full screen background image

“வட சென்னை மக்களின் உண்மையான வாழ்க்கையை சொல்லும் படம் ‘ஆல் பாஸ்” – படக் குழுவினரின் பெருமிதப் பேச்சு!

“வட சென்னை மக்களின் உண்மையான வாழ்க்கையை சொல்லும் படம் ‘ஆல் பாஸ்” – படக் குழுவினரின் பெருமிதப் பேச்சு!

ஒன் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் (One Step Entertainment) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.மோகனா தயாரித்துள்ள படம் ‘ஆல் பாஸ்!’

‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த துஷ்யந்த் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜனனி, ‘லியோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா. ஆர், சத்யா மற்றும் சஞ்சய், கோகுல், நிகில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘பாண்டிய நாடு’, ‘எதிர் நீச்சல்’ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான சரத் லோகித்ஷவா இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ‘பாபநாசம்’ படத்தில் வில்லனாக நடித்த ரோஷன் பஷீர், ‘பைசன்’ படத்தில் பி.டி. வாத்தியாராக நடித்த அருவி மதன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் மூர்த்தி மற்றும் கலையரசன் கண்ணுசாமி ஆகியோர் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘கலகத் தலைவன்’, ‘அண்ணாதுரை’, ‘தகராறு’ உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவு செய்த தில்ராஜு, இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
‘பசங்க’ படத்தின் படத் தொகுப்பாளர் எஸ். பாஸ்கர் இப்படத்திற்கும் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். கலை இயக்குநராக ஜெயசீலன். டி பணியாற்றியுள்ளார். நடன இயக்குநராக ஐ. ராதிகா, சண்டைப் பயிற்சியாளராக மெட்ரோ மகேஷ் பணியாற்றியுள்ளனர்.
ஒப்பனை – எல்.வி. ராஜா, உடைகள் – ஏ.எஸ். வாசன், ஸ்டில்ஸ் – அண்ணாதுரை, விளம்பர வடிவமைப்பு – கிப்சன் UGA, பத்திரிக்கை தொடர்பு – புவன் செல்வராஜ்.

வட சென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் மைதீன்.

இந்த ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று இரவு பிரசாத் லேப் தியேட்டரில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக் குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் மோகனா பேசியதாவது..,

“என்னால் கேமரா முன்னாடி நின்று நடிக்க முடிகிறது. ஆனால் எல்லாரும் முன்னாடி நின்று பேசுவது என்றால் ரொம்பவே பதட்டமாகவும், நடுக்கமாகவும் இருக்கிறது. அதனால் மன்னித்துக் கொள்ளுங்கள். இங்கு இந்த விழாவிற்கு வாழ்த்த வந்துள்ள அனைத்து ஆளுமைகளுக்கும் நன்றி.

நிஜமாகவே இந்தப் படம் எங்களுக்கு மிகவும் முக்கியமான படம். இந்தப் படத்தை நீங்கள் அனைவரும் பார்த்துவிட்டு, எங்களுக்கு நல்லபடியாக ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..” என்றார்.

இயக்குநர் மைதீன் பேசியதாவது..,

“இன்று இந்த விழாவிற்கு வருகை தந்த ஐயா ஆர்.வி.உதயகுமார், இயக்குநர் விக்ரமன், அண்ணன் மன்சூர் அலிகான் ஆகிய அனைவருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு சார் இப்படத்தில் சில நாட்கள் மட்டும் வேலை செய்து தந்தார். எங்களுக்கு சிக்கல் எழுந்தபோது மூத்த ஆளுமையாக இருந்தும் சில நாட்கள் மட்டும் வேலை செய்து தந்தார் அவருக்கு என் மிகப் பெரிய நன்றிகள்.

