full screen background image

சர்தார்-2 – சினிமா விமர்சனம்

சர்தார்-2 – சினிமா விமர்சனம்

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் மற்றும் விவிஒய் நிறுவனம் சார்பில் இஷான் சக்சேனா தயாரிப்பில் இந்த ‘சர்தார்-2’ திரைப்படம் உருவாகி உள்ளது.

இதில் கார்த்தி ஹீரோவாக நடிக்க மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரெஜிஷா விஜயன் மூவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.

மேலும் யோகி பாபு, நிழல்கள் ரவி, ஆஷிஸ் வித்யார்த்தி, பாலாஜி சக்திவேல் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டைப் பயிற்சியை திலீப் சுப்பராயன் கவனித்துள்ளார். கலை இயக்குநராக ராஜீவன் நம்பியார், படத்தொகுப்பாளராக வேலுக்குட்டியும் பணியாற்றியுள்ளனர்.

தயாரிப்பு நிர்வாகத்தை ஏ. பால் பாண்டி மேற்கொண்டுள்ளார். இணைத் தயாரிப்பாளராக ஏ. வெங்கடேஷ் பணியாற்றியுள்ளார்.

பி.எஸ்.மித்ரன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

‘சர்தார்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

‘சர்தார்’ முதல் பாகத்தில் இந்தியாவின் ரகசிய உளவாளியான கார்த்தி, தண்ணீருக்காக இந்தியாவில் நாசகார வேலைகளை செய்யும் வில்லனை அழிக்கும் வகையான கதையில் நடித்திருந்தார். இந்த கதை இன்னமும் வித்தியாசமான கதைதான்.

ரா உளவுத்துறை ‘டோகு’ என்ற ஒரு ரகசிய ஆபரேஷனை செய்து இருக்கிறது.

இரண்டாம் உலகப் போரில் எதிரிப் படைகளை அழிப்பதற்காக ஜப்பான் உருவாக்கி இருந்த ஒரு நாசக்கார கெமிக்கல் குண்டு தற்செயலாக இந்தியாவுக்குள் கர்நாடகா, தமிழக பார்டரில் இருக்கும் ஒரு கிராமத்தில் விழுகிறது.

அது விழுந்த வேகத்தில் அந்தப் பகுதி மக்களுக்கு அந்த குண்டில் இருந்து வெளியான கதிரியக்கத்தினால் தொற்று நோய் ஏற்பட அவர்கள் கும்பல் கும்பலாக மடிந்து சாகிறார்கள்.

அந்த குண்டில் இருந்து வெளிப்படும் கதிரியக்கத்தை தடுத்து நிறுத்துவதற்கான மருந்து ஜப்பானில்தான் இருக்கிறது என்பதால் ஜப்பான் மொழி தெரிந்த ஒருவரை வைத்துக் கொண்டு அதை கண்டுபிடித்து இந்தியாவிற்குள் கடத்தி வரும்படி உளவுத்துறை தனது அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறது.

அந்த நேரத்தில் ஜப்பான் மொழி தெரிந்த உளவுத்துறை ஏஜென்ட்டான கார்த்தி தனது அப்பாவை தேடி ஒரு ரகசிய ஆபரேஷனில் இறங்கியிருக்கிறார்.

ஆனால் அது சொதப்பளானாலும் அவருடைய அப்பாவை தேடும் அந்தப் பிரச்சனைக்கும் இப்போதைய ‘டோகு’ பிரச்சனைக்கும் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது.

அச்யூத்குமார், ஆஷிகா ரங்கநாத்துடன் ஜப்பான் செல்லும் கார்த்தி அங்கிருந்து அந்த மருந்தின் இருப்பிடத்தை கண்டுபிடித்து அதை இந்தியாவிற்கு கொண்டு வர முயல்கிறார்.

அதே நேரத்தில் அந்த மருந்தை கைப்பற்றி மீண்டும் ஒரு நாசக்கார செயலை செய்வதற்காக வில்லன் எஸ்.ஜே.சூர்யாவும் முயல்கிறார்.

இந்த நேரத்தில் இதுவரையிலும் தலைமுறைவாக இருந்த கார்த்தியின் அப்பாவான சர்தார் வெளிப்பட்டு இந்தப் பிரச்சனையில் தலையிட்டு அந்த மருந்தை கண்டுபிடிக்க முயல்கிறார்.

இந்த மூவரின் முயற்சிகள் வெற்றி பெற்றதா? இல்லையா? இறுதியில் அந்த ஆபரேஷன் ‘டோகு’ என்ன ஆனது? அந்த கதிரியக்கத்தை வெளிப்படுத்திய அந்த எந்திரம் என்னவானது? அப்பாவும், மகனும் கடைசியில் இணைந்தார்களா? இல்லையா? என்பதுதான் இந்த ‘சர்தார்-2’ படத்தின் திரைக்கதை.

படத்தில் அப்பா, மகன் இரண்டு கதாபாத்திரங்களும் ஒரே நேரத்தில் திரையில் தோன்றியிருக்கிறார்கள்.

