full screen background image

டிசி – சினிமா விமர்சனம்

டிசி – சினிமா விமர்சனம்

DC CAST & CREW DETAILS

*CAST WITH CHARACTER NAMES

* Lokesh Kanagaraj – Devadas
* Wamiqa Gabbi – Chandra
* Sanjana A.K. – Parvathi
* Kasthuri Raja – Motor Mani
* Thalaivasal Vijay – Arasu
* Krish Dayal – Bhojraj
* Avinash Raghudevan – Kitty
* Jawahar Sakthi – Karuppan
* Sharath Ravi – Chunnilal
* Pranav Teophine – Sebastian
* A. Raajarishi – Singaram
* Balaji Deviprasad – Ashraf
* Attul – Rajarishi
* Manoj Sashi – Manoj
* Kalaiyarasan R. – Raja Manikam
* Franklin Jacob – Franki
* Dileepan K. – Dilip
* Karnaraajaa – DGP
* Baskar R. – Angani
* Vijayalakshmi Veeramani – Vadivu
* Nanthis M. – Angani Son
* Deepam Philipose – Yuvaraj
* Pream K. Seshadri – Saamikannu
* Bigil Siva – Doctor
* Ashraf Mallisseri – Karvachi Kannan
* Samundeeswari J. – Amulu
* Kapil Velavan – E. Kapil
* Raja Raghupathy – Arokiyaraj
* Idayakumar – Yuvaraj Team
* Kaka Gopal – Shop Owner
* Aara Ajith – Vijay
* Shoban Babu – Shoban Babu
* Viraj – Kitty’s Brother
* Nageshwari T. – Arasu’s Wife
* Harish – Arasu’s Son
* Madhesh – Young Devadas
* J. Vaishalini – Ashraf’s Daughter
* D. Naresh – Yuvaraj’s Assistant
* A. Ajith Kumar – Maavatham
* Johnson – Johnson T.
* Deva – Deva
* Hannah – Ashraf’s Wife
* P.S. Gowtham – Police Officer
* Kalai Vembu – Police Officer
* Dhayaram – Police Officer
* Vikash J. – Police Informer
* Kizhakkuvaasi Chanderan – Singer
* Sasi Kumar P.A. – Police Officer
* Sarah Black – Parvathi’s Friend
* Salamon – Parvathi’s Friend
* Nandhini Udayakumar – Saamikannu’s Wife
* V.G. Raajesh (VGR) – Police Officer
* Subramanian Mathavan – Lodge Owner
* Deepak – Warehouse Owner
* Sangeetha – Brothel Girl
* C. Priya Shanmugam – Brothel Girl
* Nithya S. – Brothel Girl
* Sivasankari G. – Brothel Girl
* Tamilarasi – Brothel Girl

CREW

Written & Directed by: Arun Matheswaran
Produced by Sun Pictures
Additional Screenplay: Arun Ranjan
Dialogue: Arun Matheswaran, Franklin Jacob
Music: Anirudh
DOP: Mukesh G
Editor: G K Prasanna
Associate Editor: Harish Arun M
Production Designer: Kannan S
Stunts: PC Stunts
Costume Designer: Arun Matheswaran
Costumer: Perumal Selvam
Make-up: Vinoth Sukumaran
Stills: Amir
SFX: Sync Cinemas
Audiography: Vinay Sridhar
Atmos mix Assisted: Vignesh Guru (Knack Studios)
Colorist: Ranga
DI Lab: Prasad Film Labs
VFX: Praveen D
Publicity Designer: Kabilan Chelliah
Production Controller: D Ramesh Kuchirayar, K.T.S. Swaminathan
PRO: Riaz K Ahmed, Paras Riyaz

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தன்னுடைய முதல் படமான ‘ராக்கி’ படத்திலிருந்து கொடுத்த 4 படங்களுமே குடும்பத்தோடு பார்க்க முடியாத படங்களாகவே கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் இந்த ‘டிசி’ படமும் அடங்குகிறது.

இந்த கதை நடக்கும் வருடம் 2011.

சிறுவயதில் தன்னுடைய சொந்த தாய் மாமன்களையே கொலை செய்த வழக்கில் சிறைக்குச் சென்ற ‘தேவதாஸ்’ என்ற லோகேஷ் கனகராஜ், இப்போது சிறையில் இருந்து வெளியில் வந்து ஒரு ரவுடி கும்பலின் தலைவனாக இருக்கிறார்.

