full screen background image

அமரம் – சினிமா விமர்சனம்

அமரம் – சினிமா விமர்சனம்

திவ்ய சேத்ரா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க C.R.ராஜன் தயாரிப்பில், இயக்குநர் அருள் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரம்’.

மூன்று காலக்கட்டங்களில், மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும் ஒரு அமர காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், ராஜன் தேஜஸ்வர் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஐரா அகர்வால் நடித்துள்ளார்.

மற்றும் ஜார்ஜ் மரியான், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார் அருள் கிருஷ்ணன். இவர் இயக்குநர் கோகுல், ராஜன் மாதவ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேசத்தில் இருந்து ஆந்திரா, தெலுங்கானா வழியாக தர்மபுரிவரையிலும் வரும் கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வசிக்கும் மலை கிராம மக்களின் வாழ்க்கை கதை இந்தப் படம்.

எந்த ஒரு தொழிற்சாலையும், வேலைவாய்ப்பை உருவாக்கும் நிறுவனங்களும் இல்லாத பகுதி என்பதால் இந்த மலைவாழ் இளைஞர்களை தவறான பாதையில் திசை திருப்பும் பணக்காரர்களும், கூலிப்படை தலைவர்களும், சில மோசமான அரசியல்வாதிகளும் சேர்ந்து அந்தப் பகுதி இளைஞர்களின் வாழ்க்கையை எப்படி அழிக்கிறார்கள் என்பதை இந்தப் படம் பாதி உண்மை; பாதி கற்பனை கலந்து சொல்லியிருக்கிறது. 

மலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஹீரோ ராஜன் தேஜஸ்வர். அதிகம் படிக்காமலும் சரியான வழிகாட்டுதலும் இல்லாத ராஜன் தன் உறவினரான ஜார்ஜ் மரியானின் துணையோடு பணத்துக்காக கொலை செய்வதையும், கொள்ளையடிப்பதையும் ஒரு தொழிலாக வைத்திருக்கிறார்.

அப்படி ஒரு அசைன்மென்ட்டுக்காக ஹீரோயின் ஐரா அகர்வாலின் தந்தையை அவரது கண்முன்பேயே படுகொலை செய்கிறார் ராஜன்.

இந்தப் படுகொலை ஹீரோயினை பெரிதும் பாதிக்கிறது. தன்னுடைய தந்தையை கொலை செய்தவனை தேடிப் பிடித்து பழிவாங்க வேண்டும் என்று நினைத்து ஹீரோவை தேடி புறப்படுகிறார் ஹீரோயின்.

அவருடைய சபதத்தை அவர் செய்து முடித்தாரா? இல்லையா? என்பதுதான் இந்தப் படத்தின் மிச்சம், மீதமான திரைக்கதை.

அறிமுக ஹீரோவான ராஜன் தன்னால் முடிந்த அளவுக்கான நடிப்பை காண்பித்திருக்கிறார். பரட்டை தலையுடனும், முகத்தில் பாதியை மறைத்திருக்கும் தாடியுடனும் கிராமத்து இளைஞனாக படம் முழுவதும் வலம் வந்திருக்கிறார்.

கொலை காட்சிகளில் மட்டும் துடிப்புடன் நடித்திருக்கிறார். சண்டை போட்டு இருக்கிறார். ஆனால், சிற்சில இடங்களில் நடிப்பு என்று வரும் பொழுது அவர் இன்னமும் கற்றுக் கொண்டு நம்மிடம் காட்ட வேண்டியது நிறைய இருப்பதாக நமக்குத் தெரிகிறது.

அதிசயமாக இந்தப் படத்தில் நாயகனுக்குப் பதிலாக நாயகி, மிகச் சிறப்பான ஒரு நடிப்பை காண்பித்து இருக்கிறார்.

ஹீரோவை கொலை வெறியோடு அவர் தேடுகின்ற ஒவ்வொரு காட்சியிலும் தன் நடிப்பை மெருகேற்றிக்கொண்டே சென்று இருக்கிறார்.

இறுதியில் ஹீரோவை கொலை செய்ய நினைக்கும் அந்த நேரத்தில் அதை செய்ய முடியாமல் அவர் தவிக்கின்ற தவிப்பை தன் கண்களாலேயே அழகாகக் காட்டியிருக்கிறார்.

படத்தின் பிற்பகுதியில் மிகப் பெரிய அளவுக்கு இந்தப் படத்தைத் தாங்கி இருப்பதும் ஹீரோயினின் அழகான நடிப்புதான்.

எப்போதும் போல் ஜார்ஜ் மரியான் இந்தப் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு 100% உண்மையாக நடித்திருக்கிறார். அவருடைய கடைசியான முடிவு நமக்கு ஒரு மென்சோகத்தை தந்திருக்கிறது.

நாயகியின் கூடவே இருந்து துரோகம் செய்யும் எம்.எல்.ஏ.வான நாகி நீடு தனது கம்பீரமான நடிப்பை காண்பித்திருக்கிறார். கூலிப்படை தலைவனான சாய் தீனா தனது வில்லத்தனத்தில் ஒரு ஸ்டைலையும் காட்டி ரசிக்க வைக்கிறார். 