உதவி இயக்குநர்களின் வலி அவர்களின் அடையாளம் சினிமாவில் கண்டு கொள்ளப்படுவதில்லை. அவர்களுக்கான வாய்பு கிடைத்தால் மட்டுமே அவர்களுக்கான அடையாளம் கிடைக்கும். பலர் இன்னும் அந்த வாய்பில்லாமல் இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் நடிக்க வைக்க துஷ்யந்தை அணுகியபோது, “அப்பாதான் சொல்வார்” என்றார் அவர். எனக்கு அப்போது ஜெயப்பிரகாஷ் சார்தான் துஷ்யந்தின் அப்பா என்பது  தெரியாது.

ஜெயப்பிரகாஷ் சாரை சந்தித்து முழு கதையை சொன்னேன். அவரும் ஒரு தயாரிப்பாளர் என்பதால் அவர்களின் வலி புரிந்து அக்கறையுடன் அறிவுரை சொல்வார் என நினைத்து முழு கதையையும் சொன்னேன்.

கதையைக் கேட்டுவிட்டு “அந்த அழகர் கேரக்டரை யார் செய்கிறார்கள்?” என்று கேட்டார். நான் “உங்களைகூட நினைத்திருந்தேன். ஆனால் சம்பளம் பெரிதாகிவிடும்” என்று இழுத்தேன். “சம்பளம் ஒரு விஷயமே இல்லை; நான் நடிக்கிறேன்” என்று சொல்லி அவரும் இந்தப் படத்துக்குள் வந்தார். அவர் மனதுக்கு என் பெரிய நன்றி.

ஜேம்ஸ் வசந்தன் சாரிடமும் அப்படித்தான் தயங்கி, தயங்கித்தான் சென்றேன். “கதை பிடித்தால்தான் சொல்வேன்” என்றார். கதையைப் படித்துவிட்டு “இதை அப்படியே எடுத்து விடுவீர்களா?” என்றார். நான், “கண்டிப்பாக எடுப்பேன்” என்றேன் “அப்படி என்றால் நான் கண்டிப்பாக இசை அமைக்கிறேன்” என்று சொன்னார். அவருக்கு என் நன்றிகள்.

இம்மாதிரியான ஆளுமைகள், உதவிகளால்தான் இப்படம் சாத்தியமானது. நம் தேடலை எப்போதும் நிறுத்தக்கூடாது.

என் தயாரிப்பாளர் மோகனா மேடம் அவர்களுக்கு பெரிய நன்றி. இப்படம் கண்டிப்பாக உங்களை திருப்திப்படுத்தும். இப்படத்தில் உழைத்த நடிகர் நடிகையர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். நன்றி..” என்றார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது..,

“‘ஆல் பாஸ்’ படத்தின் டிரெய்லரும், பாடல்களும் பார்க்க மிகவும் நன்றாக இருக்கின்றன. படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்.

படத்தின் ஹீரோயின் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறார். அவரை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஹீரோ எனது நண்பர் ஜெயப்பிரகாஷ் அவர்களின் மகன். ஆனால், படத்தில் அவர் ஒரு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், அறிமுகமான காலத்திலிருந்தே தொடர்ந்து கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்திலும் நல்ல இசையைத் தந்திருக்கிறார். அனைத்து பாடல்களும் மிகவும் அருமையாக இருக்கின்றன. இந்த ‘ஆல் பாஸ்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் விக்ரமன் பேசியதாவது..

“இந்தப் படத்தின் குழுவைப் பற்றி எனக்கு பெரிதாகத் தெரியாது. இந்தப் படத்தின் இயக்குநர் அலுவலகத்திற்கு வந்தபோது, இயக்குநர் சேரனுக்கு அழைப்பிதழ் வைத்தார். அதேபோல் எனக்கும் அழைப்பிதழ் கொடுத்தார்.

அப்போது நான், ‘யார் ஹீரோ?’ என்று கேட்டேன். அதற்கு “நடிகர் ஜெயப்பிரகாஷ் அவர்களின் மகன் துஷ்யந்துதான் ஹீரோ” என்று கூறினார்.

