இப்படத்தில் விஜய் ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ரானி, பேபி லிதன்யா, பகவதி பெருமாள் (பக்ஸ்), ஹரிப்பிரியா இசை, ‘அருவி’ மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் திவாகர், முருகானந்தம், மூணார் ரமேஷ், லிஸ்ஸி ஆண்டனி, குமார் நடராஜன், விஜயன், பிரவீணா, ஹரிதா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில் நுட்பக் குழு:
எழுத்து & இயக்கம்: மு. மாறன்
இசை: விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவு: ராஜீவ் ராஜேந்திரன்
படத்தொகுப்பு: விஜய் ஆண்டனி
கலை இயக்கம்: ஏ. ராஜா
ஆடை வடிவமைப்பு: ஜி. அனுஷா மீனாட்சி
நிர்வாகத் தயாரிப்பாளர்: டி. நவீன் குமார்
தயாரிப்பு நிர்வாகி: அண்ணாமலை சாமி
தொழில்நுட்பத் தலைவர்: ஜனார்த்தனன்
நடிகர் தேர்வு: சுகுமார் சண்முகம்
சண்டைப் பயிற்சி: ராஜசேகர்
புகைப்படங்கள்: மகேஷ்
ஒலி பொறியாளர்: எஸ். சந்திரசேகர்
ஆடைப் பொறுப்பாளர்: செல்வராஜ்
ஒலி வடிவமைப்பு: ரஹமதுல்லா
ஒலி விளைவுகள்: விஜய் ரத்னம்
ம
பத்திரிக்கை தொடர்பு: ரேகா
விஜய் ஆண்டனி இப்போதும் ‘பிச்சைக்காரன்’ படத்தின் பாதிப்பில் இருந்து விலகவில்லை போலிருக்கிறது! இந்தப் படமும் ஒரு எமோஷனலான, அப்பாவுக்கும், மகளுக்குமான பாசத்தைக் காட்டும் படமாக வெளி வந்திருக்கிறது.
விஜய் ஆண்டனி அம்மா, அப்பா இல்லாத ஒரு அனாதை. தன்னுடைய கைக்குழந்தையுடன் ஊட்டிக்கு குடி வருகிறார்.
ஊட்டியில் ஒரு கான்வென்டில் மகளை படிக்க வைக்கிறார். அவர் ஊட்டிக்கு வந்ததிலிருந்து எட்டு வருடங்களாக தன்னுடைய மகளை தானே வளர்த்து வருவதால் அவரைப் பற்றி நன்கு அறிந்த பிரீத்தி அஸ்ரானிக்கு அவர் மீது ஒரு காதல். ப்ரீத்தி அஸ்ரானி விஜய் ஆண்டனியின் மகள் படிக்கும் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார்.
ப்ரீத்தி, விஜய் ஆண்டனியை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார். ஆனால் விஜய் ஆண்டனி இதை ஏற்க மறுக்கிறார்.
இந்த நேரத்தில் திடீரென்று அவரது மகளுக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.
அரிதிலும் அரிதான ஒரு நோய் அந்த சிறுமிக்கு ஏற்பட்டு இருப்பதை மருத்துவர் சொல்கிறார். ரத்த சம்பந்தமுள்ள உறவுகளிடம் இருந்து ஸ்டெம் செல்களை பெற்று அதை இந்த சிறுமியின் உடலில் ஏற்றினால்தான் அவரால் உயிர் பிழைக்க முடியும். இல்லாவிட்டால் அவரை காப்பாற்ற முடியாது என்கிறார்.
தன் மனைவி பிரசவத்தின்போதே இறந்துவிட்டார் என்று அனைவரிடமும் பொய் சொல்லி இருந்த விஜய் ஆண்டனி இப்போது உண்மையை பேச வேண்டிய கட்டாயம்.
சென்னையில் பேருந்து நிலையத்தில் ஒரு பிச்சைக்காரியிடம் இருந்து அந்தக் குழந்தையை மீட்டதாக உண்மையைச் சொல்கிறார் விஜய் ஆண்டனி.
இப்பொழுது இந்தக் குழந்தையை காப்பாற்றிய தீர வேண்டும் என்று நினைப்பதால் இந்த குழந்தை எங்கிருந்து வந்தது? யார் இதனுடைய உண்மையான பெற்றோர்கள்? என்பதை கண்டறிவதற்காக சென்னைக்கு வந்து குழந்தை கடத்தல் தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களை தேடி அலைகிறார் விஜய் ஆண்டனி.
உண்மையில் அந்தக் குழந்தை திருமண உறவுகளுக்கு முன்பாகவே பிறந்ததால் உண்மையான அம்மாவின் பெற்றோர் குழந்தை இறந்து விட்டதாக பொய் சொல்லி அந்த மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.
