full screen background image

“பாரதிராஜா, பாக்யராஜ் பெயரில் விருது வழங்க வேண்டும்” – ‘வஞ்சி’ பட விழாவில் முதல்வருக்கு இயக்குநர் பேரரசு கோரிக்கை!

“பாரதிராஜா, பாக்யராஜ் பெயரில் விருது வழங்க வேண்டும்” – ‘வஞ்சி’ பட விழாவில் முதல்வருக்கு இயக்குநர் பேரரசு கோரிக்கை!

வி.ஆர். கம்பைன்ஸ் நிறுவனம் சார்பில் விமலா ராஜநாயகம் தயாரிப்பில், சி.ஆர்.ராஜேஷ் எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘வஞ்சி’.

இதில், நாயகியாக நைரா நிகார் நடித்திருக்கிறார். மாஸ்டர் ராஜநாயகம் மிக முக்கியமான அதிரடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வில்லனாக டேன் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஜிபில்ராஜன் பிதேவ், தினேஷ், பண்னை பாலு, காரை நட்ராஜ், பிரியங்கா அழகன், ஷிவானி, மாடசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

சஜித் சங்கர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜெயகிருஷ்ணன் படத் தொகுப்பு செய்திருக்கிறார். கலைகுமார் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். கணேஷ் பாபு, ஸ்டன்லி, நந்தினி பாடல்கள் எழுதியுள்ளனர். தம்பி சிவா நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். பி.ஆர்.ஓ-வாக விஜய் கார்த்திக் பணியாற்றுகிறார்.

விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த ‘வஞ்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஜூலை 6-ம் தேதி, மாலை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில், இயக்குநர் பேரரசு, இசையமைப்பாலர் தினா, நடிகர் கூல் சுரேஷ், தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் இசக்கி ராஜா, பி.ஆர்.ஓ சங்க செயலாளர் விஜயமுரளி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்திய தயாரிப்பாளர் விமலா ராஜநாயகம் “எங்களது ‘வஞ்சி’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டுக்கு விழாவுக்கு வருகை தந்திருக்கும் திரையுலக ஜாம்பவான்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். படத்தில் பணியாற்றிய தொழில் நுட்பக் கலைஞர்கள், நடிகர், நடிகைகள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறை நண்பர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கின்றேன்.” என்றார்.

விஜயமுரளி பேசுகையில், “ஒரு தயாரிப்பாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ராஜநாயகம் ஒரு உதாரணம். வியர்வை காயும் முன்பே கூலி கொடுப்பவர். இந்தப் படம் கேரளாவில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. இசை சிறப்பு. நட்சத்திரங்கள் நன்றாக நடித்திருக்கிறார்கள். இயக்குநரின் பணி திரையில் தெரிகிறது. இந்த மாதிரி சிறு முதலீட்டு படங்கள் ஓட வேண்டும், அதற்கு உங்களுடைய ஆதரவு வேண்டும். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற எல்லாம்வல்ல இறைவனை வேண்டி விடை பெறுகிறேன். நன்றி.” என்றார்.

இசையமைப்பாளர் சதிஷ் சங்கர் பேசுகையில், “எனக்கு அதிகம் பேச தெரியாது, தமிழ் தெரியாது, நான் கேரளாவை சேர்ந்தவன். இந்த படத்திற்கு இசையமைக்கும் போது இயக்குநர் ராஜேஷ், எலக்ட்ரானிக் இசை வேண்டாம். பாடல்கள் நன்றாக புரிய வேண்டும். கேட்பதற்கு இனிமையாக இருக்க வேண்டும் என்று சொன்னார். அவர் சொன்னது னபோல் பாடல்கள் வந்திருக்கிறது. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த ராஜநாயகம் சாருக்கு நன்றி.” என்றார்.

இயக்குநர் மற்றும் கதாநாயகனான சி.ஆர்.ராஜேஷ் பேசுகையில், “இரண்டு வருடங்களாக கஷ்ட்டப்பட்டு இந்தப் படத்தை எடுத்தேன். கேரளாவில் முக்கியமான லொக்கேஷன்களில் படமாக்கப்பட்டிருக்கிறது. நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் எனக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள், அனைவருக்கும் நன்றி.” என்றார்.