நடிகர் ஜெயப்பிரகாஷுக்கும் எனக்கும் சுமார் 30 வருட பந்தம் இருக்கிறது. அவரை நடிகராக இருந்து தயாரிப்பாளராக மாற்றியதே நான்தான். அந்த அளவுக்கு நானும் அவரும் நெருக்கமானவர்கள்.

இந்தப் படத்தின் டிரெய்லரையும், பாடல்களையும் பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. இந்தப் படத்தில் பணியாற்றியுள்ள தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் நல்ல வெற்றி கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் மிகவும் அழகாகவும், சிறப்பாகவும் இருந்தது. அவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ‘ஆல் பாஸ்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார்.

நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது..,

“‘ஆல் பாஸ்’ அற்புதமான படம், ஜேம்ஸ் வசந்தன் எனக்கு மிகவும் பிடித்த கலைஞர். நீட் மாணவர்களை 11, 12 ஆம் வகுப்பிலேயே அந்த சப்ஜெக்டை படிக்க வையுங்கள் தைரியமாக பேசினார். அவருக்கு என் நன்றிகள்.

ஒரு திரைப்படத்தில் பணிபுரியும் கலைஞர்களை விளம்பரங்களில் தெரிவதுபோல விளம்பரம் செய்யுங்கள். அதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

இப்படத்தில் தமிழகத்திற்கு நல்ல கதாநாயகன், நாயகி கிடைத்துள்ளார்கள் பாடல்கள் மிக நன்றாக உள்ளது. மோகன் ராஜன் அற்புதமான பாடல் எழுதி வருகிறார். நடித்த நடிகர்கள் கலைஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். இப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்.

நான் ‘கருப்பு’ படத்தில் க்ளைமாக்ஸில் டான்ஸ் ஆடினேன். ஆனால் அதை அப்படியே படத்திலிருந்து தூக்கிவிட்டார்கள், என்ன அநியாயம் இது? “யூ டியூப்பில் வெளியிடுவோம்” என்றார்கள். அதையும் செய்யவில்லை. சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள்தான். அவர்கள் வாழட்டும். ஆனால், எங்களையும் வாழ விடுங்கள்.

நான் பல வருடங்களாக இந்தத் திரை உலகில் நடிகராக, தயாரிப்பாளராக இருக்கிறேன். எனக்கான நியாயம் கிடைக்க வேண்டும்.

நீங்களே பாருங்கள். வாட்ஸ்அப், மீடியா என்று எதை எதையோ வைத்துக்கொண்டு எங்களைப் பற்றி தப்புத் தப்பாக எழுதுகிறார்கள்.

எங்களுக்கு வேலை கொடுக்கிறார்களோ இல்லையோ, கீழே போய் உட்கார்ந்து கொண்டு, ‘உன் பையன் கஞ்சா அடிக்கிறான், பைத்தியக்காரன்’ என்று என்னென்னவோ பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் என்ன நல்ல வேலை செய்தேன் என்று நினைத்தாலும், கீழே போய் அதை கொச்சைப்படுத்தி பேசிக் கொண்டிருப்பார்கள். இப்படி ஒரு அழுக்குப்பிடித்த சனியன்கள் நாட்டில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அதுதான் வேலை. எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

‘ஆல் பாஸ்’ என்பது ஒரு அற்புதமான பெயர். இந்தப் படத்திற்கு விளம்பரம் செய்யும் ஒவ்வொருவருக்கும் நான் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.

குறிப்பாக ஒவ்வொரு தொழில் நுட்பக் கலைஞரும் மரியாதை செய்யப்பட வேண்டும்.
ஒவ்வொரு தொழில் நுட்பக் கலைஞரின் உழைப்பும் முக்கியமானது.

சினிமாவில் வேலை செய்யும் ஒவ்வொருவரையும், விளம்பர மீடியா உள்ளிட்ட அனைவரையும் நான் மதிக்கிறேன். இது என்னுடைய ஊர். என்னுடைய வாழ்க்கை. என்னுடைய சினிமா.

