இந்தப் படத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன், கதிர் பாலு, மகா டெல்லி கணேஷ், இன்ஸ்பெக்டர் சாகு மோன், ரேவதி மற்றும் பலர் நடிச்சிருக்காங்க.
படத்தை டைரக்ட் பண்ணியிருக்கிறது அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திகேயன். தயாரிப்பு ஐங்கரன் ஃபிலிம்ஸ் – ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிச்சிருக்காங்க. இசை – கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவு – கௌதம் ராஜேந்திரன், படத்தொகுப்பு ஆர். கே. செல்வா, சண்டைக் காட்சிகள் – பீட்டர் ஹெய்ன், கதை திரைக்கதை – விக்னேஷ் ராஜா, கலை இயக்கம் – மணிகண்டன் சீனிவாசன்.
அசோக் செல்வன் இப்போதைய யூத் ஹீரோக்களில் ஒருவர். நல்லா படிச்ச தோற்றம்.. ஐடில வேலை பார்க்கும் தோரணை.. இன்றைய யூத்துகளுக்குப் பிடித்தமான ஒரு ஹீரோவா வலம் வந்துட்டு இருக்காரு. இந்தப் படமும் அப்படித்தான், தனக்கு இந்தக் கதை சூட் ஆகும் என்று நினைத்து, கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா இந்தக் கதையோட பயணப்பட்டு இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்துள்ளார்.
அறிமுக இயக்குநர் அப்படிங்கறதுனால ஒரு புதிய எதிர்பார்ப்பு எப்பொழுதுமே அவர்களின் படங்களுக்கு உண்டு. அந்த வகையில் இந்தப் படமும் ஒரு எதிர்பார்ப்பை உண்டு பண்ணியிருந்தது.
‘சூர்யா’ என்ற அசோக் செல்வனும், ‘இயல்’ என்ற அவருடைய மனைவியான பிரீத்தி முகுந்தனும் காதலிச்சு கல்யாணம் பண்ணவங்க. அதனால பிரீத்தி முகுந்தனோட வீட்ல இவங்களுக்கு சப்போர்ட் இல்ல. இவங்க ரெண்டு பேரும் தனியா சென்னையில வீடு எடுத்து தங்கி இருக்காங்க. ரெண்டு பேருமே ஒரே ஹோட்டல்லதான் வேலை பார்க்குறாங்க.
காலையில அவசரமா எந்திரிச்சுப் போறது, திருப்பி ராத்திரி ரொம்ப டயர்டா வீட்டுக்கு வர்றது அப்படின்னு ஒரு எந்திரத்தனமான வாழ்க்கை சூழல்ல மாட்டிக்கிட்டாங்க. ஏன்னா பணத் தேவை அதிகமாயிடுச்சு. அதனால என்ன செய்றதுன்னு தெரியாம அவங்களுக்கு ரொமான்ஸ் பண்ணவோ, காதலிக்கவோ, நாலு வார்த்தை நல்லவிதமா பேசவோ நேரமில்ல ரெண்டு பேருக்கும்..!
இதுல பேசி வச்சுக்கிட்டு “இன்னைக்கு நான் சமைக்கிறேன், நாளைக்கு நீ சமைக்கலாம்” அப்படின்னு சொல்லி டைம் டேபிள் எல்லாம் போட்டு எழுதி வச்சிருக்காங்க. அப்படியும் அவங்களால ரொட்டீனா ஒண்ணும் செய்ய முடியல.
ஹோட்டல் தொழில்ல அவர்களுக்கு அதிக ஆர்வம். ஹோம்ஸ்டே அப்படிங்கிற மாதிரி ஒரு மலைப் பிரதேசத்துல ஒரு பெரிய வீடு மாதிரி ஒண்ண எடுத்து, அதுல ஒவ்வொரு ரூம்ல ஒவ்வொருத்தர் வந்து தங்கிட்டு போலாம் என்ற செட்டப்ல புது பிசினஸ் ஆரம்பிக்கணும்ங்கிறது பிரீத்தி முகுந்தனோட ஆசை. அதை அவங்க லவ் பண்ணும்போதே அசோக் செல்வன்ட்ட சொல்லியிருக்காங்க. அவரும் “சரி செய்யலாம்” அப்படின்னு சொல்லி சொல்லியிருக்காரு.
இப்ப இதையெல்லாம் ஞாபகப்படுத்துறாங்க பிரீத்தி. உடனே அசோக்செல்வன் பிரீத்தியைக் கூட்டிட்டு அப்படியே கார்ல ஏறி மலை வாசஸ்தலத்துக்கு வர்றாங்க. அங்க ராணி பங்களான்னு ஒரு பங்களா இருக்கு. அந்த பங்களா இப்ப பாழடைஞ்சு போய்க் கிடக்கு. அதை கண்டிப்பா எனக்குக் கொடுத்தீங்கன்னா நான் பிசினஸ் பண்ணிப் பொழைச்சுக்குவேன் என்று சொல்லி, அதன் ஓனர் ராணியான ரேவதியிடம் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கூத்தாடி, அதை வாங்கிடுறாரு அசோக் செல்வன்.