பாடலாசிரியர் கணேஷ் பாபு பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், எனக்கும் தமிழ் நல்லா பேச வராது, ஆனால் தமிழ் ரொம்ப பிடிக்கும். நான் ராஜா சாரின் பெரிய ரசிகன். எனக்கு ராஜேஷ் சார்தான் இந்த வாய்ப்பினை அளித்தார். இசையமைப்பாளர் டியுன் கொடுத்து, முடியுமா ? என்று கேட்டார். முயற்சிக்கிறேன் என்று சொல்லிவிட்டு பாடல்களை எழுதினேன். தமிழ் சரியாக பேச முடியவில்லை என்றாலும், தமிழை அதிகம் நேசிக்கிறேன். சிறு வயதில் இருந்தே நிறைய தமிழ்ப் படங்கள் பார்ப்பேன். நிறைய தமிழ் படித்து இந்த பாடல்கள் எழுதியிருக்கிறேன். என் பாட்டில் தவறு எதாவது இருந்தால் மன்னித்து எனக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சங்கர் சார் எனக்கு ரொம்ப சப்போர்ட்டாக இருந்தார். நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.

இயக்குநர் குணா சுப்பிரமணியம் பேசுகையில், “’சீசா’ படத்தின் இயக்குநர் நான். அந்தப் படத்தின் திரைக்கதையை எழுதிக் கொண்டிருந்த போதுதான் எனக்கு ராஜநாயகம் சார் பழக்கம் ஆனார். அப்போது அங்க ஒரு பெண் இருந்தாங்க, அவங்கள பார்த்து நம்ம படத்துல அவங்கள ஹீரோயினா போடலாம், யார்னு விசாரிக்க சொன்னேன். அப்போது அவங்க ‘மஞ்சக் குருவி’ என்ற படத்தில் நடித்து வருவதாக சொல்லிட்டு, அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கிட்ட பேச சொன்னாங்க. அப்போதுதான் எனக்கு ராஜநாயகம் சார் அறிமுகம் ஆனார்.

அப்போது அவரிடம் நான் நிறைய பேசினேன். முதல் படம் என்பதால் எனக்கு ரொம்ப பதற்றமாக இருந்தது. அப்போது ராஜநாயகம் சார்கிட்ட நிறைய விசயம் கேட்டேன். எனக்கு நல்ல ஆலோசனைகள் எல்லாம் அவர் சொனார்.

எந்த எந்த இடத்தில்… பார்த்து நடக்கணும், என்று சொல்லிக் கொடுத்தார். ரொம்ப பாசிட்டிவான மனிதர். என் படத்தில் அவர் நடிக்கணும் என்று கேட்டேன். அவர் பண்ணி கொடுத்தார். அதற்கு பணம்கூட அவர் வாங்கல.

அவர் சினிமா காதலர். ஏற்கனவே ஒரு படம் பண்ணாரு. இப்ப இந்த ‘வஞ்சி’ படத்துடன் மேலும் ஒரு படம் பண்ணிக்கொண்டு இருக்கிறார். நல்ல மனிதர், பாசிட்டிவான எனர்ஜி கொண்டவர், அவர் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சிக்கிறார். அவர் வெற்றி பெற வேண்டும், அதற்கு உங்களுடைய ஆதரவு வேண்டும்.

இசையமைப்பாளருக்கு என் வாழ்த்துகள், இசை நன்றாக இருந்தது. படத்தை இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் ராஜேஷுக்கு வாழ்த்துகள். பத்திரிகையாளர்கள் சினிமாவை வாழ வைக்க வேண்டும், அதற்கு அவர்களுடைய ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

சில இயக்குநர்களால் வர முடியவில்லை. தயாரிப்பாளர்களும் சிலரால் ஏமாற்றப்படுவதால் அவங்களும் வருவதில்லை. அதனால் மீடியா ஆதரவு கொடுத்து வாழ வைக்க வேண்டும். படம் சரியில்லை என்றாலும்கூட அவங்கள காப்பாற்றும் வகையில் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

யார் வேண்டுமானாலும் இங்கு வரட்டுமே… வந்து ஜெயிக்கட்டுமே. இந்த படத்தை தயாரித்த விமலா ராஜநாயகம் மேடமுக்கு வாழ்த்துகள், நன்றி.” என்றார்.

