யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை டாக்டர் டி. அருளானந்து மற்றும் மாத்யூ அருளானந்து ஆகியோர் விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஹரி ஹரன் ராம் கூடுதல் திரைக்கதையில் பங்களித்துள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். சக்தி பிரணேஷ் படத்தொகுப்பை கவனிக்க, சித்து குமார் இசையமைத்துள்ளார். பிரேம் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இப்போதைய ஜென் ஸீ இளைஞர்களை தியேட்டருக்கு இழுத்து வர வேண்டும் என்றால்,
ஒன்று…. அது காதல் படமாக இருக்க வேண்டும். அல்லது வன்முறையின் உச்சமாக இருக்க வேண்டும்.
இந்த இரண்டு அளவுகோலின்படிதான் கடந்த சில வருடங்களாக தமிழ்த் திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் இந்த ‘ஹைக்கூ’ படம், காதலை மையமாகக் கொண்டு வந்துள்ளது.
சென்னையில் ஆட்டோமொபைல் டிசைனிங் செய்யும் ஒரு நிறுவனத்தில் லீடராக வேலை செய்து வருகிறார் ஹீரோ ‘மனோகர்’ என்ற ஏகன்.
இன்னும் திருமணம் ஆகாதவர். இவருடைய சொந்த ஊர் கோவை. இவருடைய அம்மாவும், அப்பாவும் கோவையில் இருக்கிறார்கள். இவர் மட்டும் சென்னையில் தன்னுடைய நண்பர்களுடன் தனித்து வாழ்கிறார்.
இவருடைய நிறுவனத்தில் பயிற்சியாளராக வேலைக்கு சேர்கிறார் நிவேதா என்ற பெமினா ஜார்ஜ். பார்ப்பதற்கு வளர்ந்த பெண்ணாக இருந்தாலும் குணத்தில் அநியாயத்துக்கு பயந்தவராக இருக்கிறார் ஃபெமினா.
இவர் தற்போது காதலித்து வரும் காதலன் இவரை அடக்கி ஆண்டு கொண்டிருக்கிறான். இந்த விஷயம் ஒரு கட்டத்தில் ஏகனுக்கு தெரிய வர, அந்தக் காதலில் இருந்து பெமினா விடுபடுவதற்கு பெரிதும் உதவி செய்கிறார் ஏகன்.
இப்பொழுது ஏகனின் வாழ்க்கையிலும் ஒரு சோகமான காதல் கதை இருக்கிறது என்பதை அறியும் ஃபெமினா அது பற்றி கேட்கும்பொழுது தன்னுடைய முந்தைய காதல் கதையை சொல்கிறார் ஏகன்.
கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும்பொழுது செய்த ஒரு சேட்டையினால் கல்லூரியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுகிறார் ஏகன். வேறு எந்தக் கல்லூரியிலும் சேர முடியாத நிலையில் அவருடைய நெருங்கிய உறவுக்கார பெண் ஒருவரால் தற்போது பெண்கள் மட்டுமே படித்து வரும் ஒரு கல்லூரியில் சேர்த்துவிடப்படுகிறார் ஏகன்.
அந்தக் கல்லூரியில் இவரது வகுப்பில் படிக்கும் ‘பவளக்கொடி’ என்ற ஸ்ரீதேவி மீது இவருக்கு ஒரு காதல் பிறக்கிறது. ஆனால் ஸ்ரீதேவியின் அப்பா கடைந்தெடுத்த சாதியவாதியாக இருப்பதால் இந்தக் காதல் நிறைவேறுமா என்ற சந்தேகம் ஸ்ரீதேவிக்கு ஏற்படுகிறது. அதே நேரம் ஸ்ரீதேவியை புரிந்து கொள்ளாத நிலையில் ஏகன் செய்யும் சில தவறுகள், ஏகனிடமிருந்து ஸ்ரீதேவியை ரொம்ப தூரம் தள்ளிக் கொண்டு போய் விடுகிறது.
ஏகனால் தன் காதலை நிலைத்து வைக்க முடியவில்லை. ஸ்ரீதேவியாலும் ஏகனை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் ஸ்ரீதேவிக்கு வேறொருவருடன் திருமணமாகி அவர் பிரிந்து விடுகிறார்.
இந்தச் சோகக் கதையை கேட்டு பரிதாபப்படும் ஃபெமினா ஏகனை காதலிக்கத் துவங்குகிறார். ஏகனும் பழைய காதலை மறக்க புது காதலியைத் தேட வேண்டிய கட்டாயம் இருப்பதால் இதை ஏற்றுக் கொள்கிறார்.
