தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சூதாட்டம், மொய் விருந்து, ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை கிடா சண்டை ஆகியவைகள் மிகப் பிரபலமானவை.
இவைகள் எல்லாம் எப்படி உருவாகின? யார் இதை உருவாக்கியது? எப்படி இது நடந்தது? என்பதெல்லாம் நமக்கு தெரியாது. ஆனால் ஜல்லிக்கட்டு என்பது மட்டுமே நம்முடைய தமிழர் மரபில் செப்பேடுகளிலும், கல் தூண்களிலும் பதிவான ஒரு விஷயம். அதனால்தான் அந்த ஜல்லிக்கட்டை மீட்க தமிழகத்தின் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டு போராடினார்கள்.
இந்த ‘ஜாக்கி’ என்ற ஆங்கில பெயர் கொண்ட திரைப்படம் தென் தமிழகத்தில் நடைபெறும் கிடா சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது.
இதில் என்ன சுவாரசியம் என்றால் இந்த படத்தில் கதாநாயகன், வில்லன், தயாரிப்பாளர், இயக்குநர் அனைவருமே மலையாளிகள் என்பதுதான். மலையாள தேசத்திலிருந்து இங்கு வந்து அதுவும் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் நடைபெறும் இந்த கிடா சண்டையை மையமாக வைத்து ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால் நம்மால் நம்பத்தான் முடியவில்லை. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.
இதே கூட்டணி சில வருடங்களுக்கு முன்பாக ‘மட்டி’ என்ற ஒரு திரைப்படத்தை அழகாக உருவாக்கி இருந்தார்கள். அந்த எண்ணத்தில்தான் இந்தப் படத்தையும் பார்க்க வேண்டிய வந்தது.
தென் தமிழகத்தில் மதுரைக்கு அருகில் மேலூர் செல்லும் சாலையில் இருக்கும் ஒத்தக்கடை என்ற ஊர். அந்த ஊரில் கிடா சண்டை மிகவும் பேமஸ். வருடா வருடம் நடக்கும் கிடா சண்டையில் வெற்றி பெறும் கிடாவை வைத்திருக்கும் உரிமையாளருக்கு ‘ஜாக்கி’ என்ற பெயர் பொறிக்கப்பட்ட 10 சவரன் செயின் பரிசாக அளிக்கப்படும்.
அந்த ஜாக்கி என்ற செயினை விற்கவும் முடியாது. சொந்தமாக வைத்திருக்கவும் முடியாது. அடுத்தடுத்த வருடங்களில் தொடர்ந்து நடக்கின்ற கிடா சண்டையின்போது அந்த செயினையும் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். புதிதாக யார் ஜெயித்தாலும் அவர்களுக்கு அந்த செயின் தரப்படும். இதுதான் அந்தப் பகுதி வழக்கம்.
ஒரு விளையாட்டு என்பதைப் போல இது ஆரம்பித்து இப்போதைய நிலையில் இது மிகப் பெரிய கௌரவ பிரச்சினையாக உருவாகி… அடிதடி, வெட்டு குத்து, கொலை என்கிற அளவுக்கு போய்க் கொண்டிருக்கிறதாம். அதைத்தான் இந்தப் படத்தின் கதை கருவாக எடுத்திருக்கிறார் இயக்குநர் பிரபகல்.
இந்த கிடா சண்டை நடத்துகின்ற அமைப்பிற்கு மதுசூதனராவ் தலைவராக இருக்கிறார். இவருடைய உறவினரான காப்ரா கார்த்தி என்ற ரீதன் கிருஷ்ணதாஸ் தொடர்ந்து சில ஆண்டுகளாக இந்த கிடா சண்டையில் ஜெயித்து வருகிறார்.
இப்பொழுது அடுத்த வருடத்திற்கான அழைப்பு வந்திருப்பதால் இப்போதும் தன்னுடைய அணுகுண்டு என்ற கிடாவை போட்டிக்கு கொண்டு வந்திருக்கிறார். அதேநேரத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும் டிரைவரான ராமர் பாவா என்ற யுவன் கிருஷ்ணன் காபுர கார்த்திக்கு போட்டியாளராக வருகிறான்.
காப்ரா கார்த்திக்கின் கெடாவான அணுகுண்டுவை ராமரின் காளி என்ற கிடா சண்டையில் வீழ்த்தி விடுவதோடு, அணுகுண்டுவின் கொம்பையும் ஒடித்து விடுகிறது.
