பொதுவாக உலக சினிமாக்களில் இருந்து உள்ளூர் சினிமாக்கள்வரையிலும் ஹீரோதான் சண்டையிடுவார். அவர்தான் சுத்தமான ஆண் மகன் என்பார்கள். ஆனால் ஹீரோவுடன் சேர்த்து அவரது மனைவி, மகள் என்று ஒரு குடும்பமே ஹீரோயிசத்தை செய்தால் எப்படி இருக்கும்? அதுதான் இந்த ‘பிளாஸ்ட்’ என்ற திரைப்படம்.
கராத்தே பயிற்சியாளரான அர்ஜுன் சிறுவயதில் இருந்து கராத்தே மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவருடைய மனைவி அபிராமியும் ஒரு காலத்தில் கராத்தே வீராங்கனையாக இருந்தவர்தான். இவர்களது மகளான ப்ரீத்தி முகுந்தனை சிறுவயதிலிருந்து எதையும் தைரியமாக தட்டி கேட்கும் குணத்துடன் வளர்த்திருக்கிறார்.
மகளுக்கும் கராத்தேயில் கடைசி நிலை வரையிலும் சொல்லிக் கொடுத்து அவரை ஒரு கராத்தே வீராங்கனையாக வளர்த்திருக்கிறார் அர்ஜுன். இவரது தம்பி ஒரு மெடிக்கல் ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நேரத்தில் வில்லனான ஜான் கோக்கைன் ஒரு மிகப் பெரிய கிரிமினல். அதோடு சர்வதேச அளவுக்கு கடத்தல் தொழில் தொடர்புகளை கையாள்பவர்.
ஒரு மலை சார்ந்த கிராமப் பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் குடியிருந்து வருகிறார்கள். அந்தக் கிராமத்தைத் தாண்டி அதன் உச்சிப் பகுதியில் அரிய வகை கனிம வளங்கள் இருப்பதாக அறிகிறார் ஜான் கோக்கைன்.
அந்த கிராமத்திலிருந்து பொது மக்களை அப்புறப்படுத்திவிட்டால் அந்தத் திட்டம் ஓகே ஆகும். இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் 7 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என்று ஜானிடம் அவரது ஆலோசகர்கள் சொல்கிறார்கள்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரிடம் டீல் பேசுகிறார் ஜான். அதில் “எனக்கு ஆயிரம் கோடி ரூபாயை கொடுத்துவிட்டு, நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்” என்கிறார் அமைச்சர் தேனப்பன்.
அமைச்சருக்கான பணத்தை பிளாக்கில் இருந்து கருப்பாக மாற்றுவதற்கான அனைத்து வேலைகளையும் செய்கிறார் ஜான். இந்த பண மாற்றுகளில் ஜானுக்கு துணையாக இருப்பவர் அர்ஜுன் சிதம்பரம்.
பணத்தை லோக்கலில் கொடுத்தாகிவிட்டது. அது துபாயிலிருந்து வெள்ளை பணமாக அறக்கட்டளைக்கு வர வேண்டும். அதற்காக ஒரு நூறு ரூபாய் நோட்டு ஒன்று அர்ஜூனிடம் தரப்படுகிறது. அந்த ரூபாய் நோட்டை துபாயில் கொண்டு போய் கொடுத்தால்தான் அந்த ஆயிரம் கோடி ரூபாய் அமைச்சரின் அறக்கட்டளைக்கு வரும்.
இந்த நேரத்தில் வினோத் சாகர் செய்யும் ஒரு முட்டாள்தனத்தினால் தொடர்ச்சியான பல பிரச்சினைகள் ஜானின் கூட்டாளிகளுக்கு ஏற்படுகிறது .
அர்ஜூனிடம் இருந்த அந்த நூறு ரூபாய் நோட்டு இப்போது காணாமல் போக வெறி பிடித்தது போல அதைத் தேடுகிறார் அர்ஜுன். அதே சமயம் மெடிக்கல் ஷாப்பில் இருந்த பிரித்தி முகுந்தனிடம் சண்டையிட்ட வினோத் சாகர் போலீசில் பிடிபட்டு ஸ்டேஷனில் உட்கார்ந்து இருக்கிறார்.
இப்போது தான் அனுப்பிய ஆட்கள் எல்லாம் எங்கே போனார்கள்… என்ன செய்தார்கள் என்பதே தெரியாமல் இருக்கிறார் அர்ஜுன் சிதம்பரம். இன்னொரு பக்கம் இவருக்கு உதவி செய்ய வந்தவர்களும் என்ன நடக்கிறது என்பதே தெரியாத அளவுக்கு மாட்டிக் கொள்கிறார்கள்.
