நடிகர்கள்: துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி, ஸ்ருதி ஹாசன், நாசர் மற்றும் பலர்.
தொழில் நுட்பக் குழு:
இயக்குநர்: பவன் சாதினேனி
எழுத்தாளர்: கங்கராஜு குன்னம்
தயாரிப்பாளர்கள்: சந்தீப் குன்னம், ரம்யா குன்னம்
வழங்குபவர்கள்: கீதா ஆர்ட்ஸ், ஸ்வப்னா சினிமா
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: சுஜித் சாரங்
தயாரிப்பு வடிவமைப்பு: ஸ்வேதா சாபு சிரில்.
இது தெலுங்கு மொழியில் தயாரிக்கப்பட்டு தமிழில் டப் செய்யப்பட்ட திரைப்படம்.
அடுப்படியில் கரண்டியை கைப்பிடித்த கைகள் விண்வெளி ராக்கெட் வடிவமைக்கும் திறன் கொண்டவை என்பதை உணர்த்தும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் கனவு கண்டால் அதை அடைவதற்கு தங்களுடைய வாழ்க்கையின் கடைசி கட்டம் வரையிலும் அவர்கள் போராடுவார்கள்.
ஆனால் பெண்களின் கனவு, என்பது அவர்களது திருமண வாழ்க்கையோடு முற்றுப் பெற்றுவிடும். அதற்குப் பிறகு அவர்கள் தங்களது கனவையே கனவில் மட்டுமே நினைத்து பார்ப்பார்கள்.
இது இந்தியாவில் மட்டுமல்ல; உலகம் முழுவதும் பெண் குலத்தினரின் வாழ்க்கையில் நடந்து வருகிறது.
அப்படி ஒரு கனவை கண்டிருக்கும் கல்பனா என்ற 10-ம் வகுப்பு மாணவி, தன்னுடைய திருமண வாழ்க்கைக்கு பிறகும் தன்னுடைய கனவை எப்படி எட்டிப் பிடிக்கிறாள் என்பதுதான் இந்தப் படம்.
மனைவிகளின் விருப்பத்தையும், கனவையும் தன்னால் முடிந்தால் நிறைவேற்றி வைப்பது கணவர்களின் கடமை என்பதையும் இந்தப் படம் இன்னொரு பக்கம் உணர்த்தி இருக்கிறது.
சாலை வசதிகூட இல்லாத ஆதிராவின் கிருஷ்ணா மாவட்டத்தின் கடைக்கோடி கிராமமான பாலலிங்காவில் தன்னுடைய அம்மா, அப்பா உடன் இருப்பவர் கல்பனா என்ற பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி.
வகுப்பிலேயே முதல் மனைவியாக இருந்தாலும் நிறைய கேள்விகளை எழுப்பி கொண்டே இருப்பதால் ஆசிரியர்களுக்கு இவள் ஒரு தொல்லையாகவே இருக்கிறாள்.
பள்ளிக்கு வந்து விண்வெளி பற்றி பாடம் எடுக்கும் ஆசிரியர் நாசரிடம் தான் விண்வெளிக்குப் போக வேண்டும் என்ற தனது கனவினைச் சொல்கிறாள் கல்பனா. “நீ அதற்கு அஸ்ட்ராநாட் ஆக வேண்டும். அதற்கான படிப்பை படி” என்கிறார்.
கல்பனாவின் அப்பாவோ பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு எழுத விடாத அளவுக்கு கல்பனாவை கொடுமை செய்கிறார். ஆனாலும் அம்மாவின் உதவியினால் தப்பித்து சென்று பள்ளித் தேர்வை எழுதி முடிக்கிறாள் கல்பனா.
ஆனால் அப்பொழுதே அவளுக்கு திருமணம் நிச்சயமாகி உடனேயே திருமணமும் நடந்தேறி விடுகிறது.
இவளது கணவரான கிருஷ்ணா ஒரு அப்பாவி மனிதன். ஆனால் ரொம்ப ரொம்ப நல்லவன். தன் மனைவிக்கு வயது வெறும் 16 என்பதை முதலிரவில் தெரிந்து கொண்ட அவன் மனைவியை தொடவே மறுக்கிறான்.
அதோடு மனைவி கல்பனாவுக்கு மீண்டும் பள்ளிக்கு சென்று மாணவியாக தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதை உணர்ந்து அவளை ஹைதராபாத்துக்கு அழைத்து வருகிறான்.
அங்கே ஒரு டுடோரியல் பள்ளியில் சேர்த்து மேலும் அவளைப் படிக்க வைக்கிறான். கல்பனா பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின்பு விண்வெளி துறையில் படிக்க வேண்டும் என்ற அவளது விருப்பத்தை நிறைவேற்ற திருவனந்தபுரத்தில் இருக்கும் விண்வெளி படிப்பு கல்லூரியில் சேர்த்து விடுகிறான் கிருஷ்ணா. அங்கேயும் கல்பனா சிறப்பாக படித்து தன்னுடைய படிப்பை முடித்து வெளியில் வருகிறாள்.
