full screen background image

நூறு கோடி வானவில் – சினிமா விமர்சனம்

நூறு கோடி வானவில் – சினிமா விமர்சனம்

Nooru koodi vaanavil

Starring : Harish Kalyan, Siddhi Idnani, Kovai Sarala, Thambi Ramaiah, Chinni Jayanth, Sampath, M.Rinil, VJ Parvathy

Written & Directed by Sasi
Produced by Balaji Kapa | Arun Arunachalam
Cinematography : Prasanna.S.Kumar
Music : Siddhu Kumar
Editor : M.Subarak
Art Director : E.Thiyagarajan
Lyrics : Mohan Rajan | Vignesh Ramakrishna
Choreographer : Santhosh
Costume Designer : Nandhini N.K
VFX Head : Surendhar
Audiography : Thapas Nayak
Sound Engineer : A.Murugan
Makeup : R.Ganapathy
Costumer : P.R.Ganesh | R.ManjuNaathan
Stills : Motilal
PRO : Nikil Murukan

“வானவில் போன்றது வாழ்க்கை” என்பார்கள். அதிலும், “காதல் வயப்பட்டவர்களுக்கு வானவில் வாழ்க்கைதான் காதல்” என்பார்கள். அதுவே 100 கோடி வானவில் என்றால் அந்தக் காதல் எப்படிப்பட்டதாக இருக்கும். அதைத்தான் இந்தப் படத்தில் சொல்ல வந்திருக்கிறார் இயக்குநர் சசி.

இந்தப் படம் 2021-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு இப்போதுதான் திரைக்கு வந்திருக்கிறது.

இந்தப் படத்தில்தான் சித்தி இத்னானி முதல் முறையாக தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் இந்த படம் வெளியாவதற்குள்ளாக அவர் நடிப்பில் நான்கு படங்கள் வெளியாகிவிட்டன என்பது சுவையான விஷயம்.

இந்தப் படம் ஜி5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி உள்ளது.

மும்பையில் உள்ள ஒரு பெரிய சேனலில் ஷோ ப்ரொடியூசராக இருக்கிறார் வினோத் என்ற ஹரீஷ் கல்யாண். அதே சேனலில் வேறொரு நிகழ்ச்சிக்காக கோவாவிற்கு அனுப்பப்படுகிறார்  ஹரிஷ். அங்கே எதிர்பாராதவிதமாக சித்தியை சந்திக்கிறார் ஹரிஷ். சண்டை வருகிறது.

ஆனால் சித்தியின் அழகிலும், பேச்சிலும் மயங்கி, தன்னுடைய ஷோவில் சித்தியை ஆங்கராக வேலை பார்க்க வரும்படி அழைக்கிறார் ஹரிஷ். முதல் சந்திப்பே சண்டையாகி போனதால் சித்தி வர மறுக்கிறார். ஆனால் சித்தியின் குடும்பத்தினரிடம் பேசி பழகி அவர்கள் மூலமாக சித்தியை தன்னுடன் வேலைக்கு ஒத்துக் கொள்ள வைக்கிறார் ஹரீஷ்.

சித்தியின் காதலன் ஒரு சாலை விபத்தில் சிக்கி தற்போது கோமாவில் மருத்துவமனையில் இருக்கிறார். தினமும் அவனை சென்று பார்ப்பதுதான் சித்தியின் வேலையாக இருக்கிறது. அந்தக் காதலன் மீது சித்தி கொண்டிருக்கும் காதலைப் பார்க்கும் ஹரிஷுக்கு இதன் காரணமாகவே சித்தி மீது காதல் வந்து விடுகிறது.

