full screen background image

சிங்கீதம் – சினிமா விமர்சனம் 

சிங்கீதம் – சினிமா விமர்சனம் 

நடிகர்கள் : அஹல்யா பம்ரு, அயான், ஷாலினி கொண்டேபூடி, நிவேதா பெத்துராஜ், மற்றும் பலர்.

இசை : தேவி ஸ்ரீ பிரசாத்,

ஒளிப்பதிவு : அங்கூர். சி,

இயக்கம்: சங்கீதம் சீனிவாச ராவ்,

தயாரிப்பு : நாக் அஸ்வித்.

படைப்புக்கு வயதில்லை; படைப்பாளிகளுக்கும் வயதில்லை என்பார்கள். அதுபோல தன்னுடைய 94-வது வயதில் சிங்கீதம் என்ற இந்த மிகச் சிறப்பான ஒரு படத்தை தை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படங்களை இயக்கியிருக்கும் மாபெரும் இயக்குநர் சங்கீதம் சீனிவாசராவ்.

தமிழில்ராஜபார்வை’, ‘புஷ்பக்’, அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘சின்ன வாத்தியார்’, ‘காதலா காதலா என்று புகழ் பெற்ற பல திரைப்படங்களை இயக்கியிருக்கும் இவரது இயக்கத்தில் வந்திருக்கும் இந்தப் படம் நிச்சயமாக இன்றைய புதிய தலைமுறையினருக்கு ஒரு மாறுதலை கொடுத்திருக்கும்.

கதைக் களம் மத்தியப்பிரதேசம். தலைநகர் போபாலின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் சின்ன குற்றங்களை செய்து மாட்டிய ஹீரோ பிரதாப். ஆனால், விடுதலை கிடைத்தும் சிறையிலிருந்து வெளியில் போக மாட்டேன் என்று அடம் பிடிக்கும் பிரதாப்பை.. குண்டு கட்டாகத் தூக்கி சிறையிலிருந்து வெளியில் வீசுகிறார்கள் சிறை காவலர்கள்.

அந்த அளவுக்கு நல்லவனாக இருக்கும் பிரதாப், தன்னுடைய அப்பா தனக்காக விட்டுப் போயிருக்கும் 100 ஏக்கர் நிலம் அவருடைய சொந்தக் கிராமத்தில் இருப்பதை அறிந்து அங்கே வருகிறார்.

அந்தக் கிராமத்தில் தங்கச் சுரங்கம் இருக்கிறது. இந்தச் சுரங்கத்தில்தான் அந்த ஊர் மக்கள் அனைவரும் வேலை செய்கிறார்கள். தங்கம் இருக்கிறது என்று சொல்லி அந்தக் கிராமத்தில் வசிக்கும் மக்களை வேறு எங்கேயும் போக விடாமல் தடுத்து வைத்திருக்கிறார் ரேணு என்ற ஷாலினி.

இந்த ஊரைவிட்டு எங்கே போனாலும் இதுபோல வேலையும், பணமும்  கிடைக்காது என்று சொல்லி கிராம மக்களின் மூளையை மழுங்கடித்து அவர்களைப் பயன்படுத்தி கிடைத்த தங்கத்தை வைத்து மிகப் பெரிய அளவுக்கு பணக்காரராக இருக்கிறார் ஷாலினி.

இப்போது அந்த சுரங்கத்தில் தங்கம் கிடைக்கவில்லை. இதற்கு மேலேயும் அந்த தங்கத்தை எடுக்க வேண்டுமெனில் ஒரு பெரிய அளவுக்கான பணம் தேவைப்படுகிறது. அதற்காக நைஜீரிய நாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய நினைக்கிறார் ஷாலினி.

இந்த நேரத்தில்தான் பிரதாப் அந்த ஊருக்குள் நுழைகிறார். ஊருக்கு வெளியே இருக்கும் ஒரே ஒரு ஒற்றை மரம் அந்த ஊர் மக்களால் புனித மரம் என்று போற்றப்படுகிறது. அந்த மரம் தன்னுடைய சாமி என்று சொல்லி கௌரி என்ற பெண் அந்த மரத்துக்குள்ளையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

நைஜீரியாவில் இருந்து வந்திருக்கும் ஒரு நிறுவனம் அவர்களுடன் இணைந்து தங்கத்தை வெட்டி எடுக்க ஒத்துக் கொள்கிறது. அதே சமயம் இந்த இடம் என்னுடைய அப்பாவுடையது. அவருடைய ஒரே வாரிசு நான்தான் என்பதால் இந்த இடமும், சுரங்கமும் எனக்குத்தான் சொந்தம் என்று உள்ளே நுழைந்து குட்டையை குழப்புகிறார் பிரதாப். இதனால் அந்த ஒப்பந்தம் கையெழுத்திட இருந்த நிலையில் டமால்ஆகிறது.