இந்திய விண்வெளித் துறையின் ஒரு பிரிவில் கல்பனாவுக்கு வேலை கிடைக்கிறது. அதில் அப்ரண்டிஸாக வேலை பார்க்கும் அவள் செய்த முதல் ப்ராஜெக்ட் தோல்வியில் முடிய அவளது வேலை பறிபோகிறது.
இதற்கிடையில் கிருஷ்ணாவும் கால் டாக்ஸி டிரைவராக வாழ்க்கையில் கொஞ்சம் உயர்ந்திருக்கிறான்.
இந்த நேரத்தில் விண்வெளி துறையில் மிகப் பெரிய தனியார் நிறுவனம் கல்பனாவின் ப்ராஜெக்டை பற்றி தெரிந்து கொண்டு அவளை அங்கே வேலைக்கு அழைக்க முயற்சிக்கிறார்கள்.
ஆனால் கல்பனாவோ இந்த நேரத்தில் வேலையே வேண்டாம். பேசாமல் வீட்டில் அமைதியாக இருந்து விடுவோம் என்கிறாள். ஆனால் கிருஷ்ணா அவளது கனவை நோக்கி அவளைத் தள்ளுகிறான்.
இந்த மூவரில் வெற்றி பெற்றது யார்? விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்கின்ற கல்பனாவின் விருப்பம் நிறைவேறியதா? இல்லையா? என்பதுதான் இந்தப் படத்தின் அழகான திரைக்கதை.
துல்கர் சல்மான் சமீப வருடங்களில் ரொம்பவும் வித்தியாசமான கதைக் களன்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.
நிச்சயமாக இந்தக் கதையை வேறு எந்த ஹீரோவும் இணைந்து, துணிந்து நடித்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் தன்னுடைய ஹீரோயிஸத்தைக் கைவிட்டுவிட்டு ஹீரோயினை தூக்கிப் பிடிக்கும் இந்தக் கதையில் நடிக்க முன் வந்த துல்கர் சல்மானுக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.
இந்தப் படத்தில் அத்தனை பேரையுமே கவர்ந்து இழுத்து இருக்கிறார் ‘கல்பனா’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சாத்விகா வீரவல்லி’ என்ற அறிமுக நடிகை.
திராவிட முகம். ஆனால் கல்யாண முகம். அழகான முகம். வட்ட வடிவமான முகம். அவருடைய மூக்குத்தி அவருடைய முகத்திற்கு ஒரு மிகப் பெரிய தேஜஸ்ஸை கொடுத்திருக்கிறது.
பள்ளி மாணவியாக தன்னுடைய அப்பாவிடம் அழுது கெஞ்சி கூத்தாடி அவ்வளவு அடியையும் வாங்கிக் கொண்டு பள்ளிக்கு அவர் ஓடுகின்ற ஓட்டத்தை பார்த்தபொழுது பரிதாபமாக இருந்தது. அந்த பரிதாப உணர்வை தனது நடிப்பினால் வரவழைத்திருக்கிறார்.
‘சாத்விகா’ என்ற பெயர் இருப்பதாலேயே சாத்வீகமாகவும், சாந்தமாகவும் மிக அழகாக தன்னுடைய நடிப்பை கடைசிவரையிலும் கொடுத்திருக்கிறார் இந்த சாத்விகா.
முதலிரவு காட்சியில் மிரளும் கண்களுடன் அடுத்தது என்ன என்று எதிர்பார்ப்பு பயம் கலந்த உணர்வுகளை கொட்டி இருக்கிறார்.
பள்ளியில் கல்லூரிகள் அனைத்திலும் அவருடைய கனவான விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்பதை சொன்னவுடன் எழுகின்ற கேலி, கிண்டல், அவமரியாதைகள் அனைத்தையும் அவர் ஏற்றுக் கொள்வதும், சகித்துக் கொள்வதுமாக அந்த நிமிடத்தில் அவர் காட்டுகின்ற அந்த முக பாவனைகள் அபாரம்.
ஓடி ஓடி களைத்து போய் இனியும் இது வேண்டாம் என்று தன் கணவனுடன் இல்லற வாழ்க்கையிலேயே ஈடுபட நினைக்கும் அமைதியாக இருங்கள் அந்த மொட்டை மாடி காட்சியில் ஒரு உருக்கத்தையும் காட்டியிருக்கிறார் சாத்விகா.
இரண்டாவது முறையும் அவருடைய முயற்சி தோற்றுப் போனாலும் அவர் அமெரிக்கவில் இருக்கும் மிகப் பெரிய கம்பெனிக்கு அழைக்கப்பட்டு விண்வெளிக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டது தெரிந்தவுடன் அவர் படுகின்ற அந்த சந்தோஷம், உற்சாகம், மகிழ்ச்சி அனைத்துமே படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் தொற்றிக் கொண்டது.