ஆனால் போகப் போக ஏகனுக்கும், பெமினாவுக்கும் வீணான மனஸ்தாபங்கள், வருத்தங்கள் ஏற்படுகிறது. பழைய காதல் எப்படி தன் கையை விட்டு போனதோ அந்த வழிகளை எல்லாம் அடைப்பதாக நினைத்து பழைய காதலி போலவே புதிய காதலியையும் மேனேஜ் செய்கிறார் ஏகன். இது பெமினாவுக்கு எரிச்சலையும், கோபத்தையும் உண்டு செய்ய… ஏகனின் இந்த இரண்டாவது காதலும் முச்சந்தியில் வந்து நிற்கிறது.
இந்தக் காதலாவது நிலைத்த நின்றதா..? அல்லது முறிந்ததா..? என்பதுதான் இந்த ‘ஹைக்கூ’ படத்தின் திரைக்கதை.
கல்லூரி மாணவன் கதாபாத்திரத்திற்கும், திருமணத்திற்குத் தயாராக இருக்கும் வாலிபத் தோற்றத்திற்கும் பொருத்தமானவராக இருக்கிறார் ஏகன். திரையில் இரண்டுக்கும் நிறைய வித்தியாசங்களையும் காட்டி இருக்கிறார்.
கல்லூரி மாணவராக தலை முழுவதும் முடியோடு இப்படி ஒரு ஆணை நிச்சயம் ரௌடியாகத்தான் பார்க்க வேண்டி வரும். அப்படி ஒரு தோற்றத்தில் இருக்கும் ஏகன், அப்பாவியான தன்னுடைய கேரக்டர் ஸ்கெட்சுக்கு ஏற்ப தன்னுடைய கல்லூரி வாழ்க்கையில் சில இடங்களில் தன்னுடைய அப்பாவித்தனத்தில் நிஜமாகவே சிரிக்க வைத்திருக்கிறார்.
அத்தனை மாணவிகளையும் ஒரே இடத்தில் சந்திக்கும்போது அவருக்குள் ஏற்படும் அந்தத் திகைப்பு, பயம்… வகுப்பில் சக மாணவிகளோடு அமர்வதற்கே தயங்கி தயங்கி அமர்கின்ற அந்த நடிப்பு… ‘பவளக்கொடி’ என்ற பெயரை கேட்ட உடனேயே மனதுக்குள் ஒரு தேடல் உணர்வு வந்து ‘யார்’ என்று தேடுகின்றபோது சரியான நடிப்பை காண்பித்து இருக்கிறார்.
மாணவர் பருவத்தில் அவருடைய எண்ணத்திற்கு எதிராக எது பேசினாலும் அவ்வளவு சீக்கிரம் காதில் ஏறாது. அதை எதிர்த்துக் கேள்வி கேட்டுத்தான் ஆக வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி தன்னுடைய வாழ்க்கையில் தானாக வந்த அந்த காதலை அவர் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கின்றபொழுது அவர் படுகின்ற அந்த துயரமும் வருத்தமும் மிக இயல்பாக காட்டப்பட்டிருப்பதால் ஏகன் நடிப்பில் எந்த இடத்திலும் சோடை போகவில்லை.
சென்னையில் பெமினாவின் காதலனாக நடிக்கும்பொழுதும் ஏற்கனவே ஒரு தடவை பட்டது போதும் என்ற நினைத்து அடுத்தக் காதலைத் தொடர்வதற்கு தயங்குகிறார். ஆனால் இந்த காதலை இழந்து விடக்கூடாது என்பதற்காக அவர் செய்கின்ற சில செயல்கள் அவரை அறியாமலேயே அவரை முட்டாளாக காட்டுகின்றன. அந்த இடங்களில் எல்லாம் அவர் தன்னுடைய இயலாமையை இயக்குநர் சொல்லிக் கொடுத்ததுபோல செய்து இருக்கிறார். ஆனால் சில இடங்களில் அதீதமான திரைக்கதைலாலும், புத்திசாலித்தனமான வசனங்களாலும் ஓவர்டோஸாக மாறிவிட்டது. ஏகனுக்கு இன்னும் நிறைய வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் காத்திருக்கின்றன. அதில், அவர் நடித்து தன்னுடைய நடிப்பை விஸ்தாரமாக்கட்டும்.
இரண்டு ஹீரோயின்களுக்கும் சம அளவிலான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இருவரின் நடிப்பும் பிரமாதம்தான். ‘பவளக்கொடி’யாக நடித்திருக்கும் ஸ்ரீதேவி கேமராவுக்கு ஏற்ற முகம். தன்னுடைய குடும்பச் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் பேசும் தன் காதலனை தவிர்க்கவும் முடியாமல் தன்னுடைய நிலையை எடுத்துச் சொல்லவும் முடியாமல் தவிக்கின்ற அந்த நடிப்பை அழகாக காட்டியிருக்கிறார்.
