இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இசைஞானி இளையராஜாவுடன் ‘டோரத்தி’ படத்தில் இணைந்துள்ளார் என்ற அறிவிப்பு வெளியானவுடனேயே அந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
சமீபத்தில் இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் மிகப் பெரும் அளவுக்கு வைரலானது.
“கல்யாண விருந்து…” மற்றும் “முத்துமணி..” ஆகிய அந்த இரண்டு பாடல்களும் மிகப் பெரிய ஹிட் ஆகியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் இதுவரையிலும் யாரும் செய்திராத ஒரு புதிய முயற்சியாக, இந்த ‘டோரத்தி’ படத்தின் பின்னணி இசை தொகுப்பை படம் வெளியாவதற்கு முன்பாகவே கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இளையராஜா கூட்டணி வெளியிட உள்ளனர்.
இதற்காக வரும் செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இந்த விழாவில்தான் இந்தப் படத்தின் பின்னணி இசையை வெளியிட உள்ளார்கள்.
இது குறித்து படத்தின் இயக்குநரான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசும்போது, “இந்த ’டோரத்தி’ என்னுடைய 10-வது படமாக இருந்தாலும், ‘பீட்சா’ படத்தின்போது பத்திரிகையாளர்கள் முன்பு எப்படி அமர்ந்திருந்தேனோ அதே நிலையில்தான் இப்போதும் இருக்கிறேன்.
காரணம், இந்தபா படம் எனக்கு ரொம்பவே பர்சனலான படம். இதன் திரைக்கதையும் எனக்கு ரொம்பவே பர்சனலானது. இந்தக் கதையை படமாக்க வேண்டும் என்று பல வருடங்களுக்கு முன்பாகவே முடிவு செய்து விட்டேன்.
இந்தக் கதையை எழுதிவிட்டு, சரவணன் சந்திரன் என்ற எழுத்தாளரிடம் கொடுத்து கூடுதல் கதையை எழுத சொன்னேன். பிறகு நானே 6 முதல் 7 வடிவிலான திரைக்கதையை எழுதினேன்.
அதேபோல், இதில் புதுமுக நடிகர்களைத்தான் ஹீரோக்களாக நடிக்க வைக்க வேண்டும் என்றும் முடிவு செய்தேன்.
இது மதுரை சார்ந்த கதை. மதுரையில் நான் வாழ்ந்த வாழ்வியல். நான் பார்த்த மனிதர்களை மையமாக கொண்டு எழுதப்பட்ட கற்பனை கதை இது.
சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருக்கும் இரண்டு இளைஞர்கள், அவர்கள் வாழ்க்கையில் வரும் ஒரு பெண், அதன் பிறகு அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது? என்ற ரீதியில்தான் கதை இருக்கும். இப்போதைக்கு படத்தைப் பற்றி இவ்வளவுதான் சொல்ல முடியும்.
இந்தபா படத்தை எப்போதே செய்திருக்க வேண்டும்! இந்தக் கதை முடிவாகி, படம் தொடங்கும் நேரத்தில், ’மகான்’ பண்ண வேண்டி இருந்தது, அதற்காக இதைத் தள்ளி வைத்துவிட்டேன்.
அந்தப் படத்தை முடிந்த பிறகு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ செய்ய வேண்டிய கட்டாயம் வந்தது. அதன் பிறகு சூர்யா சாரை சந்தித்து ‘ரெட்ரோ’ தொடங்க வேண்டி இருந்தது.
ஒரு கட்டத்தில் இந்தப் படத்தைப் பண்ண முடியாமல் தொடர்ந்த நிலையில், இப்போது பண்ணவில்லை என்றால், இனி எப்போதும் பண்ண முடியாமல் போய்விடும் என்று புரிந்துவிட்டது. அதனால்தான், இப்போது உடனே தொடங்கிவிட வேண்டும் என்று படத்தை ஆரம்பித்துவிட்டேன்.