அந்த சிறுமியின் பெற்றோர்கள் இருவரும் காதலித்த பொழுது ஏற்பட்ட தொடர்பினால் இந்தக் குழந்தை உருவானது. அதனுடைய தந்தையும், தாயும் ஈகோ பிரச்சனையால் பிரிந்ததால் ஒருவருக்கு ஒருவர் எங்கே இருக்கிறார்கள் என்றுகூட தெரியாமல் அதே சென்னையில்தான் வாழ்ந்து வருகிறார்கள்.
இருவரையும் தேடி கண்டுபிடித்து விடும் விஜய் ஆண்டனி இருவரிடமும் அந்தக் குழந்தையின் பிரச்சினையை சொல்லி எப்படியாவது இன்னொரு குழந்தையை உருவாக்கி அதன் மூலமாக இந்த சிறுமியை காப்பாற்றும்படி கெஞ்சிக் கூத்தாடுகிறார்.
ஆனால் அவர்கள் இருவரும் இதற்கு சம்மதிக்க மறுக்கிறார்கள். சிறுமியின் நிலைமையும் மோசமாகிறது.
இதன் பின்பு என்ன நடந்தது? உண்மையான பெற்றோர்கள் சிறுமிக்கு உதவி செய்தார்களா இல்லையா என்பதுதான் இந்தக் குடும்பப் பாசக் கதையின் திரைக்கதை.
அப்பாவியாக நடிப்பதில் வல்லவர் விஜய் ஆண்டனி. அவருடைய இயல்பான குணாதிசயம்போலவே கேரக்டர் ஸ்கெட்ச் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்த படத்திலும் அதே கேரக்டர் ஸ்கெட்ச்சுதான்!
இப்படி ஒரு பாசமான அப்பா கிடைக்க மாட்டாரா என்று நினைக்கும் அளவுக்கு தன் மகள் மீது பாசத்தை கொட்டும் அப்பாவாக படம் முழுவதும் இயல்பான நடிப்பை காண்பித்து இருக்கிறார் விஜய் ஆண்டனி.
மகளாக நடித்திருக்கும் பேபி லிதன்யா பல இடங்களில் ரசிக்க வைக்கிறார். சில இடங்களில் கண் கலங்கவும் வைத்திருக்கிறார்.
ஒரு ஹீரோயின் தேவைப்படுகிறார் என்பதால் டீச்சராக நடித்திருக்கும் பிரீத்தி அஸ்ரானியும் படம் முழுவதும் வலம் வந்து தன்னுடைய கேரக்டரில் கச்சிதமாக நடித்திருக்கிறார்.
உண்மையான அம்மாவாக நடித்திருக்கும் ஹரிப்பிரியாதான் படத்தில் மிகப் பெரிய ஸ்கோப் செய்திருக்கிறார் என்று சொல்லலாம்.
தனக்குப் பிறந்த குழந்தை உயிரோடு இருப்பதை அறிந்து அதிர்ச்சியாகும் கணத்தில் இருந்து இறுதியில் நீதிமன்றத்தில் தன் குழந்தையை காப்பாற்ற வேண்டிய ஒரு எமோஷனல் அட்டாக்கில் சிக்கிக்கொண்டு பாசத்தை கொட்டும் பொழுதும் உச்சுக்கொட்ட வைத்துவிட்டார்.
இந்தப் படத்தை கடைசியில் காப்பாற்றியிருப்பது ஹரிப்பிரியாவின் அம்மா நடிப்புதான்.
ஹரிப்பிரியாவின் காதலனாக நடித்திருக்கும் ‘அருவி’ மதன், “அமுதா’ என்ற பெயரை கேட்டாலே கொலை வெறி வருகிறது என்று சொல்லி தன்னுடைய முன்னாள் காதலி மீது அவர் கோபம் காட்டும்போது பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார்.
தனது முன்னாள் காதலியை நேரில் சந்திக்கும்போது, அவர் காட்டுகின்ற கோப நடிப்பைப் பார்க்கும்போது, “அப்படி என்னதான்யா உங்க ரெண்டு பேத்துக்கு பிரச்சனை?!” என்று கேட்கும் அளவுக்கு தன்னுடைய நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இவருடைய மனைவியாக நடித்திருக்கும் ஹரிதாவும் கிளைமாக்ஸ்சில் ஒரு சின்ன ட்விஸ்ட்டை உடைத்து சபாஷ் போட வைத்திருக்கிறார்.
