இன்னும் 1 நாள்தான் இருக்கிறது.. அதற்குள்ளாக கோச்சடையான் பீவர், மீடியாக்கள் மத்தியில் பரவிவிட்டது.. இசை வெளியீட்டு விழாவுக்கு அமிதாப்பச்சன் வருவதாக முன்பு சொல்லப்பட்டிருந்தது. இப்போது அமிதாப் இல்லை.. ஷாரூக்கான் கலந்து கொள்வதாகக் கூறியிருக்கிறார்கள். உடன் இந்திய அழகி ஐஸ்வர்யாராயும், படத்தின் ஹீரோயின் தீபிகா படுகோனேவும் நிச்சயம் வருவதாகச் செய்தி..!
ரஜினி சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சையெடுத்துவிட்டு சென்னை திரும்பியவுடன் கலந்து கொண்ட முதல் ஷூட்டிங் ஷாரூக்கானின் ரா ஒன் படத்தின் ஷூட்டிங்தான். அந்தப் படத்தில் ச்சும்மா நின்று போஸ் கொடுக்கும் ஒரு சின்ன கேரக்டரில் அசத்தலாக நடித்திருந்தார் ரஜினி. அதற்கு நன்றி கடனாக இந்த விழாவுக்கு வருகிறார் போலும்.. கேட்டவுடன் தாமதிக்காமல் வருவதாகச் சொல்லி எங்களைச் சந்தோஷப்படுத்தியதாக செளந்தர்யா தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறார்..
இவர்களுடன் இயக்குநர் கே.பாலசந்தர், ஏவி.எம்.சரவணன், எஸ்.பி.முத்துராமன், ரஜினியின் நெருங்கிய நண்பரான தெலுங்கு நடிகர் டாக்டர் மோகன்பாபுவும் இதில் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்களாம்..
ஜெயா டிவி இந்த நிகழ்ச்சியை காவரேஜ் செய்ய உரிமை வாங்கியிருப்பதால் வரும் விருந்தினர்களும், ரசிகர்களுக்கும் கேமிரா தொல்லைகள் இருக்காது என்று நினைக்கிறோம்.. அதே சமயம் அந்த மீடியா நண்பர்களுக்கு இந்த விழாவை நேரில் காண முடியாத வருத்தமும் ஏற்பட்டிருக்கிறது.
ரஜினி 2 வருஷத்துக்கு ஒரு தடவைதான் படம் பண்றாரு.. அந்தச் சமயத்துலேயே நேர்ல பார்க்க முடியலைன்னா எப்படின்றாங்க ரசிகர்கள்.. கூல் பேன்ஸ்..! எப்படியும் ஜெயா டிவி இதை 5 மணி நேரத்துக்கு போட்டுத் தாளிக்கத்தான் போறாங்க.. ஜெயா டிவின்றதாலே யூடியூப்ல இது உடனக்குடன் அப்டேட் ஆயிரும்.. யாரும் டெலீட்டெல்லாம் செய்ய மாட்டாங்க.. ஆற, அமர நாம கண்டுகளிக்கலாம்..!