full screen background image

ஹி(Hi) – சினிமா விமர்சனம்

ஹி(Hi) – சினிமா விமர்சனம்

நடிகர்கள் :

நயன்தாரா – தேவயானி
கவின் – மயில்சாமி
ராதிகா சரத்குமார் – பரிமளா
பாக்யராஜ்.கே – வாத்தியார்
பிரபு – இந்திரன்
அம்ருதா சீனிவாசன் – லக்ஸ்
Vtv கணேஷ் – மருத்துவர்.சண்முகி
ஃபெப்சி விஜயன் – பரிசுதம்
ரெஞ்சி பணிக்கர் – தாசன்
சத்யன் – யோகேந்திரன்
ஆதித்ய கதிர் – கணபதி
குரேஷி – கோபி
காவியா அறிவுமணி – மைதிலி
மிர்ச்சி கெமி – தன்யா

தொழில்நுட்பக் குழு:

எழுதி இயக்கியவர்: விஷ்ணு எடவன்
தயாரிப்பு: எஸ்.எஸ்.லலித் குமார், விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் உமேஷ் குமார் பன்சால்

தயாரிப்பு நிறுவனங்கள் : செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, ரவுடி பிக்சர்ஸ் & Z ஸ்டுடியோஸ்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: குபேந்திரன்
இணை தயாரிப்பாளர்: வினோத் சி.ஜே, கே.எஸ்.மயில்வாகனன்
ஒளிப்பதிவு இயக்குனர்: ராஜேஷ் சுக்லா
எடிட்டர்: பிலோமின் ராஜ்
இசையமைப்பாளர்: ஜென் மார்ட்டின்
கலை இயக்குனர்: கண்ணன்.எஸ்
நடன இயக்குனர்: பிருந்தா, தினேஷ், காவ்யா.ஜி
ஸ்டண்ட்: தினேஷ் காசி
ஆடை வடிவமைப்பாளர்: காவ்யா ஸ்ரீராம், அனு வர்தன்
விளம்பர வடிவமைப்பாளர்: வியாகி
ஸ்டில்ஸ்: தேனி முருகன்
கூடுதல் திரைக்கதை & வசனம்: சி யு முத்துசெல்வன்
இணை இயக்குனர்: டி.எஸ்.வினோபாலா
இணை இயக்குனர்: தங்கவேல் செல்வமணி, பத்மன்.எம்
உதவி இயக்குநர்: நிரஞ்சன், அருண்
இணை ஆசிரியர்: சக்திவேல் வரதராஜ்
Sfx: Sync Cinemas
பத்திரிக்கை தொடர்பு : யுவராஜ்.
 
கொஞ்சம் காமெடி கலந்த கிராமத்து குடும்பத்து காதல் கதை இந்தப் படம். 
 
படித்த பட்டதாரியான மயில்சாமி என்ற கவின் தனது சொந்த அத்தை மகளை காதலிக்கிறார். ஆனால் அவரோ, “நீ ஒரு பயந்தாங்கோளி. ஒரு முடிவு எடுக்க ரொம்ப திணறுவ.. எதுக்கெடுத்தாலும் பொம்பளை மாதிரி அழுது, ஒப்பாரி வைப்ப.. அதூனால எனக்கு உன்னை கல்யாணம் செய்ய இஷ்டமில்லை..” என்று சொல்லி மறுத்துவிடுகிறார். 
 
தனக்குள் இருந்த காதல் முறிந்து போனதால் மனம் உடைந்து போன மயில்சாமி திருமணம் செய்து கொள்ளும் மனநிலையில் இல்லாமல் இருக்கிறார்.
 
ஆனால் அவருடைய அப்பாவான பாக்யராஜ், உடனடியாக அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார். 
 
இதிலிருந்து தப்பிக்க மயில்சாமி, ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு வீட்டில் இருந்து சென்னைக்கு தப்பி ஓடுகிறார்.
 
அதே சமயம் கோவையில் ஒரு கிராமத்தில் இருக்கும் தேவயானி என்ற நயன்தாராவும் தனக்குப் பிடிக்காத திருமணத்திலிருந்து தப்பிக்க வேண்டி ஊரில் இருந்து சென்னைக்கு ஓடி வருகிறார். 
 
இந்த ஓடுகாலிகள் இருவரும் சென்னையில் சந்தித்து நட்பு பாராட்டுகிறார்கள். தேவயானியின் வெள்ளந்தியான குணம்  மயில்சாமியை ஈர்த்துவிட அவர் கொஞ்சம், கொஞ்சமாக தேவயானியை காதலிக்க துவங்குகிறார்.
 
இவர்கள் இருவரையும் தேடும் அவர்களது குடும்பத்தினர் கடைசியாக இவர்களை கண்டுபிடித்து இருவரையும் அவரவர் வீட்டுக்கு அழைத்துப் போக முயற்சிக்கிறார்கள்.
 
அந்த நேரத்தில் தேவயானியை காப்பாற்றுவதற்காக “தானும், தேவயானியும் காதலிப்பதாகவும், இதன் விளைவாக தேவயானி தற்போது மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாகவும்” பொய் சொல்கிறார் மயில்சாமி.
 