அதிலும் சென்னைக்கு வந்திருக்கும் பொழுது ஏகன் கொடுக்கின்ற அந்த டார்ச்சரை தாங்கிக் கொண்டு அவர் பேசுகின்ற பொழுது நமக்கே பாவமாக இருந்தது. அந்த அளவுக்கு ஒரு அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார் ஸ்ரீதேவி. கடைசியாக ஸ்ரீதேவியும் பெமினாவும் சந்திக்கின்ற அந்த இடத்தில் மிக இயல்பாக தன்னுடைய வாழ்க்கையில் கணவர், குழந்தை என்று தான் அடுத்தக் கட்டத்துக்குப் போய்விட்டதை அவர் சொல்லும்பொழுது கைதட்ட வைத்துவிட்டார். வெல்டன் ஸ்ரீதேவி.
இன்னொரு பக்கம் ஃபெமினா ஜார்ஜ் இன்னொரு காதலியாகவும், அழகியாகவும் வந்து படத்தை கடைசி வரையிலும் நம்மை பார்க்க வைத்திருக்கிறார், உருண்டை விழிகள்.. ஆனால் மிரண்ட பார்வை என்று பரிதாபப்படும் அளவுக்கு தன்னுடைய கேரக்டர் ஸ்கெட்ச்சின்படி நடித்திருக்கும் பெமினா ஜார்ஜ், நம் மனதில் இடம் பிடித்துவிட்டார். அவ்வளவு அழகான நடிப்பையும் கொடுத்திருக்கிறார்.
தன்னுடைய டார்ச்சர் காதலனிடம் பேச முடியாமல் தவித்து, அவனிடம் அடி வாங்கிவிட்டு அதை ஏகனிடம் வந்து சொல்லுகின்ற பொழுது ஒரு பரிதாபம் அவர் மீது நமக்குள் வருகிறது. அதேபோல் ஏகன் அழுத்தம் திருத்தமாக அவருக்கு அட்வைஸ் செய்த பிறகு அதே காதலனை திருப்பியடித்துவிட்டு வீர நடைபோட்டு செல்லும்போது சபாஷ் என்று சொல்லவும் வைத்திருக்கிறார்.
இந்த காதல் ஜெயிக்கும் என்று நினைத்து காதல் பந்தத்தில் இணையும் ஃபெமினாவுக்கு ஏகன் கொடுக்கின்ற அந்த வித்தியாசமான வரவேற்பும், அவர் தொடர்ந்து நடந்து கொள்ளும் விதமும் எரிச்சல் ஊட்டும் பொழுதும் அதை நியாயமாகவே கேள்வி கேட்டு இருக்கிறார். ஆனால் இயக்குநர் எழுதியிருந்த வசனங்கள் சுற்றி வளைத்து மூக்கை தொடுவது போலவே இருப்பதால் அவருடைய நடிப்பு அந்த இடத்தில் வீணாகிப் போய்விட்டது என்பதுதான் உண்மை. பரவாயில்லை தமிழ் சினிமாவுக்கு இந்தப் படத்தின் மூலமாக இன்னும் இரண்டு சிறந்த நடிகைகள் கிடைத்திருக்கிறார்கள் என்று அடித்துச் சொல்லலாம்.
ஏகனின் நண்பர்களாக நடித்திருப்பவர்களும் அவ்வப்பொழுது சிற்சில கமெண்ட்களை கொடுத்து நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள். படத்தின் ஏனைய கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் இயக்குநரின் சிறப்பான இயக்கத் திறமையினால் நன்றாகவே நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமி படம் முழுவதும் ஒருவித டல்லான ஒளிப்பதிவையை கொடுத்திருக்கிறார். ஏன் என்று தெரியவில்லை. கோவை கல்லூரி சம்பந்தப்பட்ட காட்சிகளில் இயல்பான ஒளியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டார் போலிருக்கிறது. ஆனால் சென்னையில் அலுவலக உட்புறம், வீடுகளின் உட்புறம் அனைத்துமே கொஞ்சம் இருண்மையாகவே காட்டப்பட்டிருக்கிறது. வீட்டுக்குள் நடக்கும் இவர்களது சண்டைகள், பிரச்சனைகள், வாக்குவாதங்கள் எல்லாம் இருட்டிலேயே நடப்பது போலவே நமக்கு தெரிகிறது. கொஞ்சம் வெளிச்சத்தை கொடுத்திருக்கலாம்.
