full screen background image

“இனிமேல் பொறுமையா இருக்க மாட்டேன்” – நடிகர் ரவி மோகன் ஆவேசப் பேட்டி!

“இனிமேல் பொறுமையா இருக்க மாட்டேன்” – நடிகர் ரவி மோகன் ஆவேசப் பேட்டி!

நடிகர் ரவி மோகன், அவரது மனைவி ஆர்த்தி இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெறவேண்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில், சென்னையிலுள்ள அலுவலகத்தில் ரவி மோகன் நேற்று நிருபர்களுக்கு கண்ணீருடன் பேட்டியளித்தார்.

அந்தப் பேட்டியில் ரவி மோகன் பேசும்போது, “சாதுவாக இருந்த என்னை நிறையபேர் சீண்டி பார்க்கலாம் என்று நினைக்கிறார்கள். இத்தனை நாள் நான் பேசாமல் இருந்ததே முட்டாள்தனம் என்று நினைக்கிறேன்.

சாது மிரண்டால் காடுகொள்ளாது. 23 வருடங்கள் இரவு, பகலாக கடுமையாக உழைத்துள்ளேன். எனது 90 சதவிகித படங்கள் வெற்றிபெற்றுள்ளன. எனது குடும்பத்துக்காக உழைத்தேன். இப்போதும் உழைக்கிறேன். எனது குடும்பத்துக்காக நான் இருக்கிறேன். எனது கடந்த கால (ஆர்த்தியுடன்) வாழ்க்கையில் 14 வருடங்கள் வாழ்ந்துள்ளேன். அப்போது நீங்கள்தான் எனக்கு கடவுள் என என்னைப் பற்றி சொன்னவர் ஆர்த்தி. எனது படங்களில் பெண்களின் உரிமைகளை பற்றி பேசியிருக்கிறேன்.

அப்படிப்பட்ட நான் பெண்களை பற்றி தவறாக பேசுவதாக பொய் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். எனது தாய் அப்படி என்னை வளர்க்கவில்லை. அவருடனான (ஆர்த்தி) வாழ்க்கை வேண்டாம் என்றுதான் தெறித்து ஓடி வந்தேன்.

அதற்கு காரணம், பல விதத்தில் அவர்கள் என்னை கொடுமைப்படுத்தினார்கள். அந்தக் குடும்பத்தில் இதுவரை 5 விவாகரத்துகள் நடந்துள்ளது. நீ எப்படி ஷூட்டிங்கிற்கு போவாய் என்று பார்க்கலாம் என மிரட்டுகிறார்கள். அவரை (சுஜாதா விஜயகுமார்) தயாரிப்பாளராக்கியதே நான்தான்.

ஆர்த்தியை பிரிய முடிவு செய்ததும், வீட்டை விட்டு எதுவும் இல்லாமல் வந்தவன் நான். இன்று நான் வாடகை வீட்டில் வசிக்கிறேன். அவர்கள் கோடிக்கணக்கில் பணம் வைத்துக்கொண்டு சந்தோஷமாக பங்களாவில் வாழ்கிறார்கள். பணம், பணம் என அலைகிறார்கள். அவர்களால் பலர் தற்கொலை செய்திருக்கிறார்கள். அதிலும் டீன்ஏஜர்கள் பலர் இறந்துள்ளனர். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதையெல்லாம் சீக்கிரமே வெளிப்படுத்துவேன்.  ஒரு பெண் என்னை புரிந்துகொண்டு வந்தார். இப்போது அவரையும் (கெனிஷா) காலி செய்து அனுப்பிவிட்டார்கள்.

நான் பார்க்காத நடிகைகளா? என் வேலையே அழகான பெண்களுடன் நடிப்பதுதான். 45 வயதில் அழகான பெண்கள் பின்னால் எப்படி நான் செல்ல முடியும்? ஆனால் நடிகைகளுடன் தொடர்புபடுத்தியும் அழகில் மயங்கி கெனிஷாவின் பின்னால் செல்வதாகவும் சொல்கிறார்கள்.

இதுவரை எனது மகன்களுக்காகவே அமைதியாக இருந்தேன். எனது அப்பாவும், அம்மாவும் அந்த பெண் (ஆர்த்தி) வேண்டாம் என்று காலில் விழுந்து கெஞ்சினார்கள். ஒரு சின்ன அன்பு இருந்திருந்தால் நான் வந்திருப்பேனா? வாழ்க்கையில் அனைத்தையும் கொடுத்துவிட்டேன்.

எனக்கு நடந்தது மிகப் பெரிய அநியாயம். எனது தனிப்பட்ட வாழ்க்கையை சுத்தம் செய்துவிட்டு மீண்டும் வருவேன். அதுவரை நான் நடிக்க மாட்டேன். விவாகரத்து கிடைக்கும்வரை சினிமாவில் நடிக்க என்னால் முடியாது. அந்த அளவுக்கு நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன்.

ஆர்த்தியும் அவரது குடும்பமும் செய்ததிலேயே பெரிய கொடுமை, எனது குழந்தைகளை என்னிடமிருந்து பிரித்தததுதான். குழந்தைகள்தான் எனது உலகம். ஆனால் கடந்த ஓராண்டுக்கு மேலாக அவர்களை சந்திக்க எனக்கு அனுமதி தரவில்லை. குழந்தைகளை பவுன்சர்களை வைத்து பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.

