நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்ஷன்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இதுவரையிலும் இப்படி ஒரு இஸ்லாமிய மக்களின் வாழ்க்கை முறையை நூறு சதவிகிதம் முழுமையாக சொன்ன திரைப்படம் வந்ததே இல்லை.
கடையநல்லூர் அருகே இருக்கும் முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற பகுதிதான் இந்தப் படத்தின் களம்.
1980-களில் நடக்கும் கதையில் அன்றைய திரைப்படங்களின் மூலமாக இளைஞர்களின் மனதில் திணிக்கப்பட்ட காதல் என்ற மாய பிம்பம் ஒரு இஸ்லாமிய இளைஞரின் வாழ்க்கையில் எப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
முழுக்க, முழுக்க நெசவுத் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுதான் அந்த ஊரில் அனைத்து இஸ்லாமிய குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றனர். ஒரு மாதத்தில் ஒரு சேலையோ அல்லது கைலியையோ நெய்து தருகின்ற அந்த வேலையில்தான் அந்த ஊரில் இருக்கும் ஒட்டு மொத்த இஸ்லாமிய குடும்பங்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
அப்படி ஒரு இஸ்லாமிய குடும்பத்தின் தொழிலாளிதான் கஸ்தூரிராஜா. இவருடைய மகன் ‘அபூபக்கர்’ என்ற ‘ஈஷா’தான் இந்தப் படத்தின் ஹீரோ. பள்ளியில் இருந்து படிக்கும்பொழுதே இவர்களைவிடவும் கொஞ்சம் பொருளாதாரத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் குடும்பத்துப் பெண்ணான மாளவிகா மனோஜ் மீது காதல் ஆகிறார்.
கஸ்தூரி ராஜாவின் தம்பி வளைகுடா நாட்டில் வேலை பார்த்து அங்கிருந்து அனுப்புகின்ற பணத்தில் குடும்பத்தை நடத்தி வரும் கஸ்தூரிராஜாவுக்கு இந்த காதல் ஒரு பெரிய பிரச்சனையை கொண்டு வந்து கொடுக்கிறது.
அந்தப் பிரச்சினையிலிருந்து தப்பித்த ஈஸா, முதல் காதல் முற்று பெறாமல் முடிந்ததால் பெரும் கவலையில் இருந்தார். ஈஸா இனியும் தொடர்ந்து இங்கே இருந்தால் உருப்பட மாட்டார் என்று நினைத்து ஈஷாவையும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறார் கஸ்தூரிராஜா.
சில ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஈஸாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆனால், ஒரு கட்டத்தில் கல்யாண செலவுக்காக குடும்ப சொத்துக்களை பாகம் பிரிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிறது.
இதன் பின்பு என்ன நடந்தது..? ஈஸாவின் திருமணம் நடந்ததா..? இல்லையா…? என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான திரைக்கதை.
கஸ்தூரி ராஜாவுக்கு மிக அருமையான ஒரு கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. திருமணமானவராகவும், வயதானவராகவும் இரண்டுவித காலகட்டத்திலும் தன்னை அப்படியே ஒரு இஸ்லாமியராகவே காட்டியிருக்கிறார்.
மகன் மீதான பாசம் ஒரு பக்கம் இருந்தாலும், தறி நெய்யும் கொடுமையான வேலையில் இருந்து மகனாவது தப்பி பிழைக்கட்டுமே என்று நினைத்து ஈஸாவை படிக்க வைக்க அவர் எடுக்கின்ற முயற்சிகள்… கடைசியாக பஞ்சாயத்து முன்பாக மகனை அடி வாங்குவதிலிருந்து காப்பாற்றுவதற்காக “300 ரூபாய் கட்டும் கட்டும் கட்டும்” என்று சொல்லி அழுகின்ற கட்சியில் ஒரு உண்மையான அப்பாவாகவே மாறிவிட்டார் கஸ்தூரிராஜா.
பதின்ம வயதில் இருக்கும் அபூபக்கர் என்ற ஈஷா அந்த வயதுக்கேற்ற ஒரு நடிப்பை நடித்திருக்கிறார். இவருக்கு அவருடைய முகமும், உடல் வாகும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது.