விண்வெளிக்கு வழி அனுப்ப அமெரிக்காவிற்கு வந்திருக்கும் அம்மா, அப்பாவிடம் அவர் பேசுகின்ற பொழுது அவருடைய அப்பாவின் அந்த தன்னிரக்க நடிப்புக்கு அழகாக பதில் சொல்லும்போது மனதை நெகிழ வைத்துவிட்டார்.
விண்வெளி சாதனையை முடித்துவிட்டு அவசரமாக ஊர் திரும்பி தன் காதல் கணவரை அவள் சந்தித்து கட்டியணைத்து அழுகின்ற அந்த காட்சியில் மொத்த தியேட்டரும் கைதட்டுகிறது. இதுதான் காதல். இதுதான் உண்மையில் ஒரு கணவனின் கடமை என்பதை உணர்த்த வைத்திருக்கிறது அந்தக் காட்சி. வெல்டன் சாத்விகா.
ஒரு அப்பாவியான, அன்பான கணவன் எப்படி இருப்பான் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணத்தை ‘கிருஷ்ணா’ என்ற எனது கதாபாத்திரத்தின் மூலமாக காட்டி இருக்கிறார் துல்கர் சல்மான்.
முதல் இரவில் மனைவியின் வயது 16 என்பது தெரிந்த உடன் ஏற்படும் அதிர்ச்சியில் இருந்து கடைசியில் தன் மனைவியை வழியனுப்ப வைக்கக்கூட போக மனம் இல்லாமல் தனி அறையில் அமர்ந்து அந்த வெற்றி கூச்சலைக் கேட்டு கண்ணீர் விடும்வரையிலும் எப்படி ஒரு கணவன் எங்களுக்கு கிடைக்க மாட்டானா என்று தியேட்டருக்கு வரும் அத்தனை பெண்களையும் ஏங்க வைத்துவிட்டார் கிருஷ்ணா என்ற துல்கர்.
அக்கா, மாமாவை சமாளித்து, பணத்தை ஏமாற்றியவர்களையும் சமாளித்து, மனைவியை படிக்க வைத்து அவளுடைய வெற்றியில், மகிழ்ச்சியில் தானும் பங்கெடுத்து ஒவ்வொரு காட்சியிலும் துல்கர் காட்டும் நடிப்பும், சிரிப்பும் அப்படி ஒரு அழகு!
படம் முழுவதும் தன்னுடைய சுகத்துக்காக இல்லாமல் தன் மனைவியின் கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காகவே ஓடி ஓடி உழைக்கும் துல்கர் மிகக் கடுமையான உழைப்பைக் கொட்டி இருக்கிறார். இந்தப் படத்தின் வெற்றிக்கு துல்கரின் விட்டுக் கொடுத்தலும், நடிப்பும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.
தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ரோகிணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ருதிஹாசனின் கேரக்டர் ஒரு புதியதாகத்தான் இருக்கிறது.
ஆண்களே அதிகம் கோலோச்சிக் கொண்டிருக்கும் இந்த விண்வெளித் துறையில் ஒரு பெண்ணாக தன்னுடைய திறமையை பதிவு செய்ய நினைத்து கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் ரோகிணி ஒரு தோல்வியில் இருந்து மீண்டும் எழுவதற்காக கல்பனாவை வலை வீசி தேடிப் பிடிக்கிறார்.
அந்த காட்சிகளில் எல்லாம் சுருதிஹாசனின் நடிப்பு பிரமாதம். கல்பனாவும் கிடைத்த பின்பு துல்கரை தனது கார் டிரைவராக ஆக்கிவிட்டு இருவரும் மது அருந்திவிட்டு பேசுகின்ற பல காட்சிகள் சுவையானவை.
ஸ்ருதிஹாசனின் கதாப்பாத்திரம் மூலமாகவும் பெண்களின் உயர்வுக்கு இன்னொரு பெண்ணும் காரணமாக அமைய வேண்டும். யாரும் பொறாமைபடக்கூடாது என்பதையும் அழுத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.
கல்பனாவின் அப்பா, அம்மாவாக நடித்தவர்கள் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். அதிலும் அப்பாவாக நடித்தவர் ஹோட்டல் அறையில் தன் மகளிடம் பேசி அழுகின்ற காட்சியில் மனதைத் தொட்டுவிட்டார்.
மூன்றே காட்சிகள் என்றாலும் நாசர் நம் மனதில் நிற்கிறார். இவரைப் போன்றவர்கள் வாழ்க்கையில் தங்களது கனவை எட்டிப் பிடித்தவர்களின் வாழ்க்கையில் ஏதோ ஒரு நாளாவது அவருடைய கனவைக்கு தூண்டுதலாக இருந்திருப்பார்கள். அப்படி ஒரு கேரக்டரை நாசருக்குக் கொடுத்த இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.
