full screen background image

நூறு சாமி – சினிமா விமர்சனம் 

நூறு சாமி – சினிமா விமர்சனம் 

கணவரை இழந்த பெண்கள் அடுத்து திருமணம் செய்வதெல்லாம் இப்போதும் கிராமப்புறங்களில் பார்க்கவே முடியாத ஒரு சம்பவம். அதிலும் கணவர் இறக்கும்போது சிறு வயது பிள்ளைகள் இருந்தால் யாரோ ஒரு சிலர் அந்த பிள்ளைகளுக்காகவும், தங்களுடைய பாதுகாப்புக்காகவும், குடும்ப நலனுக்காகவும் மறுமணம் செய்து கொள்வார்கள். ஆனால் கல்லூரியில் படிக்கின்ற இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் ஒரு அம்மா திருமணம் செய்து கொள்கிறார் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம். அதைத்தான் இந்தப் படம் சொல்கிறது.

கள்ளக்குறிச்சி அருகே இருக்கும் வலையாம்பட்டு என்ற கிராமத்தில் செல்வி என்ற சுவாசிகா தன்னுடைய இரண்டு மகன்களோடு வசிக்கிறார். அவருடைய வீடு மிகவும் எளிமையானது. அன்றைக்கு உழைத்தால்தான் சாப்பிட முடியும் என்கின்ற ஒரு நிலைமையில் செல்வி தன்னுடைய மகன்களை நல்லபடியாக அவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

பக்கத்து ஊரில் அவரது அம்மா, அண்ணன் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் ஊருக்கு வரும்படி செல்வியை அழைக்க செல்வி வர மறுக்கிறார். தன்னுடைய மகன்களை ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைக்க முயன்று தோற்கிறார். அந்த அளவுக்கு அவருக்கும், அவரது மகன்களுக்குமான பாசம் இருக்கிறது.

மகன்கள் இருவரும் கல்லூரிக்கு படித்துக் கொண்டிருக்க இந்த நேரத்தில் சுவாசிகா இன்னொரு திருமணத்திற்கு தயாராகிறார். ஆனால், இதை செல்வியின் மூத்த மகன் ஏற்க மறுக்கிறான். வீட்டில் அம்மாவுடன் வந்து சண்டை இடுகிறான். செல்வி அதோடு அதை மறந்தும் போகிறார்.

அடுத்த நான்கு வருடங்களில் செல்வியின் மூத்த மகன் பாஸ்கர் ஒரு நல்ல நிலைமைக்கு வந்து சேர்கிறான். ஆனால், இப்போது தன்னுடைய அம்மாவுக்கு ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கலாமே என்று எண்ணுகிறான். இதற்கு தம்பியும் ஒத்துக் கொள்ள சுவாசிகாவும் திருமணத்திற்கு தயாராக இருக்கிறார்.

காலம் காலமாக பெண்கள் கைம்பெண் ஆனால் புகுந்த வீட்டிலோ அல்லது பிறந்த வீட்டிலோ கடைசிவரையில் பொட்டு வைக்காமல் வெள்ளை சேலை அணிந்து வாழ வேண்டும் என்பதுதான் நமது ஆணாதிக்கத்தனமான சிந்தனையில் உருவான சமூக கட்டுப்பாடுகள்.

இந்தக் கட்டுப்பாட்டில் நம்பிக்கை வைத்திருக்கும் இந்த ஊரின் உள்ளூர்கார்ர்கள் செல்வியின் திருமணம் பற்றி கேள்விப்பட்டு கடுமையாக இதை எதிர்க்கிறார்கள்.

