இன்று காலை வெளியான நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தின் புரோமோ வீடியோ, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
குறிப்பாக, “யார் ஹீரோ” என ரஜினி, கமல் இருவரும் இயக்குநர் நெல்சனை கேள்வி கேட்கும் காட்சிகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“வரலாறு எப்போதாவதுதான் மீண்டும் தன்னையே உயிர்ப்பிக்கும்” என்ற வாசகத்துடன் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்ட போஸ்டர்களில் இருந்தே இந்த கமல், ரஜினி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
யார் இயக்குவார்கள் என்ற போட்டியில் இயக்குநர் நெல்சன் அந்த இடத்தைப் பிடித்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிதான் அவருக்கு இந்த இடத்தைப் பிடித்துக் கொடுத்திருக்கிறது.
இயல்பான நகைச்சுவைகள், ஸ்டைலான ஷாட்டுகள், அதே சமயத்தில் மாஸ் குறையாத காட்சிகள் என ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு சினிமாவில் இன்னொரு ரவுண்ட் வலம்வரும் வெற்றியைக் கொடுத்தார்.
ரஜினி, கமல் இருவருமே மிகப் பெரிய நடிகர்கள் என்பதால் இருவர்களிடமும் ஈகோ பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கருதி அதையே தனது புரோமோவில் பயன்படுத்தி, நெல்சன் அசத்தி இருக்கிறார்.
மிகவும் ஸ்டைலான காட்சிகள் புரோமோவை மீண்டும் பார்க்கத் தோன்றுகிறது.
‘ஜெயிலர்-2’ படத்துக்குப் பிறகு ரஜினி, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு கமலுடன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்தப் புரோமோவுக்கு ரசிகர்களிடம் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.