இந்தத் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத காப்ரா கார்த்தி எப்படியாவது காளியை பழிவாங்க வேண்டும் என்று நினைக்கிறான். அந்த நேரத்தில் சமாதானம் பேச வந்த ராமரை அவமானப்படுத்தும்விதமாக தன்னுடைய அணுகுண்டு கிடாவை ராமரின் கண் முன்பாகவே வெட்டி கொலை செய்கிறான்.
இப்போது இன்னொரு ஊரில் நடக்கும் கிடா சண்டைக்கு ராமருக்கு அழைப்பு வருகிறது. கார்த்திக்கும் இன்னொரு கிடாவை கொண்டு வருகிறார். இந்தப் போட்டியில் யார் தோற்றாலும் அந்தக் கிடாவை வெற்றி பெற்றவரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்பது முடிவாகிறது.
கார்த்தி கொண்டு வந்த அந்த புதிய கிடா எதிர்பாராதவிதமாக காளியை வீழ்த்தி விடுகிறது. ஆனால் இந்தத் தோல்வி திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு பழிவாங்கல் என்றும் தந்திரமாக தன்னுடைய காளி வீழ்த்தப்பட்டான் என்பதை அறியும் ராமர் அதிர்ச்சியாகிறார்.
ராமருக்கும், கார்த்திக்கும் இடையிலான மோதல் மிகப் பெரிய அளவுக்கு போக அது ராமரின் குடும்பத்தையும் பாதிக்கிறது. இப்போது இருவருக்கும் இடையில் பஞ்சாயத்து செய்யும் மதுசூதனன் “உங்கள் இருவரின் பிரச்சனையை எங்கு ஆரம்பித்தீர்களோ… அதே மைதானத்தில் கிடா சண்டை மூலமாகவே தீர்த்துக் கொள்ளுங்கள்” என்று அட்வைஸ் செய்கிறார்.
அதன்படி அடுத்த கிடா சண்டைக்கு இருவரும் தயாராகிறார்கள். அந்த கிடா சண்டையில் ஜெயித்தது யார்.. தோற்றது யார்.. கார்த்திக் என்ன ஆனான்… என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
இந்தப் படத்தில் முதலில் பாராட்டை பெறுவது கிடா சண்டையை படமாக்கிய ஒளிப்பதிவாளருக்கும், சண்டை இயக்குநருக்கும், உடன் நடித்தவர்களுக்கும்தான்.
கிடா சண்டை காட்சியை எத்தனை நாட்கள் படமாக்கினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் காத்திருந்து அந்த கிடாக்களுடன் படத்தின் ஹீரோவும், வில்லனும் பேசி பழகி அவர்களுக்கு ட்ரெய்னிங் கொடுத்து அதற்கு பின்புதான் படத்தை எடுத்தோம் என்று இயக்குநர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். நிச்சயமாக இந்த இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.
உண்மையாக கிடா சண்டை நடந்த இடத்தில் இவர்களும் தங்களுக்கு ஏற்றபடி படமாக்கி இருக்கிறார்கள் என்றால் எத்தனை முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும் என்று நினைக்கையில் ஆச்சரியமாக உள்ளது. அந்தவகையில் இந்தப் படம் கிடா சண்டையை அடையாளப்படுத்தும்விதமாக வந்திருக்கிறது.
நாம் முன்பு பார்த்து, ரசித்த வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தில் ஒரு கோழி சண்டையை வைத்துதான் படமே நகரும். அதேபோலத்தான் இந்த கிடா சண்டையை வைத்தும் இந்தக் கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர்.
படத்தில் காளியாக நடித்த அணுகுண்டு என்ற ஆட்டையும், காளியாக நடித்த இன்னொரு ஆட்டையும் மனசார பாராட்டலாம். அந்த ஆடுகளுக்குத்தான் சிறந்த நடிகர்களுக்கான விருதை முதலில் தர வேண்டும்.