அவருடைய அந்த வயதில் சினிமாவில் காட்டப்பட்ட காதலும், வேலையில்லாமல் சுற்றும் நேரத்தில் அவரது மனதில் புகுந்து அவரை வழிநடத்தும்போது வெளியாகும் காதல் சமிக்ஞைகளும், காதல் செய்யும் டிராமாக்களையும் நம்மால் ரசிக்க முடிகிறது.
காதலியை வீட்டில் வந்து பார்த்து தப்பிக்க முடியாமல் மாட்டிக் கொள்ளும் அந்த காட்சியில் காதலியை சிக்க வைக்காமல் இருப்பதற்காக ஒரு பொய்யை சொல்லி அதை பழியை ஏற்றுக் கொள்கின்ற கட்டத்தில் நம்முடைய பெரும் அனுதாபத்தையும் பெற்றிருக்கிறார் ஈஷா.
இந்த முதல் படத்திலேயே மிக அருமையான ஒரு நடிப்பை காண்பித்திருக்கும் ஈசாவிற்கு, தமிழ் சினிமா உலகம் நிச்சயம் இரு கரம் பிரித்து வரவேற்கும் என்று நம்பலாம்.
வருடாவருடம் கேரளாவில் இருந்து புதுமுக நடிகைகள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். அனைவரையும் கவர்கிறார்கள். அந்த வகையில் மாளவிகா மனோஜ் தனது கண்களாலேயே நம்மை கவர்ந்து நிற்கிறார்.
மிக அருமையான நடிப்பினை கொடுத்திருக்கிறார். சில வசனங்களைத்தான் பேசியிருக்கிறார். ஆனால் அவரது கண்கள் அதிகமாகப் பேசியிருக்கின்றன. இப்படி ஒரு பெண்ணை பார்த்தால் நிச்சயம் எந்த ஒரு இளைஞனுக்கும் காதல் உணர்வு வரத்தான் செய்யும். அப்படி ஒரு உணர்வை தன்னுடைய கண் பார்வையிலேயே வரவழைத்திருக்கிறார் மாளவிகா. வாழ்த்துக்கள்.
மேலும் படத்தில் நடித்திருக்கும் அனுஸ்ரீயா ராஜன், தனஸ்ரீ சுதாகரன், ஜெயஸ்ரீ சினுராஜ், அருள்குமார், ரேகா, குமரன், ஈஸ்மத் பானு, சன் சாகுல் என்று அனைவருமே அந்தந்த கேரக்டர்களாகவே மாறி சிறப்பான இயக்கத்தினால் அழகாக நடித்துள்ளனர்.
அதில் கஸ்தூரி ராஜாவின் மனைவியாக நடித்திருக்கும் ஜெயஸ்ரீ ஒரு படி மேலே சென்று அம்மா கதாப்பாத்திரத்தையும் மனைவி கதாப்பாத்திரத்தையும் அது இஸ்லாமிய வீடாக இருந்தாலும் சரி… ஒரு அம்மா எப்படி குடும்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிப்பார் என்பதை தன்னுடைய நடிப்பின் மூலமாகக் காட்டியிருக்கிறார் ஜெயஸ்ரீ.
தொழில் நுட்பத்திலும் இந்தப் படம் மிகச் சிறப்பான ஒரு ஆக்கத்தை கொடுத்திருக்கிறது. மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவினை அற்புதம் என்றே சொல்ல வேண்டும். முதல் காட்சியிலிருந்து கடைசிவரையிலும் எந்தவொரு ஜிகினா வேலையையும், எந்த ஒரு வித்தையையும் செய்யாமல் நிஜத்தைக் காண்பித்திருக்கிறார். கேமிராவின் கோணங்களும் நடிகர், நடிகைகளின் நடிப்பை சரியாக வெளிப்படுத்த உதவியிருக்கிறது.
சாம் சி.எஸ்.சின் இசையில் பாடல்கள் மனதை தொட்டுவிட்டன. காதல் பாடலும், அந்தக் குடும்பத்தின் கதையை விளக்கும் வகையில் ஒலிக்கும் பாடல்களும் அந்த கண்ணீர் குரலில் கேட்பதற்கே அழகாக இருக்கிறது. காதலி வீட்டுக்கு வந்து ஈஷா தப்பிச் செல்லும் பொழுது ஒலிக்கின்றது பின்னணி இசை அந்தக் காட்சியிலிருந்து ஒரு நொடிகூட கண்ணை அகல விடாமல் பார்த்துக் கொண்டது.
