கீர்த்தன் நடாகௌடா இயக்கியுள்ள இந்த ஹாரர் திரில்லர் திரைப்படத்தில் சைத்ரா ஆச்சார், சரண் லக்கராஜு, சூர்ய ராஜ் வீரபதினி, ப்ரீத்தி பகடாலா, சஷாங்க் பாட்டீல் மற்றும் ஸ்ரீவைஷ்ணவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
வழங்குபவர்: பிரசாந்த் நீல், தயாரிப்பாளர்கள்: ரவி சங்கர் யலமஞ்சிலி மற்றும் நவீன் யெர்னேனி, இயக்குநர்: கீர்த்தன் நடகௌடா, இசையமைப்பாளர்: வெங்கி ஜிஜி, புரொடக்ஷன் டிசைனர்: உல்லாஸ் ஹைதூர், தயாரிப்பு நிறுவனம்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்.
சஸ்பென்ஸ், மர்மம் மற்றும் திகில் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘418’ திரைப்படத்தின் மூலம் மற்றுமொரு சுவாரஸ்யமான கதையை ரசிகர்களுக்கு வழங்குகிறது.
15 ஆண்டுகளாகப் பூட்டப்பட்டிருக்கும் மருத்துவக் கல்லூரி விடுதியை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. அங்குள்ள அறை எண் 418-ஐ சுற்றி நிலவும் மர்மம், அறிவியல், மூட நம்பிக்கை மற்றும் விளக்க முடியாத அமானுஷ்ய நிகழ்வுகள் ஆகியவற்றை சுற்றி கதை நிகழ்கிறது.
அறை எண் 418 க்குள் என்ன நடந்தது? அந்த அறை ஏன் 15 ஆண்டுகளாகப் பூட்டப்பட்டுள்ளது? அதன் ரகசியங்களை வெளிக்கொண்டு வரத் துணிபவர்களுக்காக அங்கே என்ன காத்திருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கான விடைதான் இந்த ‘418’ என்ற திரைப்படம்.
இந்த ‘418’ திரைப்படம் கன்னடத்தில் தயாராகி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
இதுவும் இந்த வருடத்திய பேய்ப் பட வரிசையில் ஒன்று!
ஆந்திரா கர்நாடகா எல்லையில் கர்நாடக பகுதியில் உள்ள ‘வேதகிரி’ என்ற கிராமத்தில் ‘வீம்ஸ்’ என்ற மருத்துவக் கல்லூரி இருக்கிறது.
மருத்துவம் படித்தே தீர வேண்டும் என்ற தன்னுடைய அம்மா, அப்பாவின் விருப்பத்திற்கு ஏற்ப இந்தக் கல்லூரியில் மாணவராக சேர வருகிறார் ஆந்திராவைச் சேர்ந்த ‘விவேக்’ என்ற இளைஞர்.
அந்த மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வெளி மாநில மாணவர்களுக்கான ஹாஸ்டல் இருந்தாலும் மாணவர்கள் இந்தாண்டு அதிக எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டிருப்பதால் ஏற்கனவே மூடி வைத்திருந்த ஒரு ஹாஸ்டலை இந்த வருடம் திறந்து இருக்கிறார்கள்.
அந்த ஹாஸ்டலில் நான்காவது மாடியில் இருக்கும் ‘418’ என்ற அறையை எப்பொழுதும் பூட்டியே வைத்திருக்கிறார்கள். அந்த அறைப் பக்கம் யாரும் போக வேண்டாம் என்று மாணவர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள். அந்த ஹாஸ்டலுக்குள் பெண் வாடையே வரக்கூடாது. எந்தப் பெண்ணும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மாணவர்களுக்கு எச்சரிக்கையும் விடப்படுகிறது.
விவேக் 417-வது அறையில் சேர்கிறார். அங்கே அவருடன் சூரிய ராஜ், ஷஷாங்க் பாட்டீல் இருவரும் இணைகிறார்கள்.
அதே ஊரில் இருக்கும் சட்டக் கல்லூரியில் படிக்க வந்திருக்கும் பிரித்தி என்ற மாணவி தற்செயலாக மருத்துவமனைக்கு வர அவருடன் சூரிய ராஜூக்கு பழக்கம் ஏற்படுகிறது. இருவரும் நெருங்கிப் பழகுகிறார்கள்.
