full screen background image

DOUBLE OCCUPANCY – சினிமா விமர்சனம்

DOUBLE OCCUPANCY – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன், விடிவி கணேஷ், பகவதி பெருமாள் (பக்ஸ்), விச்சு விஸ்வநாத், போஸ் வெங்கட், வினோதினி வைத்தியநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்பக் குழு:-

இயக்குநர் : அஸ்வின் கந்தசாமி
தயாரிப்பாளர்கள்: ஏசிஎஸ் அருண் குமார் (பென்ஸ் மீடியா) மற்றும் குஷ்பு சுந்தர் (அவ்னி மூவிஸ்)
கிரியேட்டிவ் புரொடியூசர்: அனந்திதா சுந்தர்
இசை: சாம் சி.எஸ்
ஒளிப்பதிவு: சந்தகுமார் சக்கரவர்த்தி
படத்தொகுப்பு: பிரவீன் ஆண்டனி
தயாரிப்பு வடிவமைப்பு: செந்தில் ராகவன்
ஆடை வடிவமைப்பு: ஸ்ருதி ஆர். கண்ணன்
தயாரிப்புத் தலைவர்: என். மணிவண்ணன்
தயாரிப்பு நிர்வாகி: பி. பாலகோபி
விஎஃப்எக்ஸ்: ஃபாசில் முகமது எஸ்
கலரிஸ்ட்: பிரசாத் சோமசேகர் (நாக் ஸ்டுடியோஸ்)
ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி மற்றும் எஸ். அழகியகூத்தன்
சவுண்ட் மிக்ஸிங்: சுரேன் ஜி (ஹம் ஆடியோ)
புகைப்படங்கள்: வி. ராஜன்
ஒப்பனை: என். செல்லத்துரை
பப்ளிசிட்டி டிசைன்: வியாக்கி
மக்கள் தொடர்பாளர்: ரியாஸ் கே அஹ்மத், பாரஸ் ரியாஸ்

“என்னையா படம் எடுக்குறீங்க? எப்ப பாத்தாலும் ஒரே மாதிரி கதை! ஒரே மாதிரி திரைக்கதை! ஒரே மாதிரி இயக்கம்!” என்று அழுது கொண்டவர்களுக்கு ஆதரவளிப்பதுபோல ஒரு வித்தியாசமான கதை, திரைக்கதையில் இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

ஒரு மனித உடல் காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை பெண்ணாகவும், மாலை 6 மணியிலிருந்து மறுநாள் காலை 6:00 மணி வரையிலும் ஆணாகவும் இருந்தால் எப்படி இருக்கும். இதுதான் இந்த படத்தின் கதை கரு.

போஸ் வெங்கட், வினோதினி தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. இப்போதுவரையிலும் குழந்தைகள் இல்லை. போஸ் வெங்கட்டுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் அவருடைய மனைவி பழுத்த ஆன்மீகவாதியாக இருக்கிறார்.

இந்த நேரத்தில் திடீரென்று வினோதினி கருவுறுகிறார். அவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால், பிறந்த கொஞ்ச நேரத்திலேயே அந்த குழந்தை மூச்சுவிட முடியாமல் திணறி செயல் இழந்து போகிறது.

இந்த நேரத்தில் வினோதினி திருநங்கையான ஒரு தெய்வத்தை வணங்கி தன்னுடைய குழந்தையை உயிர்ப்பித்து தரும்படி கெஞ்சி கேட்டு அழுகிறார்.

அந்த தெய்வமும் மனமிறங்கி அந்த குழந்தையை மீண்டும் உயிர் பெற வைக்கிறார். ஆனால் இந்தக் குழந்தை ஒரு தெய்வீக குழந்தையாக இருக்கும். நான் உயிர்ப்பித்துக் கொடுப்பதால் ஆண், பெண் இரண்டு பிறவிகளும் இந்த ஒரு உடலில் இருக்கும்.

காலை 6:00 மணி முதல் மாலை ஆறு மணி வரையிலும் பெண்ணாகவும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையில் ஆணாகவும் இருக்கும்.