அந்த ஊரில் இருக்கும் செல்வியின் எதிர்ப்பாளர் பாலாஜி சக்திவேல், அந்த ஊர்க்காரர்களை உசுப்பி விடுகிறார். இப்படி ஒரு செல்வியை நாம் விட்டுவிட்டால் ஊரில் இருக்கும் அத்தனை பெண்களும் கிளம்பி விடுவார்கள். அதனால், இதனை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

இன்னொரு பக்கம் இந்த திருமணத்தை நடத்தியே தீருவேன் என்று செல்வியின் மூத்த மகன் பாஸ்கர் கூறுகிறான். இறுதியில் என்ன நடந்தது? செல்வியின் திருமணம் நடந்ததா? செல்வியை இந்த வயதில் திருமணம் செய்ய வந்த மணமகன் யார்? இதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

சந்தேகமே இல்லாமல் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரமான ‘செல்வி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுவாசிகா தன்னுடைய ஒட்டுமொத்த நடிப்பு திறமையையும் இந்தப் படத்தில் கொட்டி இருக்கிறார்.

இளம் வயதிலேயே விதவையான அவர் தன் கணவரின் ஊரான அந்த ஊரிலேயே தொடர்ந்தும் இருக்கிறார். அதே ஊரில் இருக்கும் சில ஆண்கள் செல்வியை பல வகைகளில் நெருக்குகிறார்கள். செல்வியை “சின்ன வீடாக வைத்துக் கொள்கிறேன்.. வா..” என்ற ஆதிக்க திமிரை காட்டும் போதும் அதையெல்லாம் சமாளித்து தன்னுடைய மகன்களுக்காக உயிர் வாழ வேண்டும் என்கின்ற ஒரு கட்டாயத்தில் அவர் காட்டுகின்ற ஒட்டுமொத்த நடிப்பும் நம்மை கண்கலங்க வைக்கிறது.

மகன்களை ஹாஸ்டலில் சேர்க்க நினைத்து பஸ்ஸில் ஏற்றி அனுப்பிவிட்டு மனசு தாங்காமல் திரும்பி வந்து நிற்கும் சுவாசிகா, நிஜமாகவே அந்த நிமிடத்திலிருந்து நமக்கு மிகவும் பிடித்து போனார்.

அதற்கு பிறகு தன்னுடைய நிலை என்ன என்று தெரிந்து கொண்டு தான் வேலை பார்க்கின்ற இடத்தில்கூட விதவை என்பதை அடையாளம் காட்டாமல் இருக்க வேண்டும் வேண்டிய சூழலை அவர் எதிர்கொள்ளும்போது காட்டும் நடிப்பைப் பார்க்கும்போது நமக்கே பாவமாக இருக்கிறது.

தன் திருமணத்தை எதிர்க்கும் மகனை சமாளிக்கும்விதமாக கதறி அழுது அவர்களை சமாதானப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பி வைக்கும் சுவாசிகா திருமணத்துக்கு தயார் என்றவுடன் அவரை பார்க்கும் மாப்பிள்ளையான விஜய் ஆண்டனியுடன் அவர் பழகுகின்ற பழக்கமும், பேசுகின்ற பேச்சும் வெகு சுவாரசியமானது.

“உனக்கு இன்னும் அரிப்பு அடங்கலயா?” என்று பெற்ற தாயே கேட்கும்பொழுது “42 வருஷமா எங்க அப்பாகூட வாழ்றியே.. உனக்கு அரிப்பு அடங்கலியா?” என்று பதிலுக்கு திருப்பி கேட்கும் அந்த கோப சுவாசிகாவை வாவ்’ என்று சொல்லி கை தட்ட வைத்துவிட்டது.

இந்தப் படத்தில் இப்படி ஒரு அழகான நடிப்பை கொட்டி இருக்கும் சுவாசிகா, இந்த முறை நிச்சயமாக சிறந்த நடிகைக்கான பல விருதுகளை பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

படத்தின் இடைவேளைக்குப் பின்பு வரும் மாப்பிள்ளையாக நடித்திருக்கும் விஜய் ஆண்டனி தன்னுடைய அப்பழுக்கற்ற நல்ல மனிதன் என்பதெற்கேற்ப அவருடைய நடிப்பை அழகாகவே காட்டியிருக்கிறார்.