இந்த நேரத்தில் 418 அறையின் அருகில் என்னதான் இருக்கிறது. அதைத் திறந்தால் என்ன நடக்கும்? அங்கே பேய் இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றிய சர்ச்சை எல்லாம் மாணவர்களுக்குள் பேசப்படுகிறது.
இந்த நேரத்தில் தற்செயலாக அந்த அறையின் பக்கம் விவேக் செல்ல, அவருக்குள் ஏதோ ஒரு பய உணர்வு ஏற்படுகிறது. ஒரு இரவில் அவரை யாரோ அழைப்பது போலவும், துரத்துவது போலவும், தெரிய.. மற்றவர்களை எல்லாம்விட அந்த அறையில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டுகிறார் விவேக். கல்லூரி நூலகம் மற்றும் பொது நூலகம், ஊர் மக்கள் என்று பலரிடமும் விசாரித்து அந்த அறையில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள முனைகிறார் விவேக்.
இதனால் அவருடைய மனநிலை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு மனச்சிதைவுக்கு நோய்க்கு ஆளாகிறார் விவேக். இவரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இவருடைய நெருங்கிய நண்பரான சூரிய ராஜூக்கு இருக்கிறது. அதனால் அவர் அந்த கல்லூரியின் நீண்ட காலமாக பேராசிரியராக இருக்கும் மனநல மருத்துவரிடம் என்ன நடந்தது என்பதை பற்றி விசாரிக்கிறார். அவர் சொல்கின்ற கதையில் படம் இன்னமும் விரிகிறது.
அந்தப் பகுதியில் மலைவாழ் மக்களில் ‘யட்சகானா’ என்ற பழங்குடியினரின் நாட்டியத்தை ஆடும் குழுவில் இருப்பவர் தேவகி என்ற சைத்ரா. அவர் காதல் திருமணம் செய்த பின்பு அவருக்கு குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இது அவரது புகுந்த வீட்டில் மிகுந்த பிரச்சனையை ஏற்படுத்துகிறது. புகுந்த வீட்டில் இருக்கும் பெண்கள் அவரை பலவிதமாக குற்றம் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். குத்திக் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். தனக்கு குழந்தை வேண்டும் என்று மிகுந்த மனப் போராட்டத்தில் போராடிக் கொண்டிருக்கிறார் தேவிகா.
அப்போது அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு குல தெய்வத்தை வணங்கினால் குழந்தை பிறக்கும் என்று பலரும் சொல்ல அதை வணங்குகிறார் தேவிகா. சொன்னது போலவே தேவகி கர்ப்பமாகிறார். குழந்தை உன் வயிற்றில் உண்டானாலும், அந்தக் குழந்தை எனக்கு சொந்தம்.. நீ அதை வைத்துக் கொள்ளக் கூடாது என்று அந்த குல தெய்வம் தேவிகாவை எச்சரிக்கிறது. இந்த எச்சரிக்கை நாளுக்கு நாள் தேவிகாவின் மனநிலையை மாற்ற அவர் அந்த தெய்வத்திற்கு அடிமையாகிறார்.
இதை தொடர்ந்து சில பெண்களின் கொலைகளும் அங்கே நடைபெறுகிறது. சைத்ராவும் தன்னுடைய குழந்தையை பெற்றெடுத்துவிட்டு, தானும் பரிதாபமாக மரணம் அடைகிறார். அவர் இறந்த அறைதான் அந்த 418 என்ற அறை.
இன்னமும் தேவகியின் ஆவி அந்த அறைக்குள் இருப்பதாகவே பலரும் சொல்கிறார்கள். இன்னமும் ஆறு பேரை அவர் பழி வாங்காமல் அவருடைய ஆன்மா சாந்தியாகாது என்று அந்த கிராமத்து மக்கள் சொல்வதால் அந்த அறையை பூட்டியே வைத்திருப்பதாக சொல்கிறார் பேராசிரியர்.
ப்ரீத்தி தூண்டுதலினால் உள்ளே என்னதான் இருக்கிறது.. பார்த்து விடுவோம் என்று சொல்லி நண்பர்கள் டீம் அந்த அறைக்குள் போக முயல்கிறார்கள். அதன் பிறகு பேயின் அட்டகாசம் துவங்குகிறது.
