இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் (நாயகன்), ஃபரியா அப்துல்லா(நாயகி), ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்புதாசன், யோக் ஜேபி, ஷீலா ராஜ்குமார், மகாலட்சுமி சுதர்சன், கம்லேஷ் ஜெகன், கிரண் கொண்டா, நாகா சாய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இயக்கம்: ஜேசன் சஞ்சய், தயாரிப்பு: ஏ. சுபாஸ்கரன் (லைகா புரொடக்ஷன்ஸ்), இசை : எஸ்.தமன், ஒளிப்பதிவு: கிருஷ்ணன் வசந்த், படத்தொகுப்பு: கே.எல். பிரவீன், கலை இயக்கம்: எம். பெஞ்சமின், சண்டைப் பயிற்சி: ஸ்டண்ட் சில்வா, விக்கி,
இப்படம் கடந்த ஒரு வருடமாகவே இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது. அதற்குக் காரணம், தமிழ் சினிமாவின் வசூல் சாதனையாளரும், இப்போதைய முதல்வருமான நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் முதன்முதலாக இயக்கியிருக்கும் படம் இது.
அவர் இதற்கு முன்பாக சில குறும் படங்களை இயக்கியிருந்தாலும், சினிமாவில் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றவில்லை. இருந்தாலும் அவருடைய, தந்தையின் பெயருக்காக லைகா நிறுவனம் தானாக முன் வந்து இந்த வாய்ப்பை அவருக்கு வழங்கியிருக்கிறது. அந்த வாய்ப்பை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாரா.. இல்லையா.. என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.
நாயகன் சந்தீப் கிஷன்(குரு), தனது தந்தை வழியில் ஒரு பெரிய வீட்டில் நூலகம் நடத்தி வருகிறார். அந்த வீட்டைக் கட்டவும், நூலகம் நடத்தவும் அவரது தந்தை வாங்கிய ₹25 லட்சம் கடன், தற்போது வட்டி மேல் வட்டி சேர்ந்து ₹1.25 கோடியாக வந்து நிற்கிறது. கடனைக் கேட்டுப் பணம் கொடுத்தவர்கள் மிரட்டுகின்றனர்; இரண்டு நாட்களுக்குள் பணத்தைத் திருப்பிக் கொடுக்காவிட்டால் புத்தகங்களை எல்லாம் வெளியே வீசிவிடுவதாகக் கெடு வைக்கிறார்கள்.
இதற்கிடையில் நாயகி ஃபரியா அப்துல்லா இவருக்குத் தோழியாகிறார். தனது யூடியூப் தளத்தில் அவரைப் பேச வைத்துப் பெரிய அளவில் வளர்க்கலாம் என நாயகன் திட்டமிடுகிறார். முதலில் மறுக்கும் நாயகி, பின்னர் அவரது விடாமுயற்சியால் ஒப்புக் கொள்கிறார்; இருவரும் சேர்ந்து யூடியூப்பில் கதை பேச ஆரம்பிக்க, அவர்களுக்குள் காதலும் மலர்கிறது.
கடன் நெருக்கடி கழுத்தை நெரிக்கவே, கையில் இருக்கும் மொத்தப் பணத்தையும், காதலிக்குக் கொடுக்க வேண்டிய பணத்தையும் எடுத்துக்கொண்டு சூதாட்ட கிளப்புக்குச் சென்று விளையாடுகிறார் நாயகன். அங்கே பணத்தைத் தோற்றுவிடுகிறார். அதே நேரம், அங்கே ஏதோ ஏமாற்று வேலைகள் நடப்பதைக் கவனித்து சண்டையிடுகிறார்.
போதைப் பொருள் கடத்தல் மன்னனான வில்லன் சம்பத் ராஜ். ₹1,000 கோடியை ஒரு பெரிய கன்டெய்னருக்குள் வைத்துப் பூட்டி, அதன் சாவியைத் தனது நம்பிக்கைக்குரிய ஏஜென்ட்டிடம் ஒப்படைக்கிறார். ஆனால், அந்தச் சாவியைக் கைப்பற்ற நினைக்கும் அந்த சூதாட்ட கிளப்பின் உரிமையாளரும், மேலாளரும் அந்த ஏஜென்ட்டைக் கொன்றுவிடுகிறார்கள். ஏஜென்ட் காணாமல் போனதாக மட்டுமே சம்பத் ராஜுக்குத் தெரியவருகிறது.
