இரு நாட்களுக்கு முன்பாக நடிகர் சிவகுமார் ஈரோட்டில் உள்ள வெள்ளாளர் மகளிர் கலைக் கல்லூரியில் 2 மணி 15 நிமிடங்களில் தொடர்ச்சியாக மகாபாரத உரை நிகழ்த்தினார்.
அந்த நிகழ்ச்சியில் அவருடைய உரையை கேட்க அவருடைய மனைவி, மகன்கள் சூர்யா, கார்த்தி மருமகள்கள் ஜோதிகா, ரஞ்சனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சிறப்புரை நிகழ்த்திய நடிகர் சூர்யா “இந்த நாள் உங்களுக்கு எப்படியோ அப்படியே எங்களுக்கும் ஒரு சிறந்த நாள், என் அப்பாவின் இரண்டரை வருட உழைப்பு இது, இதற்காக ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து மணி நேரம் ஒதுக்கி இருக்கிறார்.
நாங்கள் ராமயணம் உரை நிகழ்த்தும்போதே வருவதாக இருந்தோம் ஆனால் அப்போது எங்களால் எந்தவித தடங்கல்களும் இருக்கக் கூடாது என்று நினைத்தே ஒதுங்கிவிட்டோம். ஆனால் இந்த முறை நாங்களே விரும்பி வந்திருக்கிறோம்.
கனவை நிகழ்த்த நேரமோ, காலமோ தேவையில்லை என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு. இன்று அப்பாவின் கனவு மெய்ப்பட இருக்கிறது. அதே போல் நாளை உங்கள் கனவும் வெற்றி பெறும்..” என்றார்.
அவரை தொடர்ந்து பேசிய நடிகர் கார்த்தி, “இந்த ஈரோடு மிகவும் சிறந்த ஊர். எல்லாரும் என்னை ‘எங்க ஊர் மாப்பிள்ளை’, ‘எங்க ஊர் மாப்பிள்ளை’ன்னு சொல்றாங்க. அதேபோல இந்த கல்லூரியும் சிறப்பு வாய்ந்த ஒரு இடம்தான். ஏனென்றால் இரண்டாவது முறையாக அப்பா இந்த கல்லூரியில் உரை நிகழ்த்த வந்திருக்கிறார்.
கல்லூரியில் உரை நிகழ்த்துவதென்பது சாதாரண செயல் அல்ல. இதற்காக அப்பா இரண்டு வருடங்கள் கடுமையாக உழைத்திருக்கிறார். அனைத்து மகாபாரத புத்தக பிரதிகளையும் வாசித்து இது தொடர்பாக நண்பர்களுடம் கலந்து பேசி மனப்பாடம் செய்திருக்கிறார். மேலும் டிடியில் ஒளிபரப்பான சோப்ரா அவர்களின் மகாபாரதத்தை பார்த்தும் ஸ்டெடி செய்துவிட்டுத்தான் தற்போது உரை நிகழ்த்த இங்கே வந்திருக்கிறார்.
அதனால் கடைசி முறை ராமாயணம் பற்றிய உரையை நீங்கள் அனைவரும் அமைதியாக கவனித்தீர்களே… அதே போல் இந்த முறையும் அமைதியாக இருக்க வேண்டும். இதில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது. அதனால்தான் நாங்களும் அதை கேட்க இங்கே வந்துள்ளோம்..” என்றார்.
இதைத் தொடர்ந்து நடிகர் சிவகுமாரின் மூத்த மருமகளான ஜோதிகா பேசினார். அவர் பேசும்போது “நான் இந்த குடும்பத்தில் திருமணமானது எனக்கு பெருமையான விஷயம். எனது மகன் தேவ் இப்போதே அப்பாவை(சிவகுமார்) போலவே அறிவாற்றலுடன் இருக்கிறான். அது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
நான் முதலில் அப்பாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன், இந்த உரையை அவர் சிறப்பாக நிகழ்த்தும்போது நாங்கள் அனைவரும் குடும்பத்துடன் இங்கே வந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது அதற்காக அப்பாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.