இப்போதைக்கு ஊர்க்காரர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் தேவயானியும் இதை ஆமோதிக்க, அதிர்ச்சியான மயில்சாமியின் குடும்பத்தினர் “நீ இனிமேல் எங்கள் வீட்டு மருமகள்” என்று சொல்லி அவரை தங்களது வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
 
இன்னும் சில நாட்களில் மயில்சாமிக்கும், தேவயானிக்கும் திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று முடிவெடுக்கிறார்கள் வீட்டுப் பெரியவர்கள்.
 
இதிலிருந்து தப்பிக்க நினைக்கிறார் தேவயானி. மயில்சாமியும் தன் மனதுக்குள் தேவயானியை காதலித்துக் கொண்டிருந்தாலும் அதை வெளிப்படையாக சொல்ல தைரியம் இல்லாமல் அவருக்கு உதவுவதாக சொல்கிறார்.
 
இதன் பின்பு என்ன நடந்தது? தேவயானி – மயில்சாமி திருமணம் நடந்ததா? இல்லையா? தேவயானி அங்கிருந்து தப்பித்து சென்றாரா? என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.
 
மயில்சாமி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கவின் தன்னுடைய நடிப்பின் மூலமாக கொஞ்சம் நகைச்சுவையை கொண்டு வந்திருக்கிறார். 
 
மனதுக்குள்ளயே தன் காதலை பூட்டி வைத்துக் கொண்டு அல்லாடும் காதலனாக தனது பரிதாபமான நடிப்பை பல இடங்களில் காட்டியிருக்கிறார் கவின். 
 
நயன்தாராவை காதலிப்பதை சொல்ல முடியாமல் தவித்தும் அவர் பேச்சை தட்ட முடியாமல் தவித்தும்… இரண்டு பக்கமும் அல்லல்படும் சில காட்சிகளில் கொஞ்சம் சிரிப்பையும், கொஞ்சம் பரிதாபத்தையும் வரவழைத்திருக்கிறார் கவின்.
 
பத்து நாட்களில் கல்யாணம் என்ற விஷயத்தை தள்ளிப் போடுவதற்காக மாற்றி மாற்றி பேசி குழப்பத்தை உண்டு பண்ணும் காட்சிகளில் நிஜமாகவே கவினை நம்மால் ரசிக்க முடிகிறது.
 
இதுபோன்ற வித்தியாசமான கதாப்பாத்திரங்களை கவின் தொடர்ந்து செய்தால், தமிழ் சினிமாவில் அவருக்கு ஒரு நிரந்தரமான இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
 
தேவயானியாக நடித்திருக்கும் நயன்தாரா தனது முகத்தில் தெரியும் வயது முதிர்ச்சியை கண்டுகொள்ளாத வகையில் குறை வைக்காமல் நடித்திருக்கிறார்.
 
பஸ் ஸ்டாப்பில் ஆட்டோ டிரைவரிடம் அரிவாளை காட்டி ஆவேசமாவது முதல், கடைசியாக மாமியார் ராதிகா காட்டும் பாசத்தில் கட்டுண்டு உண்மையைச் சொல்லி அழுகின்ற வரையிலும் நயன்தாராவின் நடிப்பும் இந்தப் படத்திற்கு ஒரு பலமாக அமைந்துள்ளது.
 
கவினின் முறைப்பெணாக நடித்திருக்கும் காவ்யா அறிவுமணி சில காட்சிகளே என்றாலும் கவினின் காதலை மறுக்கும்விதமாக அவர் பேசுகின்றபோதும் பின்பு கடைசியில் “என்னை புரிந்து கொள்” என்று அவர் தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்து வைக்கின்ற இடத்திலும் அவருடைய நடிப்பும் அழகு.
 
கவினின் அப்பாவாக நடித்திருக்கும் பாக்யராஜ் நடித்த கடைசி திரைப்படம் இது. எதிர்பார்க்கவே இல்லை… படத்திற்கு இப்படி ஒரு பூஸ்ட்டை பாக்யராஜ் கொடுப்பார் என்று! 
 
நயன்தாராவை திருமணம் செய்தே தீர வேண்டும் என்று சொல்லும் வட்டிக்காரனை கன்னத்தில் அடிக்கும் காட்சியில் நம்மை கவர்ந்துவிட்டார் பாக்யராஜ்.
 
அதேபோல் தன் மகனின் கையில் காண்டம் பாக்கெட்டை பார்த்துவிட்டு போகிற போக்கில் “என் மகனா இருந்துட்டு இதுக்கு போய் இவ்வளவு சங்கடப்படுகிறானே?!” என்று சொல்லிவிட்டு போகும்போதும் சரியான காமெடியை கொண்டு வந்திருக்கிறார்.
 
கவினின் அம்மாவான ‘கலையரசி’ ராதிகா சரத்குமார் அமைதியான, பாசமான அம்மாவாக தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.
 