அதை மறுசீரமைப்பு செய்யறதுக்காக ஆரம்பிக்கும்போதுதான் பல பிரச்சனைகள் அசோக் செல்வனுக்கும், பிரீத்திக்கு வந்தும் சேருது. முதல்ல சென்னையில் இருந்து வீட்டுப் பொருட்களை கொண்டுவரும்போதே ஒரு பிரச்சனை ஆரம்பிக்குது. ஒரு வழக்கறிஞர் மூலமா பிரச்சனை. அதுக்கப்புறம் அந்த ஊர் எம்.எல்.ஏ மூலமா பிரச்சனை. அதுக்கப்புறம் அபிவிருத்திக் குழு, உள்ளாட்சிக் குழு எல்லாம் ஒவ்வொருத்தரும் மாறி மாறி ஒவ்வொரு ஆபீஸா அவங்களை அலைய விடுறாங்க. அசோக்கால எதையும் சரி செய்ய முடியல.. என்னதான் எதிர்பார்க்கிறாங்கன்னு அவருக்குத் தெரியல. அனுபவமும் இல்லை. கடைசியா எம்.எல்.ஏ-வை போய் பார்க்குறாரு.
அங்க போன பின்னாடிதான் தனக்குப் பெரிய வலை வீசியிருப்பது அவருக்கே தெரிய வருகிறது. எம்.எல்.ஏ. அந்த வீட்டை வாங்குறதுக்கு ரொம்ப ஆர்வமா காத்துக்கிட்டு இருந்தாரு. அவருக்குக் கிடைக்காத வீடு அசோக் செல்வனுக்கு கிடைச்சிருக்குன்ற கோபத்துல அவர் என்னென்ன வேலை செய்கிறார் என்பதுதான் இந்த படத்துடைய பிற்பாதியான கதை.
ஒரு அழகான லவ் ஸ்டோரியா ஆரம்பிக்குது படம். ஆனா முடியும்போது மிகப் பெரிய ஒரு வன்முறைப் படமா முடியுது. இது ஒரு மிகப் பெரிய நகைமுரண் அப்படின்னே சொல்லலாம்.
அசோக் செல்வனுக்கு நிச்சயமாக ஒரு மிகப் பெரிய பாராட்டு, இந்தப் படத்தில் கிடைக்கும். ஏன்னா அவருடைய நடிப்புல அந்த அளவுக்குப் பொளந்து கட்டியிருக்காரு. இதுவரைக்கும் மற்ற படங்களில் அவர் நடிக்காத நடிப்பையெல்லாம் இந்தப் படத்தின் பிற்பகுதியில் காட்டியிருக்கார்.
அதுலயும் இடைவேளை பிளாக்ல அவரும் அவருடைய மனைவி பிரீத்தி முகுந்தனும் மாறி, மாறி சண்டை போட்டுப்பாங்க. அற்புதமான காட்சி அது. அவ்வளவு அழகா எடுத்திருக்காரு இயக்குநர். ஆனால் அவர்கள் பேசும் வசனத்தை இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லியிருக்கணும். அதைத் தெளிவாகச் சொல்லியிருக்காததுதான் பிரச்சனை. அதை இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லியிருந்தால் நல்லா இருந்திருக்கும்.
“என்னுடைய விருப்பத்தைத்தான் சொன்னேன். கட்டாயப்படுத்தல. நீதான் நான் விரும்புறேன்னு சொல்லி என்னையும் சேர்த்து இழுத்துவிட்ட”ன்னு மனைவி குற்றஞ்சாட்டுறாங்க. அப்ப ஹஸ்பண்டா அவரும், “உன்னுடைய விருப்பம்தானே என்னுடைய விருப்பம், அதனாலதானே அதை செஞ்சேன்”னு சொல்லியிருக்கணும்.
ஆனால் அவர் இந்த சண்டையை வளர்க்குறதுக்காகவே வசனத்தை மாத்தி மாத்திப் போட்டு, குழப்பி அடிச்சு நம்மளையும் சேர்த்து குழப்பிவிட்டாங்க. ஆனால் அந்த இடத்துல நடிப்புல ரெண்டு பேரும் பிச்சு வாங்கியிருக்காங்க.
அசோக் செல்வன் பாவம், அந்த இடைவேளைக்கு அப்புறமான சண்டைக் காட்சிகளில் தன்னுடைய உடல் வலியையும் பொருட்படுத்தாமல் நெறைய அடி வாங்கியிருக்காரு போலிருக்கு. அவ்வளவு உழைப்பைக் கொட்டியிருக்காரு அசோக் செல்வன். அந்த வகையில் அவருடைய நடிப்புக்கும், உழைப்புக்கும் நமது பாராட்டுக்கள்.