எம்.எல்.ஏ., மந்திரியையே மிரட்டும் புத்திசாலி அதிகாரியான ஹரிஷ் பெராடியும் கொஞ்சம் மிரட்டியிருக்கிறார். காமெடி கலந்த அப்பாவி கேரக்டரில் நடித்திருக்கும் கல்கி, வாசுதேவன் முரளி மற்றும் பலரும் இயக்குநரின் இயக்கத்துக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.

படத்தின் கதைக் களம் கள்ளக்குறிச்சி அருகே இருக்கும் மலை கிராமப் பகுதியில் நடைபெறுவதால் அந்த மலைப்பிரதேசத்தை அழகுபட பதிவாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பரத்குமார்.

ஹீரோயினின் அழகை அட்டகாசமாக காட்டியிருக்கும் கேமரா, மற்றவர்களை அதுபோல் காட்டவில்லை. ஏன் என்றுதான் தெரியவில்லை.

அந்தக் கிராமத்து மக்களின் இருப்பிடம், வீடுகளை அழகாக வடிவமைத்திருக்கும் கலை இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள்.

இசை அமைப்பாளர் மிக்கி ஜே.மேயர், பாடல்களுக்கான இசையை சுமாராக கொடுத்திருக்கிறார். பின்னணி இசையை அதைவிட சுமாராக கொடுத்திருக்கிறார். 

ஆனால் ஓரிடத்தில் பாடல் இல்லாமல் ஜிங்கிள்ஸை மட்டுமே வைத்து கலக்கி இருக்கிறார். அந்த இசைக்கு ஏற்ற நடனத்தை ஆடி இருக்கும் நடனக் கலைஞர்களுக்கும், அந்த நடனத்தை அமைத்திருக்கும் நடன இயக்குநரையும் மனதாரப் பாராட்டுகிறோம்.

படத் தொகுப்பாளர் தன்னால் முடிந்த அளவுக்கான திறமையை காட்டி படத்தை கடைசி வரையிலும் பார்க்க வைத்திருக்கிறார். ஆனாலும் படத்தின் இடைவேளைக்கு பின்பு திரைக்கதையில் மிகப் பெரிய தொய்வு ஏற்பட்டு இருக்கிறது.

ஹீரோவை, ஹீரோயின் சந்திக்கும் இடத்தில் நடக்கும் அந்த சண்டைக் காட்சியை அவ்வளவு அழகாக படமாக்கி இருக்கிறார்கள். இதற்காக சண்டை இயக்குநருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் கூடுதலாக ஒரு பாராட்டு.

அதிகம் பேசப்படாத கிழக்கு மழை தொடரில் வசிக்கும் மலை கிராம மக்களின் வாழ்க்கையை சொல்ல வந்த இயக்குநர், இதைவிடவும் ஒரு சிறப்பான கதையைத் தேர்வு செய்திருக்கலாம்.

ஹீரோயினின் அப்பாவை ஹீரோ எதற்காக கொலை செய்கிறார் என்ற தகவல் கடைசிவரையிலும் சொல்லப்படாதது இந்தப் படத்தின் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட்.

சாய் தீனா தான் சாகும் தருவாயில் “உங்க அப்பாவை எதற்காக கொலை செய்தார்கள் தெரியுமா?!” என்ற ஒரு கேள்வியை எழுப்புகிறார். ஆனால் அதற்கான பதிலை தீனா சொல்வதற்கு உள்ளாக அவரைப் போட்டு தள்ளி விடுகிறார் ஹீரோ. அந்த தகவல்தான் என்ன? 

இப்படி படத்தில் தொக்கி நிற்கும் முக்கியமான கேள்விகளுக்கு விடையே கொடுக்காமல் படத்தை நிறைவு செய்து இருக்கிறார் இயக்குநர்.

ஆனாலும், அதிகார வர்க்கமும், அரசியல்வாதிகளும், பணக்காரர்களும் அந்த அப்பாவி மக்களை மூளைச் சலவை செய்து செம்மரம் கடத்தும் பணிக்கும்… அடிதடி, வெட்டு குத்து, கொலை, கொள்ளை என்று கூலிப் படையாக பயன்படுத்துவதையும் இந்தப் படத்தில் முடிந்த அளவுக்கு நேர்மையாக காட்டியிருக்கிறார் இயக்குநர்.

முதல் பாதியில் படம் துவங்கியதில் இருந்து கல்கி அறிமுகமாகும் காட்சிவரையிலும் ஒரு வித்தியாசமான படத்தைப் பார்க்கிறோம் என்கின்ற ஒரு சந்தோஷத்தை இந்தப் படம் கொடுத்தது.

கல்கி கதாப்பத்திரத்தை சீரியஸாக வடிவமைத்திருந்தால் இந்தப் படம் நிச்சயம் அந்த தொய்வில் இருந்து விடுபட்டிருக்கும்.

இடையிடையே வந்த காமெடிகள் இந்தப் படத்தை “என்ன வகையான படம் இது?” என்கின்ற ஒரு கேள்விக்குள் தள்ளிவிட்டது.

இடைவேளைக்குப் பின்பு சிறந்த முறையில் திரைக்கதை அமைக்கப்படாததால் படம் பெரிதும் சோர்வாகிவிட்டது.

இந்தக் குறையை இயக்குநர் தனது அடுத்தடுத்தப் படங்களில் சரி செய்து கொள்வார் என்று நம்புகிறோம்.

RATING : 3.5 / 5

Our Score