full screen background image

TOXIC – சினிமா விமர்சனம்

TOXIC – சினிமா விமர்சனம்

நடிகர்கள் :

ராக்கிங் ஸ்டார் யாஷ் – ராயா மற்றும் டிக்கெட்
நயன்தாரா – கங்கா
கியாரா அத்வானி- நதியா
 தாரா சுதாரியா- ரெபேக்கா
ஹுமா குரேஷி- எலிசபெத்
ருக்மணி வசந்த்- மெல்லிசா

தொழில் நுட்பக் குழு:
 
எழுதியவர்கள்: யாஷ் & கீது மோகன்தாஸ்
இயக்கியவர்: கீது மோகன்தாஸ்
தயாரிப்பு: KVN புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ்
ஒளிப்பதிவு இயக்குனர்: ராஜீவ் ரவி
இசை: ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா,  தனிஷ்க் பாக்சி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: டி.பி. அபித்
எடிட்டர்: உஜ்வல் குல்கர்னி
ஒலி வடிவமைப்பாளர்: குணால் ஷர்மா
இணை தயாரிப்பாளர்கள்: சந்தீப் சதாசிவா, பிரசாந்த் திலீப் ஹர்திகர்
அதிரடி இயக்குநர்கள்: ஜே. ஜே. பெர்ரி, அன்பரிவ், கெச்சா காம்பக்டீ, அம்ரித் சிங்
கலை இயக்குனர் (பெங்களூரு): மோகன் பி. கேரே
கலை இயக்குனர்: சந்தீப் ஜி. ஷர்மா
நிர்வாகத் தயாரிப்பாளர்: எம்.கே. சுப்ரமணி
தமிழ் உரையாடல்கள்: கணேஷ் சுப்ரமணியன்
நடன இயக்குனர்கள்: கணேஷ் ஆச்சார்யா, இம்ரான் சர்தாரியா, ஏ.ஹர்ஷா
முதல் உதவி இயக்குனர்: ராவ் சுஹைப் கான்
ஸ்கிரிப்ட் மேற்பார்வையாளர்: டாயல் ஹர்குனானி
வரி தயாரிப்பாளர்: அக்ஷய் மாவ்லே
ஆடை வடிவமைப்பாளர்கள்: நேஹா ஆர். பஜாஜ், சானியா சர்தாரியா (யாஷ்)
முடி வடிவமைப்பாளர்: தர்ஷன் யெவலேகர்
மேக்கப் & ப்ரோஸ்தெடிக்ஸ்: ஷிப்ரா சிங் ஆச்சார்யா
போஸ்ட் புரொடக்‌ஷன்: த போஸ்ட் கோ.
ரீ-ரிக்கார்டிங் மிக்சர்: ஸ்ரீஜேஷ் நாயர்
இசையமைப்பாளர்: ரவி பஸ்ரூர், சேத்தன் ஹண்டாட்டு, பவன் பஸ்ரூர், ஜெகதீஷ் வெங்கி
ஆர்பிஎம் இசையமைக்கும் குழு: சந்தோஷ் வெங்கி, ஐரா உடுப்பி, ரோஹித் சித்தப்பா
ட்ரம்பெட் லைவ்: மஞ்சு பஜந்திரி தேவாரா ஹோசப்பேட்டை & குழு
RBM ஸ்டுடியோ ஒருங்கிணைப்பாளர்கள்:
சிவகுமார், நாகபிரகாஷ் கோட்டா, பிரகாஷ் குமார், கிருஷ்ணா பஸ்ரூர், விஜய் பஸ்ரூர்
DI வண்ணம்: ஜெயதேவ் திருவாய்பதி
DI: மறுவரையறை
VFX: DNEG
விளம்பர வடிவமைப்பு: கபிலன் செல்லையா
காட்சி விளம்பரம்: ரூபன் டிரெய்லர் ஹவுஸ்
டிரெய்லரை ஸ்வராஜ் பத்ரிமத் எடிட் செய்துள்ளார்
பத்திரிக்கை தொடர்பு : யுவராஜ்.
 
“ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” என்பார்கள். “அப்படியெல்லாம் அளக்கவே வேண்டாம். அப்படியே போடலாம்” என்று மொத்தப் பணத்தையும், வெட்டியாக இந்தப் படத்தில் கொட்டி இருக்கிறார்கள்.

கன்னட நடிகரான யாஷ் ‘KGF’ படத்தின் மூலமாக பான் இந்திய நடிகராக புகழ் உச்சிக்கு போய்விட்டார். ஆனால், தனது அடுத்த படமான இந்த ‘டாக்சிக்’ படத்தில் அதல பாதாளத்தில் விழுந்துவிட்டார் என்பது வருத்தமான ஒரு விஷயம்.

கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தப் படம் பற்றி அகில இந்திய அளவில் பேச வைத்து…. வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களிடையேயும் இந்தப் படம் பற்றிய ஒரு சின்ன செய்தியைக்கூட விடாமல் பரப்புரை செய்து…

படத்திற்கு மிகப் பெரிய ஹிப்பை கொடுத்த இந்தப் படக் குழுவினர்…

தங்களது சினிமாவில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்ற நான்கும் இருக்க வேண்டும் என்பதை மட்டும் மறந்துவிட்டார்கள்.

முழுக்க, முழுக்க விளம்பர கம்பெனியை மட்டுமே நம்பி இந்தப் படத்தை திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் கதை 1947களிலும் 1967களிலும் நடப்பதாக எழுதப்பட்டுள்ளது.

கதையின் களம் அப்போது போர்த்துக்கீசியர்களின் கையில் இருந்த கோவாவிலேயே நடக்கிறது. அதற்கு பின்பு 1967-களில் சீனாவின் அருகில் இருக்கும் அப்போது பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காக் நகரிலும் நடைபெறுகிறது.

கோவாவில் அப்பொழுது போதை மருந்து கடத்தல் மிகப் பெரிய வியாபாரமாக இருக்கிறது. அதேபோல் ஆயுதக் கடத்தலும் அங்கே மிகப் பெரிய அளவுக்கு நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் படத்தின் ஹீரோவான ராயா என்ற யாஷும், அவரது அக்காவான நயன்தாராவும் ஒரு கூலிப் படையை நடத்தி வருகிறார்கள். அதன் மூலம் ஆயுத கடத்தல், மற்றும் போதை மருந்து கடத்தலில் ஈடுபடும் ஒரு கும்பலுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்.

யாஷ், தனது கூலிப் படையை வைத்து தனக்கு பணம் கொடுக்கும் முதலாளிகளை எதிர்க்கும் அனைவரையும் குருவியை சுடுவதுபோல சுட்டு தள்ளுகிறார். வெட்டி தள்ளுகிறார். படுகொலைகளை செய்கிறார்.

இதனால் அதே கோவாவில் இருக்கும் மற்றைய கடத்தல் கும்பல்களின் எதிர்ப்பை அக்காவும் தம்பியும் சேர்த்தே சம்பாதிக்கிறார்கள்.

நயன்தாராவுக்கு தனது தம்பி யாஷ்தான் கோவாவை ஆள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக கடத்தல் கும்பல்களை தீர்த்து கட்டிவிட்டு யாஷை தலைவனாக உருவாக்க நினைக்கிறார் நயன்தாரா.

இந்த நேரத்தில் யாஷுக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார் கடத்தல் கும்பல் தலைவன்.