ஒவ்வொரு தொழில் நுட்பக் கலைஞரும் தங்களுடைய வேலையை உண்மையாகச் செய்தாலே போதும். யாருடைய உழைப்பையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. நன்றி, வணக்கம். வாழ்த்துகள்” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது..,

“இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் அனைவரையும் பற்றி மிக அழகாகப் பேசியதோடு, இந்தப் படத்தில் அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும் இணைந்து பணியாற்றியவிதத்தை எடுத்துக் காட்டியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஒட்டு மொத்த படக் குழுவிடமும் ஒரு நல்ல வைப்ரேஷனும், எனர்ஜியும், சிறப்பான ஒருங்கிணைப்பும் இருந்திருக்கிறது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் இசை மிகப் பெரிய பலமாக அமைந்திருக்கிறது. அவர் இப்படத்திற்கு ஆதரவாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ் சினிமாவில் தற்போது வாரந்தோறும் பல படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இப்படியான சூழலில் இந்த ‘ஆல் பாஸ்’ படம் சரியான நேரத்தில் வெளியாகி, ரசிகர்களுக்கு நல்ல என்டர்டெய்ன்மென்ட் படமாக அமையும் என்று நம்புகிறேன்.

வட சென்னை என்றாலே ஆக்ரோஷம், அடிதடி போன்ற ஒரு பிம்பம் தமிழ் சினிமாவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் வட சென்னையில் மிகவும் இயல்பான, எளிமையான வாழ்க்கை வாழும் மக்கள் அதிகம். அந்த வாழ்வியலை இந்தப் படம் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.

குறிப்பாக குறுகலான தெருக்கள், அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகள் என சவாலான இடங்களில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருப்பது சாதாரண விஷயம் அல்ல. அந்தச் சவால்களை படக் குழுவினர் சிறப்பாக எதிர்கொண்டு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் மோகனா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். புதிய தயாரிப்பாளராக களமிறங்கி இருக்கும் அவர், நல்ல படத்தை கொடுத்து வெற்றி பெற வேண்டும்.

ஜே.பி. சார் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். அவர் ஒரு சிறந்த நடிகர். அவருடைய மகனையும் இந்தப் படத்தில் பார்த்தேன். நல்ல திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு சிறப்பான எதிர்காலம் அமைய வேண்டும்.

நாயகி ஜனனி உள்ளிட்ட படத்தில் நடித்துள்ள அனைவருக்கும், வினோதினி உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும், தொழில் நுட்பக் குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்த ‘ஆல் பாஸ்’ திரைப்படம் வெற்றி பெற வேண்டும்” என்றார்.

நடிகை ஜனனி பேசியதாவது..,

“இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் ஊடக நண்பர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் என்னுடன் நடித்த சக கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் மைதீன் முதன்முதலில் என்னை சந்தித்து இந்தக் கதையைச் சொன்னபோதே, கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

குறிப்பாக கதையின் பின்னணியும், படப்பிடிப்பு நடைபெறவிருந்த லொகேஷன்கள் குறித்த அவரது அணுகுமுறையும் என்னை கவர்ந்தது.

இயக்குநர் மைதீன் கதையை மிகவும் தெளிவாகவும், நம்பிக்கையுடனும் எடுத்துச் சொன்னார். அவர் சொன்ன விதத்திலேயே இந்தப் படம் வித்தியாசமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.

இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞரும், தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது.

என்னைவிட அவர்கள் மிகப் பெரிய ஆளுமைகள் அவர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி.
‘ஆல் பாஸ்’ படத்தின் வெளியீட்டிற்காக நான் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.