அப்புறம் பிரீத்தி முகுந்தன் – இப்படி ஒரு நடிப்பை அந்தப் பொண்ணு கொடுக்கும்னு நிஜமா எதிர்பார்க்கல. அவ்வளவு அழகான ஒரு நடிப்பை அந்தப் பொண்ணு கொடுத்திருக்கு. அதுக்காகவே அந்தப் பொண்ணுக்கு நமது பாராட்டுக்கள். பாடல் காட்சிகளிலும் ப்ரீத்தி அழகா இருக்காங்க. சில க்ளோசப் ஷாட்களில் ரொம்ப அழகா இருக்காங்க. ரொம்ப அழகாவும், அளவாவும் நடிச்சிருக்காங்க. குறிப்பா இன்ஸ்பெக்டர் வந்து மிஸ் பிஹேவ் பண்ணும்போது அவர் காட்டும் நடிப்பு பிரமாதம்.
“இவனை எப்படி வீட்டுக்குள்ள விட்ட?” என்று அசோக்கிடம் சமையல்கட்டுல கோபப்படுவாங்க.. அந்த இடத்துலயும் அவ்வளவு அழகான நடிப்பு. ஆனா அவங்களையும் கடைசி நேரத்துல ஒரு சண்டை போட வச்சு, அவங்களையும் அடி வாங்க வச்சு, அவங்களையும் கதற வச்சு, ஒரு வழி பண்ணிட்டாரு டைரக்டர்.
அதுக்கப்புறம் படத்துல முக்கியமான மூணு வில்லன்கள் பிரமாதமா பண்ணியிருக்காங்க. அதுல ஒருத்தர் எம்.எல்.ஏ-வா நடிச்சவரு. அப்பா! என்ன மனுஷன்யா அவரு, இத்தனை நாளா எங்கயா இருந்தாரு இந்த ஆளுன்னு யோசிக்க வேண்டியிருக்கு. அவ்வளவு அழகான ஒரு வில்லத்தனத்தைக் காட்டிருக்காரு மனுஷன். செமையான நடிப்பு! அப்புறம் அடுத்து அவருடைய வக்கீலா நடிச்ச சாபுமோன். அவரு இன்னொரு வில்லன், மலையாள நடிகர்; அவ்வளவு அழகான நடிப்பு. இன்னொருத்தர் டெல்லி கணேஷோட மகன் மகா டெல்லி கணேஷ். அவரு இன்னொரு பக்கம் வில்லத்தனத்திலேயே கலக்கியிருக்கிறார்.
இந்தப் படத்துக்கு மிக முக்கியமான தூண்களே இந்த மூணு வில்லன்கள்தான். வில்லன்கள் கரெக்ட்டா இருந்தா படத்தில் ஹீரோக்களும் கரெக்ட்டா பொருத்தமா இருப்பாங்கன்னு சொல்லுவாங்கள்ல… அது மாதிரி இந்தப் படத்துக்கு அசோக் செல்வனுக்கு மிகச் சரியான போட்டி இந்த மூணு வில்லன்கள்தான். பிரமாதப்படுத்தியிருக்காங்க.
ரேவதி ரெண்டு மூணு சீன்லதான் வந்தாலும் அவருடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பைக் கொடுத்திருக்காங்க.
படத்தின் முக்கியத் தூண்கள் ஒளிப்பதிவாளர், சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, படத் தொகுப்பாளர் நால்வரும்தான்.
கோவிந்த் வசந்தாவின் பாடல்களை விடவும் பின்னணி இசை அபாரம். அதுலயும் இடைவேளைக்குப் பின்னாடி பின்னணியில் பின்னி எடுத்திருக்காரு. சண்டை காட்சிகளிலும், ஏதோ ஒண்ணு நடக்கப் போகுதுன்ற மாதிரியான காட்சிகளில் எல்லாம் நமக்கு ஒரு திகிலைக் கூட்டுவது மாதிரியே இசையமைத்து நம் கண்களை ஸ்கிரீனை விட்டு அகலவிடாமல் பார்த்திருக்காரு. அந்த வகையில் கோவிந்த் வசந்தாவுக்கு நன்றி. பாடல்கள் பரவாயில்லை ரகம், ஒரு தடவை கேட்கலாம் அப்படிங்கிற மாதிரிதான் இருந்தது.