திருமணம் ஒரு கேடா என்பது போலவே இப்போதும் அந்த கும்பலின் தலைவன் மகளான தாரா கதாரியாவும், யாஷும் ஈருடல், ஓருடலாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நேரத்தில் அந்த ஊருக்கு ஒரு சர்க்கஸ் கம்பெனி வருகிறது. அந்த சர்க்கஸ் கம்பெனியில் வீராங்கனையாக இருக்கும் நாடியா என்கிற கியாரா அத்வானியைப் பார்த்தவுடன் யாஷூக்கு மிகவும் பிடித்துப் போகிறது.

இருவரும் சாதாரணமாக பேசி பழகி பின்பு வெறித்தனமாக சல்லாபம் கொண்டு காதலர்களாக மாறுகிறார்கள்.

ஆனாலும் அக்காவின் வற்புறுத்தலால் தாரா காதாரியாவை திருமணம் செய்கிறார் யாஷ். ஆனால் இன்னொரு பக்கம் கியாராவுடனும் வாழ்ந்து வருகிறார். இதனால் கர்ப்பமாகி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறார்.

இந்த நேரத்தில் மற்றைய கடத்தல் கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் நயன்தாரா கொல்லப்பட.. யாஷ் இப்போதைக்கு தப்பிக்கலாம் என்ற எண்ணத்தில் ஹாங்காங் வந்து சேர்கிறார்.

அங்கேயும் வந்து அந்த ஊரில் இருக்கும் கடத்தல் கும்பலுக்கு உதவி செய்து பெரும் பணம் சம்பாதிக்கிறார் யாஷ். தனக்கான ஒரு தனி கூலிப் படையை உருவாக்குகிறார்  குடி, போதை, பெண்கள் என்று அத்தனை சுகபோகத்திலும் ஈடுபட்டு திளைக்கிறார் யாஷ்.

திரும்பவும் பத்தாண்டுகள் கழித்து கோவாவுக்கு திரும்பும் யாஷ் தன் மனைவியைப் பார்க்க சர்க்கஸ் கம்பெனிக்கு வருகிறார். அப்போது தன் மகனை மட்டும் யாஷிடம் அனுப்பிவிட்டு கியாரா தற்கொலை செய்து கொள்கிறார்.

இந்த மகனை வளர்க்க முடியாது என்றெண்ணி அவனை விரட்டி விடுகிறார் யாஷ்.

யாஷின் மனைவியும் இறந்துவிட தனித்து நிற்கும் யாஷுக்கு ருக்மணி வசந்தின் அறிமுகம் கிடைக்கிறது.

இவரையும் மனம் போன போக்கில் சம்போகம் செய்து, பின்பு திருமணம் செய்து கொண்டு பிள்ளையையும் பெற்றெடுக்கிறார் யாஷ்.

ஆனால் இதற்குப் பின்புதான் அவருடைய மூத்த மகனால் அவருக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது. காலம் போன போக்கில் யாஷ் செய்த பாவங்கள் எல்லாம் அவருக்கே திரும்பி வர… அதை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் மீதி திரைக்கதை.

194 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தை முழுமையாக பார்த்துவிட்டு தியேட்டரைவிட்டு வெளியில் வருபவர்களுக்கு அவர்கள் கட்டிய டிக்கெட் கட்டணத்தைவிட பத்து மடங்கு தொகையை தயாரிப்பாளர் திருப்பித் தர வேண்டும். இதுதான் தர்மம். அறம். நியாயம்.

இந்தப் படத்தை பார்த்துவிட்டு படம் பார்க்க வந்த ஏமாளிகள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்ளும் ஒரே கேள்வி “இந்தப் படத்தின் கதை என்ன?” என்பதுதான்.

அந்த அளவுக்கு கதை என்ன என்பது நமக்கு சொல்லப்படாமலேயே ஒவ்வொரு காட்சியும் வருகிறது. ஒவ்வொரு காட்சியிலும் புதிது புதிதாக நடிகர்கள் வந்து கொண்டே இருக்க… துப்பாக்கிகள் வெடித்துக் கொண்டே இருக்கின்றன.