கோவையில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் இருக்கும் ஒரு கிராமத்தின் அருகே காவல் துறையினருக்கான ஆயுதங்களை ஏற்றி வந்த வேனை, தாஸ் தலைமையிலான டீம் கொள்ளை அடிக்கிறது.

அந்த டீமை கண்டுபிடிப்பதற்காக ஒரு போலீஸ் டீம் சம்பவ இடத்திற்கு வருகிறது.

அப்போது அந்த வழியாக 11 லட்ச ரூபாயை தன் மடியில் கட்டிக் கொண்டு வந்த ஒரு ஏழை குடியானவன் அங்கே இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சிக்குகிறான்.

அவனிடம் இருந்து அந்தப் பணத்தை பறிக்கும் பொருட்டு அவனை கொலை செய்துவிட்டு போலீஸ் டீம் பணத்தோடு தப்பி விடுகிறது.

இந்த விஷயத்தை இறந்தவனின் மனைவி மூலமாக அறியும் காட்பாதரான தாஸ், அந்த இன்ஸ்பெக்டரை படுகொலை செய்கிறார்.

தமிழக போலீஸ் மேலிடம் நடந்த சம்பவங்களை கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகிறது.

ஒரு திறமையான போலீஸ் உயர் அதிகாரியிடம் இந்த வழக்கை ஒப்படைத்து, எப்படியாவது அவர்களை கண்டுபிடிக்கும்படி உத்தரவிடுகிறார் டிஜிபி.

இதற்கிடையில் தாஸும் அவரது கூட்டாளிகளும் ஓரு ஹோட்டலில் வந்து தங்குகிறார்கள். அந்த ஹோட்டலில் பாடகியாக இருக்கும் ‘பார்வதி’ என்ற அஞ்சனா மீது தாஸூக்கு காதல் வருகிறது.

ஆனால் அங்கே நடக்கும் ஒரு அடிதடியில் கோபமான அந்த லாட்ஜின் உரிமையாளர் இவர்களைப் பற்றி போலீசுக்கு போட்டு கொடுக்க போலீஸ் வந்து துப்பாக்கி சூடு நடத்தி பிடிக்க முயலுகையில் அந்த சந்திரா என்கவுண்ட்டரில் கொலை செய்யப்படுகிறார்.

மேலும் தாஸின் டீம் தப்பித்துப் போகும்பொழுது தங்களை காட்டிக் கொடுத்த அந்த லாட்ஜ் ஓனரை கொலை செய்ய நினைக்கிறார்கள்.

அதற்காக அவர் வழக்கமாக வருகை தரும் விபச்சார விடுதியில் காத்திருக்கிறார்கள். அவர் வந்தவுடன் அவரை போட்டுத் தள்ளுகிறார்கள்.

அந்த விபச்சார விடுதியில் 20 வருடங்களாக தொழில் செய்து வந்த வாமிகா காபியையும் உடன் அழைத்துக் கொண்டு தப்பி ஓடுகிறார்கள்.

இன்னொரு பக்கம் போலீசும் இவர்களை விடாமல் பின் துரத்தி செல்கிறது. இந்த முயல், நரி விளையாட்டில் இறுதியில் ஜெயித்தது யார் என்பதுதான் இந்த ‘டிசி’ படத்தின் திரைக்கதை.

முகத்தை மறைக்கும் அளவுக்கான தலைமுடியும், திராவிட கலரும், ரவுடித்தனமான தோற்றமும் இருந்தாலே போதும் அவன்தான் ரவுடி ஹீரோ என்று தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டு காலமாக எழுதி வைத்து விட்டார்கள்.

வருகின்ற ஹீரோக்கள் எல்லாம் இதே போன்ற தோற்றத்திலேயே வருகிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் ஏதோ ஒரு காரணத்துக்காக முடியை வளர்த்து தன்னுடைய தோற்றத்தை மாற்றி அமைத்திருக்கிறார். அந்த நேரத்தில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் கண்ணில் பட்டுவிட “நீங்கள்தான் என் அடுத்த படத்தின் ஹீரோ” என்று சொல்லி அவர் தலையில் மஞ்சள் அரைத்து அழைத்துச் சென்று விட்டார் அருண். அதன் விளைவுதான் இந்த ‘டிசி’ படம்.

நான்கு வரி வசனங்களை பேசுகிறார். அடுத்த செகண்டில் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைக்கிறார். பாதி சிகரெட் முடிந்தவுடன் மீண்டும் வசனம் பேசுகிறார். படம் முழுவதும் இப்படியே வசனம் பேசுவதும் சிகரெட் குடிப்பதுமாக அவருடைய நடிப்பு நகர்ந்து இருக்கிறது.

