பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன்தாஸ், அன்னா பென், யோகிபாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் “கான் சிட்டி” திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
தற்போது படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
ஷான் ரோல்டன் இசையில் மோகன் ராஜன் எழுதியுள்ள இந்த பாடலை வங்கல் புள்ள, விக்கி, சுப்லாஷினி, லீலா ஆகியோர் உற்சாகமாகப் பாடியுள்ளனர்.
“கொரியன் ஃபேமிலி சாங்” என சுவாரஸ்யமான தலைப்புடன் வெளியாகியுள்ள இந்தப் பாடல், “ரா ரா ரங்கையா” என்ற வரியுடன் துவங்கி, நம்மூர் தரை லோக்கல் குத்து பாணியில் உற்சாகத்தைக் கொட்டுகிறது.
குறிப்பாக படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் சேர்ந்து ஆடும் குத்தாட்டம், பாடலுக்கு மேலும் உயிரூட்டுகிறது.
ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தன்மையுடன் தெரியும் வகையில் அமைந்துள்ள இப்பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
“கான் சிட்டி” படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு சுவாரஸ்யமாக நகர்கிறது.
மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது.