இவர்களே ஒரு நாள் இந்த மாற்றத்தை ஏற்காமல் இதில் இருந்து தப்பிக்க நினைக்கும்போது… அவர்களாலேயே அது மாறுதலாகும் என்று அந்த தெய்வம் சொல்கிறது.

அந்தத் தெய்வம் பேசியதை எல்லாம் அப்போதைக்கு ஏற்றுக் கொண்ட தம்பதிகள் குழந்தைக்கு ரஜினி என்று பெயர் வைக்கிறார்கள். வெளியே யாருக்கும் தெரியாமல் தங்களுடைய குழந்தைகளை வளர்த்து வந்திருக்கிறார்கள். குழந்தைகள் இப்போது பள்ளிப் பருவத்தையும் தாண்டி, கல்லூரியில் படிக்கின்ற நேரம் வரும்பொழுது இவர்களின் தாய், தந்தையர் ஒரு விபத்தில் இறந்து விடுகிறார்கள்.

பகல் நேரத்தில் அவர்களது தாய் தந்தை இறந்ததால் உடனடியாக மாலை 6:00 மணிக்குள்ளாக அவர்களின் இறுதி சடங்கை செய்து விடுகிறார் மகளான ரேஷ்மா.

அன்று மாலையே அந்த உடலுக்கு உயிராக வரும் மகன் ரஜினி தன்னுடைய அம்மா, அப்பா இறந்த செய்தியறிந்து அதிர்ச்சியாகிறான். தன் பெற்றோரைப் பார்க்க முடியாமல் போனதற்கு பெண் ரஜினிதான் காரணம் என்று நினைக்கிறார். அப்பா, அம்மாவை அவசரமாக தகனம் செய்தது தவறு என்று நினைத்து தங்கையிடம் சண்டை போடுகிறான். அதிலிருந்து இருவருக்கும் இடையில் சற்று மனக் கசப்புகள் எழுந்துள்ளன.

இப்போது பெண் ரஜினி டி.என்.ஏ. மூலக்கரு மரபணு மாற்றம் பற்றிய ஆராய்ச்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதே நேரம் இரவு நேர ரஜினி ஒரு பாரில் சரக்கு கலந்து கொடுக்கும் நல்ல’ வேலையில் இருக்கிறார்.

இரண்டு ரஜினிகளும் ஒரே வீட்டில்தான் இருக்கிறார்கள். பெண் ரஜினி காலையில் வேலைக்கு சென்றாலும் மிக சரியாக மாலை 6 மணிக்குள்ளாக வீட்டிற்கு வந்துவிடுவார். அதே போல் ஆண் ரஜினி பாரில் வேலை செய்துவிட்டு விடியற்காலைக்கு உள்ளாக வீட்டிற்கு வந்து விடுவார். இப்படி ஒரு அண்டர்ஸ்டாண்டிங்கில் இவர்களது வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

ந்த நேரத்தில் இவர்கள் இருவருக்குமே ஒரு காதல் ஏற்படுகிறது. மிகப் பெரிய கோடீஸ்வரப் பெண்ணான சம்யுக்தாவை ஆண் ரஜினி காதலிக்க, தன்னுடன் அலுவலகத்தில் வேலை செய்து வரும் வினோத் கிஷனை காதலிக்கிறார் ரேஷ்மா.

தங்களது காதலன் காதலியிடம் தங்களுடைய பிரச்சனையை சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள் இருவரும்! ஆனால் பாரில் ஆண் ரஜினி சந்திக்கும் விடிவி கணேஷ் வீடு தேடி வந்து ரகளை செய்ய ஒரு கட்டத்தில் அவருக்கு மட்டுமே இந்த பிரச்சனை தெரிகிறது. புரிந்தும் விடுகிறது.

டைம் டேபிள் போட்டு அவர்கள் இருவரும் மாறி மாறி வருவது, இருவரது காதலுக்கும் குண்டு வைக்கிறது. காதலன், காதலி இருவருமே இதை நம்ப முடியாமல் திகைக்கிறார்கள்.

