full screen background image

நடிகர் மயில்சாமியின் மகன் அறிமுகமாகும் ‘அந்த 60 நாட்கள்’ திரைப்படம்

நடிகர் மயில்சாமியின் மகன் அறிமுகமாகும் ‘அந்த 60 நாட்கள்’ திரைப்படம்

கே.வி.எஸ். ஸ்டுடியோ  சார்பில் வி.சுப்பையா கதை எழுதி தயாரிக்கும் ‘அந்த 60 நாட்கள்’ படத்தில் பிரபல நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை தயாரிப்பாளர் வி.சுப்பையாவின் மகன் எஸ்.ராஜசேகர் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கதாநாயகியாக கோவையைச் சேர்ந்த சந்திரிகா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். நகைச்சுவை நடிகர் அர்ஜுன் நந்தகுமார் கதாநாயகனின்  நண்பராக படம் முழுவதிலும் வரும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

இவர்கள் தவிர டி.பி.கஜேந்திரன், ஆர். சுந்தர்ராஜன், டெல்லி கணேஷ், மதன் பாப், பவர் ஸ்டார் சீனிவாசன், பாண்டு, வையாபுரி, அனுமோகன், மதுமிதா, நளினி, சி.ஐ.டி. சகுந்தலா, ஷகிலா, சிசர் மனோகர், நெல்லை சிவா  என்று, நாற்பது  நடிகர்கள் காமெடி  வேடங்களில்  நடிக்கிறார்கள்.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் எஸ்.ராஜசேகர், “வாழ்க்கையில் தவறுகள்  செய்தால் பூலோகத்தில்  மட்டுமல்லாமல் இறந்து மேலுலகம்  போனாலும்  தண்டனை நிச்சயம்’ என்ற கருத்தை இந்தப் படம்  அழுத்தமாகச் சொல்கிறது.

நாயகன் ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டு, இறந்துபோய் மேலுலகம் போகிறான். அங்கேயிருக்கும் எமதர்மன் நாயகனுக்கு மேலும் ஒரு வாய்ப்பை  தருகிறார். ‘நீ பூமிக்கு போய்  அறுபது  நாட்களுக்குள் நீ செய்த  தவறை சரி செய்துவிட்டால் உன் ஆயுள் நீட்டிக்கப்பட்டு அங்கேயே தொடர்ந்து வாழலாம். அப்படி அந்தப்  பிராயச்சித்தத்தை செய்யாவிட்டால் அறுபது நாள் முடிந்தவுடனேயே உன் தலை வெடித்து நீ இறந்துவிடுவாய். உனக்கு இன்னொரு வாய்ப்பு தரப்பட மாட்டாது.’ என்கிறார்.

ஹீரோ இறப்பதற்கு  முன்பு சினிமாவில் துணை இயக்குநராக  வேலை  பார்த்தவன்.  நடிக சார்லி, தயாரிப்பாளர் சங்கிலி முருகனிடம் சொல்லி ஹீரோவுக்கு படம் இயக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்திருந்தார். இந்த நேரத்தில்தான் ஹீரோவுக்கு மரணம் நேர்ந்திருக்கிறது.

இப்போது மரணித்து பின் மீண்டும் எமதர்மன் தந்த சலுகைப்படி உயிர்த்தெழுந்து வந்திருக்கும் நாயகன், தான் செய்த ஒரு தவறுக்கான பிராயச்சித்தத்தை செய்ய முடியாமலும்,  தயாரிப்பாளர் சங்கிலி முருகன் தந்த இயக்குனர் வேலையையும் ஒழுங்காக  செய்ய முடியாமல் தவிப்பதும்தான் படத்தின் கதை.

ஹீரோ செய்த  தவறுதான் படத்தின் மிகப் பெரிய டர்னிங் பாயிண்ட் என்பதால் அது சஸ்பென்ஸ். ஹீரோ செய்த தவறும் அதை வைத்து பூமியில் நடைபெறும் சம்பவங்களுமே திரைக்கதை. எமலோகம் என்பது திரைக்கதையின் எங்களது வசதிக்காக வைத்துக் கொண்ட இன்னொரு கிளைக் கதைதான். ஒரு குற்றவாளிக்கு  நீதிபதி  தண்டனை  வழங்குகிறார். ஆனால் சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி அவன் தப்பிக்கிறான்.  பதிலாக நீதிபதியே  நேரடியாக தண்டனையை வழங்கினால் எப்படி இருக்கும் என்பதை நகைசுவையாக வைத்து உருவாக்கியதுதான் அந்த எமலோக திரைக்கதை.” என்கிறார்.

படம் பற்றிக் கூறிய நடிகர் சார்லி, “திரைக்கதையின்படி ஹீரோவுக்கு  டைரக்ஷன் வாய்ப்பு வாங்கித் தரும் காட்சிகளும், ஹீரோவின் பிராயச்சித்தத்துக்கு நான்  உதவும் காட்சிகளும், தயாரிப்பாளரிடம் மாட்டிக் கொண்டு ஹீரோ முழிக்கும் காட்சிகளும், படப்பிடிப்புக் காட்சிகளும்,  ரசிகர்கள்  கொண்டாடும் அளவுக்கு இருக்கும்” என்கிறார்.

என்.எஸ்.கே. என்ற புதிய இசையமைப்பாளரின்  இசையில் ஐந்து பாடல்கள் உள்ளன.  “படத்தின் தேவலோக  காட்சிகளும், வைஃபை என்ற பாடலும், வரைகலை மற்றும் அனிமேஷன் காட்சிகளும் பெரிய அளவில் ரசிகர்களை நிச்சயம் பிரமிக்க வைக்கும்..” என்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் ராஜா.

“படத்தில் எமனாக நடிக்கும் நெல்லை சிவா, நெல்லைத் தமிழிலேயே பேசியிருப்பது ரசிக்கும்படி, வித்தியாசமாகவும் இருக்கும். கதைக் கருவும்  நகைச்சுவையாக சொல்லி இருக்கும் விதமும் ரசிகர்களை நிச்சயம் கவரும்“ என்று நம்பிக்கை தெரிவித்தார் தயாரிப்பாளர் சுப்பையா.

தயாரிப்பாளர் சுப்பையா பேசும்போது, ”இந்தக் கதையை என் பையன் சொல்லும்போது கதைப்படி ஹீரோ ரொம்ப சின்ன வயசாவும் இருக்கணும். புதுமுகமாகவும் இருக்கணும். யாரை போடலாம்னு யோசிச்சுக்கிட்டிருந்தேன். அப்போதான் ஹீரோவோட போட்டோவை காட்டுணாங்க. பார்த்தவுடனேயே பிடிச்சுப் போச்சு. உடனே போன் போட்டு வரச் சொன்னேன். அரை மணி நேரத்துல வந்தார். அவருக்கும் கதை பிடிச்சுப் போச்சு. உடனே ‘ஓகே’ன்னுட்டாரு. அப்புறமாத்தான் அவர் மயில்சாமியோட பையன்னே தெரிஞ்சது..

மயில்சாமி சார் என்னிடம் பேசும்போது, ‘உங்க பணத்தை  காப்பாத்தணும்னு உங்க மகன் உழைப்பாரு. அவரை ஜெயிக்க வைக்கனும்னு நீங்க உழைப்பீங்க. ரெண்டும் சரியா நடந்தா என் மகனும் ஜெயிச்சிடுவான்’னு சொன்னார்..” என்கிறார் சந்தோஷமாக.

எங்க விருப்பமும் இதுதான் சாமிகளோவ்..! 

Our Score