அவரது நடிப்பை சொல்வதற்கு அவருடைய அறிமுக காட்சியே போதும். வீட்டுக்கு வந்த மணப்பெண்ணை வரவேற்ற அங்கே இங்கே என்று ஓடிக் கொண்டே.. ஒவ்வொரு வேலையாக பார்த்துக் கொண்டே வசனம் பேசுகின்ற காட்சிகளிலும், பாஸ்கர் தன்னை அப்பா என்று அழைத்தபொழுது அவர் படுகின்ற நெகிழ்ச்சி நடிப்பிலும் மிகப் பெரிய ஈர்ப்பை கொடுத்து இருக்கிறார் விஜய் ஆண்டனி.

திருமணத்திற்கு சம்மதித்து இவனைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சுவாசிகா நினைக்கின்ற அளவுக்கு தன்னுடைய அப்பாவித்தனமான நடிப்பை காண்பித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

சுவாசிகாவின் மகன்களாக நடித்திருக்கும் அஜய்யும், சக்தியும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களின் காதலிகளாக நடித்த பாடினி குமாரும், காவ்யா அனிலும் தங்களது பங்களிப்பையும் சரியாகவே செய்திருக்கிறார்கள்.

மூத்த மகன் பாஸ்கராக நடித்திருக்கும் அஜய், அம்மாவின் திருமணத்தை எதிர்க்கும் போதும் அதன் பிறகு அவன் ஒரு தொழில் முனைவராக உயர்ந்த பிறகு வாழ்க்கைச் சூழலை அறிந்து அம்மா என்பவளும் ஒரு மனுஷிதான். அவளும் இந்த வாழ்க்கையை வாழ்ந்து அனுபவிக்க உரிமையுள்ளவள் என்பதைப் புரிந்த கொண்டு அம்மாவின் திருமணத்திற்கு ஓகே சொல்வது சிறப்பு.

ம்மாவுக்காக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிப்பதில் துவங்கி… இந்தக் கல்யாணத்தை நடத்தியே தீருவது என்று கங்கணம் கட்டி களத்தில் துதிக்கும் அந்த நேரத்தில் இப்படியொரு மகன்கள் நமக்குக் கிடைக்க மாட்டார்களா என்று படம் பார்ப்பவர்களை நினைக்க வைத்திருக்கிறார் இயக்குநர் சசி.

இன்னொரு மகனான சக்தி அவனுடைய காதல் ஜெயிக்கும் ஜெயிக்காது என்பதையும் தாண்டி நாங்கள் ஓடியெல்லாம் போக மாட்டோம். இங்கே இருந்து உங்களது ஆசீர்வாதத்துடன்தான் திருமணம் செய்வோம் என்று சொல்லுவது ஒரு நல்ல கதையாக அமைந்துள்ளது.

மகன்களின் காதலியாக நடித்திருக்கும் காவ்ய அணில் மற்றும் பாடினி குமார் இருவருமே மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதுவும் இரண்டு மருமகள்களும் கிளைமாக்ஸ் வரையிலும்வந்து தங்களின் மாமியார் திருமணத்திற்கு உதவி செய்வது மன மகழ்ச்சியை தந்தது.

சுவாசிகாவின் அண்ணனாக நடித்திருக்கும் கருணாஸ், நல்வழிப்படுத்தும் சிஸ்டராக நடித்திருக்கும் லிஜாமோல்ஜோஸ், ஊரில் மன்மதப் பண்ணையாராக இருக்கும் பாலாஜி சக்திவேல், ஒரு டீசன்டான ஆசிரியராக அருள்தாஸ், இன்ஸ்பெக்டராக முனீஸ்காந்தும், பாலாஜி சக்திவேலின் எடுபடியாக நடித்திருக்கும் ஜென்சன் திவாகர், பாடனி குமாரின் அம்மா அப்பாவாக யூ டியூப் பைத்தியங்களாக நடித்திருக்கும் பக்ஸ், வினோதினி வைத்தியநாதன் மற்றும் பலரும் இந்தப் படத்தில் அவரவர் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எஸ்.பி.தர்ஷன் கிர்லோஸ் அந்த சின்னஞ்சிறிய கிராமத்தையும் அதன் எழிலையும் கள்ளக்குறிச்சி நகரையும் அதன் பின்னால் இருக்கும் பிரம்மாண்டமான மலை மற்றும் காடுகளையும் அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறார்.