மேலும் படத்தில் நடித்திருந்த மற்றைய கதாபாத்திரங்களும் அழகாக, அளவாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
விண்வெளி ஆராய்ச்சி மையம் தொடர்பான திரைப்படம் என்பதால் கலை இயக்குநர் மிகவும் கஷ்டப்பட்டு விண்வெளி சம்பந்தமான அமைப்புகளை ஒருங்கிணைத்து கொஞ்சமும் குறைவில்லாமல் காட்சிகளை பிரம்மாண்டமாக இருக்க வௌத்திருக்கிறுர்.
படத்தின் துவக்கத்தில் நான்கு வருடங்கள் மனைவியை பிரிந்து சுரங்கத்தில் தொழிலாளியாக வேலை பார்க்கும் துல்கரின் வாழ்க்கையில் வரும் ‘பிஜிலி’ என்ற அந்தப் பெண்ணும் துல்கரை போலவே நமக்கும் பிடித்தமானவராக இருக்கிறார்.
சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப் பெரிய பலம். பல்வேறு லொகேஷன்கள். பல இடங்கள். பல மாநிலங்கள். அதோடு அமெரிக்கா என்று கதைக் களம் நடைபெறும் இடங்களில் எல்லாம் ஒளிப்பதிவாளர் கச்சிதமாக தன்னுடைய அழகான ஒளிப்பதிவினை செய்து படத்திற்கு மெருகூட்டி இருக்கிறார்.
ஜி.வி. பிரகாஷின் இசையில் பாடல்களும் கேட்கும் ரகம்தான். கொஞ்சம் சோகத்தை ஆற்றிக்கொள்ளும்விதமாகவும் பாடல்கள் இருப்பது நமக்கு கொஞ்சம் ரிலாக்ஸை தந்தது.
இந்திய சினிமாவில் இப்படிப்பட்ட படங்கள் வருடத்திற்கு இரண்டுதான் வருகிறது. இந்தப் படம் நிச்சயமாக தேசிய விருதுகளையும் மாநில அரசின் விருதுகளையும் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்திய இளைய சமுதாயத்தினரை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவு அளவுக்கு கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் என்ற ஒரு மாமனிதர் சொல்லிவிட்டு போனது இன்றுவரையில் அந்த இளைஞர்களுக்கு தாரக மந்திரமாக உள்ளது.
அப்படி ஒரு மந்திரத்தை கனவு கண்டு அந்தகீ கனவை அடையத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் இளைஞிக்கும் இந்தப் படம் நிச்சயமாக ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.
திருமணம் முடிந்த உடன் கனவுகளைத் தூக்கி எறிந்துவிட்டு குடும்பத்திற்குள் சிக்கிக் கொள்ளும் பெண்களும் திருமணமாகி தனக்கு மனைவியாக வரும் பெண்ணுக்கும் குழந்தைகளை பெற்றெடுத்துவிட்டு தனக்கு சமைத்துப்போட்டு குடும்ப பெண்ணாக இருக்க வேண்டும் என்று நினைப்பில் இருக்கும் கணவன்மார்களுக்கும் இந்தப் படம் ஒரு உண்மையை எடுத்துச் சொல்லி இருக்கிறது.
அந்த உண்மைதான் இந்த உலகத்தை அடுத்தடுத்த வளர்ச்சிகளுக்குள் கொண்டு போகிறது.
அந்த வழியில் புதுமையான கண்டுபிடிப்புகளையும் அறிவியல் விளைவுகளையும் தேடிப் பிடிக்க வேண்டும். எனில் புதிய முயற்சிகள், புதிய சிந்தனையாளர்கள், புதிய விஞ்ஞானிகள், புதிய கண்டுபிடிப்பாளர்கள் வர வேண்டும்.
அதற்கு ஆண், பெண் வேதமில்லாமல் அத்தனை பேரின் கனவுகளும் நனவாக வேண்டும்.
அந்தக் கனவை நினைவாக்க தங்களுடைய வாழ்க்கையில் தொடர்ந்து கனவு நோக்கி முன்னேற வேண்டும் என்பதுதான் இந்தப் படம் நமக்கு சொல்லும் நீதி.
இந்தப் படத்தை அனைத்து கல்லூரிகளிலும் திரையிட்டு காண்பிக்க வேண்டும் என்பது நமது கோரிக்கை.
நிச்சயமாக இந்தப் படத்தை அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்த்து குழந்தைகளின் மனதில் இருக்கும் கனவு நோக்கிய பயணத்தை அவர்கள் தொடர்வதற்கு உதவி செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
RATING : 4 / 5