அதே நேரம் இவர்கள் மரபணு மாற்று பிரச்சனையில் சிக்கித் தவிப்பதை ரேஷ்மா வேலை செய்யும் நிறுவனத்தின் தலைவரான பகவதி பெருமாளும், அவரது நிறுவனத்தின் ஜி.எம்.மான விச்சு விஸ்வநாதனும் தெரிந்து கொள்கிறார்கள்.

இது போன்ற வித்தியாசமான மரபணு மாற்றம் நடக்கும் ஒரு உடலை உலகம் முழுவதும் தேடி வரும் பக்ஸ், ரேஷ்மாவின் கதையைத் தெரிந்து கொண்டு இவர்களை வைத்து ஆராய்ச்சி செய்து பெரும் கோடீஸ்வரராக நினைக்கிறார். இதற்காக இவர்களை கடத்தும் முயற்சியல் ஈடுபடுகிறார் பக்ஸ்.

பாக்ஸின் இந்தக் கடத்தல் முயற்சி வெற்றி பெற்றதா? பெண் ரஜினி, ஆண் ரஜினியின் காதல் வெற்றி பெற்றதா? இதில் யார், யாரை திருமணம் செய்தார்கள்? அவர்களது வாழ்க்கை முடிவில் என்னவாகிறது?.. இதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

ஹீரோவாக நடித்திருக்கும் சந்தோஷ், இதற்கு முன் சிறு வயது பையனாக மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன்’ படத்தில் இளம் வயது விக்ரமாக நடித்திருந்தார். இவர் ஹீரோவாக நடிக்கும் முதல் படம் இதுதான்.

இரவு நேரத்தில் மட்டுமேதான் வெளியில் வர முடியும் என்பதால் அதற்கேற்ற வேலையாக பாரில் வேலை செய்து வரும் சந்தோஷின் தினப்படி நடவடிக்கைகள்தான் காமெடியாக அமைந்திருக்கிறது.

ஹீரோயினான சம்யுக்தா விஸ்வநாதனை யார் நேரில் பார்த்தாலும் அவரை காதலிக்கத்தான் தோன்றும். ஏனெனில், சம்யுக்தா அந்த அளவுக்கு அழகாக இருக்கிறார், அவருடைய முகம் குழந்தைத்தனமாக இருந்தாலும் ரசிக்கும்படியாக உள்ளது.

தன்னை தேடி வந்து அவ்வப்பொழுது ஜொள்ளுவிடும் சந்தோஷின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளும் சம்யுக்தா நிறைய டெஸ்ட்களை வைத்து சந்தோஷை டெஸ்ட் செய்த பின்புதான் கடைசியாக அவரை காதலிக்க துவங்குகிறார்.

இந்தக் காட்சிகளிலெல்லாம் சந்தோஷ் முதல் பட ஹீரோ போலவே இல்லை. மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் வி.டி.வி. கணேஷை துரத்த முடியாமல் அவர் தவிக்கின்ற தவிப்பும்.. அவரால் படுகின்ற அவஸ்தையையும், பொங்கி வரும் கோபத்தை அடக்கிக் கொண்டு பேசும்பொழுதும் வெகுவாக நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்.

தன்னுடைய பிரச்சனையை சம்யுக்தாவிடம் சொல்வதற்காக அவர் பலவாறு முயற்சி செய்தும் முடியாமல் தவிக்கின்ற அந்த சூழலில் மிகவும் இன்ட்ரஸ்டிக்காக இருப்பதுபோல சந்தோஷின் நடிப்பும் அமைந்திருக்கிறது.