வீதியில் இருந்த வில்லங்கம் வீட்டுக்குள்ளேயே வந்த கதையாக அர்ஜுனின் வீட்டுக்குள் நுழையும் ரவுடிகள் கூட்டத்தை வீட்டில் இருக்கும் மூன்று கராத்தே நிபுணர்களும் தங்களுடைய பராக்கிரமத்தை காட்டி சமாளிக்கிறார்கள்.
இப்பொழுது அந்த 100 ரூபாய் நோட்டை தேடும் பணியில் அர்ஜுன் சிதம்பரமே நேரில் இறங்குகிறார். இதற்கு பிறகு என்ன நடந்தது? அந்த நூறு ரூபாய் நோட்டு அர்ஜுனின் அமைதியான குடும்பத்தில் எப்படி நுழைந்தது? முடிவு என்னவாக இருக்கிறது என்பதை தியேட்டருக்கு சென்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு அர்ஜுன் ஹீரோவாக நடித்திருக்கும் படம் இது. சத்யராஜ், பிரபு எல்லாம் இப்போதும் அப்பா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்க அர்ஜுன் தன்னுடைய ஆக்சன் திறமைக்காகவே இந்தப் படத்தில் ஹீரோவாக ஆக்கப்பட்டு இருக்கிறார்.
அவரை தேர்ந்தெடுத்தது நியாயம்தான் என்பது போலவே சண்டை காட்சிகளில் புகுந்து விளையாடி இருக்கிறார் அர்ஜுன். அதிலும் அர்ஜுனுக்கும் விஜயகாந்துக்கும் மட்டுமே கை வந்த கலையாக இருந்த சண்டை காட்சியின் சில நுட்பங்கள் இந்தப் படத்திலும் அப்படியே இடம் பெற்றிருக்க ஒவ்வொரு சண்டை காட்சியும் நம்மைப் பெரிதும் ஈர்க்கிறது.
அதேபோல் அர்ஜுனனின் மனைவியாக நடித்த அபிராமியின் நடிப்பும் ஒரு சாதாரண அம்மா என்ன நடப்பாரோ என்ன பேசுவாரோ அப்படியே பேசி நடித்திருக்கிறார். ப்ரீத்திக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவர் பேச்சு நம்மையும் கவர்கிறது.
இன்னொரு பக்கம் அவரும் சேலை முந்தானையை முறுக்கிக் கொண்டு சண்டையிடும் காட்சிகள் எல்லாம் பிரமாதம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் படத்தில் இயக்குநர் அவர்தானா… அல்லது சண்டைக் பயிற்சி இயக்குநர்தான் படத்தை இயக்கினாரா என்பது சந்தேகமாக இருக்கிறது.
அந்த அளவுக்கு இந்தக் கொலைகார குடும்பத்தின் மூன்று பேரும் சண்டை காட்சிகளில் விளையாடி தள்ளி இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ப்ரீத்தி முகுந்தனும் அந்த அழகான முகத்தில் இவ்வளவு பெரிய வில்லி கேரக்டர் ஒழிந்திருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
அந்த அளவுக்கு சண்டை காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறார். அதிலும் வினோத் சாகர் செயின் கேட்டு மிரட்டும்போது ஒரு சில நொடிகளில் அவரை வீழ்த்தி சாகசம் செய்திருக்கிறார்.
சர்வதேச கிரிமினலாக நடித்திருக்கும் ஜான் கோக்கைன் அவ்வப்பொழுது டயலாக் டெலிவரி மட்டுமே செய்து தான்தான் மெயின் வில்லன் என்பதை காட்டியிருக்கிறார். கடைசியா,க அவரும் சண்டைக் களத்திற்கு வர முடிந்ததை செய்து ஓகே என்று மட்டுமே சொல்ல வைத்திருக்கிறார்.
படத்தில் நடிப்பு என்று எதையும் பிரித்து பார்க்காமல் நட்சத்திரங்களின் நடிப்பு என்பதே சண்டை காட்சிகள்தான் என்றாகிவிட்டது. அந்த அளவுக்கு சண்டை இயக்குநர் பீனிக்ஸ் பிரபு தன்னுடைய ஒட்டு மொத்த வித்தையையும் இதில் இறக்கி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆக்சன் பிரியர்களுக்கு மிக மிகப் பிடித்தமாக இருப்பதுபோல் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர்.
