full screen background image

முதற் கனல் – சினிமா விமர்சனம்

முதற் கனல் – சினிமா விமர்சனம்

நடிகர் – நடிகையர் :

சூர்யா – அஸ்வின் விஸ்வநாதன்

பாண்டி – ராஜேஷ்

சங்கர் – ராமசாமி

சரஸ்வதி – தனுஜா

சுமா – இலக்கியா

ஜோசப் – அரி கரன்

தாஸ் – யோகேஷ்

ரமணா – ஆர்.வெங்கடரமணன்

ராஜேந்திரன் – டி.ராஜேந்திரன்

தொழில் நுட்ப வல்லுநர்கள்

இயக்குநர் – ஆர்.வெங்கடரமணன்

தயாரிப்பாளர் – ஆர்.போத்திராஜ்

ஒளிப்பதிவாளர் – கந்தசுவாமி கோபால்

பின்னணி இசை – மீரா லால்

எடிட்டர் – திஸ்யன் சாரதி

இணை இயக்குனர் – ஆர்.முத்துக்குமரன்

பத்திரிக்கை தொடர்பு : கே.எஸ்.கே.செல்வகுமார்

தற்போது தமிழகத்தில் இளைய சமூகத்திடம் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்விதமாக உருவாகியுள்ளது போதை கலாச்சாரம்.

டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மது வகையைவிடவும் கஞ்சா, அபின், மெத்தமைட்டன், ஹெராயின் போன்ற இன்னொரு வகையான போதைகளும் இன்றைய இளைய சமூகத்தினரை பாதித்து வருகிறது.

அதிலும் இன்று பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இடத்தில்கூட கஞ்சா போதை மிக அதிக அளவில் பரவி வருவது அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த போதையில் விழும் மாணவர்கள் தங்களுடைய வயதுக்கேற்ற அறிவு வளர்ச்சி இல்லாமையால் அதில் தானாகவே விழுந்து விடுகிறார்கள். இதனால் அவர்களது கல்வி பாதிக்கப்படுவதோடு அவருடைய குடும்பத்தினரும் பாதிக்கப்படுகிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதைதான் இந்த முதற் கனல்’ என்ற திரைப்படம்.

பள்ளி மாணவனான ஹீரோ அஸ்வின் விஸ்வநாத் தன்னுடைய தந்தையின் பால்ய சினேகிதியைப் பார்க்க அவருடைய கிராமத்துக்கு வருகிறார். அந்த வீட்டில் இருக்கும் அவருடைய  மகனான ராஜேஷ் உடன் நெருங்கி பழகுகிறார் அஸ்வின்.

ராஜேஷ் தன்னுடைய வயதை ஒத்த மாணவர்களுடன் சிகரெட் பின்பு கஞ்சா என்று அனைத்துவிதமான போதைகளையும் உட்கொள்கிறார். அவருடன் சில நாட்கள் பழகிய நேரத்தில் “இதுல ஒண்ணுமே இல்ல.. சும்மா குடிச்சு பாரு” என்று கஞ்சா தூளை அடக்கிய சிகரெட்டை அஸ்வின் கையில் கொடுக்க… அதை அவர் புகைத்த நிமிடத்தில் இருந்து கஞ்சாவுக்கு அடிமை ஆகிறார் அஸ்வின்.

அதுவரையிலும் வகுப்பில் முதல் மாணவனாக படித்துக் கொண்டிருந்த அஸ்வின் போதையில் சிக்கி கடைசி மாணவனாகிறார். இந்தப் பாதிப்பினால் வீட்டில் பணத்தைத் திருடுகிறார். தெருவில் விழுந்து கிடக்கிறார். பள்ளியில் சக மாணவர், மாணவியரிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்.

அஸ்வினின் பெற்றோர் மிகவும் கவலைப்பட அவர்கள் இருவரையும் தூக்கி எறிந்துவிட்டு தெருவுக்கே வந்து விடுகிறார் அஸ்வின். அவரை திருத்துவதற்காக அவருடைய குடும்பத்தினர் ஒரு பக்கம் போராடுகிறார்கள். இன்னொரு பக்கம் அந்த போதையில் இருந்து விடுபட முடியாமல் தத்தளிக்கிறார் அஸ்வின். இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் அஸ்வின் விஸ்வநாத் மிகச் சரியான பொருத்தமான தேர்வுதான். பள்ளி மாணவன் என்ற கேரக்டருக்கு பொருத்தமாக அவரும் பார்ப்பதற்கு பள்ளி மாணவனாகத்தான் இருக்கிறார். பள்ளிக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்க்கும்விதமாக வகுப்பில் முதல் மாணவனாக அவர் இருக்கின்ற சூழலில் அவர் காட்டுகின்ற நடிப்பு பெருமையாக இருக்கிறது.

அதன் பின்பு கஞ்சா போதையில் சிக்கி அவர் அல்லாடுகின்ற பொழுது அவர் காட்டுகின்ற ஒருவித மயக்க நிலை.. தான் தவறு செய்கிறோம் என்பது தெரிந்தும் மீள முடியாமல் தவிக்கும் அந்த குற்ற உணர்வு.. இதைத் தடுக்கும் பெற்றோர்கள் மீது அவருக்கு ஏற்படும் விரக்தி… தங்கையின் மீது உண்டாகும் வெறுப்பு.. என்று போதை பழக்கத்தில் ஆழ்ந்திருக்கும் ஒருவன் என்ன செய்வானோ அதையெல்லாம் இந்தப் படத்தில் செய்திருக்கிறார் அஸ்வின் விஸ்வநாத்.