சஞ்சனா கொலை காட்சியின்போது அவர் காட்டுகின்ற அதிர்ச்சியான அந்த நடிப்பு அந்த நிமிடத்தில் நமக்கு ஒரு பரிதாபத்தை வரவழைத்தது.

அதேபோல் அவருடைய தந்தை கஸ்தூரி ராஜாவிடம் மிக அலட்சியமாக “உசுரோட இருந்தால் மீண்டும் சந்திக்கலாம்” என்று பேசுகின்ற பொழுதும் அந்த ஒரு செகண்ட் லொகேஷை மறந்துவிட்டு நாம் தேவதாசை மனதில் கொண்டு வருகிறோம்.

இதுபோல இடையிடையே சிற்சில காட்சிகளில் தன்னை மறைக்க வைத்து ஒரு கதாபாத்திரமாகவே நம் கண்ணுக்குத் தெரிந்திருக்கிறார் லோகேஷ்.

இப்போது நமக்கு இருக்கும் ஒரு மிகப் பெரிய பயம் லோகேஷை பாராட்டி பேசினால் இதுதான் வாழ்த்து என்ற எண்ணி இப்படியே நடிகராகிவிட்டால், இவருடைய இயக்கத் திறமையில் உருவாக வேண்டிய படங்கள் எல்லாம் என்ன ஆகும்?

ஆக இயக்குநர் லோகேஷ் இனிமேல் வெளியில் வர வேண்டும். நடிகர் லோகேஷை கொஞ்ச காலம் மறைத்து வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

ஹீரோ மட்டும்தான் மது குடிப்பானா?  சிகரெட் குடிப்பானா? ஹீரோயின்கள் வாயில் சிகரெட்டை வைத்தால் அதைப் பற்ற வைக்க முடியாதா? என்ற கேள்வியுடன் பார்வதியாக நடித்திருக்கும் சஞ்சனா தான் வருகின்ற காட்சிகள் முழுவதிலும் சிகரெட்டை ஊதி தள்ளி இருக்கிறார்.

எவ்வளவு நல்ல பொண்ணு என்று நாம் நினைத்திருந்த நேரத்தில் இப்படியொரு கதாப்பாத்திரம் எனக்காகவே சிக்கி இருக்கிறது என்று சொல்லி நம் முகத்தில் கரியை பூசி இருக்கிறார் சஞ்சனா.

அவருடைய நடிப்பு ஓகே. தோற்றமும் ஓகே. உடை அலங்காரமும் ஓகே. ஆனால், அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் மோசம் என்றுதான் சொல்ல வேண்டும் சஞ்சனா சுதாரிச்சுக்கம்மா..! அவ்வளவுதான் சொல்ல முடியும்!

இரண்டாம் பாதியில் நீக்கமற நிறைந்திருக்கும் ‘சந்திரா’ என்ற வாமிகா காபி பின்னி எடுத்திருக்கிறார்.

கேமராவுக்கேற்ற முகம். ஒரு பாலியல் தொழிலாளியாக தன்னை அடக்கி வைத்திருக்கும் இந்த ஆண் சமூகத்தின் மீது அவருக்கு இருக்கும் அந்த வெறுப்பு ஒவ்வொரு ஆணையும் பார்க்கும்போதும் அவருடைய கண்களில் தெரிகிறது.

அந்த மருத்துவரை அவர் கிளினிக்கிலேயே  சுட்டுத் தள்ளும்பொழுது அவர் காட்டுகின்ற அந்த வெறி நமக்குப் பயத்தை கொடுக்கவில்லை ஆனால் கை தட்ட வைத்துவிட்டது.

வன்முறை களஞ்சியம்தான் இந்தப் படம். ஆனாலும் இதில் இருப்பதிலேயே மிகச் சிறப்பான ஒரு காட்சி என்றால் அது வாமிகா காபி செய்யும் இந்த வதம்தான்.

படத்தின் இறுதிவரையிலும் இவரும் ஒரு போராளியாக மாறி துப்பாக்கியை தூக்கிக்கொண்டு சுட்டு தள்ளுகின்ற காட்சிகள் எல்லாம் அவருக்கே நிச்சயம் புதிதாகத்தான் இருக்கும். மிக சிறப்பான ஒரு நடிப்பை காண்பித்திருக்கிறார் வாமிகா காபி. பாராட்டுக்கள்.