சண்டைக் காட்சிகளை ஒளிப்பதிவாளர் எப்படித்தான் பதிவு பண்ணாரோ தெரியல. அவ்வளவு கோரமான சண்டைக் காட்சிகள். பீட்டர் ஹெய்ன்னோட சண்டைன்னா சும்மா இருக்காது. எந்த அளவுக்கு சிறப்பாகப் பண்ணுவாருன்னு தெரியும், அந்த அளவுக்கு மிகப் பிரமாதமா பண்ணியிருக்காரு. அவ்வளவு அழகா அதையும் படம் எடுத்துக் கொடுத்திருக்காரு ஒளிப்பதிவாளர், அவருக்கும் நமது பாராட்டுக்கள்.
அப்புறம் கலை இயக்குநர். அந்த இடத்துல எத்தனை பொருட்களை உடைச்சாங்கன்னு தெரியல.. பொருட்களை எங்கெங்க வச்சிருந்தாங்கன்னு தெரியல. அதையெல்லாம் உடைச்சு மறுபடியும் அடுத்த நாள் அந்த ஸ்டண்ட் சீக்வென்ஸ் எடுக்கும்போது எப்படிப் பொறுப்பா இருந்து அதை எடுத்து வச்சாங்கன்னும் தெரியல. உண்மையா கலை இயக்குநர், கலை உதவி இயக்குநர்களுக்கு நம்முடைய பாராட்டுக்கள்.
படத்தில் பணியாற்றிய மற்ற தொழில் நுட்பக் கலைஞர்கள், குறிப்பா உதவி இயக்குநர்கள் – ஒவ்வொரு சீனையும் பிரிச்சு ஒவ்வொரு ஷாட்டையும் குறிச்சு வச்சு எப்படி எடுத்தாங்கன்னு தெரியல, அவ்வளவு சண்டைக் காட்சிகள் இதுல இருக்கு. திரும்பத் திரும்ப சண்டைக் காட்சிகள் வருவது நமக்கு ஒரு அயர்ச்சி ஆயிருச்சு.
படத்தோட மிகப் பெரிய குறையே படத்தின் நீளம்தான். படத்தை இன்னும் சுருக்கியிருக்கலாம். சுருக்கமாக இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும்.
ஆனால், அதைவிட முக்கியமானது திரைக்கதையை மாற்றிச் சொல்லியிருக்கணும். படத்தின் இடைவேளைக்குப் பின்பு வருகின்ற அந்த சண்டைக் காட்சிகள் எல்லாம் ஓவர் ஹீரோயிஸமா போயிருச்சு.
அசோக் செல்வனுக்கு இப்போதைக்கு ஓவர் ஹீரோயிசம் தேவையில்லை. அவரைப் பொறுத்த அளவுக்கு ஒரு நல்ல ஜென்டில்மேன், ஒரு நல்ல ரொமான்ஸ் ஆள் மாதிரி கேரக்டர் கிடைத்தால் அவரால் நன்றாக பெர்பான்மென்ஸ் செய்ய முடியும். ஆனால், அதை விட்டுட்டு இப்படியொரு படம் செய்ய அவருக்கு யார் யோசனை கொடுத்ததுன்னு தெரியல. திடீர்னு ஓவரான ஹீரோயிசத்துக்கு போயிட்டாரு.
இந்தப் படத்தின் திரைக்கதையை ஹீரோயிசமா கொண்டு போகாமல் அறிவுபூர்வமாக கொண்டு போயிருக்கணும். இடைவேளைக்குப் பின்னாடி. யார் யார் வருகிறார்கள்.. எம்.எல்.ஏ, இன்ஸ்பெக்டர், வழக்கறிஞர், மாவட்ட ஆட்சியர்… இவங்களே ஒண்ணுக்குள்ள ஒண்ணு கூட்டணின்றபோது, அதை உடைக்கிறதுக்கு ஹீரோ தன் அறிவைப் பயன்படுத்தி ஜெயிப்பதுபோல் அறிவுபூர்வமான திரைக்கதையா கொஞ்சம் மாத்தி அமைத்திருந்தால் இதைவிட நல்லா இருந்திருக்கும்.
ஆனால் இது ஓவர் எஃபெக்ட்டைக் கொடுத்துருச்சு. அதிகப்படியான சண்டைக் காட்சிகள் நமக்கு அயர்ச்சியைக் கொடுத்து “எப்படா படத்தை முடிப்பீங்க?ன்ற மாதிரி நம்மளை கதறவிட்டுட்டார் இயக்குநர்.
இடைவேளைக்கு முன்னாடிவரைக்கும் ஒரு நல்ல படம், சிறந்த படம்; ஆனால் இடைவேளைக்குப் பின்னாடி ஒரு ஹீரோயிச அடிதடி சண்டைப் படமாயிருச்சு. இதை ஒரு பெரும் குறையாகக் கருதுகிறோம்.
மற்றபடி இந்தப் படமும் ஒரு முறை பார்க்கலாம் என்ற தகுதியைப் பெறுகிறது.
பார்க்க விரும்புபவர்கள் பாருங்கள்.
RATING : 3.5 / 5









