தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (TFAPA) 6-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் (AGM) இன்று காலை, சென்னை, வடபழனியில் உள்ள ஹோட்டல் ஆதித்யாவில் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இப்பொதுக்குழு கூட்டத்தின் மூலம் சங்க உறுப்பினர்கள் ஒன்றுகூடி,
தமிழ் திரையுலகம் தொடர்பான முக்கிய விஷயங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதுடன்,
சங்கத்தின் ஆண்டு கணக்குகள் மற்றும் புதிய முன்னெடுப்புகள் குறித்து விவாதித்து, உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறுவது வழக்கம்.
இவ்வாண்டு கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில், தமிழ்நாடு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத் துறை மாண்புமிகு அமைச்சர் திரு. ஏ. ராஜ்மோகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தமிழ் திரையுலகின் முக்கிய பிரச்சினைகள் குறித்து உரையாற்றியதுடன், தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடினார்.
தமிழ் திரைப்படத் துறையின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை கருத்தில் கொண்டு, பல்வேறு முக்கிய பிரச்சினைகளில் தமிழ்நாடு அரசின் ஆதரவையும் தலையீட்டையும் கோரி, TFAPA சார்பில் மாண்புமிகு அமைச்சரிடம் விரிவான கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
சங்கம் முன்வைத்த கோரிக்கைகளை மாண்புமிகு அமைச்சர் திரு. ஏ. ராஜ்மோகன் அவர்கள் விரிவாகப் பார்வையிட்டதுடன், ஒவ்வொரு கோரிக்கை குறித்தும், அவற்றை நிறைவேற்ற அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தனது உரையில் விரிவாக எடுத்துரைத்தார்.
TFAPA முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்:
1. 4% உள்ளாட்சி பொழுதுபோக்கு வரியை நீக்குதல்.
தற்போது தமிழ்நாட்டில் மட்டுமே நடைமுறையில் உள்ள இந்த வரியை நீக்க வேண்டும்.
2. தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளை ஆண்டுதோறும் வழங்குதல், நிலுவையில் உள்ள ஆண்டுகளுக்கான விருதுகளையும் வழங்கி முடித்தல்.
3. சிறு முதலீட்டு திரைப்படங்களுக்கான நிலுவையில் உள்ள 11 ஆண்டுகளுக்கான மானியங்களை வழங்குதல்.
மேலும் மானியத் திட்டத்தை ஆண்டுதோறும் தொடர்ந்து செயல்படுத்துவதுடன், தற்போதுள்ள ₹7 லட்சம் மானியத்தை ₹10 லட்சமாக உயர்த்துதல்.
4. தமிழ்நாடு முழுவதும் திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு ஒற்றைச் சாளர (Single Window) அனுமதி முறையை அமல்படுத்துதல்.
குறிப்பாக மாநகர சாலைகளில் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதியையும் எளிதாக்குதல்.
5. Movie Ticket Tracking System-ஐ செயல்படுத்துதல்.
ஒவ்வொரு காட்சிக்கும் திரையரங்க வசூல் விவரங்களை தயாரிப்பாளர்கள் ஆன்லைனில் உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் இம்முறையை செயல்படுத்தி, வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதுடன், வருவாய் கசிவுகளையும் தடுக்க வேண்டும்.
6. தயாரிப்பாளர் சங்கங்கள் முன்மொழியும் புதிய OTT தளத்திற்கு தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் நிதியுதவி வழங்குதல்.
சிறு முதலீட்டு தமிழ்த் திரைப்படங்களுக்கு பிரத்யேகமாக ஒரு OTT தளத்தை உருவாக்கி, அவற்றை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கமாகும்.
7. திரைப்படத் திருட்டை (Piracy) கட்டுப்படுத்தவும், தடுக்கவும், தமிழ்நாடு அரசு ஆதரவுடன் தனியான Anti-Piracy அமைப்பை உருவாக்குதல்.
