தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் நேற்று அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ் திரை உலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தயாரிப்பாளர் கே.ராஜன் மிகவும் தைரியமாக தனது கருத்துக்களை பொதுவெளியில் வெளியிட்டு வந்தார். இப்படி துணிச்சலுக்கு சொந்தக்காரராக திரையுலகினரால் பார்க்கப்பட்ட கே.ராஜன் தனது 85- வது வயதில் இதுபோன்ற ஒரு துயர முடிவை எடுத்திருப்பது அவரது குடும்பத்தினராலும், திரை உலகத்தினாலும் நம்ப முடியவில்லை.
கே.ராஜனின் தற்கொலைக்கு அவர் குடும்பத்தை பிரிந்து வாழ்ந்ததுதான் முக்கியமான காரணம் என்றும், அவருக்கு ஏற்பட்ட உடல் நிலை கோளாறுகளால் அவதிப்பட்டு அவர் இந்த தற்கொலையை தேடி சென்றிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியானது.
ஆனால் கே.ராஜனின் குடும்பத்தினர் இதனை முழுமையாக மறுத்துள்ளனர். இது குறித்து அவருடைய மகனும், மகளும் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்ததனர்.
அப்போது கே.ராஜனின் மகன் பிரபு பேசும்போது, “அப்பா எங்களுடன் எப்போதும் தொடர்பில்தான் இருந்தார். அவருடன் எங்களுக்கு எந்தவிதமான கருத்து வேறுபாடு ஏற்பட்டதில்லை. சில நாட்கள் முன்புகூட என்னுடன் மிகவும் வெளிப்படையாக பல விஷயங்களை அவர் பேசினார்.
அவருக்கு இதயம் சம்பந்தமான சில பிரச்சனைகள் இருந்ததால் சமீபத்தில்தான் அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு பேஸ் மேக்கர் வைக்கப்பட்டது. இதையடுத்து அவர் எங்களது வீட்டிலேயே கொஞ்சம் ரெஸ்ட்டில் இருந்தார்.
இந்த நேரத்தில் எங்கள் குடும்பத்துக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே எங்கள் அப்பா தற்கொலை செய்து கொண்டதாக சிலர் இணையத் தளங்களிலும், youtube சேனல்களிலும் தவறான தகவல்களை பரப்பி விட்டுள்ளனர்.
தமிழ் திரையுலகத்தில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பலருக்கும் எனது தந்தை கடன் கொடுத்து உதவியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கடன் தொகையை திரும்பப் பெற முடியாமல் அவர் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.
கடன் வாங்கியவர்களிடம் பல முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களிடம் பேசுவதற்கு முயற்சி செய்துள்ளார். இதனை நானே நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால், கடன் வாங்கியவர்கள் போனைகூட எடுப்பதில்லை. இதை அப்பா எங்களிடம் வருத்தப்பட்டு சொல்லிக் கொண்டிருந்தார்.
20 கோடி ரூபாய் வரையிலும் கடன் வாங்கிக்கொண்டு வட்டிகூட கொடுக்காமல் பலரும் ஏமாற்றிவிட்டார்கள். இதன் காரணமாகவே எனது அப்பா மிகுந்த மன உளைச்சலிலும் இருந்தார். இதன் பின்புதான் அவர் உடல் நலனும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டது.
என் தந்தை யார், யாருக்கு எவ்வளவு கடன் கொடுத்துள்ளார் என்பதற்கான அனைத்து ஆவணங்களும் கடன் வாங்கியவர்கள் கொடுத்த காசோலைகளும் எங்களிடம் உள்ளது. அதனை சினிமா தயாரிப்பாளர் சங்கத்திலும் தெரிவித்து முறைப்படி எனது தந்தைக்கு கிடைக்க வேண்டிய பணத்தை திரும்ப பெற தேவையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம்.
யார், யாருக்கு எனது தந்தை கடன் கொடுத்துள்ளார் என்பதையும் அவரை ஏமாற்றியவர்கள் யார் என்பதையும் இப்போதைக்கு நாங்கள் வெளியில் தெரிவிக்க விரும்பவில்லை..” என்று கூறினார் பிரபு.
கே.ராஜனிடம் கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாமல் ரவுடிகள் யாரையாவது வைத்து மிரட்டினார்களா என்ற சந்தேகமும் இந்த நேரத்தில் எழுந்துள்ளது. கே.ராஜனுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் சிலர் இந்த சந்தேகங்களை எழுப்பி இருக்கிறார்கள்.
இது தொடர்பாக அவரது குடும்பத்திடம் கேட்டபோது “எங்களுக்கு தெரிந்த எந்த மிரட்டலும் வரவில்லை. ஒருவேளை அது போன்ற மிரட்டல்களை அவர் எங்களிடம் தெரிவிக்காமல் விட்டுவிட்டாரா என்பதும் தெரியவில்லை” என்றார்கள்.
கே.ராஜனின் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக அடையாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று காலையில் அடையாறு போலீசார் கே ராஜன் தற்கொலை செய்தது ஏன் என்பது பற்றி அவர்கள் விசாரித்த பொழுது கிடைத்த தகவல் வேறுவிதமாக இருந்தது.
“கே.ராஜன் உடல் நல குறைவு காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் எங்களிடம் தெரிவித்தார்கள் கடன் பிரச்சனை எதுவும் இருப்பது போல் தெரியவில்லை என்று எங்களிடம் சொன்னார்கள். ஆனால், இப்போது பத்திரிகையாளர்களிடம் பேசும்பொழுது கடன் பிரச்சனை இருந்ததால் அந்த மன உளைச்சலில்தான் அவர் தற்கொலை செய்துள்ளார் என்று மாற்றி சொல்கிறார்கள்…” என்று போலீசாரே கூறினார்கள்.
எப்போதும் போலீஸ் விசாரணையில் எந்தக் குடும்பத்தினரும் நிச்சயமாக பொய்யான தகவல்களையும் சொல்லமாட்டார்கள். அந்த வகையில் அடையாறு போலீசாரிடம் கே.ராஜனின் குடும்பத்தினர் கடன் பிரச்சினை பற்றி நிச்சயம் கூறி இருப்பார்கள்.
ஆனால் போலீசாரோ கடன் பிரச்சினை பெரிதானால் அது திரையுலகத்தில் பூதாகரமாகி விடுமோ என்ற எண்ணத்தில் கே.ராஜன் கடன் பிரச்சனையால்தான் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல்களை மறைத்துவிட்டார்களோ என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.
போலீசாரின் விசாரணையின் முடிவில் ராஜன் கடன் வாங்கியவர்களிடம் மிரட்டப்பட்டார் என்பது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.