இந்தப் படத்தை சர்வதேச ரசிகர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று முன்பே முடிவு செய்தேன், அதனால்தான் டொரொண்டோ சர்வதேச திரைப்பட விழாவுக்கு அனுப்பினோம். அங்கு உலக பிரீமியர் திரையிடலுக்கு படம் தேர்வாகியுள்ளது.
திரைப்பட விழாவில் பங்கேற்பதால் இது திரைப்பட விழாவுக்கான படம் என்று நினைக்க வேண்டாம். நம் மக்களுக்கு ஏற்ற, அனைத்து அம்சங்களும், திரையரங்க கொண்டாட்டங்கள், பாடல்கள் நிறைந்த படமாக இந்தப் படம் இருக்கும்.
அதே சமயம், நம் கலாச்சாரம், நம் வாழ்வியலை உலகளவில் எடுத்துச் செல்லும் ஒரு படமாகவும் இருக்கும்.
அதற்காகத்தான் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட முடிவு செய்தோம். வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி டொரொண்டோ திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்படுகிறது.
செப்டம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தில் புதுமுகங்கள் அல்லது வளர்ந்து வரும் நடிகர்களைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம்.
இரண்டு கதாபாத்திரங்களில் ஒன்றில் சனத் நடிப்பது என்பது நான் கதை எழுதி முடித்த உடனேயே முடிவாகிவிட்டது. அதற்காக அவரை தயாராக இருக்க சொன்னேன், அவரும் தயாராக இருந்தார்.
ஆனால், மற்றொரு கதாபாத்திரத்திற்கு நடிகர் தேர்வு செய்யப்படாமல் இருந்ததால் புதுமுகத்தை தேர்வு செய்து நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தேன்.
அதற்காக பலரை ஆடிசன் செய்த போது ரிஷிகாந்த் ஆடிசனுக்கு வந்தார், அவரது ஆடிசனை பார்த்து அனைவரும் நன்றாக இருப்பதாக சொன்னார்கள், அப்படித்தான் அவர் மற்றொரு கதாபாத்திரத்திற்கு தேர்வானர்.
இப்போது இவர்கள் இரண்டு பேரின் நடிப்பையும் பார்த்தால், இந்தக் கதாபாத்திரங்களுக்கு இவர்களை தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்கமாட்டார்கள் என்று தோன்றுகிறது.
படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டாகியிருக்கிறது, இது ராஜா சாரின் மேஜிக்.
இந்தக் கதைக்கு அவர்தான் இசையமைக்க வேண்டும் என்று நான் முன்பேயே முடிவு செய்துவிட்டேன். ஆனால் அவரிடம் கேட்க தயக்கமாக இருந்தது.
என்னுடைய முந்தைய படங்களுக்கும் அவருடன் பணியாற்ற விரும்பினேன். ஆனால் ஏதோ ஒரு தயக்கத்தால் அவரை சந்திக்கவில்லை.
ஆனால், இந்தக் கதையை தயாரிப்பாளர்களுக்கு அனுப்பும்போதே இசை ராஜா சார்தான் என்று போட்டு அனுப்பியிருந்தேன்.
இருந்தாலும், படப்பிடிப்பை விரைவாக முடிக்க வேண்டும் என்பதால், இசையமைப்பாளர் பற்றி யோசிக்காமல் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டேன்.
படத்தை முடித்துப் பார்த்த பிறகு, இதை ராஜா சாரிடம் காட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படி அவரை சந்தித்து படத்தை காட்டினேன். அவர் படத்தைப் பார்த்த உடன் “மறுநாளே பணியை தொடங்கி விடலாம்” என்றார். அப்படித்தான் ராஜா சாருடன் என் பயணம் தொடங்கியது.
அவருடன் இணைந்து பணியாற்றியது பெரும் பாக்கியமாக கருதுகிறேன். கலையை அவரைப் போல் யாராலும் நேசிக்க முடியாது. ‘பேஷன்’ என்ற வார்த்தைக்கு சரியான நபர் அவர்தான்…” என்றார்.