கோமாவில் இருப்பவன் எழுந்து வருவானா என்பது சந்தேகம் என்ற நிலையில் ஹரீஷூக்கு தன்னை அறியாமலேயே சித்தி மீதான ஈர்ப்பு அதிகமாகி கொண்டே போகிறது. இன்னொரு பக்கம் சித்திக்கும் ஹரீஷை பிடித்துப் போக அவரும் ஹரிஷ் உடன் நெருக்கமாகுகிறார். இந்த நேரத்தில் திடீரென்று அந்தக் காதலன் கோமாவில் இருந்து மீள்கிறான்.

கடைசியில் யாருடைய காதல் ஜெயித்தது… சித்தியின் காதலன் என்ன ஆனான் என்பதுதான் இந்த ‘நூறு கோடி வானவில்’ என்ற காதல் படத்தின் திரைக்கதை.

வினோத் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாண் இளைஞர்களுக்கே உரித்தான குணாதிசயத்தில் கோபம், படபடப்பு, காதலில் விழுவது, சொல்ல முடியாமல் தவிப்பது, முக்கோண காதலிலிருந்து விடுபட முடியாமல் தத்தளிப்பது… என்று பல்வேறு உணர்ச்சிகளை காட்டி நடித்திருக்கிறார். படம் முழுவதும் எமோஷன்ஸ் காட்சிகள் நிரம்பி வழியதால் இதில் தன்னுடைய பங்கினை ஹரிஷ் கல்யாண் சரியாக செய்திருக்கிறார்.

பென்னி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சித்தி இத்னானிக்கு இது முதல் படம் போலவே இல்லை. அவ்வளவு அழகாக தமிழை உச்சரித்து நடித்திருக்கிறார். சில காட்சிகளில் இவரை சிரிக்க வைத்திருந்தாலும் அதிகமான எமோஷன்சை கொட்டி இருக்கிறார்.

கோமாவில் படுத்திருக்கும் ஒரு காதலன் இன்னொரு பக்கம், தன் அருகிலேயே இருக்கும் இன்னொரு காதலன் என்ற இரண்டு காதல்களை மனதிற்குள் வைத்துக் கொண்டு இவர் படுகின்ற அல்லல்களை இயக்குநர் சசி அழகாகப் படம் பிடித்து காட்டியிருக்கிறார்.

இந்தப் படம் 5 வருடங்களுக்கு முன்பே திரையரங்கங்களுக்கு வந்திருந்தால் சித்திக்கு கிடைக்கும் வரவேற்பு வேறுவிதமாக இருந்திருக்கும்.

சித்தியின் காதலனாக நடித்திருக்கும் ரெனில் ஒரு பொஸசிவ்னஸ்மிக்க ஒரு காதலனாக நடித்திருக்கிறார். காதலி எப்போதும் தன் பேச்சை மட்டுமே கேட்க வேண்டும் என்ற ஆதிக்க தன்மையுடன் இருக்கும் இளைஞனின் முரட்டு சுபாவத்தை தன்னுடைய நடிப்பில் பல இடங்களில் காட்டியிருக்கிறார். இறுதியில் தன்னை மாற்றிக் கொண்டு வினோத்துக்கு வழி விடுவது எதிர்பாராத ஒரு திருப்பம்.

ஹரிஷ் கல்யாண் டீமில் ஒலிப்பதிவாளராக இருக்கும் வி.ஜே.பார்வதியின் அடக்கமான நடிப்பும், பல இடங்களில் முணுமுணுப்பாக வசனங்களை உச்சரிக்கும்விதமும் அவர் காட்டியிருக்கும் கோபமும் நம்மை சின்னதாக சிரிக்க வைத்திருக்கிறது.

ஹரிஷ் கல்யாண் டீமில் உதவியாளராக இருக்கும் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் இறுதியில் ஹரிஷ் கல்யாணி நினைத்து ஏங்கி தவித்து அதை வெளிப்படையாகச் சொல்கின்ற இடத்தில் ஒரு நிஜமான காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் தம்பி ராமையா, கோவை சரளா இவர்களும் தங்களால் முடிந்த சின்ன நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள்.

பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவு கோவாவின் இயற்கை அழகையும், பழைய கோவாவின் இன்னமும் இடிபடாத நினைவுச் சின்னங்களையும், இயற்கை எழில் கொஞ்சும் அழகையும் அழகாக படம் பிடித்து காட்டி இருக்கிறது. பாடல் காட்சிகளில் ஹீரோ, ஹீரோயினைவிடவும் இயற்கை அழகை அதிகம் ரசிக்க முடிகிறது.

சித்துகுமாரின் இசையில் மோகன் ராஜனின் வரிகளில் ‘போதும் போ’, ‘கண்ணாடி’ என்ற பாடல்கள் இரண்டுமே சுகம். பாடல் வரிகளும் கேட்பதற்கு இனிமையாக இருந்தன. கூடுதலாக பின்னணி இசையும் காதலுக்கு ஸ்வரம் சேர்ப்பதுபோல ஒலித்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் இயக்குநர் கொடுத்த காட்சிகளை முடிந்த அளவுக்கு பார்க்கின்ற வகையில் தொகுத்தளித்திருக்கிறார். ஆனால் பல இடங்களில் திரைக்கதை நத்தை போல மெதுவாக நகர்வதை அவராலும் தடுக்க முடியவில்லை.

வேலை பார்க்கும் இடத்திலேயே பதவி உயர்வை எதிர்பார்த்து கடுமையாக உழைக்கும் இளைஞன் அது கிடைக்காத கோபத்தை காட்டு போதும், எப்படியும் தான் பார்க்க வேலையிலேயே பெரியளாக வந்துவிட வேண்டும் என்ற வெறியில் இருக்கும் ஒரு இளைஞனை படத்தின் துவக்கத்தில் காட்டும் பொழுது அழகாக பிடித்திருக்கிறது.

கோமாவில் இருக்கும் காதலனுக்காக தினமும் தன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் வீடியோவில் பதிவு செய்து மருத்துவமனைக்கு வந்து அவன் கேட்கிறானா இல்லையோ, அவர் காதுகூட அதைப் பேசி விட்டு இன்றைக்கு 190 வது நாள் என்று சொல்லி சிரிக்கும் உண்மையான காதலியான சித்தியின் அந்த கேரக்டர் ஸ்கெட்ச் மிகவும் சுவாரஸ்யம்.

ஆனால் கோமாவில் இருக்கும் காதலனை வைத்துக் கொண்டு உடன் இருக்கும் ஹரிஷ் கல்யாண் மீது இவருக்கு ஏன் காதல் வந்தது என்பதை இயக்குநர் அழுத்தமாக சொல்லவில்லை. அதனால் சித்தி ஹரிசின் மீதான தன் காதலை சொல்லும்போது அவர் மீதான நம்முடைய பிடிப்பும் அறுந்து போய்விட்டது.

கிளைமாக்ஸில் சித்தியின் காதலன் தன் காதலை தானே முறித்துக் கொண்டு சித்தியை ஹரீஷிடம் செல்லும்படி சொல்வது ரொம்பவும் செயற்கைத்தனமான கட்சியாக அமைந்துவிட்டது.

ஒவ்வொரு கேரக்டர் ஸ்கெட்ச்சிலும் இருக்கும் சின்ன சின்ன ருசிப்பான விஷயங்களும், காதலை வெளிப்படுத்தும் அழகான தருணங்களும், கவிதை நயம் தரக் கூடிய அளவுக்கு பேசப்பட்டிருக்கும் பல வசனங்களும், மெல்லிசையில் வந்திருக்கும் பாடல் வரிகளும்… இந்தப் படத்தை ஒரு நல்லதொரு காதல் படமாக அங்கீகரித்து இறுதிவரையிலும் படத்தைப் பார்க்கவும் வைத்திருக்கிறது.

இந்த வானவில்லும் அழகுதான்!

RATING : 3.5 / 5

Our Score