8. டிஜிட்டல் சினிமா ஆபரேட்டர்களால் வசூலிக்கப்படும் Virtual Print Fee (VPF)-ஐ நீக்குதல்.
தயாரிப்பாளர்களின் நீண்ட கால கோரிக்கையான இதற்கு தமிழ்நாடு அரசின் தலையீட்டை TFAPA கோரியுள்ளது.
9. OTT வெளியீட்டு கால இடைவெளி (OTT Window) பிரச்சினைக்கு தீர்வு காண முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துதல்.
தயாரிப்பாளர் சங்கங்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியோர் பங்கேற்கும் கூட்டத்தை நடத்தி, OTT Window மற்றும் VPF பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வை உருவாக்க வேண்டும்.
சிறப்பான திரைப்படங்களை உருவாக்கிய தயாரிப்பாளர்களுக்கு கௌரவம்:
TFAPA சார்பில் முதன்முறையாக, அக்டோபர் 2025 முதல் செப்டம்பர் 2026 வரை வெளியான குறிப்பிடத்தக்க மற்றும் வெற்றிகரமான தமிழ் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
திரையுலகிற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பை பாராட்டும் வகையில், தயாரிப்பாளர்களுக்கு கேடயம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
‘பைசன் காளமாடன்’, ‘ஆண் பாவம் பொல்லாதது’, ‘ஆரோமலே’, ‘மிடில் கிளாஸ்’, ‘சிறை’, ‘அங்கம்மாள்’, ‘சல்லியர்கள்’, ‘தலைவர் தம்பி தலைமையில்’, ‘ஹாட் ஸ்பாட்-2 மச்’, ‘மை லார்ட்’, ‘வித் லவ்’, ‘தாய் கிழவி’, ‘யூத்’, ‘ஹேப்பி ராஜ்’, ‘நீளிரா’, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, ’29’, ‘கருப்பு’, ‘பிளாஸ்ட்’, ‘ஹபிபீ’, ‘டபுள் ஆக்குபென்சி’, ‘பரிமளா அண்ட் கோ’, ‘நூறு சாமி’, ‘கான் சிட்டி’, ‘கட்டா குஸ்தி 2’, ‘அன்பே டயானா’, ‘ஜனநாயகன்’, ‘ஜி.டி. என்’., ‘டி.சி’., ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, ‘மொத ராத்திரி’, ‘ஹி’, ‘இம்மார்ட்டல்’, ‘மண்டாடி’, ‘என்ன விலை’, ‘மீசைய முறுக்கு 2’, ‘லெனின் பாண்டியன்’, ‘டோரதி’ ஆகிய சிறந்த படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
கௌரவிக்கப்பட்ட பல தயாரிப்பாளர்கள் நேரில் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.
தயாரிப்பாளர் சமூகத்தின் சிறப்பான பங்கேற்பு:
இந்த ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், தமிழ் திரையுலகின் முக்கிய பிரமுகர்களான திருமதி. குஷ்பு சுந்தர், திருமதி. சௌந்தர்யா ரஜினிகாந்த், திரு. விஜய் ஆண்டனி, திரு. கண்ணன் ரவி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. G.K.M. தமிழ்குமரன், இணைச் செயலாளர் திருமதி. சுஜாதா விஜயகுமார், TFAPA-வின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தமிழ் திரைப்படத் துறையின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக TFAPA முன் வைத்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு, அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க முன்வந்ததற்காக மாண்புமிகு அமைச்சர் திரு. ஏ. ராஜ்மோகன் அவர்களுக்கு TFAPA தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
தமிழ் திரையுலகின் வளர்ச்சிக்காக, தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து கலந்துரையாடி, சீரான தொடர்பின் மூலம் மேற்கண்ட பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதுடன், தமிழ் திரைப்படத் துறையை மேலும் வலுப்படுத்த TFAPA தொடர்ந்து செயல்படும்.