தயாரிப்பாளரும், நடிகருமான மாஸ்டர் ராஜநாயகம் பேசுகையில், “என் இனிய தமிழ் மக்களே, என சிங்க குரலில், சிங்கார தமிழ் நடையில் துள்ளி குதித்து வரும் அருவி நீராய், பள்ளி குழந்தை முதல் பக்கு இடிக்கும் கிழவிவரை, சொல்லி மாளாது உன் திரைப்பணி. தீனி போட்டது நம் இயக்குநர் இமயம். உன் பெயரில் பாரதி இருந்ததால் என்னவோ உன் படங்களில் பெண்களுக்கு வீர உயிர் கொடுத்தாய். படி தாண்டினாலும் பத்தினி பத்தினிதான் என்ற உன் வசனங்கள், உன் உடல் மண்ணில் புதைக்கும்போது என் கண்கள் குளமாகின. கள்ளிப் பாலிலே தூக்கிலிடும் சிசுக்களை பள்ளியிலேயே பாடம் கற்று, பாமரனை மாற்றிய உன் உயரிய சிந்தனை, எண்ணங்கள், உன் இழைப்பை ஆழிப்பேரலை போல் அழ வைத்து சென்று விட்டாய்.

குருவையே மிஞ்சியவன் சிஷ்யன். பத்து முறை பார்த்தாலும் மறுமுறை பார்க்க வேண்டும் என்று கதையில் சூனியம் வைத்து தமிழ் மக்களை கட்டிப் போட்டவன் பாக்கியவான் பாக்யராஜ்.

பெண்ணியத்தை கண்ணியமாக காட்டி, பெண் நினைத்தால் மலையையும் மைல் கல்லாய் மாற்றுவார் என்று உன் படைப்புகள்தான் எங்களின் பாடங்கள்.

இந்த இரண்டு ராஜாக்களும் திரையில் இருந்தும், இந்த உலகில் இருந்து ஓய்வு எடுக்க சென்று விட்டீர்! என் மக்களை நிலைகுனிய வைத்துவிட்டீர். உங்கள் ஆன்மாக்கள் சாந்தியடையட்டும்.

உங்கள் வழியிலேயே ஒரு வீர மகளின் வாழ்க்கையை படம் பிடித்த ராஜேஷ் இயக்குநரை பாராட்ட வார்த்தை இல்லை.

‘வஞ்சி’ மகளின் இரத்த நானங்களை இசை நாதங்களாக வழி வகுத்த இசையமைழகன் சதிஷ் சங்கர், உங்கள் ராகங்களே வஞ்சியின் கீதங்கள். வஞ்சியின் இளவரசி காந்தகண் பேரழகி ஷாமல், உன் நடிப்பு வஞ்சியின் வெற்றிக்கு சமர்ப்பணம். மூன்று திரைப்படங்கள் எடுத்தாலும், வெற்றி கிட்டும்வரை விடமாட்டேன் என்றுவிடாமல் படம் எடுக்கும் விமலா இந்த திரைப்படம் தொடர்ந்து வெற்றி பெறும் உன்னுடைய நிழலா, நன்றி வணக்கம்.” என்று கவிதை நடையில் பேசினார்.

இசையமைப்பாளரும், பெப்சி துணைத் தலைவருமான தினா பேசுகையில், “இந்த அருமையான வேலையில், நல்ல பாடல்களை போட்டு காண்பித்த இந்த டீமுக்கு என் வாழ்த்துகள். சதிஷ் சங்கர் கவலைப்பட தேவையில்லை. மலையாளத்தில் இருந்து இங்கு வந்து நிறைய பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நீங்களும் அந்த வரிசையில் இடம் பிடிப்பீர்கள். தமிழகம் வந்தாரை வாழ வைத்து, அவர்களை பெரிய இடத்திற்கு அழைத்துச் செல்லும். அதனால் இசையமைப்பாளர் சதிஷ் சங்கர், கவலைப்பட தேவையில்லை.