மிகப் பெரிய கோடீஸ்வர பெண்ணாக நடித்திருக்கும் சம்யுக்தா தன்னை விரட்டி விரட்டி வரும் சந்தோஷை பார்த்த உடனேயே அவருடைய நோக்கத்தை புரிந்து கொண்டு, ஆனாலும் தன்னுடைய ஆளுமை தன்மை எப்போதும் கெட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காக சந்தோஷை அலைய விடுவதும்… பின்பு ஒரு கட்டத்தில் அவரை காதலிப்பதாக சொல்லி களத்தில் இறங்குவதும் மிகவும் சுவாரசியமாக அமைந்திருக்கிறது.

சந்தோஷின் வீட்டுக்கு சொல்லாமல் கொள்ளாமல் வந்து, அங்கே இருக்கின்ற சூழ்நிலையையும் பெண்களின் உள்ளாடைகள் எல்லாத்தையும் பார்த்துவிட்டு வழக்கமான சராசரி பெண்ணாக “என்னை ஏமாற்றிவிட்டாய்” என்று சொல்லிவிட்டுப் போகும் காட்சியில் மிகவும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்.

பகல் நேர ரஜினியாக நடித்திருக்கும் ரேஷ்மா தன்னுடைய வாழ்க்கையில் காதல் இல்லை என்ற நினைத்தபடியே வேலைக்கு வந்தவர்… வினோத் கிஷனின் தொடர்ச்சியான அப்பாவித்தனமான பேச்சினால் ஈர்க்கப்பட்டு காதலில் விழுவது நாம் எதிர்பாராத ஒன்று. ஆனால், இவர்கள் இருவரின் காதல் கட்சியும் கொஞ்சம் ரசனையாகத்தான் உள்ளது.

வி.டி.வி.கணேஷ் வழக்கம் போல தன்னுடைய சிறப்பான தகுதியான குரல் வளத்தை மட்டுமே வைத்து பல இடங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் ஒரு சில இடங்களில் இவர் காட்டுகின்ற பாவனையும், பேசுகின்ற வசனமும், காமெடியும் சேர்ந்து இவரை பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறது.

ரேஷ்மாவின் காதலனாக நடித்த வினோத் கிஷன், தன்னையும் ஒரு பெண் காதலிக்க மாட்டாளா என்ற ஏக்கத்தில் இருப்பவர் ரேஷ்மாவிடம் “ஒரு காபி குடிக்கலாமா” என்று கேட்டு, மிக நாகரீகமாக தன்னுடைய காதலை வளர்த்துக் கொள்கிறார். அந்த வகையில் அவரது நடிப்பு அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு  மிகச் சரியாக பொருத்தமாக அமைந்திருக்கிறது.

போஸ் வெங்கட்டும், வினோதினியும் ரஜினியின் பெற்றோராக சில காட்சிகளில் நடித்திருக்கிறார்கள். ஒன்றும் குறையில்லை. குழந்தை இல்லாத ஏக்கத்தை இருவருமே வெளிப்படுத்தும் பொழுது பாவமாக தெரிகிறார்கள். ஆனால், குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்காக விட்டுக் கொடுத்து போகும் ஒரு பொறுப்பான பெற்றோராக நடித்திருக்கிறார்கள்.

விச்சு விஸ்வநாதனும், பகவதி பெருமாளும் வில்லன்களாக காட்டப்பட அந்த வில்லத்தனத்தையும் அழகாக காட்டி நடித்திருக்கிறார் பக்ஸ் என்ற பகவதி பெருமாள்.

சாம் சி.எஸ்ஸின் இசையில் பாடல்களைவிடவும் வழக்கம்போல பின்னணி இசை கதையோடு ஒட்டி உறவாடி ஒன்றிப் போகிறது. பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பாடல் காட்சிகளில் மாண்டேஜ் ஷாட்டுகளாக வருவதை ரசிகர்கள் விரும்பிப் பார்ப்பார்கள். அந்த அளவுக்கு ஸ்டைலிஷாக டூயட் பாடல்களை படமாக்கி இருக்கிறார் இயக்குநர்.

