ஒரு படத்தையே மூன்றாண்டுகள்வரையிலும் இழு, இழுவென்று இழுத்து படமாக்கி அதைத் தியேட்டருக்கு கொண்டு வரும் இப்போதைய காலக்கட்டத்தில் வெறும் 11 மணி நேரத்தில் ஒரு திரைப்படத்தை ஷூட் செய்து முடித்து சாதனை படைத்திருக்கிறார்கள் ஒரு திரைப்படக் குழுவினர்.
நிரஞ்சனா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜி.அனில்குமார் தயாரித்த தப்பா யோசிக்காதீங்க என்ற படத்தைத்தான் இப்படி 11 மணி நேரத்தில் படமாக்கி சாதனை செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சுல்தான்ஸ்.
‘தென்றல்’ தொடரில் நடிக்கும் ராஜா ஹீரோவாகவும், ஜோதிஷா, சனிலா இருவரும் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். மற்றும் சிசர் மனோகர், பேபி மோனிகா மற்றும் 40 நடிகர்களும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு -எஸ்.ஆர். வெற்றி , இசை- ஸ்டீபன் சதீஷ். கலை சுரா.
இயக்குநர் சுல்தான்ஸ் ஒரு திரைப்படக் கல்லூரி மாணவர். ஏவி.எம். நிறுவனம் தயாரித்த 13-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் பணி புரிந்திருக்கிறார்.
தனக்கென ஒரு படக் குழுவை அமைத்து காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை பம்பரமாகச் சுழன்று வேலை வாங்கியிருக்கிறார். ஒரு வரலாற்று சாதனையைச் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து அனைத்து நடிகர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்கள்.
நாயகன் ராஜா கூறும்போது, “சினிமா ஒரு கூட்டு முயற்சி என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம். பலரிடம் படக் குழு கெடுபிடியாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்…” என்றார்.
படப்பிடிப்பு முடிந்ததும். படக் குழுவினர் கை தட்டி ஆரவாரம் செய்தனர். தயாரிப்பாளருக்கு பேச்சே வரவில்லை. ஆனந்தக் கண்ணீரே வந்து விட்டதாம்.
தயாரிப்பாளர் அனில்குமார் இது பற்றிக் கூறுகையில், “இயக்குநரின் திறமையையும் திட்டமிடலையும் நம்பினேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. தனது திறமையை செயல்படுத்தி ஷூட்டிங்கை நடத்திக் காட்டிவிட்டார்…” என்கிறார் பெருமையாக.
11 மணி நேர படப்பிடிப்பு அனுபவம் பற்றி சாதனை இயக்குநர் சுல்தான்ஸ் கூறும்போது, “இந்த ஒரு நாள் படப்பிடிப்புக்காக சரியாகத் திட்டமிட்டு முன் தயாரிப்பு பணிகளைச் செய்திருந்தோம். இதற்காக ஒத்திகைகள் பல முறை பார்க்கப்பட்டன. இதில் நடித்த நடிகர் நடிகைகள் வெவ்வேறு படங்களில் மற்றும் தொடர்களில் நடித்துக் கொண்டிருப்பவர்கள். ஒரு நாள் ஒருவர் வந்தால் மறுநாள் இன்னொருவர் வரமாட்டார். அவரவர்க்கு வேலைகள் அப்படி.
ஆனாலும் படப்பிடிப்பு நாளில் எல்லாரும் சரியாக வந்து நடித்து ஒத்துழைத்ததால் வெற்றிகரமாக படமாக்கி முடித்து விட்டோம். பொதுவாக இப்படி விரைவாக எடுக்கும் படங்களில் டாக்கி போர்ஷன்தான் எடுக்கப்படும். இதில் 2 பாடல் காட்சிகளையும் எடுத்திருக்கிறோம்…” என்றார்.
இந்தச் சாதனையைப் படைத்த படக் குழுவினருக்கு நமது பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.