நடிகர் துஷ்யந்த் பேசியதாவது..,

“முதலில் விக்ரமன் சார், ஆர்.வி.உதயகுமார் சார், மன்சூர் அலிகான் சார் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக, எனக்கு இந்தப் பாசிட்டிவான கதாப்பாத்திரத்தை வழங்கிய இயக்குநர் மைதீன் மற்றும் தயாரிப்பாளர் மோகனா அவர்களுக்கு மிகப் பெரிய நன்றி.

இந்தப் படத்தில் பல கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பின்போது பலருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

இவ்வளவு பெரிய நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தபோது, இந்தப் படம் நிச்சயம் நல்ல வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.

இந்தக் கதாப்பாத்திரத்திற்காக என்னைத் தேர்வு செய்த இயக்குநருக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது திரைப்பயணத்தில் இந்தக் கதாபாத்திரத்தை நிச்சயம் மறக்க முடியாத வகையில் நினைவில் வைத்திருப்பேன்.

இந்தப் படத்தில் எனது தந்தையும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இது என்னுடைய நான்காவது படம். என்னுடைய முதல் படமான ‘ஈசன்’ படத்திற்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன். இயக்குநர் சசிகுமார் சார் இயக்கிய அந்தப் படத்தில் நான் மிகவும் சிறிய வயதில் நடித்தேன். அப்போது எனக்கு சினிமா மீது மிகப்பெரிய ஆர்வம் இருந்தது.

ஒரு படத்தில் நடிப்பதே எனக்கு மிகப் பெரிய விஷயமாக இருந்தது. சினிமா பற்றி எதுவும் தெரியாத அந்தக் காலக்கட்டத்தில் சசிகுமார் சார் எனக்கு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தார்.

2008 முதல் 2026 வரை தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக எனது தந்தை எனக்கு அளித்த ஆதரவுக்கு மிகப் பெரிய நன்றி.

இந்தப் படத்தின் இயக்குநர் மைதீன் வட சென்னையை ஒரு வித்தியாசமான கோணத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் எடிட்டர் சார் முற்றிலும் வித்தியாசமான பார்வையுடன் படத்தை அழகாக உருவாக்கியிருக்கிறார்.

எங்கள் படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ஊடக நண்பர்களுக்கும் என்னுடைய நன்றி.

நீங்கள் அனைவரும் இந்தப் படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை வழங்க வேண்டும். டிரெய்லரையும், பாடல்களையும் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இந்த ‘ஆல் பாஸ்’ படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுங்கள். நன்றி” என்றார்.

நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசியதாவது..,

“இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை நான் தேர்வு செய்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

இயக்குநர் என்னிடம் கதை சொல்ல வந்தபோது, முழுமையாக கதையைச் சொன்னார். கதையில் இருந்த ஒவ்வொரு கதாபாத்திரத்தைப் பற்றியும் அழகாக எடுத்துச் சொன்னார். அதில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு கதாபாத்திரம் இருந்தது. அந்தக் கதாபாத்திரத்தை நான்தான் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்.

இயக்குநர் “நடிப்பீர்களா?” என ஆச்சரியமாக கேட்டார்.
‘நடிக்கத்தானே வந்திருக்கிறோம்… கண்டிப்பாக செய்கிறேன்’ என்று சொன்னேன். அந்த அளவுக்கு அந்தக் கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தது.

இயக்குநர் மைதீன் இந்தப் படத்தை மிகவும் இயல்பான படமாக உருவாக்கியிருக்கிறார். நான் முதலில் கேட்ட கதைக்கும், பின்னர் டப்பிங் செய்யும்போது பார்த்த படத்திற்கும் எந்த மாற்றமும் இல்லை.

படத்தில் பேசப்படும் வசனங்களாக இருந்தாலும் சரி, காட்டப்படும் வீடுகளாக இருந்தாலும் சரி, அனைத்துமே அந்த வாழ்வியலை விட்டு விலகாமல் இருக்கிறது.