லோகேஷின் அப்பாவாக ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும், கஸ்தூரிராஜா அப்பாக்களின் பிரதிநிதியாக நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்.

மேலும் ‘அரசு’வாக நடித்த தலைவாசல் விஜய், கிட்டியாக நடித்திருக்கும் அவினாஷ் ரகுதேவன், கருப்பனாக நடித்திருக்கும் ஜவகர் சக்தி… அவ்வளவு ரணகளத்திலும் காமெடியை காட்டி இருக்கும் சரத் ரவி மற்றும் பலரும் இந்தப் படத்தில் மிகச் சிறப்பான ஒரு நடிப்பை காண்பித்து இருக்கிறார்கள். காரணம் அருண் மாதேஸ்வரன் என்ற இயக்குநரின் இயக்கத் திறமை.

ஜி.முகேஷின் ஒளிப்பதிவு மிஷ்கினின் படம் பார்த்தது போலவே இருக்கிறது. திரையில் தேவையில்லாத ஒரு ஆள்கூட இல்லை. அதிகமாக கூட்டத்தை கூட்டாமல் அரிசியை எண்ணி எண்ணி வைப்பதுபோல நடிகர்களை மிக சிறிய அளவில் பிரேமுக்குள் கொண்டு வந்து அனைத்து காட்சிகளையும் கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறார்.

கலர் கிரேடிலும்  சன்னமான, மந்தமான ஒரு வெளிச்சத்தையே படம் முழுவதும் கொடுத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

நடித்த நட்சத்திரங்கள் அத்தனை பேரையுமே மிக அழகாக காட்டியிருக்கிறார். அதிலும் சஞ்சனாவின் அழகை காட்டிய விதத்திலும் படத்திற்கு பெயர் கிடைக்க வைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளருக்கு நமது பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

தம்பி அனிருத் தனக்குத் தெரிந்த அத்தனை வித்தைகளையும் இந்தப் படத்திலும் இறக்கி காட்டியிருக்கிறார். நான் போடுவதுதான் இசை கேட்க வேண்டியது உங்களது கடமை என்பதுபோல அவர் அடித்த அடியில் அனைவரின் காதுகளும் பஞ்சர் ஆகிவிட்டது.

ஒரு சில இடங்களில் தீம் மியூசிக் போல இடையிடையே வருகின்ற அந்த இடங்களில் மட்டும்தான் நமக்குக் கொஞ்சம் ஆறுதல். மீதி எல்லாம் தர்ம அடிதான்.

இந்தக் கதைக்கு மிகப் பொருத்தமான எடிட்டிங்கௌ செய்திருக்கிறார் ஜி.கே.பிரசன்னா. ஒரு பக்கம் ரவுடிகள் கூட்டம் இன்னொரு பக்கம் போலீஸ் துரத்துகின்ற அந்த திரைக்கதை வேகத்தை எந்த இடத்திலும் குறைத்து விடாத அளவுக்கு தன்னுடைய கத்திரிக்கோலால் மிக அழகாக நறுக்கித் தந்திருக்கிறார் ஜி.கே.பிரசன்னா.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தானே காஸ்டியூம் டிசைனராக இருந்து உடை வடிவமைப்பையும் செய்திருக்கிறார். அதுவும் அழகாகத்தான் இருக்கிறது.

கலை இயக்குநரும் தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். இத்தனை வகை துப்பாக்கிகளையும் கொண்டு வந்து கொடுத்து எப்படி எல்லாம் சுடலாம் என்பதுபோல காட்டி சண்டை காட்சிகளுக்கு உயிர் கொடுத்து இருக்கிறார் சண்டை இயக்குநர்கள் பி சி ஸ்டண்ட்ஸ்.

வெட்டு, குத்து எல்லாம் ஓகேதான். ஆனால் இந்த அளவுக்கு வேண்டுமா என்கின்ற ஒரு கேள்வியும் வருகிறது.

ரத்தம் தெறிக்கின்ற அளவுக்கு குருதியோட்டத்தை பதிவு செய்திருக்கிறார்கள். கத்தியால் குத்துவதையும், கழுத்தை வெட்டுவதையும் கை, கால்களை வெட்டுவது ஏதோ கொசு அடிப்பது போல மிக எளிதாக செய்திருக்கிறார்கள். இதிலேயே நமக்கு மிக மிக டயர்ட் ஆகிவிட்டது.