தேவகியின் பேய் இவர்களை என்ன செய்தது? இவர்கள் தப்பித்தார்களா.. இல்லையா? அந்த மருத்துவக் கல்லூரியில் அமைதி திரும்பியதா? இல்லையா? என்பதுதான் இந்த ‘418’ படத்தின் திரைக்கதை.
‘விவேக்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரண் லக்கராஜு 18 வயது வாலிபனாகவே இருக்கிறார். அந்த வயதுக்கேற்ற தயக்கம், தடுமாற்றம், பயம், அதிர்ச்சி… அத்தனை உணர்வுகளையும் படத்தில் காட்டியிருக்கிறார். கொஞ்சம், கொஞ்சமாக அந்த பேயின் ஆதிக்கத்துக்குள் சிக்கி மன நோயாளியாகவே அவர் மாறுகின்ற அந்த பரிதாபக் காட்சிகளில் உண்மையான ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார்.
முதலாம் ஆண்டு மாணவராகவே இருந்தாலும் ஒரு முதிர்ச்சியான மனநிலையோடு தைரியமானவராகவும் இருக்கும் சூரியராஜ் அவருடைய கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். அவரும் இறுதிவரையிலும் பேயோடு மல்லுக்கட்டும் போதும் தன்னுடைய நண்பனை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஒரு கை பார்த்து விடுவோம் என்று களத்தில் இறங்கி… படத்தை நகர்த்துவதற்கு பெரிதும் உதவி செய்திருக்கிறார்.
இவருடைய நண்பர்களாக நடித்திருக்கும் ஷஷாங்கும், ஸ்ரீவைஷ்ணவ்வும் இறுதிவரையிலும் நல்ல நண்பர்களாகவே வலம் வந்திருக்கிறார்கள். அதிலும் ஷஷாங்க் பாட்டீல் இடை இடையே தன்னுடைய சின்ன சின்ன ஆக்சன்களினால் கொஞ்சம் புன்னகைக்க வைத்திருக்கிறார்.
ஸ்ரீவைஷ்ணவ் கிளைமாக்ஸ் காட்சியில் தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் பேயுடன் மல்லு கட்டும்பொழுதும் பேயின் ஆட்டத்துக்கு ஒரு முடிவுக்கு கட்ட வேண்டும் என்று துடிப்புடன் செயல்பட்டு தன் உயிரை விடும்பொழுது, அவருடைய நடிப்பும் படத்தின் மீது ஒரு கணத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
‘தேவிகா’ என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சைத்ரா, அந்தப் பகுதியின் பழங்குடியின மக்களின் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அந்தக் குழுவின் ஒருவராக நடனமாடும்போதும், பாடும் பொழுதும் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
திருமணத்திற்கு பின்பு அந்த வீட்டில் சந்தோஷமாக இருக்கும் பொழுதும், குழந்தை இல்லை என்கின்ற ஏக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வரும் பொழுதும், அவருடைய மனமும், குணமும் மாறும் பொழுதும் அவருடைய நடிப்பும் கூடவே மாறிக்கொண்டே வருகிறது.
இறுதியில் முற்றிலும் ஒரு மனநோயாளியாகி அவர் செய்கின்ற அந்த கொடூர செயல்களை பார்க்கின்ற பொழுது நமக்கு பகீர் என்கிறது. அப்படி ஒரு பயத்தை உருவாக்கும் அளவுக்கு தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சைத்ரா. மிக அற்புதமான நடிப்பு. இந்தச் சின்ன பெண்ணுக்குள் இவ்வளவு முதிர்ச்சியான நடிப்பா என்று நம்மை கேட்க வைத்திருக்கிறார். பேயாக இவர் காட்டுகின்ற அந்த ஆட்டம் நிறையவே பயத்தை நமக்கு கொடுத்திருக்கிறது.
விவேக்கின் அம்மாவாக நடித்தவர் படபட பட பட பட பேசிக் கொண்டே இருக்கின்ற அந்த நடிப்பு ரொம்பவே பிடித்ததுதான். அதேபோல் மனநல மருத்துவராக நடித்தவரும், பிரின்ஸ்பாலாக நடித்தவர், ஹாஸ்டல் வாட்ச்மேனாக நடித்தவர் என்று ஒவ்வொருவருமே அவரவர் நடிப்பை அழகாக கொடுத்திருக்கிறார்கள்.