சித்து குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.தான் ஆனால் இதைவிடவும் சிறந்த பாடல்களை கொடுத்திருக்கலாம். அந்த அளவுக்கு அழகான ஸ்கிரீன் ப்ளே கல்லூரி திரைக்கதையில் இருந்தது. பின்னணி இசையிலும் அடக்கி வாசித்து காட்சிகளை மனதால் உணர வைத்திருக்கிறார் இசையமைப்பாளர். இந்த பின்னணி இசையை புகாரெஸ்டிற்குச் சென்று இசைத்ததாக இசையமைப்பாளர் கூறினார். ஆச்சரியமாக இருந்தது. அப்படி என்ன இந்த பின்னணி இசையில் ஸ்பெஷலாக இருக்கிறது என்பது நமக்குப் புரியவில்லை.
இடைவேளைக்கு பின்பான காட்சிகளில் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான வசனங்கள் வருவதை தவிர்த்து இருக்கலாம். அது மாதிரியான காட்சிகளை படத் தொகுப்பாளர் கொஞ்சம் மனம் வைத்து நீக்கி இருந்தால் படம் இன்னமும் ஒரு கிரிப்பாக இருந்திருக்கும்.
“ஒரு உடைந்து போன காதலை மீண்டும் ஒரு காதல் வந்து ஒட்ட வைக்கும்” என்பார்கள். அப்படி ஒரு ஒட்ட வைத்த காதலைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஆனால், அதை வசனங்களின் மூலமாக மிக எளிமையான முறையில் சொல்லியிருந்தால் முன் வரிசை ரசிகர்கள் நிச்சயமாக இந்தப் படத்தில் இணைந்திருப்பார்கள். மாறாக, சுற்றி வளைத்து சொல்லி இருப்பது நமக்கு கொஞ்சம் அயர்ச்சியைத் தருகிறது.
அதே சமயம் ஹீரோ தன்னுடைய முறிந்து போன காதல் போல் இந்த காதல் முறியக்கூடாது என்பதற்காகத்தான் இதனை செய்கிறார் என்பதை அவருடைய வாயாலயே மிக எளிமையாக சொல்ல வைத்திருக்க வேண்டும். அதேபோல் இரண்டாவது காதலியும். “முதல் காதலியை போல என்னை எண்ண வேண்டாம். நான் அதற்கு முற்றிலும் வேறு மாறானவள்” என்பதை வெளிப்படையாக சொல்லியிருக்க வேண்டும். இந்த இரண்டையும் செய்து இருந்தால் இந்தப் படம் காதலர்களின் இன்னொரு கொண்டாட்டமாகவும் இருந்திருக்கும்.
மகளிர் கல்லூரியில் ஒரே ஒரு மாணவன் என்கின்ற ஒரு சுவையான கான்செப்ட்டை ஆரம்பித்தபொழுது படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை இழந்தது. ஆனால், அதை மிகக் குறைவான காட்சிகளிலேயே முடித்துவிட்டு காதலுக்குள் ஹீரோவை திணித்துவிட்டார் இயக்குநர். இதிலேயே நமக்குப் பெரும் ஏமாற்றம்.
இன்னும் கொஞ்சம் சுவாரசியமான காட்சிகளை இணைத்திருக்கலாம். ஆனால் அதற்காக கல்லூரி மைதானத்தின் நட்ட நடுவிலேயே ஒரு நடமாடும் கழிப்பறையை கொண்டு வந்து ஹீரோவுக்காக மட்டுமே வைக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் ரொம்பவும் டூ மச்சான கற்பனை இயக்குநரே!
இரண்டாவது காதலும் முறிந்துவிட்டதோ என்று நினைக்கும் நேரத்தில் திடீரென்று இருவரையும் இணைத்து வைத்து சுகமாக்கிவிட்டார் இயக்குநர். ஆனால், இந்த சுபத்திற்கு என்ன காரணம் என்பதை இருவருமே சொல்லாமலேயே சட்டென்று கிளைமாக்ஸ்சை முடித்தது ஏன் என்று தெரியவில்லை.
‘ஹைக்கூ’ என்பது கவிதை உலகத்தில் மிகவும் உச்சமாக பார்க்கப்படும் ஒரு வார்த்தை. மூன்று வரிகளுக்குள்… முதல் வரிகள் சொல்லப்படுவதை தலைகீழாக மாற்றுவது போல மூன்றாவது வரி இருக்க வேண்டும் என்பது இந்த ‘ஹைக்கூ’வின் விதிமுறை. அதனால்தான் இந்தப் படத்துக்கு இந்தத் தலைப்பை வைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் ‘ஹைக்கூ’ என்பதற்கான பொருத்தமான காதலை இந்தப் படம் சொல்லவில்லை என்பது மட்டும் வருத்தமான விஷயம். மற்றபடி இதுவும் ஒரு பொழுதுபோக்குக்கான அழகான ஒரு காதல் படம்தான்!
RATING : 3.5 / 5









