ்ச் சினிமாவில் மிக மூத்த இயக்குநர். அந்தக் கூட்டணியில் படம் உருவாவதுதான் நேர்மையானது. தமிழ்ச் சினிமாவுலகம் ஒன்றுபட்டு இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைத்து குற்றப் பரம்பரையை திரைக்குக் கொண்டு வர வேண்டும். ஏனெனில் அது தமிழகத்தின் கதை. இன்றைய இளைய சமுதாயத்திற்கு அவசியம் தெரிய வேண்டிய கதை. படைப்பாளிகளின் மோதலில் ஒரு சிறந்த படைப்பாக்கம் வெளிவராமல் இருந்துவிடக் கூடாது..! யோசியுங்கள்..!