இவருக்கு போதை ஆசை காட்டி கெடுக்கும் நண்பனாக நடித்திருக்கும் ராஜேஷ், மற்றும் அவருடைய நண்பர்களின் நிஜமான உலகத்தை காட்டி இருக்கிறார் இயக்குநர்.

இந்தப் படத்தின் இயக்குநரான ஆர்.வெங்கட்ராமன் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்து, தமிழ்நாட்டில் இந்த போதை பழக்கம்.. எங்கே எப்படி.. பரவி.. யாரையெல்லாம் பாதிக்கிறது? நாட்டிற்கு இதனால் என்ன கெடுதி என்பதையெல்லாம் தன்னுடைய அழகான வசனங்கள் மூலமாக நீதிமன்றத்தில் எடுத்துரைத்திருக்கிறார். அஸ்வினின் அப்பா, அம்மாவாக நடித்தவர்களும் தங்கையாக நடித்தவர்களும்கூட சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

படத்தின் ஒளிப்பதிவாளரான கந்தசாமி கோபால் ஒரு சின்ன பட்ஜெட் படம்.. சமூக விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்டு படம் என்பதால் அதற்கு ஏற்றவாறு ஒளிப்பதிவினை தரமாக செய்திருக்கிறார். பள்ளிக்கூடம், தெரு, வீடு என்று சில கதைக் களங்களையும் அழகாக பதிவு செய்திருக்கிறார்.

இசையமைப்பாளர் மீரா லால் பின்னணி இசையில் கூடுதலாக அழுத்தம் கொடுத்து இந்தப் படத்தை கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறார். நாடகத்தனமான பின்னணி இசை இல்லாமல் ஒரு உணர்வுபூர்வமாக நம்மை தட்டி எழுப்பி படத்துக்குள் இழுத்து விடும்படியான பின்னணி இசையை கொடுத்து காட்சிகளுக்கு உயிரூட்டி இருக்கிறார்.

படத்தின் தொகுப்பாளர் சாரதி துவக்கத்திலிருந்து இறுதிவரையில் படம் ஒரு பரபரப்பான நிலைமையில் இருப்பதால், அடுத்து என்ன.. அடுத்து என்ன என்று கேட்பது போல ஓடும் வகையில் கதை, திரைக்கதையில் எந்தவிதமான தேக்கமும் இல்லாத அளவுக்கு தொகுத்து கொடுத்திருக்கிறார்.

டாஸ்மாக்கில் கிடைக்கும் போதையாலேயே பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்கும் சூழலில்… அதற்கு அடுத்தபடியாக இந்த கஞ்சா என்ற போதை இப்போது வரையில் தமிழக முழுவதும் எங்கெங்கும் காணாதபடி பரவி இருக்கிறது.

இளம் வயது பையன்களுக்கு உரித்தான “என்னதான் செய்யும் பார்த்து விடலாம்…” என்று சொல்லி அந்த கஞ்சாவை ஒருமுறை புகைத்து அதன் பின்பு தங்களுடைய வாழ்க்கையை அதில் தொலைக்கின்ற அளவுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

இதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசுகளுக்கு உண்டு. என்றாலும் நாட்டில் இருக்கும் சில மூடர்கள், திருடர்கள், கொள்ளையர்கள் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து இதனுடைய பாதிப்பை மாணவர்களிடமும், மாணவிகளிடமும் இந்த கஞ்சா போதையை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு தமிழகத்தில் நடந்து வரும் மிகப் பெரிய கொடுமை இதுதான்.

அந்த போதைப் பொருள்கள் இப்போது பள்ளிக்கூடங்களிலும், பரவி கல்லூரிகளிலும் பரவி இருக்கிறது. பள்ளிக்கூடத்தின் வாசலிலேயே அதை மிக எளிதாக விற்பனை செய்கிறார்கள். கல்லூரியில் போன் அடித்து கேட்டாலே கொண்டு வந்து கொடுக்கின்ற அளவுக்கு இந்த கஞ்சா போதையின் வர்த்தகம் உயர்ந்திருக்கிறது.

இந்தப் படத்திலும் அதுபோலவே அந்த கஞ்சா எவ்வாறு எப்படி எளிய முறையில் மாணவர்கள் கையில் சிக்குகிறது என்பதை திரைக்கதையில் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.

உண்மையில் இன்றைய மாநில அரசு தான் செய்ய வேண்டிய மிகப் பெரிய பொறுப்பாக இந்த கஞ்சா போதையில் இருந்து தமிழகத்து மாணவர்களையும், இளைஞர்களையும் காப்பாற்ற வேண்டியது ஒன்றுதான்.

அதை காலதாமதம் இல்லாமல் செய்ய வேண்டும் என்று இயக்குநர் ஆர்.வெங்கட்ராமன் இந்தப் படத்தின் மூலமாக நம்மை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

உண்மையில் இந்தப் படத்தை அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் போட்டுக் காட்ட வேண்டும் என்றும், இந்தப் படத்திற்கு தமிழக அரசு வரி விலக்கும் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

RATING : 4 / 5

 

Our Score