யாஷுவுக்கு சிகரட்டை பற்ற வைக்கவும், மதுபானங்களை குடிக்கவும் பெண்களுடன் கூத்தடிக்கவுமே நேரம் சரியாக இருக்கிறது.

மிச்சம், மீதி இருக்கும் நேரத்தில் கடுமையாக சண்டையிடுகிறார் யாஷ். தன்னுடைய உடலை வருத்திக் கொண்டு இப்படியான சண்டை காட்சிகளை ஏன் அவர் படத்தில் வைத்திருக்கிறார் என்பதே தெரியவில்லை.

கூடுதலாக சிற்சில இடங்களில் வசனம் பேசி இருக்கிறார். அதிலும் பாதி வசனங்கள் ஆங்கிலத்தில் மட்டும்தான். ஆங்கிலம் அல்லாத வசனங்கள் எதுவுமே சினிமாவுக்கும் அந்த கதைக்கும், அந்தக் காட்சிக்கும் சம்பந்தப்படாத தத்துவ விசாரங்கள்.

இவ்வளவு தத்துவங்களை வசனத்தில் எழுதி வைத்த அந்த டப்பிங் ஆசிரியர் யார் என்று தெரியவில்லை. அவரை காலில் விழுந்து வணங்க வேண்டும்.

படத்தில் கதையும் வேண்டாம், திரைக்கதையும் வேண்டாம், வசனமும் வேண்டாம். அரைகுறை உடைகளில் பெண்கள் வந்து கொண்டே இருந்தால் போதும். துப்பாக்கி குண்டுகள் முழங்க, மனிதர்கள் செத்துக் கொண்டே இருக்க, ரத்த மழை பொழிய, கையை வெட்டுவது.. காலை வெட்டுவது… ரத்தத்தை ஸ்கிரீன் முழுவதும் சிறகடிப்பது என்று படம் முழுவதும் வன்முறை காட்சிகள் கோர தாண்டவம் ஆடி இருக்கின்றன.

படத்தில் நடித்திருக்கும் நடிகைகளான நயன்தாரா, கிளாரா அத்வானி, தாரா கதாரியா, ருக்மணி வசந்த், ஹூமா குரேஸி அனைவரும், அவர்கள் போட்டிருக்கும் ஆடைகளுக்காகவே பார்க்கப்பட்டிருக்கிறார்கள்.

இதுவரையிலும் இல்லாத அளவுக்கு படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி இருக்கிறார்கள். யாஷ் போன்ற மிகப் பெரிய பான் இந்திய நடிகர் ஹீரோ என்றால் இந்த நடிகைகள் எப்படி வேண்டுமானாலும் நடிப்பார்கள் போலிருக்கிறது.

அதிலும் ருக்மணி வசந்தின் அறிமுகக் கட்சியில் அவருக்கு முன்பாக யாஷ் நிர்வாணமாக நிற்கும் காட்சியும், அப்போது பேசப்படும் வசனங்களும் கேவலத்திலும் கேவலம்!

அனைத்து கலைஞர்களும் உதடு பிரியாமல் வசனம் பேசுகிறார்கள். அதற்கு டப்பிங் பேசிய கலைஞர்களும் தங்களால் முடிந்த அளவுக்கான வசனத்தை பேச… அவை எதுவுமே ஒட்டவில்லை.

வசனம் பேசி முடித்த பின்பும் அங்கே திரையில் நடிகைகளின் உதடு அசைந்து கொண்டிருக்கிறது. சாதாரண சின்ன பட்ஜெட் படத்தில்கூட இந்த கோல்மால் இருக்காது. இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில் இப்படி ஒரு தப்பிதம்..!

ராஜி பிரவீனின் ஒளிப்பதிவு மட்டுமே நமக்குக் கொஞ்சம் ஆறுதலை கொடுத்திருக்கிறது. கேமரா கோணங்கள் சில, பல இடங்களில் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

விருது பெரும் அளவுக்கு கலை இயக்குநர் தன்னுடைய ஒட்டு மொத்தத் திறமையையும் படத்தில் காட்டி இருக்கிறார்.