நான் அவர்களை சந்திக்கக் கூடாது என்று தடுக்கிறார்கள். இதனாலேயே 2 முறை தற்கொலைக்கு முயன்றேன். (அறுபட்ட கை காயத்தை காட்டுகிறார்). குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் பள்ளி கட்டணத்தை செலுத்துகிறேன். தன்னிடம் பணம் இல்லை என சொல்லும் ஆர்த்தி கொரியாவுக்கு டூர் சென்று வந்திருக்கிறார்.

எனக்கு பில்லி சூனியம் வைத்திருக்கிறார்கள். அதனால்தான் ரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.அதோடு, 2முறை தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்திருக்கிறேன் (கையை அறுத்துக் கொண்டதை காட்டுகிறார்). இதற்கெல்லாம் அந்த குடும்பம்தான் காரணம்.

ஆர்த்தியை நான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அவர் என்னை மிரட்டினார். கையை அறுத்துக்கொண்டு பிளாக் மெயில் செய்ததால்தான் அவரை திருமணம் செய்தேன்.

எனக்கோ, கெனிஷாவுக்கோ ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு ஆர்த்தியும் அவரது குடும்பமும்தான் காரணமாக இருப்பார்கள்.

ஒரு 3 எழுத்து நடிகை இருக்கிறார். அவருக்கு இட்லி நடிகை என்று மற்றொரு பெயரும் உண்டு. என்னை பற்றி பேச அவருக்கு என்ன அருகதை இருக்கிறது? அவர் என்னை பெற்றாரா? இனிமேல் அவர் என்னை பற்றி தப்பாக பேசினால், அதை கேட்டுக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். யாரும் மற்றவர்கள் வாழ்க்கையில் நுழையாதீர்கள். தேவையில்லாத அவமானங்களை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனது குடும்பத்தினரை பற்றி அவதூறாக பேசினாலோ, சீண்டினாலோ சும்மா இருக்க மாட்டேன்’’ என்று கண்ணீருடன் பேசினார் ரவி மோகன்.

ரவி மோகனின் இந்தப் பேட்டி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

“இந்த விவகாரத்தில் அப்பா மோகன், அம்மா வரலட்சுமி உங்களை ஆதரிக்கவில்லையா?” என நிருபர்கள் கேட்டதற்கு, “நான் உன்னிடம் முதலிலேயே அந்த பெண்(ஆர்த்தி) வேண்டாம் என சொன்னேன். நீதான் திருமணம் செய்தாய். இப்போது உன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே” என என்னுடைய அம்மா வருத்தப்படுகிறார். அவர்கள் ஆதரவு எப்போதும் எனக்கு இருக்கிறது. இந்த விவகாரத்தில் எனக்கு ஆறுதலாக அவர்கள் ஒரு வீடியோ பேசி போட்டால் நான் சந்தோஷப்படுவேன்’’ என்றார் ரவி மோகன்.

ரவி மோகனின் பரபரப்பான இந்தப் பேட்டிக்கு பிறகு ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் நேற்று இரவில் அளித்த பேட்டியில், “கடந்த ஒன்றரை ஆண்டாக எங்கள் மீது பல்வேறு அவதூறு தகவல்கள் பரப்பினார்கள். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், அதுபற்றி இப்போது பேசக் கூடாது. ரவி மோகனுக்கு என்ன மன அழுத்தமோ தெரியவில்லை, இவ்வளவு எமோஷனலாக பேசியுள்ளார். நான் எந்த தவறும் செய்யவில்லை. தவறு செய்யாததால் நான் அழ மாட்டேன். எமோஷனலாக மாட்டேன்.

ரவி மோகனின் பேச்சால் அவரது மகன்களுக்கு அதிக மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. மகன்களை பார்க்க ரவி மோகனை அனுமதிக்கவில்லை என்று அவர் சொல்வது பொய். அனைத்து அவதூறுகளுக்கும் சம்பந்தபட்டவர்கள் உரிய விளக்கம் தருவார்கள். என் மீதான அவதூறுகளுக்கு நான் நிச்சயம் பதில் சொல்வேன். திருமணமான பிறகு தம்பதி ஒரே வங்கி கணக்கு வைத்திருப்பதில் எந்த தவறும் இல்லை. எல்லா பெற்றோரும் குழந்தைகளுக்காகவே வாழ்கிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

3 எழுத்து நடிகை ஒருவர் தன்னை பற்றி தவறாக பேசி வருவதாக ரவி மோகன் குறிப்பிட்டது நடிகை குஷ்புவைத்தான் என நெட்டிசன்கள் பதிவிட்டு வந்த நிலையில் குஷ்பு தனது சோஷியல் மீடியாவில், ‘சிலர் தங்கள் மரபணுவை நிரூபிப்பதிலேயே தீவிரமாக இருக்கிறார்கள். இதுவரை நான் சரியாகத்தான் பேசி வந்தேன் என்று நிரூபித்ததற்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் ஆர்த்தி ரவி நேற்று வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ‘தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை ஒருபோதும் எழுப்பாதீர்கள். அது ஒரு தாய் சிங்கமாக இருந்தால் கடவுள் காப்பாற்றட்டும். நான் கண்ணியமாக, அமைதியாக இருப்பதை பலவீனமாக நினைக்கக்கூடாது. அதை பயன்படுத்திக் கொள்ளவும் கூடாது.

எனது குழந்தைகளையும், எனது கண்ணியத்தையும் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால், எனது கம்பர்ட் ஜோனில் இருந்து வெளியே வந்து உண்மையுடன் உலகை எதிர்கொள்வேன். ஏனெனில், இறுதியில் உண்மைதான் வெல்லும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Our Score