‘வஞ்சி’ என்பது சூப்பர் டைட்டில். இளமையாக இருக்கும்போது பெண்கள் அழகாக இருப்பாங்க, வயது ஆகும்போது நம் மீது பாசம் காண்பித்து, அக்கறை காட்டி, நாம் எப்படி வாழ வேண்டும் என்ற வழியை காண்பிப்பார்கள்.

அப்படிப்பட்ட வஞ்சியை தலைப்பாக வைத்த இந்தப் படக் குழுவினருக்கு வாழ்த்துகள்.

மனைவி, சகோதரி, பாட்டி, அம்மா என பெண்கள் பல வடிவங்களில் இருந்தாலும், அவர்கள் இல்லாமல் நாம் இல்லை. அப்படி ஒரு சிறப்பான படைப்பை கடவுள் கொடுத்திருக்கிறார்.

பெண்களுக்கு போன ஆட்சியில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் இருந்தது. ஆனால், இப்போது நம்முடைய முதல்வர் பெண்களுக்காகவே ஆட்சி நடத்தவும் என்று சொல்லியிருக்கிறார். அவருக்கு நாம் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்.

ஆண்கள்தான் பெண்களை பாதுகாக்க வேண்டும் என்று இல்லை… பெண்களே பெண்களை பாதுகாக்க வேண்டும் என்ற ரீதியில் முதல்வர் சிறப்பான திட்டத்தை செயல்படுத்துகிறார். அவருக்கு இந்த ‘வஞ்சி’ தலைப்பு மிகவும் பிடிக்கும்.

காரணம், ஒரு ஆண் தாயாக இருந்து நம்மை காப்பாற்றிக் கொண்டிருக்கும் இந்த அரசு நிலைத்து சிறப்போடு இருக்க வேண்டும், என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

தயாரிப்பாளர் ஆவது சாதாரண விசயம் இல்லை. விமலா மேடம் இதுவரையிலும் மூன்று படங்களை எடுத்திருக்கிறார்கள், அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துகள். இந்த படக் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.” என்றார்.

இசக்கி ராஜா பேசுகையில், “படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்த்தோம். எல்லாமே புதுமையாக இருந்தது. இந்த பட்ஜெட்டில் இவ்வளவுதான் பண்ண முடியும். இவர்களிடம் இதைவிட பெரிய பட்ஜெட் இருந்தால் இதைவிட சிறப்பாக செய்திருப்பார்கள்.

தயாரிப்பாளர் விமலா மேடம் உள்ளிட்ட படக் குழுவினருக்கும் வாழ்த்துகளும். சிறு முதலீட்டு படங்களின் விழாக்களில் தொடர்ந்து பங்கேற்று வரும் பேரரசு சாருக்கு என் நன்றி.

பத்து வருடங்களுக்கு முன்பு அவர் மீது எனக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. ஆனால், இப்போது தயாரிப்பாளர் சங்கத்தில் இணைந்து பணியாற்றும்போதுதான் பேரரசு சார் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு நல்லது பண்ணிக் கொண்டிருக்கிறார் என்று தெரிய வந்தது.

இன்று எத்தனையோ தயாரிப்பாளர்கள் விலாசம் இல்லாமல் போயிருக்கிறார்கள். ஆனால், நடிகர்கள் இங்கேதான் இருக்கிறார்கள். நடிகர்கள் தெரிவார்கள். நடிகைகள் தெரிவார்கள். ஆனால் தயாரிப்பாளர் மட்டும்தான் தெரிவதில்லை.

‘நெல்லை பாய்ஸ்’ என்று படத்தை ஒன்றரை கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் எடுத்தேன், ஆனால் இன்றுவரை அந்தப் படத்தை வெளியிட முடியவில்லை.

இன்று தயாரிப்பாளர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக வெற்றி பெற்றதற்கு வெட்கப்படுகிறேன். எனக்கு ஓட்டுப் போட்ட தயாரிப்பாளர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்று வருந்துகிறேன்.

