நடிகர் – நடிகையர் :
பிருத்விராஜ் சுகுமாரன் – ராஜீவன்
பார்வதி திருவோத்து – மீரா
ஹக்கிம் ஷாஜகான் – அனஸ்
அசோகன் – ஜேக்கப்
விஜயராகவன் – முதல்வர்
மதுபால் – சிஐ ஜோமோன்
சங்கர் ராமகிருஷ்ணன் – Dysp அஜித்
நக்ஷத்ரா – ஜியா
தொழில் நுட்பக் கலைஞர்கள் :
இயக்குநர் : நிசாம் பஷீர்
தயாரிப்பாளர்கள் : சுப்ரியா மேனன், முகேஷ் ஆர். மேத்தா, சி.வி. சாரதி
தயாரிப்பு நிறுவனங்கள் : பிரித்விராஜ் புரொடக்ஷன்ஸ் & E4 எக்ஸ்பெரிமென்ட்ஸ்
எழுத்தாளர் : சமீர் அப்துல்
ஒளிப்பதிவாளர் : தினேஷ் புருஷோத்தமன்
படத்தொகுப்பாளர் : ரமீஸ் எம்.பி.
இசை : ஜேக்ஸ் பிஜாய்
நிர்வாகத் தயாரிப்பாளர் : ஹாரிஸ் தேசோம்
கலை : அர்ஷத் நக்கோத்
ஆடை வடிவமைப்பு : தன்யா பாலகிருஷ்ணன்
ஒப்பனை : ரோனெக்ஸ் சேவியர்
சண்டைப்பயிற்சி : யானிக் பென், கலை கிங்சன் & அமித் ஜாலி பாஸ்டின்
ஒலி வடிவமைப்பு : நிக்சன் ஜார்ஜ்
நேரடி ஒலிப்பதிவு : விவேக் கே.எம்.
தலைமை இணை இயக்குநர்கள் : பெனிலால் பி, பினு ஜி. நாயர்
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் : ரின்னி திவாகர்
நிதி ஒருங்கிணைப்பாளர் : கிரண் நெட்டயம்
VFX : DTM
VFX தலைவர் : லாவா குஷா
வண்ண அமைப்பாளர் (Colorist) : சுரேஷ் ரவி
புகைப்படங்கள் : ரோஹித் கே. சுரேஷ்
தலைப்பு வடிவமைப்பு : சீரோ உன்னி
வடிவமைப்பு மற்றும் அனிமேஷன் : சரத் வினு
விளம்பர வடிவமைப்புகள் : Yellowtooths
சந்தைப்படுத்தல் : Catalyst
விளம்பர முன்னெடுப்புகள் : Poffactio
கிரியேட்டிவ் ஏஜென்சி : ting
டீசர் ஒலி வடிவமைப்பு – அரவிந்த் பாபு
பத்திரிக்கை தொடர்பு – யுவராஜ்
நான் யார் என்று ஹீரோ கேட்கும் வகையில், யார் இதை செய்தது என்பதே தெரியவில்லை என்ற போலீசாரின் துவக்க விசாரணையில் இருந்து துவங்கும் இந்தப் படம் இறுதி வரையில் கிரைம், சஸ்பென்ஸ், திரில்லராக பயணித்து படம் நெடுகிலும் நம்மை சீட்டின் நுனியிலேயே அமர வைத்திருக்கிறது.
தன்னுடைய மனைவி மீரா என்ற பார்வதி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் இருக்கும் ராஜீவன் என்ற பிருத்விராஜ் ஒரு அரசு ஊழியர்.
அவர் ஒரு மதியப் பொழுதில் ஒரு வங்கிக்குள் செல்கிறார். அதே நேரம் அந்த வங்கியை கொள்ளையடிக்க மூன்று பேர் கொண்ட கும்பலும் அங்கு வருகிறது. கொள்ளையடித்துவிட்டு வெளியில் வரும் பொழுது பிரித்விராஜை பிணைக் கைதியாக மாற்றி அவரைத் தங்களுடைய வேனில் அழைத்துச் செல்கிறார்கள்.
