இம்மாதம் 27-ம் தேதி திரைக்கு வருகிறது சிவாஜியின் ‘திருவிளையாடல்’ திரைப்படம்!
அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன் இயக்கத்திலும், திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனின் இசையிலும், ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனின் நடிப்பிலும் 1965-ம் ஆண்டில் வெளியான ‘திருவிளையாடல்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை குவித்தது.
சிவாஜி கணேசன், முத்துராமன், டி.எஸ்.பாலையா, நாகேஷ், ஏ.பி.நாகராஜன், சாவித்திரி, தேவிகா மற்றும் பலரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் தருமியாக நடித்த நாகேசுக்கும், சிவனாக நடித்த சிவாஜிக்கும் இடையேயான அந்த உரையாடல் காட்சி இன்றுவரை மக்கள் மனதிலே நிற்கின்ற ஒன்று.
61 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரைக்கு வர இருக்கும் இந்த ‘திருவிளையாடல்’ படத்தினுடைய டிரெயிலர் வெளியீட்டு விழா நடிகர் திலகம் சிவாஜியின் பிறந்த தினமான அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி அன்று சென்னையில் நடைபெற்றது.
அந்த விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடைய பேரனும், சிவாஜி ராம்குமாரின் மகனுமான தர்ஷன், சிவாஜியின் சகோதரர் வி.சி. சண்முகத்தினுடைய மகனான கிரி சண்முகம் உட்பட அவரது குடும்பத்தினரும், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், இளவரசு, இயக்குநரும், நடிகருமான சித்ரா லட்சுமணன், கதாசிரியர் மற்றும் இயக்குநர் பூபதி ராஜா, முனைவர் மருது மோகன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
லண்டனிலும், ஜெர்மனியிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இத்திரைப்படத்தை ஸ்ரீபால விநாயகர் பிக்சர்ஸ் சார்பாக ஜி.லதா வெளியிடுகிறார்
இம்மாதம் மாதம் 27-ம் தேதி அன்று உலகம் முழுவதும் இப்படம் வெளியாகிறது.
சிவாஜி ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இந்தப் படத்தின் வெளியிட்டை ஒருங்கிணைக்கின்ற பணியை சிவாஜியின் தீவிர ரசிகரான பி.வி.முரளி செய்து வருகிறார்.