இறுதியில் தான் மலை போல் நம்பிய தன் மகன் தன்னை ஏமாற்றி விட்டான் என்பதை அறிந்து கோபத்தோடு வந்து கவினை அறைந்துவிட்டு பேசும்போது நியாயமான ஒரு அம்மாவாக நம் கண்ணுக்குத் தெரிகிறார் ராதிகா.
 
நயன்தாராவின் அப்பாவாக பரிதாபமான தோற்றத்தில் நடித்திருக்கும் பிரபு தன்னுடைய நடிப்பின் மூலமாக அவர் மீதும், நயன்தாரா மீதும் ஒரு பாசத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
 
முக்கியமான காட்சிகளில் டிவிஸ்ட்டை ஏற்படுத்தும்வகையில் பேசி காமெடியை உருவாக்கியிருக்கும் சத்யனும், நண்பனாக நடித்து உதவி செய்யும் ஆதித்யா கதிரும் தங்களது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்யும் வகையில் நடித்திருக்கிறார்கள். 
 
மேலும் ஒரு காட்சியில் வந்தாலும் கவனிக்க வைத்திருக்கும் டிடிவி கணேஷ், சுகாசினி, நயன்தாராவின் நண்பியாக நடித்திருக்கும் அம்ருதா, குரேஸி மற்றவர்களும் சிறப்பான இயக்கத்தினால் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
 
ராஜேஷ் சுக்லாவின் ஒளிப்பதிவில் படம் முதல் கட்சியிலிருந்து கடைசிவரையிலும் பளிச்சென்று கலர்ஃபுல்லாக தெரிகிறது. சேலையைவிடவும் மாடர்ன் டிரஸ்ஸில் நயன்தாராவை அழகாக காட்டியிருக்கிறார்.
 
ஆனாலும் ஒரு சில காட்சிகளில் கவினும், நயன்தாராவும்… அக்கா தம்பிபோல தெரிவதைத் தவிர்த்திருக்கலாம்.
 
ஜென் மார்ட்டினின் இசையில் பாடல்கள் ஒரு முறை கேட்கும் வகையில்தான் உள்ளன. பாடல் வரிகளும் மிக எளிதாக புரிவதுபோல இருப்பது பாராட்டுக்குரியது. 
 
ஒரு கல்யாண, கொண்டாட்ட பாடலை அழகாகப் பாடி இசைத்து நடனமும் ஆடி அசத்தியிருக்கிறார்கள். 
 
இந்தப் படத்திற்கு எதற்கு சம்பந்தமே இல்லாமல் இப்படி ‘Hi’ என்று ஆங்கிலத்தில் தலைப்பு வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. 
 
தமிழிலேயே எத்தனையோ தலைப்புகள் இருக்கிறதே..? தேடிப் பார்த்து வைத்திருக்கலாமே?!
 
இதை எப்படி பொதுமக்கள் விளம்பரம் செய்வார்கள்? சாதாரண ரசிகர்களிடத்தில் இந்த தலைப்பை எப்படி கொண்டு போய் சேர்ப்பது? இதையெல்லாம் இயக்குநர் யோசித்து இருக்க வேண்டாமா?! என்னவோ போடா மாதவா!!
 
இந்தப் படம் குடும்பக் கதை என்பதால் ரசிகர்கள் அனைவரையும் கவரும் வகையில் எந்த முலாமும் பூசாமல் நேர்கோட்டில் படத்தைத் தொகுத்திருக்கிறார் படத் தொகுப்பாளர் பிலோமின்ராஜ்.
 
படத்தை எழுதி, இயக்கியிருக்கும் இயக்குநர் விஷ்ணு எடவன், ஒரு கிராமத்து காதல் கதையை எளிமையான முறையில் சொல்லியிருக்கிறார்.
 
காதலுடன் கூடவே கொஞ்சம் காமெடியையும் சேர்த்து ரசிகர்களுக்குப் பிடித்தமான நடிகர், நடிகைகளை வைத்து குடும்பத்தோடு பார்க்கின்ற வகையில் இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார்.
 
படத்தில் ஒரு குறையாக நாம் பார்ப்பது 1990-களில் வந்த ‘பார்க்காமலேயே காதல்’, ‘சொல்லாமலேயே காதல்’ என்கின்ற வகையில் எதிரில் இருப்பவரிடம் காதலை சொல்லாமலேயே மனதுக்குள் பூட்டி வைத்துக் கொண்டு கதையை இழுத்துக் கொண்டு போவதெல்லாம் காலம் கடந்த கான்செப்ட் என்பதால் அது மட்டுமே நமக்கு கொஞ்சம் இடிக்கிறது.
 
இந்த இடத்தில் திரைக்கதையை கொஞ்சம் மாற்றி அமைத்திருந்தால் படம் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.
 
இந்த வாரம் குடும்பத்துடன் பார்த்து மகிழ வேண்டிய திரைப்படமாக இந்த ‘ஹாய்’ படம் வந்திருக்கிறது.
 
மிஸ் பண்ணாதீங்க!
 
RATING : 3.5 / 5
Our Score