கிளைமாக்ஸில் அடுத்தப் பாகத்துக்கு லீட் கொடுத்து லோகேஷ் கனகராஜை அதில் வில்லனாக கொண்டு வந்திருக்கிறார்கள். பார்க்கலாம்.
அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு மிக அழகு. சண்டை காட்சிகளை அவ்வளவு அழகாக படமாக்கி இருக்கிறார். நிச்சயம் கேமராவை தூக்கிக் கொண்டு எவ்வளவு தூரம் அவர் அலைந்திருப்பார் என்பதை நினைத்துப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. அவரை பெரிதும் பாராட்டுகிறோம்.
இசையமைப்பாளர் ரவி பஸ்ரூ ஆக்சன் படங்களுக்கே உரித்தான இசையை கொடுத்திருக்கிறார். அதுவும் தீம் மியூசிக் என்று வில்லனுக்கு ஒன்றும் கொலைகார குடும்பத்திற்கு ஒன்றுமாக மாற்றி மாற்றி பின்னணி இசை அமைத்து படத்தில் இருந்து கண்ணை எடுக்க விடாமல் செய்திருக்கிறார்.
அதே சமயம் பாடல்கள் எதுவும் நம் மனதை கவரவில்லை. பாடல் காட்சிகளும் சின்ன சின்ன மாண்டேஜ் ஷாட்களில் முடித்திருப்பதால் அது நம்மை பெரிதும் தீர்க்கவில்லை என்பது உண்மை.
பிரதீப் ராகவ்வின் படத் தொகுப்பு பெஸ்ட். இடைவேளைக்கு பின்பு டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்டாக சில காட்சிகள் ரன்னாக ஓடிக் கொண்டிருக்க அதை நம்புவது போலவும், தொடர்ச்சியாக நாமும் பாலோ செய்வது போலவும் அழகாக நறுக்கி தந்திருக்கிறார் படத் தொகுப்பாளர் பிரதீப் ராகவ்.
ஆக்சன் படங்களுக்கு ஏற்ற கதை என்றாலும் நிச்சயம் இந்தப் படம் 1980 களில் வந்திருக்க வேண்டிய கதை. அப்போது வந்திருக்கும் கதையை இப்போது எடுத்திருக்கிறார் இயக்குநர்.
இயக்குநரின் முதல் படம் என்பதால் நாம் இதற்கு மேல் அவரை விமர்சனம் செய்ய விரும்பவில்லை. ஆனால் இயக்கம் சிறப்பு. அழகான இறுக்கமான இயக்கத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர். அவருக்கு பக்க பலமாக அனைத்து கலைஞர்களும் உதவி இருக்கிறார்கள்..
லாஜிக் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பது போலவே இந்தப் படத்திலும் பல காட்சிகள் இருக்கின்றன.
18 போலீசார் மருத்துவமனையில் கொல்லப்பட்ட பின்பும் இந்தச் சம்பவத்தில் ஒண்ணுமே நடக்காதது போல காட்சிகள வைத்திருப்பது நமக்கு சிரிப்பாகத்தான் வருகிறது.
அதோடு நல்லதொரு குடும்பமாக இருக்கும் அந்த கொலைகார குடும்பம் வில்லன்களை சமர் செய்துவிட்டு தப்பிக்கலாம் என்று நினைக்கின்ற பங்கு நிச்சயம் தவறானது.
தெரியாமல் செய்ததோ அல்லது தெரிந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக கொலை செய்வதோ நிச்சயமாக தவறு இல்லை. இது நீதிமன்றத்தில் நிச்சயமாக ஈடுபடும்.
ஆனால், அதையெல்லாம் செய்யாமல் படத்தின் திரைக்கதைக்காக அவர்களை மொத்தமாக சமர் செய்யும் அந்த கொலைகார குடும்பத்தின் திரைக்கதையை நிச்சயமாக நாம் ஏற்பதற்கில்லை.
நல்லதொரு இயக்கத்தைக் கொடுத்திருந்தாலும் அல்லது ஒரு நடிப்பினை கொடுத்திருந்தாலும், இந்தப் படத்தின் அடிப்படை கதை கரு நிச்சயம் தவறுதான்.
இதற்காக இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வோம்.
இதே இயக்குநர் அடுத்தடுத்த படங்களில் மக்களுக்கான படத்தை கொடுத்து பாராட்டை பெற்று திரையுலகில் நீடூழி வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.