இன்று பல படங்கள் ஓடுகின்றன. ஆனால் சிறு முதலீட்டு படங்கள் ஓடுகிறதா? போட்ட பணத்தில் பாதி, கால்வாசிகூட வராது. தொழில் ரீதியாக ஒரு தயாரிப்பாளர் வருவாய் ஈட்ட முடியாத சூழ்நிலைதான் இங்கு இருக்கிறது.

இந்தப் படத்தைத் தயாரித்த விமலா மேடம் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று எனக்கு தெரியும். இதுபோன்ற தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்யவும் இங்கு யாருமில்லை.

இவர்களுக்கு கடன் கொடுக்கவும் முன் வர மாட்டார்கள். பெரிய தயாரிப்பாளர்களுக்கு மட்டும்தான், இங்கு வெளியே இருந்து முதலீடு வருகிறது. சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு எந்தவித முதலீடும் வராது.

இதில் மட்டும் அல்ல, யுடியுப் சேனல், பத்திரிகைகள்கூட இது போன்ற சிறு முதலீட்டு படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

காரணம், இங்கு எதுவும் இல்லை என்பதுதான். எனவே, இது போன்ற சிறு முதலீட்டு படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, எங்களுக்கும் வாழ்க்கை கொடுக்க வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், “’மக்கள் தலைவன்’ இசை வெளியீட்டு விழாவில் பாக்யராஜ் சார் கலந்து கொண்டார். அதுதான் அவர் பங்கேற்ற கடைசி திரை நிகழ்ச்சி என்று நினைக்கிறேன். அதில் நானும் கலந்து கொண்டேன்.

அதன் பிறகு நடக்கும் இசை வெளியீட்டு விழா இந்த ‘வஞ்சி’தான். அவரை நினைவுப்படுத்துகிறது.

கடந்த ஒரு மாதத்தில் இரண்டு பெரும் கலைஞர்கள் இழப்பு பாரமாகவே ஓடிக்கிட்டு இருக்கு. பாரதிராஜா, பாக்யராஜ் பெயர் இல்லை, வரலாறு.

இங்கே அவர்களைப் பற்றி ராஜநாயகம் கவிதை வாசித்தார். அந்த இரண்டு பேரையும் மறக்க முடியாது. மறக்கவும் கூடாது.

பாரதிராஜா என்ற ஒரு இயக்குநர் வெற்றியடைவில்லை என்றால், கிராமத்தில் இருந்து வந்தவர்களால் இங்கு வெற்றி பெற்றிருக்க முடியாது. நிறைய இயக்குநர்கள் அவரைப் பார்த்துதான் இங்கு வந்து வெற்றி பெற்றார்கள்.

பாக்யராஜ் சார் படங்களைப் பார்க்கும் போதுதான், நம்மாளும் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது.

நம்முடைய முதல்வர் விஜய், அவர்களுக்கு ஒரு கோரிக்கை,

சிறந்த இயக்குநர் விருது வழங்கும்போது அதை பாரதிராஜா சார் பெயரிலும், சிறந்த கதையாசிரியர் விருது கே.பாக்யராஜ் சார் பெயரில் வழங்க வேண்டும். இதுதான் அவர்களுக்கு நாங்கள் காட்டும் நன்றி கடனாக இருக்கும்.

நம்ம இசக்கி ராஜா, அவரது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துவிட்டார். எந்த தொழிலாக இருந்தாலும், வியாபாரத்தையும், லாபத்தை நோக்கிதான் பயணிக்கும்.

சினிமாவும் ஒரு தொழில்தான், ஆனால் இங்க மட்டும் வியாபாரத்தை நோக்கி இல்லை, லாபத்தை நோக்கி இல்லை. அதனுடைய வெளிப்பாடாகத்தான் அவர் பேசினார்.

இங்கு தீர்வு வர வேண்டும். சிறு சிறு தொழில் நுட்ப கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். சாப்பாடு போடுகிறார்கள், பிறகு அவர்கள் சென்று விடுகிறார்கள்.