பழைய சுரங்கத்தில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் கொஞ்ச தூரம் தள்ளியிருக்கும் அந்தப் புனித மரத்தை அறுத்து எடுத்துவிட்டு, அந்த இடத்தில் தோண்டினால் நிச்சயம் தங்கம் கிடைக்கும் என்கிறார்கள். இதற்காக அந்த மரத்தை கடுமையான எதிர்ப்புக்கு இடையிலும் வீழ்த்துகிறார்கள்.

தன்னுடைய உயிருக்கு உயிரான மரத்தை இழந்த கௌரி அந்த ஊர் அம்மனிடம் கதறி அழுகிறாள். இந்த சுற்று வட்டாரத்திலேயே நிழல் தரக் கூடிய ஒரே ஒரு மரம் இதுதான். இதில் நீதான் குடியிருந்தாய் இப்பொழுது இப்படி ஆகிவிட்டது என்று புலம்பி தள்ளுகிறாள் கெளரி.

இந்த சிச்சுவேஷனுக்கு பிறகு உடனேயே அந்த ஊரில் இருக்கும் அத்தனை பேரின் பேச்சுகளும் பாடலாக மாறுகிறது. அவர்கள் சாதாரணமாக பேசவே முடியவில்லை. அனைவருமே பாட்டு பாடித்தான் ஒரு நாள் பொழுதை கழிக்கிறார்கள்.

இந்தத் திடீர் வியாதி எப்படி வந்தது? ஏன் வந்தது? யாரால் வந்தது என்பது யாருக்குமே தெரியவில்லை. இதில் பிரதாப்பும், கௌரியும் தங்களை அறியாமலேயே ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

இதற்கு பிறகு என்ன நடந்தது?.. அந்த மரத்தை வெட்டிய இடத்தில் சுரங்கம் அமைத்தார்களா? தங்கம் கிடைத்ததா? ஊர் மக்கள் அனைவரின் பேச்சுக்களும் பாடலிலிருந்து விலகி இயல்பு நிலைமைக்கு வந்தார்களா.. இல்லையா.. இதெல்லாம்தான் இந்தப் படத்தின் திரைக்கதை.

படத்தில் பிரதாப்பாக நடித்திருக்கும் அயான் முதல் சில காட்சிகளில் சாதாரணமாக இருந்தாலும் அதற்கு பின்பு உண்மை நிலைமை புரிந்த பிறகு அவர்களைக் காப்பாற்றும் உணர்வோடு பிரமாதமாக நடித்து இருக்கிறார். இது என்னோட இடம் என்று சொல்வதில் துவங்கி, இறுதிவரையில் கூடவே இருந்து அந்த மக்களுக்கு நல்வழி காட்ட வேண்டும் என்ற நினைக்கும் கேரக்டரில் அழகாக நடித்திருக்கிறார்.

கிராமத்து மக்களை ஆட்டிப் படைக்கும் ரேணு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷாலினி கொண்டேபுடி கிரிமினல்தனத்தை தன்னுடைய முகத்திலேயே காட்டி இருக்கிறார். இவருடைய நடிப்பும் ஓரளவுக்கு படத்தை நகர்த்த உதவி இருக்கிறது. அவருடைய முகம் பிடித்ததுபோல் இருப்பதால் வில்லத்தனத்தை தன்னுடைய உடல் மொழியாலும், பாடலாலும், வசனத்தாலும் பேசி அசத்தியிருக்கிறார். ஒரு சில இடங்களில் எதுவுமே பேசாமல் தன்னுடைய அடியாட்களிடம் சிக்னல் காட்டுவதெல்லாம் அசல் வில்லித்தனம். பாராட்டுக்கள்.

கௌரியாக நடித்திருக்கும் அஹல்யா அந்தக் கிராமத்தின் மீதும், அந்த ஒற்றை மரத்தின் மீதும் மிகுந்த பாசம் வைத்திருப்பவராக நடித்துள்ளார். புனித மரத்தை வெட்ட விடாமல் தடுக்கும் காட்சிகளில் அவருடைய நடிப்பு பிரமாதம். இன்னொரு பக்கம் சைலஜாவாக நடித்திருக்கும் நிவேதா பெத்துராஜ் ஒரு சில காட்சிகள் என்றாலும் கவனிக்க வைத்திருக்கிறார்.

மேலும் சுரங்கத்தின் கங்காணியாக நடித்திருக்கும் சிவ நாராயணா, ராகுல் ரவீந்திரன் மற்றைய கதாபாத்திரங்களும் இயக்குநரின் சீரான இயக்கத்தினால் மிக அழகாக நடித்திருக்கிறார்கள்.