அதோடு செல்வியின் வீட்டுக்குள் நடக்கின்ற அவரை கொலை செய்யும் முயற்சியையும், அந்தக் காட்சியை அவ்வளவு அழகாக நமக்கு பயம் வரும் அளவுக்கு படமாக்கி இருக்கிறார்.

கலை இயக்குநரையும் நிச்சயமாகப் பாராட்ட வேண்டும், ஏனென்றால் செல்வியின் அந்த வீட்டை வடிவமைத்தவிதமும் அழகாக இருக்கிறது.

பாலாஜி ஸ்ரீராமின் இசையில் பாடல்கள் அனைத்துமே கேட்கும்படியாக இருக்கிறது, பாடல் வரிகள் மிக எளிதாக நம் காதுகளில் நுழைகிறது. பாடல் காட்சிகளின் மாண்டேஜ் காட்சிகளில் அனைவரையும் ரசிக்கும்படியாக இயக்கம் செய்திருக்கிறார் சசி.

ந்தக் கதை பல ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட ஒரு புத்தகத்தில் இருந்தும் கையாளப்பட்டுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி அருகே சில ஆண்டுகளுக்கு முன்பாக பாஸ்கர் என்பவர் தன்னுடைய அம்மாவுக்கு திருமணம் செய்து வைத்தது மிகப் பெரிய அளவுக்கு பிரபலமானது அதையும், புத்தகக் கதையும் ஒன்றாக இணைத்து ஒரு புது கதையாக இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சசி.

எந்தவொரு உண்மை சம்பவத்தையும் அப்படியே எடுத்தால் அது சினிமா ஆகாது என்பதால் சில காட்சிகளை மாற்றி அமைத்து சினிமா ரசிகர்களுக்கு பிடித்ததுபோல இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் சசி.

இந்தப் படத்தின் முதல் பாதி சோகமாகவே போய்க் கொண்டிருக்க இரண்டாம் பாதியில் ஒரு பெண்ணின் திருமணத்தை நடத்தி வைப்போமே என்ற எண்ணத்தில் தியேட்டரில் படம் பார்ப்பவர்களின் கைகளையும் பிடித்து திரைக்குள்ளேயே இழுத்துச் சென்றுள்ளார் இயக்குநர் சசி.

இரண்டாம் பாதியில் வருகின்ற நெஞ்சை தொடுகின்ற உணர்வுமிக்க காட்சிகளும் கிளைமாக்ஸில் திடீரென்று தங்களை தாக்க வரும் ஊர்காரர்களை விரட்டியடிக்கின்ற அந்த சின்ன டெக்னிக்கும் கை தட்ட வைத்து விட்டது.

கல்யாணமான ஒரு பெண் இறந்து போனால் அடுத்த ஆறு மாதத்தில் அவன் புது மாப்பிள்ளை என்பார்கள். ஆனால் அதே சமயம் ஒரு ஆண் இறந்து பெண் விதவையாகி நின்றால் அவள் கடைசிவரையில் அப்படித்தான் இருக்க வேண்டும் என்கின்ற பழைய காலத்து பஞ்சாங்கத்தை தலைகீழாக திருப்பி போட்டு…

இப்போது பிள்ளைகளே தங்களுடைய அம்மாவுக்கு திருமணம் செய்து வைக்கின்ற ஒரு காலகட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம். இதை சமூக கட்டுப்பாடாகவும் பெண்களை அடிமைத்தனமாக நினைக்கும் ஒரு சிலரின் அதிகாரம் இது போன்ற படங்களின் வருகையினால் வீழ்த்தப்படும்.

அந்த வகையில் இயக்குநர் சசி இயக்கியிருக்கும் இந்தப் படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான ஒரு திரைப்படமாக ஒரு இடத்தை பிடித்திருக்கிறது. மேலும் இந்தப் படம் நிச்சயமாக பல விருதுகளை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

இப்படி ஒரு படத்தை கொடுத்தமைக்காக இயக்குநர் சசிக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்.

RATING : 4 / 5

 

Our Score