full screen background image

மலேசியா-அரபு நாடுகளில் ‘ஆள்’ திரைப்படம் வெளியாக தடை..!

மலேசியா-அரபு நாடுகளில் ‘ஆள்’ திரைப்படம் வெளியாக தடை..!

நடிகர் விதார்த் நடித்த ‘ஆள்’ என்ற திரைப்படத்தை, ஒரு சில முஸ்லீம் நாடுகள் தடை செய்துள்ளன.

விதார்த், கார்த்திகா ஷெட்டி ஜோடியாக நடித்துள்ள படம் ‘ஆள்’. இதில் விதார்த்துக்கு ஜோடியாக கார்த்திகா ஷெட்டி நடித்துள்ளார். ஆனந்த் கிருஷ்ணா இயக்கியுள்ளார். விடியல் ராஜூ தயாரித்திருப்பதுடன் படத்தில் வில்லனாகவும் அவரே நடித்துள்ளார். இதுவொரு முஸ்லீம் இளைஞரை சுற்றி பின்னப்பட்ட கதை.

இந்த படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக கூறி மலேசிய அதிகாரிகள் அனுமதி மறுத்து படத்தை ரிலீஸ் செய்ய தடை விதித்து விட்டனர். அதேபோல் ஏழு அரபு நாடுகளும் இந்தப் படத்தை வெளியிட தடை விதித்துள்ளன.

இது குறித்து ‘ஆள்’ படத்தின் தயாரிப்பாளர் விடியல் ராஜூ கூறும்போது, “இந்தியில் வெற்றி பெற்ற ‘அமீர்’ என்ற படத்தைத்தான் ‘ஆள்’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளேன். இது முதல் தரமான படம். முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் எதுவும் இப்படத்தில் இல்லை. ‘அமீர்’ இந்திப் படத்தில் இருந்த கிளைமாக்ஸை எடுக்காமல் சர்ச்சைகள் எழாமல் இருக்க வேண்டி.. அனைவரும் பாராட்டும்விதமாகத்தான் தமிழில் அந்தக் காட்சியை மாற்றி அமைத்திருக்கிறோம். இப்போது மலேசியா மற்றும் அரபு நாடுகளில் இந்த படத்துக்கு தடை விதித்திருப்பது துரதிர்ஷ்டமானது. தடையை நீக்க போராடுவேன்…” என்றார்.

படத்தில் ‘ஜிகாத்’, ‘புனிதப் போர்’ என்றெல்லாம் வசனங்கள் நிறையவே இருக்கின்றன. முஸ்லீம் இளைஞர்கள் ஒரு சிலரை, முஸ்லீம் மதத்தின் தீவிரவாதிகள் சிலர் மூளைச் சலவை செய்து அவர்களை குண்டு வைக்கும் பணியில் ஈடுபடுத்துகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. இதை எப்படி முஸ்லீம் நாடுகளில் அனுமதிப்பார்கள்..?

Our Score