தேவி ஸ்ரீபிரசாத்தின் இசை இந்தப் படத்திற்கு ஒரு மிகப் பெரிய உதவியை செய்திருக்கிறது. 30 நிமிடங்களுக்குப் பிறகு ஒன்றரை மணி நேரமாக அனைவரும் பாடலாகவே பேசிக் கொண்டிருப்பதை ஒவ்வொரு வசனத்திற்கும் ஒவ்வொரு மாதிரியான ராகத்துடன் பேச வைத்திருப்பது அழகு.. அருமை.. அற்புதம் என்று சொல்லலாம்.. அதே சமயம் பின்னணி இசையிலும் மற்றைய கமர்சியல் படங்களை போல் அல்லாமல் சங்கீதத்துக்கு தேவையான சங்கீதத்தைக் கொடுத்திருக்கிறார்.

அந்த வறண்ட பாலைவன பகுதியையும் அதில் அமைந்திருக்கும் கிராமம், வீடுகள், வீடுகளின் உட்புறம் மற்றும் சுரங்கத்தின் உட்புற பகுதிகள் புதிதாக கட்டப்பட்ட சுரங்கங்கள் என்று செய்திருக்கும் அத்தனை வேலைகளிலும் தன்னுடைய பெயரை பதிவு செய்திருக்கிறார் கலை இயக்குநர்.

ஒளிப்பதிவாளரான அங்கூர் அந்த குபேரபுரம் கிராமத்தை அங்குலம் அங்குலமாக காட்டி இருக்கிறார். அந்த ஆலமரத்தின் எந்த பக்கம் இருந்து பார்த்தாலும் பாலைவனப் பகுதியாகவே இருப்பதையும் சில ட்ரோன் ஷாட்களிலும் நம் மனதை கொள்ளை கொள்ளும் அளவுக்கு ஸ்கிரீனை அழகாக ஆக்கியிருக்கிறார்.

விதவிதமான துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கத்திகள், அரிவாள்கள் என்று ஒவ்வொரு திரைப்படமும் வன்முறையை ஊட்டிவிடும்விதமாக வந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் சிங்கீதம் சீனிவாசராவ் என்ற ஒரு மிகப் பெரிய திரை உலக ஜாம்பவான் இப்படியும் படங்களை எடுக்கலாம் என்பதை காட்டுவதுபோல இந்தப் படத்தை மிக அழகாக உருவாக்கி கொடுத்திருக்கிறார்.

தன்னுடைய 94 வயதில் இந்தப் படத்தை சங்கீதம் சீனிவாச ராவ் இயக்கியிருக்கிறார் என்பதே ஒரு மிகப் பெரிய சாதனைதான்.

இப்பொழுதும் இந்த படத்தில் எதையும் வலுக்கட்டாயமாகத் திணிக்காமல் ஆண்டான் அடிமை கலாச்சாரம், பணத்தைப் பற்றி மட்டுமே நினைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வியாபார புத்தி, சுற்றுச்சூழலை பாதுகாக்காமல் மொத்தமாக மரங்களை வெட்டிவிட்டு அதை பாதையாக்கி பின்பு நம்மை வெயிலில் அலைய விடும் அரசுகள்.. அரசாங்கம் சரியாக இருந்தால் மக்களும் சரியாக இருப்பார்கள்என்பதை அழுத்தமாகச் சொல்வதுபோல இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் சீனிவாசரால்.

இப்படி ஒரு கிராமத்தை இந்தியாவில் எங்கு பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது என்றாலும் பல ஆப்பிரிக்க நாடுகளில் இது இன்னமும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சொந்த நாட்டின் மீது அக்கறை கொள்ளாத தலைவர்களும் அவர்களுடைய பொய்யான வாக்குறுதியை நம்பி, மக்கள் திரும்பத் திரும்ப ஓட்டு போட இப்பொழுது ஆப்பிரிக்க நாடுகளில் எல்லாம் லஞ்சம் ஊழலும் திகைத்து மிகப் பெரிய அளவுக்கு வளர்ந்து இருக்கிறது.

ஆப்பிரிக்காவில் வறுமையில் சுழலும் ஒவ்வொரு நாட்டிலும் தங்கம் அல்லது கரி அல்லது வேதியியல் பொருட்களை தேடுவதற்காக மிகப் பெரிய நாடுகள் எல்லாம் சுரங்கங்களை அமைத்திருக்கிறார்கள். அந்த சுரங்கத்தில் வாழ்கின்ற அந்த மக்களுக்காகவே இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார் பெரியவர் சிங்கீதம் சீனிவாசராவ். அவருக்கும், அவரது குழுவினருக்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

RATING : 4 / 5

Our Score