படத்தி நாயகனான ராமர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யுவன் கிருஷ்ணன், ஏதோ தன்னால் முடிந்த அளவுக்கான நடிப்பை காண்பித்திருக்கிறார். ஆனால் அவரை பார்க்கும் பொழுது ஹீரோப்பான எந்த மெட்டீரியலும் அவரிடத்தில் இல்லை என்பது தெரிகிறது. வில்லனாக நடித்திருந்த ரீதன் கிருஷ்ணாதாஸ் இவரை விடவும் ஒரு கவர்ச்சிகரமான தோற்றத்தில் ரசிப்பதுபோல வசனங்களை பேசி நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் ஹீரோவை வில்லன் ஆகவும் வில்லன் ஹீரோவாகவும் மாற்றி படத்தை உருவாக்கியிருந்தால் இன்னமும்கூட இந்தப் படத்துக்கு ஒரு வெயிட்டேஜ் கிடைத்திருக்கும்.
இந்த ஹீரோவுக்கும் ஒரு காதலை உருவாக்கி காதலியான அம்மு அபிராமியை ஹீரோவுடன் இணைத்து பார்க்கும்பொழுது சித்தப்பா மகளுமாக நமக்கு தெரிகிறார். ஹீரோயினையாவது அவருக்கு பொருத்தமான கொஞ்சம் வயதான பெண்ணை போட்டு இருந்தால் நாம் வெகுவாக ரசித்திருக்கலாம். ஆனால், அதையும் இயக்குனர் செய்யவில்லை.
அம்மு அபிராமிக்கு மிகப் பெரிய அளவுக்கான நடிப்பெல்லாம் இல்லை என்றாலும் ஒரு ஹீரோயின் படத்தில் இருந்தாக வேண்டுமே என்பதற்காக அவரையும் இழுத்து நடிக்க வைத்திருக்கிறார்கள்.
காட்சிக்கு காட்சி பஞ்சாயத்து செய்ய வரும் மதுசூதனன் ராவ் இந்த படத்தில்தான் சண்டை காட்சிகள் இல்லாமல் அவரும் அடி வாங்காமல் வசனம் பேசியே தன் நடிப்பை முடித்திருக்கிறார்.
ஹீரோயினின் அக்காவாக நடித்திருக்கும் சரண்யா ரவிச்சந்திரன் உண்மையில் ஹீரோவுக்கு தங்கச்சி போலத்தான் தெரிகிறார். இப்படியெல்லாம் கேரக்டர் ஸ்கெட்ச்சுகளை சிதைத்து வைத்திருக்கும் இயக்குநரை நாம் என்னவென்று சொல்வது?
ஆனால் நடிப்பில் அனைவருமே தங்களால் முடிந்த அளவுக்கான நடிப்பை காண்பித்திருக்கிறார்கள். அந்த வகையில் இயக்குநர் அத்தனை பேரிடமே மிகச் சிறப்பாக பேசி நடிப்பை வெளிக் கொண்டிருந்திருக்கிறார்.
சரண்யா ரவிச்சந்திரன் தன்னுடைய தம்பியிடம் “இன்னொரு முறை மோதலாகி நீயும் ஜெயிலுக்கு போய் விடாதே” என்று கதறுகின்ற காட்சிகளில் ஒரு அக்காவாக நம் மனதில் இருக்கிறார். அவருக்கு மட்டும் ஒரு ஸ்பெஷல் பாராட்டை சொல்லி விடுவோம்.
ஒளிப்பதிவாளர் என்.எஸ்.கே.உதயகுமார் 100 படங்களில் பணியாற்றிய அனுபவம் போல இந்தப் படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார். இரவு நேர காட்சிகளில் கிடா சண்டை மைதானத்தில் விளக்குகளுக்கு பஞ்சமே இல்லாமல் வைத்து ஒளிப்பதிவை மிகுந்த தரமானதாக கொடுத்திருக்கிறார். அதிலும், கிடா சண்டையை படமாக்கியவிதம் அட்டகாசம் என்று சொல்லலாம்.
இசையமைப்பாளரின் பின்னணி இசை நம் காதை கிழித்துவிட்டது. காட்சிக்கு காட்சி பில்டப் இசையாகவே இருக்க கடைசிவரையிலும் நம்மை கதற வைத்திருக்கிறார் இசையமைப்பாளர். பாடல் காட்சிகளிலும் பரவாயில்லை. கொஞ்சம் அசத்தலாக எடுத்திருந்தாலும் முன்பே சொன்னது போல் சித்தப்பா-மகள் காதலாகவே நமக்கு தெரிவதால் ரசிக்க முடியவில்லை.