ஒரு சமையல்காரர், ஒரு பெயிண்டர், ஒரு சைக்கிள் கடைக்காரர் என மூன்று கதாபாத்திரங்களை மையமாக வைத்து, அவர்களுடைய குடும்பங்கள், குழந்தைகள், அவர்களுக்குள் நடக்கும் சந்தோஷங்கள், சண்டைகள் என மிகவும் இயல்பான விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதுதான் எனக்கு இந்தப் படத்தில் மிகவும் பிடித்திருந்தது.

சினிமாவில் நிறைய அனுபவம் கொண்ட சரத் சார் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அவர்களுடைய நடிப்பும் மிகவும் சிறப்பாக இருந்தது.

குறிப்பாக இந்தப் படத்தில் நடித்துள்ள அனைவருடைய பங்களிப்பும் பாராட்டுக்குரியது.

பாடல்களும் இசையும் மிகவும் அழகாக அமைந்திருக்கிறது. சில காட்சிகளில் இசை அந்தக் காட்சியின் உணர்வை இன்னும் அழகாக கொண்டு சென்றிருக்கிறது. ஜேம்ஸ் வசந்தன் சார் பசங்க படத்திற்கும் ஈசன் படத்திற்கும், இசையமைத்துள்ளார், இப்போது இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார் மகிழ்ச்சி.

வட சென்னையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் காட்டாமல், அங்குள்ள மக்களின் இயல்பான வாழ்க்கையை இந்தப் படம் பதிவு செய்திருக்கிறது.

வட சென்னை மக்கள் இப்படித்தான் இருப்பார்கள், இப்படித்தான் பேசுவார்கள். குழந்தைகளுக்குள் இப்படித்தான் நட்பு இருக்கும் என்பதை மிகவும் எளிமையாகவும் இயல்பாகவும் காட்டியிருக்கிறார்கள்.

புதிய தயாரிப்பாளராக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கும் மோகனா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

இந்தப் படம் வெற்றி பெற வேண்டும். ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டது என்று நிறுத்திவிடாமல், தொடர்ந்து அடுத்தடுத்த நல்ல படங்களை தயாரித்து வெற்றி பெற வேண்டும்.

அந்த வகையில் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேசியதாவது..,

இந்த ‘ஆல் பாஸ்’ படத்தில் அனைத்து கலைஞர்களும் மிக அற்புதமாக உழைத்துள்ளார்கள். வினோதினி மேடம் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் நடித்த நடிப்பு அவரை என் மனதில் ஆழமாக இருத்தியது. அதே போல் அனைவருமே இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

நான் எல்லா படத்தையும் மனதுக்கு நெருக்கமாக பார்ப்பேன். அப்படி சில படங்களை பார்க்கும்போது, ஏன் இவ்வளவு வன்முறை எனத் தோன்றும். ஆனால் இந்தப் படத்தைப் பார்க்கும்போது உங்களுக்கு இப்படி எந்தக் கேள்வியும் தோன்றாது. மாறாக, மன அமைதிதான் கிடைக்கும்.

இப்படத்தின் கலை இயக்குநருக்கு தேசிய விருது கிடைக்கும். அந்தளவு உழைத்திருக்கிறார். மோகன் ராஜன் என்னுடன்தான் முதல் படத்தில் பணிபுரிந்தார் அவர் வளர்ச்சியில் எனக்கு சந்தோசம். இப்படத்தில் நான்கு பாடல்களை எழுதியுள்ளார்.

இப்படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைத்து இசை கலைஞர்களுக்கும் என் நன்றிகள். இயக்குநர் வட சென்னையை யாரும் காட்டாத கோணத்தில் காட்டியுள்ளார். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.” என்றார்.

வட சென்னையின் மற்றொரு முகத்தை, அப்பகுதி மக்களின் இயல்பான வாழ்வியலுடன் சொல்லும் படமாக இந்த ‘ஆல் பாஸ்’ படம் உருவாகியுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படம் கவனம் பெற்றுள்ளது.

Our Score