இருக்கிற பிரச்சினையே பத்தலைன்னு எரியற கொள்ளில எண்ணெய்யை ஊத்துறாரு இயக்குநர் இமயம் பாரதிராஜா.
நடிகர் சங்கத் தேர்தல் பற்றி இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
அதில் ‘தென்னிந்திய நடிகர் சங்க’த்தின் பெயரை ‘தமிழ் திரைப்பட நடிகர்கள் சங்க’மாக மாற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
‘இங்கே யார் வேண்டுமானாலும் சங்கத்தில் உறுப்பினராக ஆகலாம்.. நடிக்கலாம். இருக்கலாம். ஆனால் சங்கத்தில் பொறுப்புகளுக்கு, உயர் பதவிகளுக்கு தமிழர்கள் மட்டுமே வர வேண்டும்’ என்கிறார்.
முதல் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளலாம். தெலுங்கு, மலையாளம், கன்னடத் திரையுலக நடிகர்கள் தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தில் இருந்து விலகிச் சென்று தத்தமது மாநிலங்களில் தங்களுக்காக ஒரு சங்கத்தை அமைத்துக் கொண்ட பிறகு நாம் மட்டும் ‘தென்னிந்திய’ என்ற பெயரை இன்னமும் வைத்திருப்பது நியாயமல்ல. இதை மாற்றத்தான் வேண்டும்.
ஆனால் அடுத்த கோரிக்கையாக ‘தமிழர் மட்டுமே சங்கத்தின் பதவிகளுக்கு வர வேண்டும்’ என்பதெல்லாம் நடக்காத காரியம்..!
இங்க யார் தமிழர்.. யார் தமிழரல்லாதவர்..? இதை யார் முடிவு செய்வது..? ‘இவர் தமிழர்’தான் என்று இங்கே யார் அத்தாட்சி கொடுப்பது. அப்படியொரு அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர், தமிழகத்தில் எங்கே இருக்கிறார் என்பதெல்லாம் தெரியவில்லை.
ம்ஹும்.. இதுக்கு இவர் அறிக்கை விடாமலேயே இருந்திருக்கலாம்..!