அப்பாவின் இளமைக்கால கதையும் படத்தில் ஒரு பகுதியாக வந்திருக்கிறது. இப்போதைய மகன் உளவுத்துறைக்கு தெரியாமல் ஒரு ஆப்ரேஷனில் இறங்குவதில் இருந்ததான் இந்தப் படமே துவங்குகிறது.

கார்த்தியின் ஸ்பெஷலாட்டியான அவருடைய மென்மையான சிரிப்பும், கெத்தான சிரிப்பும், ஸ்டைலான சிரிப்பும் இந்தப் படத்தில் மட்டும்தான் கார்த்தியிடம் இருந்து வெளிப்படவில்லை. இந்தக் கதைக்கும் அது தேவைப்படவில்லை.

ஒரு உளவாளி தன்னுடைய உளவு வேலையை எப்படி செய்கிறான்? ஆபத்துகளில் இருந்து எப்படி தப்பிக்கிறான்? சாகசங்களை எப்படி செய்கிறான் என்பதை காட்டுவது போலவே திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வேகம், துரிதம், தந்திரம், ஸ்டைல் என்று இன்னொரு உலகத்திற்குள் கார்த்தியை திணித்திருக்கிறார் இயக்குநர். கார்த்தியும் அந்த திரைக்கதைக்கு ஏற்ற நடிப்பையே கடைசிவரையிலும் காண்பித்து இருக்கிறார்.

அப்பா கதாபாத்திரம் மட்டுமே தான் சந்தித்த அந்த சிறுவனின் அப்பாவித்தனமான முகத்தை நினைத்தும், தன்னுடைய உதவி செய்ய முடியாத இயலாமையை நினைத்து வருத்தப்படும் காட்சிகளும், கை நடுக்கத்துடன் தோன்றும் காட்சிகளிலும் மனதை நெகிழ வைத்து இருக்கிறார்.

மற்றபடி சண்டை காட்சிகளில் சண்டை இயக்குநர்கள் விதம்விதமாக வடிவமைத்து வைத்திருக்கும் சண்டைகளில் புகுந்து விளையாடி இருக்கிறார். சண்டையிலும்கூட நடிப்பை காண்பித்துவிட முடியும் என்பதை கார்த்தி இந்தப் படத்தில் கொஞ்சம் அதிகமாகவே காட்டியிருக்கிறார் என்றே சொல்லலாம்.

நடிப்பில் அதிகம் கவர்வது அப்பா கார்த்தியா, மகன் கார்த்திகா என்று சொன்னால் நிச்சயம் அப்பா கார்த்திதான் கூடுதலான மதிப்பெண் பெற்று நம் பாராட்டை பெறுகிறார்.

சமீப கால படங்களில் வில்லத்தனத்திற்கே வில்லத்தனத்தை காட்டியபடி நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா இந்தப் படத்தில் ‘யோகி’ என்ற வில்லனாகவே வாழ்ந்திருக்கிறார்.

அவருக்கும், அப்பா கார்த்திக்கும் இடையில் இருக்கும் அந்த தொடர்பு சஸ்பென்சாக வைக்கப்பட்டு ஒரு இடத்தில் உடையும்பொழுது ‘அட’ என்று பாராட்ட வைத்துவிட்டார் இயக்குநர்.

எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு திறன் பற்றி சொல்லவே தேவை இல்லை. இந்தப் படத்திலும் வெயிட்டான கதாபாத்திரத்தில் படைத்திருக்கும் இயக்குநர் சொல்ல வந்த விஷயத்தை ஒரு ஹீரோவை போலவே அவரே சொல்லி இருப்பது பாராட்டுக்குரியது.

பொதுவாக ஹீரோக்கள் மட்டும்தான் கதை கருவை வெளியிடுவார்கள். ஆனால், இந்தப் படத்தில் வில்லன்தான் என்றாலும் இன்னொரு ஹீரோவாக எஸ்.ஜே.சூர்யா நம் கண்களுக்கு தெரிகிறார்.

மாளவிகா மோகன், ஆசிகா ரங்கநாத் இருவருமே சண்டை காட்சிகளிலும் ஜொலித்து தங்களுடைய பணியை நிறைவு செய்து இருக்கிறார்கள்.

படத்தின் மிகப் பெரிய காமெடி யோகி பாபுவையும், நிழல்கள் ரவியையும் ரா உளவுத் துறை ஏஜெண்டுகளாக காட்டியிருப்பதுதான். அவர்களை காமெடியாக காட்டுவதாக நினைத்து ரா உளவுத்துறை அமைப்பையே காமெடி ஆக்கிவிட்டார் இயக்குநர் மித்ரன்.

ரா உளவுத்துறையின் தலைவரான ஆஸிஷ் வித்யார்த்தி அதிகமாக ஆங்கில வசனங்களை பேசி முக்கியமாக தெரிய வேண்டிய பல விஷயங்களை கடைக்கோடி ரசிகனுக்கும் தெரியாமல் செய்துவிட்டார்.