இன்னும் எத்தனை கொலைகளைத்தான் நாம் பார்ப்பது என்ற ஒரு பயமும் கோபமும் நமக்குள் ஏற்பட இந்தப் படத்தின் கதையும், திரைக்கதையும், வசனமும் இயக்கமும், நடிப்பும் அந்த நிமிடத்திலேயே நம்மிடமிருந்து விலகி தொலைதூரத்திற்கு போய்விட்டன.

இதுதான் போதாது என்றால் 2011 ஆம் ஆண்டினை இவர்கள் ஏன் தேர்வு செய்தார்கள் என்பதும் தெரியவில்லை.

அந்த ஆண்டு தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருந்தது இரும்புக் கரம் கொண்ட ஜெயலலிதா. அவருடைய ஆட்சிக் காலத்தில் இதுபோன்று ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குள் உள்ளே நுழைந்து காவலர்களை சுட்டுக் கொன்று ஆயுதங்களை திருடி சென்ற சம்பவங்கள் நடக்கவில்லை.

அதற்கு முன்பாக வீரப்பன் மட்டுமே தமிழகத்தில் ஒரு முறையும், கர்நாடகாவின் எல்லையில் ஒரு முறையும் இப்படி செய்திருந்தார்.

ஆனால், இங்கே 2011 என்று குறிப்பிட்டு ஏன் சொன்னார்கள் என்பது தெரியாததால் இந்தப் படத்தின் கதை நம்பகத்தன்மையை இழந்து விட்டது என்றே சொல்லலாம்.

அதிலும் 2011-ம் ஆண்டில் ஆங்கில மீடியத்தில் ஐந்தாம் வகுப்பில் சேர்ப்பதற்காக ஒரு பையனுக்கு கட்டணம் 11 லட்ச ரூபாய் என்று அந்த பையனின் அப்பா செல்வதையெல்லாம் ஏற்கவே முடியாது.

என்ன சொல்ல வந்தோம் என்பதில் இயக்குநர் தவறுதலாக குழம்பிப் போய்விட்டாரோ என்னவோ… அல்லது பேசிய வசனத்தை டப்பிங்கில் சேர்க்காமல் விட்டுவிட்டார்களோ என்னவோ தெரியவில்லை. நிறைய குழப்பங்கள் அந்தக் காட்சியில் வந்துவிட்டது.

ஏற்கனவே இப்போது தமிழ்நாட்டில் ஊருக்கு ஊர் படுகொலைகள் தினமும் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்தக் கொலைகளில் பள்ளிக்கூட இளைஞர்களும்கூட சிக்கி இருப்பது வேதனைக்குரியது.

இந்த நேரத்தில் இதுபோன்று கொலைகளை ஆராதிக்கும் திரைப்படங்களை அதை சரி என்று சொல்லும் வகையில் எடுக்கப்படும் திரைப்படங்கள் வெளிவந்து அந்த இளைஞர்களின் மத்தியில் பார்வைக்கு போவது மிகப் பெரிய தவறு. கண்டிக்கத்தக்கது.

இது மாதிரியான வன்முறை களஞ்சியமான திரைப்படங்கள் இன்றைய இளைஞர்களின் மனதை வன்முறைக்குள் தள்ளுகின்றவிதமாகவே வந்து கொண்டிருக்கின்றன.

மசாலா படங்கள் என்றால் இப்படித்தான் இருக்கும் என்பதெல்லாம் இல்லை.

1980களில் 90களில் வந்த மசாலா திரைப்படங்கள் ஒரு குடும்பக் கதைகளாக வந்து கடைசியில் குடும்பத்தை ஒன்று சேர்ப்பது போலவும், கெட்டவன் வீழ்வது போலவும், நல்லவன் வாழ்வான் என்பது போலவும் படத்தின் முடிவில் ஒரு நல்ல நீதிக் கதைகளை சொன்னவை.

ஆனால் இப்போது வருகின்ற படங்களில் எல்லாம் வன்முறையை செய்பவன் கொலைகாரனும் கொள்ளைக்காரனும்தான் ஹீரோவாக காட்டப்படுகிறார்கள் என்பது தமிழ் சமூகத்தின் மீது தமிழ் திரைப்படத் துறையினர் சுமத்தும் ஒரு மிகப் பெரிய நோய் என்று சொல்லலாம்.

அந்த வகையில் அருண் மாதேஸ்வரன் தன்னுடைய அடுத்த படைப்பிலாவது தன்னுடைய கொள்கையையும் கதை சொல்லும் முறையையும் மாற்றி சமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல விஷயத்தை கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

RATING : 2.5 / 5

Our Score