ஒரு இடத்தில் பிரித்வியை இறக்கி விடும்போது ஏற்படும் கை கலப்பில் இவர்களைப் பற்றிய ஒரு அடையாளம் பிரிதிவிக்கு தெரிந்து விடுகிறது.
இது தெரிந்து அந்த கொள்ளையர்கள் திரும்பி பிரித்வியைப் பிடிக்க வரும்போது அவர்களின் கார் விபத்துக்குள்ளாகி கொள்ளையர்கள் மூன்று பேருமே மரணம் அடைகிறார்கள். ஆனால், அவர்களின் காரில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் இல்லை. அந்தப் பணம் எங்கே போனது என்று போலீஸ் தேடுகிறது.
போலீஸ் விசாரணையில் அந்த வங்கியில் அக்கவுண்ட்டே இல்லாமல் பிரதிவிராஜ் வங்கிக்கு வந்தது ஏன்? அவர் ஏன் அதிக நேரம் அங்கே உட்கார்ந்திருந்தார்? என்கின்ற விஷயங்கள் இவர் மீது சந்தேகத்தை எழுப்புகிறது. இதனால் தொடர்ந்தார்போல் பல நாட்கள் பிரிதிவிராஜை விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கிறார்கள் போலீசார்.
அதே போலீஸ் ஸ்டேஷனில் காவலராக வேலை பார்த்து வரும் ஹக்கீம் ஷாஜகான் என்ற அனீஸ், தற்போது சஸ்பெண்டில் இருக்கிறார். இவரும் இந்த கொள்ளையில் ஒரு மறைமுகமான தொடர்பினை வைத்திருக்கிறார்.
அந்தப் பணத்தை கண்டுபிடிக்க வேண்டி, இவர் நல்லவர்போல் வேடமிட்டு பிரித்விராஜை நெருங்கி “அந்தப் பணம் எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடித்தால் நாமளே பணத்தை பங்கிட்டு கொள்ளலாம்” என்று ஆசை வார்த்தை கூறுகிறார்.
இதனால் கோவமான பிரிதிவ், அந்தப் பணத்தை தேடும் பணியில் ஹக்கீமுடன் இணைந்து செயல்படுகிறார். பின்பு ஒரு கட்டத்தில் இவர் மீதும் சந்தேகப்பட்டு அதையும் நிறுத்திவிடுகிறார்.
இதனால் கோபமடையும் ஹக்கீம், இந்தக் கொள்ளை வழக்கில் பிரிதிவ்ராஜ் மீது சந்தேகம் இருப்பதாக மீடியாக்களிடம் செய்தியைக் கசிய விடுகிறார். நாடு முழுவதும் இந்தச் செய்தி பரவுகிறது.
தொலைக்காட்சிகளில் அவருடைய முகம் அடிக்கடி காட்டப்பட.. இதனால் பல தொல்லைகளுக்கு உள்ளாகிறார்கள் அவரது குடும்பத்தினர்.
இதனால் இந்தக் கொள்ளை எப்படி நடந்தது? அந்தப் பணம் எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க பிரிதிவ்ராஜூம் போலீஸுக்குத் தெரியாமல் களத்தில் இறங்குகிறார். போலீசும் பிரிதிவிராஜை பாலோ செய்கிறது. ஹக்கீமும் பிரிதிவிராஜை பாலோ செய்து அந்தப் பணத்தை கைப்பற்ற நினைக்கிறான்.
கடைசியில் என்ன நடந்தது? பணம் மீட்கப்பட்டது? கொள்ளையடித்தது யார்? அவர்களைத் தூண்டியது யார்? இதுதான் இந்தப் படத்தின் மிகச் சிறந்த சஸ்பென்ஸ், திரில்லர், திரைக்கதை.