சண்டை இயக்குநர்கள் வாங்கிய சம்பளத்துக்கு மேலாகவே கூவியிருக்கிறார்கள். ஒவ்வொரு சண்டையும் ஒவ்வொருவிதமாக இருக்க…

கதை என்னடா என்று தெரியாமல் கடுப்பில் இருக்கும் நமக்கு அந்தக் கத்தியையும், துப்பாக்கியும் புடுங்கி… அவர்களையே சுடலாம்போல ஒரு வெறியே வருகிறது.

பின்னணி இசையில் காது கிழிந்ததுதான் மிச்சம். 3 மணி நேர படத்தில் பின்னணி இசையின் கதறல்தான் நமக்கு அதிகமாக தாங்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

அந்தக் காலத்து ஆடைகளை பார்த்துப் பார்த்துத் தேடித் தேடி கண்டுபிடித்து கொண்டு வந்து கொடுத்திருக்கும் ஆடை வடிவமைப்பாளர்களை மட்டும் பாராட்டலாம்.

கூடுதலாக இத்தனை நடிகர் நடிகைகளுக்கும் மேக்கப் போட்டு ஒவ்வொன்றையும் வித்தியாசப்படுத்தி காட்டி இருக்கும் ஒப்பனை கலைஞர்களுக்கும் நமது பாராட்டுக்கள்.

இத்தனை செய்தும் இந்தப் படம் நம் மனதில் ஒட்டவில்லை என்றால் இதற்குக் காரணம் யாராக இருக்க முடியும்?!

இந்தப் படத்தின் இயக்குநரான கீது மோகன்தாஸ் ஒரு மலையாள நடிகை. சிறு வயதில் இருந்தே சினிமாத் துறைக்குள் இருப்பவர்.

இதற்கு முன்பு மலையாளத்தில் இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். அந்த இரண்டு படங்களுமே அவார்டு படங்கள்தான்.

இந்த நிலையில் அவரை எப்படி யாஷ், தன்னுடைய அடுத்தப் படத்திற்கு தேர்வு செய்தார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

அக்கா தம்பி பாசம், அம்மா மகனுக்குமான பாசம், அப்பாவுக்கும் மகனுக்குமான ஒரு நேசம், சென்டிமென்ட், எமோஷன்ஸ் காட்சிகள், காதலியுடன் காதலில் உருகுவது, காதலைப் பற்றி தத்துவமாக பேசுவது என்று படத்தில் பல பாச எலிமெண்ட்ஸ்கள் இருந்தாலும் எதுவுமே நம் மனதைத் தொடவில்லை என்பது சோகமான விஷயம்.

இடைவேளைக்குப் பின்பு ஒரு கட்டத்தில் “படத்தை எப்படா முடிப்பீங்க?!” என்று நம்மை வாய் விட்டு கதற வைத்து விட்டார்கள்.

ஒட்டு மொத்தமாக பார்க்கப் போனால் இந்தப் படம் யாருடைய வாழ்க்கையிலும் பார்க்கவே கூடாத ஒரு திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

எவ்வளவு மனிதர்களின் உழைப்பை இந்தப் படம் வீணாக்கி இருக்கிறது என்பதை நினைக்கும்போது கோபம் கோபமாய் வருகிறது.

ஆயிரம் கோடிக்கும் மேலான செலவில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் இந்த பரிதாபமான தோல்வி….

பிரம்மாண்டத்தை மட்டுமே நம்பி படம் எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர்களுக்கும், ஹீரோக்களுக்கும், இயக்குநர்களுக்கும் ஒரு பாடமாக அமையட்டும்!

RATING : இந்தப் படத்துக்கு இது ஒண்ணுதான் குறைச்சல்!

Our Score