ஹரிப்பிரியாவின் கோவக்கார கணவராக நடித்திருக்கும் பக்ஸ் என்ற பகவதி பெருமாளும் படத்தின் திரைக்கதையின் டெம்போவை ஏற்றுவதற்காக பெரிதும் உதவி இருக்கிறார்.
படத்தில் நடித்திருக்கும் மற்றைய நடிகர், நடிகைகளான மருத்துவர் சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி, குழந்தை கடத்தல் கும்பல் தலைவனான வேட்டை முத்துக்குமார், படம் முழுவதும் விஜய் ஆண்டனிக்கு நண்பனாக வரும் ஜென்சன் திவாகர், இன்னொரு நண்பர் முருகானந்தம், வழக்கறிஞராக நடித்திருக்கும் லிஸி ஆண்டனி, ஹரிப்பிரியாவின் அம்மாவான பிரவீனா என்று அத்தனை நட்சத்திரங்களுமே மிகச் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
குறிப்பிட்டுச் சொல்லும்படியான நடிப்பை கொடுத்திருக்கிறார் நீதிபதியாக நடித்திருக்கும் குமார் நடராஜன். தான் பேசும் சில பல வசனங்களில் அந்த படத்தின் கதையை அழுத்தமாகச் சொல்லி படத்தை முடிவை நோக்கித் தள்ளியிருக்கிறார்.
ராஜீவ் ராஜேந்திரனின் ஒளிப்பதிவில் முதல் பாதி முழுவதும் வண்ணமயமான ஊட்டியை அழகுடன் காட்டி இருக்கிறது. நட்சத்திரங்கள் அத்தனை பேரின் அழகையும் பதிவாகியிருக்கிறது. பாடல் காட்சிகளில் மாண்டேஜ் ஷாட்ஸ்களில் கவர்கிறார் ஒளிப்பதிவாளர்.
விஜய் ஆண்டனியின் இசையில் ‘அப்பா’ என்கின்ற அந்தப் பாடலும் இன்னும் இரண்டு பாடல்களும் மனதை தொடுகின்றன. பின்னணி இசையில் சில பல இடங்களில் நம்முடைய உணர்வை தூண்டிவிட்டிருக்கிறது.
கூடவே படத் தொகுப்பையும் செய்திருக்கும் விஜய் ஆண்டனி ஒரு பாச போராட்டம் நடக்கும் படத்திற்கு எப்படிப்பட்ட உணர்ச்சிகளின் கலவையை கொடுக்க வேண்டுமோ அதுபோலவே காட்சிகளை கத்தரித்து தொகுத்திருக்கிறார்.
அந்த வகையில் கடைசி 25 நிமிடங்கள்தான் படமே என்று சொல்லலாம். அந்த அளவுக்கு நீதிமன்ற காட்சிகளை மனதை தொடும் அளவுக்கு கத்தரித்து தந்துள்ளார். இதுதான் படத்தின் கவன ஈர்ப்புக்குக் காரணம் என்று சொல்லலாம்.
காதலிக்கும்போது அறியாத வயதில் செய்கின்ற தவறை வாழ்நாள் முழுவதும் அவர்கள் அனுபவிக்க நேரும்பொழுது எவ்வளவு மன கஷ்டங்கள் வரும் என்பதை இந்தப் படம் உணர்த்தி இருக்கிறது.
அதேபோல் ஒரு குழந்தையைப் பெறுவது என்பது கடமைக்கு என்று செய்துவிட முடியாது. அதனுடைய முழு பொறுப்பும் பெற்றோர்கள் இருவருக்குமே உண்டு என்பதையும் இந்தப் படம் அழுத்தமாக சொல்லி இருக்கிறது.
அனாதையாக இருக்கும் ஒருவன் தனக்கென்று வாழ்க்கையில் பிடிப்பு வேண்டுமே என்பதற்காக ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது என்பது சரிதான் என்றாலும், அதை சட்டப்படி மிகச் சரியாக செய்தால் எதிர்வரும் பிரச்சனைகள் அனைத்தையும் சமாளிக்கலாம் என்பதையும் இந்தப் படம் சொல்லி இருக்கிறது.
சில, பல லாஜிக் மிஸ்டேக்குகள் இந்தப் படத்தில் இருந்தாலும் அதையெல்லாம் நம் மனதில் கொள்ளாமல் சக மனிதர்கள் மீது பாசம் வைக்க வேண்டும்… குழந்தைகளை புறக்கணிக்கக் கூடாது… காதல் என்ற பெயரில் அத்துமீறல் செய்யக் கூடாது… என்று பல நல்ல விஷயங்களை இந்தப் படம் சொல்லி இருப்பதால் இந்தப் படத்தை நாம் பாராட்டுகிறோம்.
RATING : 3.5 / 5