அப்பா கார்த்தியின் காதலியாக, மனைவியாக வரும் ரஜிஷா விஜயன் சில காட்சிகளில் வந்து சென்று இருக்கிறார். அப்பா கார்த்தியின் அப்பாவாக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல் ஒற்றைக் காட்சி என்றாலும் முத்திரை குத்துவதை போல நடித்திருக்கிறார்.

ஜார்ஜ் சி. வில்லியம்ஸின் ஒளிப்பதிவு அபாரம். சென்னை, டெல்லி, ஜப்பான், காடுகள், வேதியியல் கூடங்கள், ரகசிய சுரங்கங்கள் என்ற பல இடங்களிலும் தன்னுடைய கேமராவை வைத்து வித்தை காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

சண்டை காட்சிகளை சுழன்று, சுழன்று படமாக்கி இருக்கிறார். அந்த சுரங்கத்தில் நடக்கும் சண்டைக் காட்சிகளை அபாரம் என்று சொல்லணும் அதற்காக சண்டை இயக்குநர்களையும் மனதார பாராட்ட வேண்டும்.

சாம் சி.எஸ்  வழக்கம்போல் பின்னணியில் அடித்து அடி இருக்கிறார். பல இடங்களில் பின்னணி இசையை நாம் கவனிக்காத அளவுக்கு மென்மையாக போட்டு காட்சிகளில் நம்மை ஆழ்த்தியிருக்கிறார் சாம்.

விஜய் வேலு குட்டியின் எடிட்டிங் அடுத்தடுத்து என்ன? என்ன? என்று வேகம் எடுப்பதைப் போல படத்தை நகர்த்தி இருக்கிறது.

எஸ்.ஜே.சூர்யா ஒரு நீண்ட லெக்சர் அடிக்கும்பொழுது பிரமாதமாக அதைப் பதிவு செய்திருந்தாலும் இரண்டு இடங்களில் படத் தொகுப்பில் சிறு இறடல் இருக்கிறது. அதை எப்படி தொகுப்பாளர் மிஸ் செய்தார் என்று தெரியவில்லை.

ராஜீவனின் கலை இயக்கமும் அபாரம் என்றே சொல்லலாம். அதிலும் அந்த கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் மிஷினை வடிவமைத்தவிதமும் இதற்கான மருந்து இருக்கும் மற்றொரு மிஷினை வடிவமைத்தவிதமும் சூப்பர்.

வேதியியல் கூடங்கள், ரகசிய சுரங்கங்கள், ரயில்களின் வடிவமைப்பு, கிரேன்களில் கடைசியாக அதை கொண்டு செல்வது என்று அத்தனையிலும் தன்னுடைய வித்தையை அழகாக காட்டியிருக்கிறார் ராஜீவன்.

படத்தின் பிரம்மாண்டம் காட்சிக்கு காட்சி தெரிய வருகிறது. அதை மிக சரியான விதத்தில் பயன்படுத்திருக்கிறார் இயக்குநர்.

அந்த வகையில் இந்தப் படத்தில் அனாவசியமான செலவுகள் எதுவும் இல்லை என்று தோன்றுகிறது. சிறு சிறு டிவிஸ்ட்டுகளை கொண்டு வந்து நம்மை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.

அதிகமாக ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் நம் உடலில் இருப்பதால்தான் இப்பொழுது மிக அதிகமாக மருத்துவமனைகளில் நோயாளிகள் தங்கி இருக்கிறார்கள் என்கின்ற ஒரு உண்மையை இந்தப் படத்தின் மூலமாக இயக்குநர் நமக்கு அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார்.

இந்தக் கருத்து நிச்சயமாக ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். அந்த ஆன்டிபயாட்டிக்கை நாம் சாப்பிடவில்லை என்றாலும் நாம் சாப்பிடும் உணவு பொருட்களில் ஏதோ ஒரு விதத்தில் அது இருப்பதை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்.

இது பற்றிய ஒரு பொது அறிவை நமக்கு உணர்த்துவதுபோல இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இந்தப் படத்தில் சொல்லியிருக்கும் விஷயத்தை நம் மனதில் கொள்வது நல்லது.

அதேபோல் மத்திய, மாநில அரசுகளும் இந்த ஆன்ட்டிபயோடிக் மருந்துகளின் வீச்சினை குறைக்க வேண்டும் என்பதாகவும் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் இந்தப் படம் நாம் அதிகம் அறியாத நமது உடல், மருத்துவம் சார்ந்த விஷயங்களை சொல்லி வரவேற்கத்தக்க ஒரு கருத்தை சொல்லி இருக்கிறது.

இதற்காகவே இந்தக் குழுவினருக்கும் இந்தக் கதையை தேர்ந்தெடுத்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும், நடித்த நடிகர், நடிகைகளுக்கும், படத்தில் பணியாற்றிய தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.!

RATING 3.5 / 5

Our Score