மதுரையை மையமாகக் கொண்டு தென் மாவட்டங்களில் இப்படிப்பட்ட கிடா சண்டைகள் நடப்பதினால் கூடுதலாக கொலைகளும் விழுகின்றன.. நடந்திருக்கின்றன.. என்று கேரளாவில் இருந்து வந்த இந்த இயக்குநர் அழுத்தந்திருத்தமாக சொல்கிறார்.
சில இடங்களில் நடந்திருக்கிறது என்றாலும் படத்தின் டைட்டிலில் “இது கற்பனை கதை” என்று சொல்லாமல் இருந்திருக்கலாம். முன்பு கற்பனை கதை என்று சொல்லிவிட்டு பின்பு “இதுவெல்லாம் நடந்த கதைதான்” என்று மலையாள இயக்குநர் பேட்டியில் மட்டும் சொல்வதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மலையாளத்தில் இல்லாத கதையா? மலையாள சினிமாவில் காட்டப்படாத கதைகளா? எத்தனையோ இருக்கின்றன?.. ஆனால் அதை எல்லாம் மலையாளத்தில் எடுக்காமல் தமிழுக்கு ஓடி வந்து இப்படி ஒரு கிடா சண்டையை வைத்து உங்களுடைய மாநிலத்தில் கொலை கொள்ளைகளும் நடக்கின்றன.. சட்ட விரோத செயல்களும் நடக்கின்றன…” என்று ஒரு மலையாள இயக்குநர் சொன்னால், நம்மால் என்ன செய்ய முடியும்?!
நல்ல விஷயங்களை சொல்லியிருந்தால் எந்த ஊர் இயக்குநராக இருந்தாலும் நிச்சயமாக நாம் பாராட்டலாம். ஆனால் மதுசூனராவ் மட்டுமே முடித்திருக்க வேண்டிய இந்தக் கதையை இடைவேளைக்கு பின்பு மீண்டும் நீட்டி முழக்கி மைதானத்தில் அடித்துக் கொண்டு சாகுங்கள் என்றெல்லாம் சொல்வது அந்த வகையிலும் நியாயம் அல்ல..?
கிடா சண்டைகளால் அவரவர் குடும்பத்தை அழித்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்லாமல்விட்டது இயக்குநரின் தவறு! சரண்யா ரவிச்சந்திரன் மட்டுமே இதற்கு குரல் கொடுக்க… மற்றவர்களெல்லாம் இயக்குநரின் எழுத்துக்கு அடிமையாகி நடந்திருக்கிறார்கள்.
ஒரு பக்கம் சேவல் சண்டை போல கிடா சண்டை இருப்பதும் இன்னொரு பக்கம் அதை மையமாக வைத்து அளவுக்கு அதிகமான சண்டை காட்சிகளை நம்மிடம் கொடுத்திருப்பது இயக்குநர் செய்த பெரும் தவறாகவே தெரிகிறது.
நம்முடைய மதுரை மண்ணின் பெருமையை சொல்லும் பொழுது நம்மிடையே இருக்கும் கசடுகளை நான் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டோம். செய்யவும் மாட்டோம். சொல்லவும் மாட்டோம்.
மலையாள இயக்குநர் என்பதால் நாம் கண்டிக்கவில்லை. ஆனால் அதே சமயம் இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ஓவரான வன்முறை காட்சிகளையும் அதற்கு பூஸ்ட் கொடுக்கும் பின்னணி இசையையும், இந்தக் கதையை நம்முடைய கலாச்சாரம், பண்பாடு என்ற லிஸ்ட்டில் சேர்த்துக் கொடுத்திருப்பதையும் நம்மால் ஏற்க முடியாது.
இதே இயக்குநர் முன்பு மட்டி என்ற படத்தை எடுத்திருந்தார். அதில் சகதியில் கார் ரேஸ் நடத்தும் ஒரு கதையை கொடுத்திருந்தார். வித்தியாசமாக இருந்ததால் தமிழில் அந்தப் படமும் ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றிகரமாக ஓடியது.
அதை மனதில் வைத்தும் தன்னுடைய இயக்க திறமையை வைத்தும் இந்தப் படத்தையும் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
இதை ஏற்பதா வேண்டாமா என்பதை தியேட்டருக்கு வரப் போகும் தமிழ் ரசிகர்கள் சொல்லுவார்கள்.
RATING : 3 / 5