இதனிடையே, அந்தச் சாவி மற்றும் கொலை நடந்த வீடியோ பதிவுகள் அடங்கிய மைக்ரோ சிப் நாயகன் கைக்குக் கிடைக்கிறது. அதை வைத்துப் பிளாக்மெயில் செய்து ₹1.5 கோடி கேட்டு மிரட்டத் தொடங்குகிறார்.
நாயகன் கேட்ட பணம் கிடைத்ததா, லைப்ரரியை மீட்டாரா..? சம்பத்ராஜின் நிலை என்ன? அந்த ஆயிரம் கோடி ரூபாய் என்னவானது என்பதே படத்தின் மீதிக்கதை.
சந்தீப் கிஷன் தம்மால் முடிந்த அளவு நடித்திருக்கிறார்; காதல் காட்சிகள் குறைவாக இருந்தாலும் சண்டை மற்றும் ஆவேசமான காட்சிகளில் துடிப்பைக் காட்டியுள்ளார். ஃபரியா அப்துல்லா சில காட்சிகளில் கோபத்தையும், மருத்துவமனைக் காட்சிகளில் உணர்ச்சிகளையும் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்; திரையில் அழகாகவும் தெரிகிறார்.
சம்பத் ராஜ் வில்லனாகத் தனது பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளார். யோக் ஜேபியும் தனது கதாபாத்திரத்தை நேர்த்தியாகக் கையாண்டுள்ளார். ராஜூ சுந்தரம் மருத்துவர் என்ற பெயரில் ஏதோ காமெடி செய்திருக்கிறார்.
இயக்குநராக ஜேசன் சஞ்சய் சில இடங்களில் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக, இடைவேளைக் காட்சி, கார் பார்க்கிங்கில் நடக்கும் சண்டை மற்றும் சம்பத் ராஜ் உள்ளே நுழையும் தருணங்களின் ‘இன்டர்கட்’ எடிட்டிங் நேர்த்தியாக வந்துள்ளது. அதேபோல் ஸ்டேஜ் ஷோ நடக்கும் தருணத்தில் நடக்கும் பணக் கடத்தல் விறுவிறுப்பாகப் படமாக்கப்பட்டுள்ளது.
கிளைமாக்ஸில் பல காவலர்களைக் கொன்றுவிட்டு வில்லன் தாய்லாந்துக்குத் தப்பிப்பதும், உடனே நாயகன் தன் படையுடன் தாய்லாந்துக்கே விரட்டிச் சென்று சண்டையிடுவதும் வழக்கமான மசாலா சினிமாத்தனமாக அமைந்து லாஜிக்கை மீறுகின்றன.
படத்தின் அடிப்படைக் கரு மற்றும் கதாபாத்திர வார்ப்பு பலவீனமாக உள்ளது. தொடக்கக் காட்சியில், தந்தையின் நண்பரான ராஜேஷிடம் பேசும்போது, “புத்தகங்களை விட்டுவிட்டு எப்படிச் செல்வது? என் தந்தை காலத்து லைப்ரரி இது” என்று உருகும் நாயகன், அதை மீட்பதற்காக அடுத்தடுத்த கட்டங்களில் பிளாக்மெயில் செய்வது, திருட்டுப் பணத்தைப் பெற முயல்வது போன்ற தவறான வழிகளைத் தேர்ந்தெடுப்பது முரணாக இருக்கிறது. இதனால் இடைவேளைக்குப் பிறகு பார்வையாளர்களால், நாயகனோடு ஒன்றிப் பயணிக்க முடிவதில்லை.
வழக்கமான வர்த்தகப் படங்களின் வரிசையில் இதுவும் ஒன்றாக வந்து போயிருக்கிறது; பெரிதாக எந்தப் புதுமையும் இல்லை. அதே சமயம், ஜேசன் சஞ்சயின் இயக்கம் முதல் படத்திற்கு ஏற்ப ஓரளவு பரவாயில்லை ரகம். எதிர்காலத்தில் அவர் இயக்கும் படங்களிலும், அடுத்து நடிப்பதாகக் கூறப்படும் படங்களிலும் அவரது தனித்துவத்தை எதிர்பார்க்கலாம்.
வழக்கமான கமர்ஷியல் மசாலா படங்களை ரசிப்பவர்கள் இப்படத்தைப் பார்க்கலாம்.
RATING : 3 / 5