ஒரு தயாரிப்பாளராக இருந்தால் குறைந்தது 5 படங்கள் பண்ண வேண்டும், லாபம் சம்பாதிக்க வேண்டும். அப்படி ஒரு நிலை இங்கு வர வேண்டும்.

சிறு சிறு தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்து சொல்வதைவிட நன்றி சொல்ல வேண்டும். அவர்கள்தான் சிறு சிறு நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கிறார்கள்.

அந்த வகையில், தயாரிப்பாளர் விமலா மேடமுக்கு நன்றி. ராஜநாயகம் சார், இசையமைப்பாளர், பாடலாசிரியரை கேரளாவில் இருந்து அழைத்து வந்திருக்கிறார்.

தமிழ் சினிமா மட்டும் வேறு மாநிலத்தவர் என்று பார்ப்பதில்லை, அனைவரையும் கலைஞர்களாகத்தான் பார்ப்பார்கள். அதனால்தான் ராஜநாயகம் சார் மொழியை பார்க்காமல் கதையை பார்த்திருக்கிறார்.

இயக்குநர் ராஜேஷின் துணிச்சலை பாராட்ட வேண்டும். எனக்கும் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் வந்தது. ஆனால், எனக்கு பயம். நல்லா போயிட்டு இருக்கு. இயக்குநர்தான் நம்ம வேலை. அதை விட்டுவிட்டு எப்படி என்று யோசித்து பயந்தேன். அதனால் வேண்டாம் என்று விட்டுட்டேன்.

ஆனால், ராஜேஷ் அந்தப் பயம் இல்லாமல் துணிச்சலாக ஹீரோவாக நடித்திருக்கிறார். அதற்கு காரணம் கதை. தன் கதையின் மீது இருக்கும் நம்பிக்கை. இந்த கதையில் யார் நடித்தாலும் ஹிட்டாகும்போது, ஏன் நாம் நடிக்க கூடாது. என்ற தைரியம்! அந்தத் தைரியத்தை பாராட்டுகிறேன்.

பெண் பிள்ளையை பெற்றவர்கள் பெருமைப்பட வேண்டும். பெண்கள் தைரியம் மிக்கவர்கள் என்பதை சொல்வதுதான் இந்த ‘வஞ்சி’.

பெற்றவர்கள்தான் அப்பா இல்லை. யார் பெண் மீது அக்கறை காட்டுகிறார்களோ அவர்கள்தான் அப்பா என்ற கருத்தை சொல்வதுதான் இந்த வஞ்சி படத்தின் கதை.

பாடலாசிரியர் தமிழ் பிடித்ததால் தமிழ் பாடல் எழுதியிருக்கிறேன் என்று சொன்னார். தமிழ் யாருக்கெல்லாம் பிடிக்கிறதோ, அவர்களை எங்களுக்கும் பிடிக்கும்.

படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துகள். விமலா ராஜநாயகம் அவர்கள் தொடர்ந்து படங்கள் தயாரிக்க வேண்டும், வாழ்த்துகள்.” என்றார்.

கதாநாயகி ஷாமல் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறேன். சின்ன படமாக இருந்தாலும், பெரிய படமாக இருந்தாலும் அது அனைவரது கனவு. எனவே நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். எனக்கு இந்த வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.” என்றார்.

நடிகர் கூல் சுரேஷ் பேசுகையில், “திருவண்ணாமலை பக்கத்துல செஞ்சி, இந்தப் படத்தின் பெயர் வஞ்சி. குழம்புக்கு போடுவாங்க.

இன்னைக்கு ஆடியோ ரிலீஸ் வஞ்சி. தயாரிப்பாளர் விமலா ராஜநாயகம் அவர்களுக்கு என் வாழ்த்துகள். மூன்று படம் தயாரித்திருக்கிறீர்கள், நான்காவது படத்தில் என்னை ஹீரோவாக போடப் போவதாக சொன்னாங்க. அதற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.

இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற வேண்டும். அப்பத்தான் எனக்கு வாய்ப்பு கிடைக்கும். இயக்குநர் ராஜேஷ் சாருக்கு வாழ்த்துகள். படக் குழுவினருக்கு வாழ்த்துகள்.