கலை இயக்குநர் அப்புன்னி சாஜனின் கை வண்ணத்தில் 1980கள் காலத்திய வீடுகளும் நெசவுத் தொழிலின் செயல்முறைகளும் அப்போது இளைஞர்களின் வாழ்க்கையில் முக்கிய இடத்தை பிடித்திருந்த ஆடியோ கேஸட்டுகளும், அதில் ஒலித்த திரைப்பட பாடல்களையும் ஒலிக்க வைத்து அந்தக் காலத்துக்கே நம்மை அழைத்துச் சென்றுவிட்டார்.
படத் தொகுப்பாளரான வி.எஸ்.மதி ஒரு இடத்தில்கூட கதை, திரைக்கதையை தொய்வடையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இஸ்லாமிய குடும்பம் என்பது அல்லாமல் ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலியின் வாழ்க்கை முறையையும்.. அதற்கு கீழே இருக்கின்ற குடும்பங்களின் வாழ்க்கையையும்.. கண்ணியம் தாடாத காதலையும் இறுதியில் அந்தக் காதல் எப்போதும் சாகாது என்பதை சொல்லும் விதமாகவும் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கியிருக்கும் இயக்குநர் மீரா கதிரவன் மற்றும் பி.எஸ்.முகமது அமீன் இருவருக்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.
முதல் காட்சியிலிருந்து இறுதிவரையிலும் எந்தவித போலி பூச்சிகளும் இல்லாமல் இந்தப் படத்தை செவ்வனே இயக்கியிருக்கிறார் இயக்குநர். நெசவுத் தொழிலில் இருக்கும் சங்கடங்கள், பிரச்சனைகள், கஷ்டங்கள்.. இன்னொரு பக்கம் வெளிநாட்டில் இருக்கும் கணவன் தன் மனைவிக்கு கேசட்டில் தன்னுடைய பேச்சை பதிவு செய்து அனுப்பி வைக்கின்ற அந்தக் காலத்து காதலையும், வெளிநாட்டில் இருக்கும் இளைஞர்களின் மனைவிகள் சொந்த ஊரில் படும் அவஸ்தையையும் அவர்களுடைய கஷ்டங்களையும், ஒருசேர படத்தில் இயல்பாகவே வருவதுபோலவே அமைத்திருக்கிறார் இயக்குநர்.
படத்தில் பஞ்சாயத்து காட்சி மிக மிக சிறப்பு. அதை அழகாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர். ஒரே மதமாக இருந்தாலும் அவர்களுக்குள்ளும் பொருளாதரத்தை அடிப்படையாக வைத்து ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றன என்பதை மறைமுகமாக இயக்குநர் சொல்லி இருக்கிறார்.
இது எப்போதும் இந்தியாவில் இருக்கும் அனைத்து மதங்களுக்கும் பொருந்தும். மதத்தின் அடிப்படையில் மக்கள் ஒன்று சேர்த்தாலும் அவர்களுக்கிடையே பணக்காரர்கள் தனியாகவும், ஏழைகள் தனியாகவும் வாழ்கிறார்கள் என்பதுதான் உண்மை. இந்த உண்மையை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சி நிச்சயம் நாம் எதிர்பாராதது. காதல் எப்போதும் அழிவதில்லை என்பதை மனதில் வைத்து இந்த கடைசி காட்சியை சொல்லியிருக்கும் இயக்குநர் மீரா கதிரவனுக்கு நமது பாராட்டுக்கள்.
இருந்தாலும் சென்னை போன்ற மெட்ரோ நகரங்களைத் தவிர மற்றைய ஒற்றை தியேட்டர்கள் இருக்கும் நகரங்களில் தியேட்டருக்கு வரும் எளிமையான மக்கள் குறிப்பால் உணர்ந்து கொள்ளும் திரைக்கதையை அறிந்தவர்கள் இல்லை. தெரிந்து கொண்டவர்களும் இல்லை.
அவர்களுக்கு இந்த கிளைமாக்ஸ் எப்படி புரியும் என்பது கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருக்கிறது.
எப்படி இருந்தாலும் பல விருதுகளை பெரும் அளவுக்கு இந்த ஹபீபி திரைப்படத்திற்குத் தகுதி உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
RATING : 4.5 / 5