பிரித்விராஜ் மிகச் சிறந்த ஒரு நடிகர். பல திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருப்பவர். முதல் காட்சியிலிருந்து, கடைசிவரையிலும் ஒன் மேன் ஷோவாக இந்தப் படத்தை தன் தோளில் தூக்கிச் சுமந்திருக்கிறார் பிரித்விராஜ்.
குடும்பத்துடன் இருந்தாலும் மனைவியுடன் அவருக்கு சமூக உறவில்லை. பேச்சுவார்த்தை இல்லை என்பதாகவே துவக்கத்தில் காட்டப்பட.. பிரித்விராஜின் அமைதியான சில செயல்பாடுகள் அவரை வித்தியாசமானவராக காட்டுகிறது.
போலீசாரால் ஒவ்வொரு முறையும் அவர் அவமானப்படும்பொழுது பக்கத்து வீட்டு குடியிருப்புவாசிகள் அனைவரும் அவர்களை விரோதிகளாக பார்ப்பதும், அந்த நேரத்தில் தன்னுடைய உணர்வை காட்ட முடியாமல் தவிக்கும் பிரித்விராஜின் நடிப்புதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம். இறுதிவரையிலும் தன்னுடைய நடிப்பின் மூலமாகவே இந்தப் படத்தை கடத்தி இருக்கிறார்.
பிரித்வியின் மனைவியாக நடித்திருக்கும் பார்வதியும் தனிப்பட்ட சிறப்பான நடிப்பை காண்பித்திருக்கிறார். போலீசார் அவரை மனரீதியாக டார்ச்சர் செய்கின்ற இடங்களில் குழந்தைகளுக்காக விட்டுக் கொடுத்துப் போகும் அவருடைய அந்த நடிப்பினை சிம்ப்ளி சூப்பர் என்ற சொல்லலாம். அவருடைய குழந்தைகளாக நடித்தவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கடத்தல் நாடகத்தில் கடைசி குழந்தை பேசும் வசனமும், பேசும் முறையும் நமது இதயத்தை லப் டப் என்று கூடுதலாக அடிக்க வைத்துவிட்டது.
கொள்ளையடிக்க ஐடியா கொடுக்கும் போலீஸ் கான்ஸ்டபிளான ஹக்கீம், விசாரணை குழுவில் இருக்கும் காவலர் என்ற பின்னணியில் இருந்து பிரித்விராஜூ நெருக்கடி கொடுத்து படத்தின் திரைக்கதைக்கு பெரிதும் உதவியிருக்கிறார். ஒரு மோசமான காவலர் எப்படி இருப்பாரோ அதை அப்படியே தன்னுடைய முகத்தில் காட்டியிருக்கிறார் ஹக்கீம்.
இன்னொரு பக்கம் ஜேக்கப் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அசோகனின் பண்பட்ட நடிப்பும் சிறப்பு என்றே சொல்லலாம். அவருடைய மேக்கப்பும் சிறப்பு தான். கணவன், மனைவியான அவர்கள் இருவருமே இந்தப் பணத்தை கையாடல் செய்யும் தொழிலுக்கு உள்ளே வருவதும் ஆச்சரியப்படுத்துகிறது. ஆனால், அவர்களுக்கு எதற்காக அந்த பணம் தேவைப்படுகிறது என்பது கிளைமாக்லில் நமக்கு தெரியும் பொழுது இன்னொரு வியப்பும் நமக்கு ஏற்படுகிறது.
சிறந்த கதை, திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள் இந்தப் படத்தின் எழுத்தாளர்கள்.
போலீஸ் டி.எஸ்.பி.யாக நடித்திருக்கும் சங்கர் ராமகிருஷ்ணன் போலீசுக்கு புத்தி எப்படி இருக்கும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணத்தை தன்னுடைய விசாரணை என்பது வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதேபோல் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் மதுபாலும் சந்தேகப் பேர்வழிகளிடம் எப்படி விசாரணை நடத்தி உண்மையை வர வைக்க வேண்டும் என்பதற்காக, தவளை–பாம்பு கதையைச் சொல்லி விளக்கும்போது இவரும் ஒரு கில்லாடி போலீஸாகவே நமக்குத் தெரிகிறார்.
தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு இந்தப் படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பலம். இயக்குநரின் சிறப்பான இயக்கத்தில் அத்தனை நடிகர், நடிகையரின் நடிப்பாற்றலை பல கோணங்களில் மாற்றி, மாற்றி அமைத்து போரடிக்க வைக்காமல் கடைசிவரையிலும் கொண்டு சென்று இருக்கும் ஒளிப்பதிவாளருக்கு நமது பாராட்டுக்கள்.
அதேபோல் படத்தின் ஹைலைட்டாக சண்டை காட்சிகளை சொல்லலாம். சண்டை நடக்கும் இடங்களில் எப்படி இவ்வளவு பரபரப்பான சண்டையாக அவற்றை படமாக்கினார் என்பது தெரியவில்லை. இதற்கு மிகப் பெரிய பாராட்டை கொடுக்க வேண்டும்.
லிப்டுக்குள் நடக்கும் சண்டை, ஒரு சிறிய வீட்டுக்குள் நடக்கும் சண்டை, பேருந்தில் நடக்கும் சண்டை என்று இந்த மூன்று சண்டை காட்சிகளும் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம். சண்டை காட்சிகளை வடிவமைத்த சண்ட இயக்குநருக்கும், இதைக் கச்சிதமாக படத் தொகுப்பு செய்திருக்கும் படத் தொகுப்பாளருக்கும் நமது பாராட்டுக்கள். இப்படிப்பட்ட தொழில் நுட்ப வல்லுநர்கள் உடனிருந்தால் மட்டும்தான் ஒரு இயக்குநர் தன்னுடைய மிக சிறந்த இயக்கத்தை வெளிக்காட்ட முடியும்.
படத் தொகுப்புள்ளர் ரமேஷ் தன்னுடைய மொத்த திறமையையும் இதில் காட்டியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ஒரு காட்சியிலிருந்து அடுத்த காட்சிக்கு நகரும்போது எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் ஒரு நிமிடம்கூட திரையைவிட்டு நம் கண்ணை அகல விடாமல் செய்திருக்கிறார்.
பல்வேறு காட்சிகள், பல்வேறு கதாப்பாத்திரங்கள்… இவர்களின் நடிப்புகள் என்று இதையெல்லாம் தொகுத்து வழங்கியிருப்பதில் அவர் செய்திருக்கும் கண்கட்டு வித்தை பாராட்டுக்குரியது.
ஒரு சில இடங்களில் இந்த படம் ரொம்ப நீளமோ என்று நாம் நினைக்க வேண்டிய அளவுக்கு இருந்தாலும், படத்தில் அடிக்கடி வருகின்ற டிவிஸ்ட்டுகள் படத்தை பெருமளவில் காப்பாற்றி இருக்கிறது.
ஜாக்ஸ் பிஜாயின் இசையில் பாடல்கள் ஒலித்தாலும் அதன் மாண்டேஜ் காட்சிகளில் படத்தின் கதையை நகர்த்தி இருப்பதால் பாடல்கள் நம் சிந்தைக்குள் நுழையவில்லை. ஆனாலும் நோ படி தீம் இசையும், ராவு தாண்டி பாடலும் நினைக்க வைக்கின்றன.
ஆனால், பின்னணி இசை உயிரோட்டமானது. ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு பரபரப்பையும், திரில்லிங்கையும் கொடுப்பது போல பின்னணி இசை அமைத்து படத்தைப் பரபரப்பாக்கியிருக்கிறார் இசையமைப்பாளர்.
ஒரு கொள்ளை நடக்கும் பொழுது மாட்டிக் கொள்ளும் அப்பாவிகளை சந்தேகம் என்கின்ற பெயரில் காவல்துறையினர் எந்த அளவு அலைக்களிப்பார்கள் என்பதை இந்தப் படத்தில் தெளிவாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.
