full screen background image

மறைமுகமாக அரசியலில் குதிக்கும் மம்மூட்டி..!

மறைமுகமாக அரசியலில் குதிக்கும் மம்மூட்டி..!

கேரள திரைப்பட நடிகர்களின் அமைப்பான அம்மாவின் தலைவர் நடிகர் இன்னசென்ட் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சாலக்குடி தொகுதியில் நிற்கப் போகிறாராம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளராக..!

innocent-2

இதற்கு முந்தைய தேர்தல்களின்போது பல முறை அரசியலுக்கு அழைத்தும் வர மறுத்தவர் இன்னசென்ட்.. நேரடியாக கட்சியில் சேர மாட்டேன். ஆனால் தேர்தலில் நிற்கிறேன் ஆதரவு கொடுங்கள் என்றே இதுவரையில் சொன்னதை கட்சிகள் ஏற்கவில்லை.

mamootty-innocent

ஆனால் இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான பிரணயி விஜயன் இன்னசென்டின் நெருங்கிய நண்பரான மெகா ஸ்டார் மம்மூட்டியிடம் இது பற்றி பேச.. அவர் இன்னசென்ட்டிடம் பேசி கன்வின்ஸ் செய்தாராம்.. அவரும் இதை ஏற்றுக் கொள்ள, மம்மூட்டியே மோகன்லால், திலீப் மற்றும் அம்மா அமைப்பின் நிர்வாகிகள் அனைவரிடமும் போனில் பேசி இன்னசென்ட்டுக்கு ஆதரவு வாங்கித் தந்துவிட்டாராம்.. இடதுசாரிகளின் ஆதரவுடன் தனியாகவே நிற்பாராம் இன்னசென்ட்.. இடதுசாரிகளின் இந்தத் திடீர் ஏற்பாட்டுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை..!

இத்தனை நாள் இன்னசென்ட் மறுத்தபோது சிபாரிசுக்கே வராத மம்மூட்டி இப்போது தானே முன் வந்து இன்னசென்ட்டை நிற்கச் சொல்லி வற்புறுத்தியது ஏன் என்று கேரள மீடியாக்கள் கேள்வி எழுப்பி வருகின்றன..! ஆடு தானே போகாமல் ஆட்டு மந்தையையே இழுத்துக்கிட்டு போவதுபோல அம்மா அமைப்பையும் இதில் இழுத்துவிடுவது ஏன் என்று தெரியாமல் முழிக்கிறார்கள் கேரளத்து அரசியல்வாதிகள்.

கேரளாவில் சென்ற ஆண்டுவரையிலும் சினிமாக்காரர்களின் பிரதிநிதியாக கோட்டையில் கொலு வீற்றிருந்த நடிகர் கே.பி.கணேஷ்குமார் குடும்பப் பிரச்சினை காரணமாய் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அமைச்சர் பதவியையும் இழந்து, இப்போது காங்கிரஸுடன் கூட்டணி பேசும் அளவுக்கான தகுதியையும் இழந்து அமைதியாய் இருப்பதும் ஒரு காரணம் என்கிறார்கள்..

ஆனால் இதனை கேள்விப்பட்ட உடனேயே எதிர்பார்த்ததை போலவே மல்லுவுட்டின் இயக்குநர் வினயன், பொங்கித் தீர்த்துவிட்டார். “இன்னசென்ட் அப்படியென்ன சமூகத்திற்கு செய்துவிட்டார்.. பொதுவாழ்க்கையில் ஈடுபட அவருக்கென்ன தகுதியிருக்கிறது..? அந்த அம்மா அமைப்பின் மூலமாக எதையாவது உருப்படியாக செய்ததுண்டா..?” என்றெல்லாம் தன்னுடைய கோபத்தை தன்னுடைய முகநூல் பக்கத்தில் காண்பித்திருக்கிறார்.

வினயன் இயக்கும் படங்களில் அம்மா அமைப்பின் உறுப்பினர்கள் நடிக்கக் கூடாது என்கிற தடை இப்போதும் அமலில் இருக்கிறது. மலையாள சூப்பர் ஸ்டார்களை எதிர்க்கும் வினயன், போட்டியாக ஒரு சினிமா தொழிலாளர்கள் அமைப்பை கேரளாவில் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..!

Our Score