படத் தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனி ஒரு நிமிடம் திரையை பார்க்கவில்லை என்றாலும் குழம்பி போகும் அளவுக்கான இந்த அல்ட்ரா மாடர்ன் திரைக்கதையை கொஞ்சமும் பிசகு இல்லாமல் நேர்த்தியாக கடைசிவரையிலும் குழப்பம் இல்லாமல் கொண்டு சென்று இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சந்தகுமார் சக்கரவர்த்தி இந்தப் படத்தின் பகல் மற்றும் இரவு நேர காட்சிகளை அழகாக படமாக்கியிருக்கிறார். இரவு நேர பார் காட்சிகளில் நிஜமான பார் எப்படி இருக்குமோ… அதுபோன்று அழகாக குறைந்த வெளிச்சத்தில் படமாக்கப்பட்டு இருக்கிறது. இரவு நேரத்திலேயே ரோட்டோர காட்சிகள், வீடுகளில் நடக்கும் காட்சிகள் என்ற அனைத்திலுமே ஏ கிளாஸ் ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார்.

இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநரான அஸ்வின் கந்தசாமி டி.என்.ஏ. மூலக்கூறில் ஒருவரின் மூளையிலேயே ஆண், பெண் இருவருக்குமான டி.என்.ஏ. பொதிந்து விட்டால் என்ன நடக்கும் என்பதை சொல்லும்விதமாக ஒரு மெடிக்கல் மிராக்கிலாக இந்த படத்தை கொடுத்திருக்கிறார்.

அவருடைய கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அனைத்தும் சிறப்புதான் என்றாலும் காட்சி படமாக்கலில் அடல்ட் ஒன்லி படமாக இந்தப் படத்தை மாற்றியமைத்திருக்கிறார்.

அளவுக்கதிகமான மது அருந்தும் காட்சிகளும், பார் காட்சிகளும், பெண்களும் குடிப்பது போன்ற காட்சிகளும் இருப்பதால் இந்தப் படத்தைப் பாராட்ட முடியவில்லை.

போதாக்குறைக்கு இரண்டு காதலர்களான சந்தோஷூம், சம்யுக்தாவும்.. வினோத் கிஷனும், ரேஷ்மாவும் பிரஞ்சு கிஸ் கொடுக்க.. இதன் துவக்கத்தில் சந்தோஷ்-வினோத் கிஷனும் முத்தமிட்டுக் கொள்ள.. இன்னொரு கட்சியில் சம்யுக்தாவும், ரேஷ்மாவும் பிரெஞ்சு கிஸ் கொடுக்க படத்தின் தன்மை அப்போதே மாறிவிட்டது.

பல முறை நாங்கள் இதைத்தான் சொல்லி வருகிறோம். எவ்வளவுதான் அரசாங்கம் “ஏ படத்திற்கு குடும்பத்துடன் வரக் கூடாது. சின்ன குழந்தைகள் வரக் கூடாது” என்று உத்தரவு போட்டிருந்தாலும் பெரிய நகரங்களைவிட அடுத்த சின்ன சின்ன ஊர்களில் இருக்கும் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் இதையெல்லாம் பொருட்படுத்தவே மாட்டார்கள்.

ஏனெனில், அந்த தியேட்டர்காரர்களுக்கு பணம்தான் முக்கியம். நாட்டு மக்களோ… அடுத்த தலைமுறையோ அவர்களுக்கு முக்கியமே இல்லை. அதனால் எப்படியும் இந்தப் படத்தை குடும்பத்தோடு பார்த்தே தீருவார்கள். அவர்கள் இந்தக் காட்சிகளைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று தெரியவில்லை.

இயக்குநர் இந்த முத்தக் காட்சிகளையும், டபுள் மீனிங் டயலாக்குகளையும், குடிகார காட்சிகளையும் கட் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இந்தப் படம் ஒரு சுவாரசியமான கதை, திரைக்கதைதான் என்றாலும் எடுத்தவிதத்தில் கொஞ்சம் குழப்படிகள் இருப்பதால் டபுள் ஆக்குபன்ஸி இல்லை… சிங்கிள் சீட்டுதான் இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கிறது என்பதுதான் உண்மை.

RATING : 2.5 / 5

Our Score