இது போன்ற பேய்ப் படங்களில் ஒளிப்பதிவுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். இந்தப் படத்திலும் அந்த ஒளிப்பதிவை மிகுந்த தரமானதாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் திவாகர். படத்தின் முதல் கட்சியில் இருந்து இந்தப் படம் ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் என்பதை உணர்த்தும் வகையிலேயே ஒளிப்பதிவை செய்திருக்கிறார். பேய் சம்பந்தப்பட்ட காட்சிகளை பேய்த்தனமாக படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர். அவருக்கு நமது பாராட்டுக்கள்.
அதேபோல் இசையமைப்பாளர் வெங்கியும் பின்னணி இசையில் எந்த அளவுக்கு நம்மை பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு ஒரு பயமுறுத்தலை கொடுத்திருக்கிறார். அவ்வப்பொழுது அந்த அறையை காட்டும் பொழுதெல்லாம் மனதில் ஒரு பய உணர்வை ஏற்படுத்தும்விதமாக பின்னணி இசையை வைத்து நம்மை பயமுறுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர்.
படத் தொகுப்பாளரும் தன்னுடைய பங்குக்கு சிற்சில இடங்களில் காட்சிகளை உடனுக்குடன் வருவது போல வைத்து நமக்கு திடுக் என்ற உணர்வை கொடுப்பதுபோல தொகுத்தளித்திருக்கிறார். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.
படத்தின் கடைசி ஒரு மணி நேரம் படம் பரபரவென நகர்கிறது என்றால் அதற்குக் காரணம் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், பட தொகுப்பாளர், இயக்குநர் என்ற நால்வரின் வெற்றிகரமான கூட்டணிதான்.
அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட முடியாத விஷயம் பேய்கள் மற்றும் அமானுஷ்யங்கள் சம்பந்தமானவைதான். ஆனால், இதை நம்புவது போல படமாக்கி கொடுப்பதுதான் மிகச் சிறந்த இயக்குநர்களின் வேலை. அந்த வகையில் இந்தப் படத்தின் இயக்குநர் 98 சதவீதம் தன்னுடைய பணியை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.
கிளைமாக்ஸ் காட்சியில் அவர் கொடுத்திருக்கும் டிவிஸ்ட் மிகச் சிறப்பானதுதான் என்றாலும், மனநல மருத்துவர், கல்லூரி பிரின்ஸ்பாலிடம் பேசுகின்ற அந்தக் காட்சியை இடையில் வைத்து அதில் ஏதோ ஒரு பொய்யான விஷயத்தை அவர்கள் திணிப்பது போல ஒன்றைக் கொண்டு வந்திருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை. அந்தக் காட்சியை நீக்கி இருந்தால் அந்தச் சின்ன குழப்பம்கூட நமக்கு ஏற்பட்டிருக்காது.
உண்மையில் தேவிகா பேயை கடைசியாக இயக்குநர் அமைதிப்படுத்தி அனுப்பி வைத்தாரா அல்லது பேய் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு சென்றுவிட்டதா என்கின்ற சந்தேகத்தை தீர்ப்பதுபோல இயக்குநர் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் நீங்களே புரிந்து கொள்ளுங்கள் என்பது போல படத்தை முடித்து இருப்பது பலருக்குள் பல கேள்விகளை எழுப்பிவிட்டது.
இருந்தாலும் ஆன்மா சாந்தியாக வேண்டிய ஒரு பேயை சாந்தப்படுத்தி அனுப்புவது நல்லது என்கின்ற பேய் படங்களின் மன உணர்வை நமக்குள் இந்தப் படத்தின் மூலமாகவும் விதைத்திருக்கிறார் இயக்குநர்.
இதை மட்டும் மிக சரியாக பய உணர்வோடு சொல்லி இருப்பதால் இந்தப் பேய் படம் கடைசி வரையிலும் நம்மை ரசிக்க வைத்திருக்கிறது.
RATING : 3.5 / 5