இயக்குநர் த.வெ.க என்று நினைக்கிறேன். படத்தின் பாடல்களின் பின்னணியில் த.வெ.க கலர்ல பூவாக இருந்தது. அதனால் கேரளவிலும் நம்ம த.வெ.க வெற்றி நடைப்போடுவது தெரிகிறது.

பாக்யராஜ் சார் மறைவுக்கு முருங்கை கீரை எடுத்துச் சென்றதை சிலர் தவறாக பேசுகிறார்கள். சிலர் எனக்கு ஆதரவாக பேசுகிறார்கள்.

எந்த தவறு எதுவும் செய்யவில்லை. நான் ஒரு நடிகர். என் பாணியில் அவருக்கு அஞ்சலி செலுத்தினேன். ஆனால், அதை வேறு மாதிரி பேசுகிறார்கள்.

ஒருவேளை நான் செய்தது தவறு என்று நினைத்தால் என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் இல்லாமல் நான் இல்லை. நீங்க என் மேல் வைத்திருக்கும் அன்பினால்தான் என்னை விமர்சனம் செய்கிறீர்கள், உங்களை புரிந்து கொண்டேன்.

என்னைப் பற்றி பேசுங்க. பார்த்திபன் சாரை பற்றி அப்படி பேசலாமா. பார்த்திபன் சார் அவருக்கு பேனா மாலை போட்டாரு. ஒரு போட்டோவை மாற்றினாங்க, அதைகூட விமர்சனம் செய்கிறார்கள்.

பாக்யராஜ் சார், பார்த்திபன் சாரை விமர்சிக்காதிங்க, அவங்க இரண்டு பேரும் குரு சிஷ்யன். அவர்கள பத்தி நமக்கு எதுவும் தெரியாது. தயவு செய்து அவர்களை விமர்சிக்காதீர்கள், என்னை எது வேண்டுமானாலும் விமர்சனம் செய்யுங்கள். சினிமாக்காரர்களை தவறாக சித்தரிக்காதீர்கள்.

தமிழக முதலமைச்சர் விஜய் சார் பாக்யராஜ் சாருக்கு அரசு மரியாதை கொடுத்தீங்க, உங்களுக்கு ஒரு கோரிக்கை.

ஒரு சினிமா ரசிகனாக கேட்கிறேன். பாக்யராஜ் சார் வாழ்ந்த அந்த தெருவுக்கு அவர் பெயர் வைக்க வேண்டும். இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.

அவரது படத்தில், நம் குடும்பத்தில் என்ன நடக்குமோ அதை அப்படியே திரையில் கொண்டு வந்தவர் பாக்யராஜ் சார். அப்படிப்பட்டவருக்கு நாம் செய்யும் மரியாதையாக அவர் வாழ்ந்த தெருவுக்கு அவர் பெயர் வைக்க வேண்டும்.

த.வெ.க. அமைச்சர்கள் பல நன்மைகளை செய்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு ‘வஞ்சி’ படக் குழுவினரை வாழ்த்துகிறேன்.” என்றார்.

வில்லனாக நடித்திருக்கும் டேன் பேசுகையில், “எனக்கு தமிழ் பேச தெரியாது. இந்தப் படத்திற்காக கொஞ்சம் கொஞ்சம் படித்து கத்துக்கிட்டேன். இது என்னுடைய இரண்டாவது படம். முதல் படம் மலையாளப் படம்.

இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளித்த ராஜேஷுக்கு நன்றி. தயாரிப்பாளர் மாஸ்டர் ராஜநாயகம் அவர்களுக்கு நன்றி. இந்த படத்திற்காக ரொம்ப நாளாக காத்திருந்தோம்.

படம் என் கனவு, இந்த படத்திற்காக தான் சென்னைக்கு வந்தேன். எனக்கு தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. தமிழ் மொழி ரொம்ப பிடிக்கும். இந்தப் படம் வெற்றி பெற்று, தயாரிப்பாளர் தொடர்ந்து படங்கள் பண்ண வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

Our Score