அதே சமயம் போலீஸ் எதைச் சொன்னாலும் நம்பி விடும் அளவுக்கு முட்டாள்களான நமது மக்கள், அதுவரையில் நல்ல நட்புகளாக இருந்தவர்கள் கொள்ளையடித்து விட்டார்கள் என்று சந்தேகத்தின் பேரில் தாங்கள் பழகிய குடும்பத்தை ஒதுக்கி வைப்பதும் அவர்களை அன்னியமாக நினைப்பதுமாக மனிதர்களின் மனங்களையும் இந்தப் படத்தில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.
இந்தப் படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதிய எழுத்தாளர்கள் வங்கிக் கொள்ளை என்கின்ற ஒரு சின்ன விஷயத்தை வைத்து மாநிலத்தின் முதலமைச்சர்வரையிலும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை செமத்தியான திரில்லர் மூலமாக வடிவமைத்திருக்கிறார்கள். முதல் அமைச்சரை சந்திக்க பிரித்வி போடும் திட்டமும், அது ஒர்க் அவுட்டானவுடன் முதல் அமைச்சரிடமே டீல் போட்டு தான் தப்பிப்பதும் யாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட்..!
எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த ஒரு சாதாரண குடிமகன் ஒரு போலீஸ் விசாரணை நிகழ்ச்சிக்கு பின்பு அவனுடைய நிலைமை எப்படி எல்லாம் மாறுகிறது என்பதற்காக பிரித்விராஜ் இருக்கும் திரைக்கதையில் ஒரு பிரச்சனை முடிந்தால்.. அடுத்த பிரச்சனை.. அதற்கடுத்த பிரச்சனை.. என்று இழுத்துக் கொண்டேபோய், அவருடைய பொறுமையை சோதிப்பதுபோல திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்.
இடைவேளைக்கு பின்பு காட்சிகள் பரபர என்று ஓடுவதால் ஒரு காட்சியைகூட மிஸ் செய்யாமல் பார்த்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
“சீட் நுனியில் இந்தப் படம் உங்களை உட்கார வைக்கும்” என்று பலரும் பல திரைப்படங்களின் விழாக்களில் சொல்லியிருப்பார்கள். ஆனால், நிஜமாகவே இந்தப் படம் சீட்டின் நுனியில்தான் நம்மை உட்கார வைத்திருக்கிறது இறுதிவரையிலும்!
வித்தியாசமான கதை, திரைக்கதை என்று சொல்லி நாம் நினைத்துக்கூட பார்க்காத வகையில் திரைக்கதைகளை எழுதியிருக்கும் கதாசிரியர்களின் துணையோடு இயக்குநர் தன்னுடைய அற்புதமாக இயக்கத்தினால் தொழில் நுட்பக் கலைஞர்களின் மிகச் சிறப்பான பங்களிப்பினாலும், இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்.
ஆனாலும் நமக்கிருக்கும் ஒரேயொரு சந்தேகம். ஹக்கீமுக்கு தன்னுடைய மைத்துனர்கள் கொள்ளையடித்த பணத்தை தன் வீட்டில்தான் வைத்திருக்கிறார்கள் என்பது தெரிந்துவிட்டது. இப்போது அந்தப் பணத்தில் ஒரு பகுதியை ஜேக்கப் கொண்டு சென்றுவிட்டார். இந்தப் பணத்தை எடுத்த்தில் பிரித்விராஜூக்கும் பெரும் பங்குண்டு என்பதும் ஹக்கீமுக்கும் தெரியும். இதை அவர் தன்னை விசாரிக்கும் போலீஸாரிடம் சொல்ல மாட்டாரா.. அப்படி சொன்னால் பிரித்விராஜூவும், ஜேக்கப்பும் சேர்ந்து மாட்டிக் கொள்வார்களே..!? இயக்குநர் ஏன் இதை யோசிக்கவில்லை?!
எது எப்படியிருந்தாலும் இத்திரைப்படத்திற்கு பல விருதுகள் காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதி.
RATING : 4.5 / 5









