full screen background image

அனலி – சினிமா விமர்சனம்

அனலி – சினிமா விமர்சனம்

சிந்தியா ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குநர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘அனலி’.

இந்தப் படத்தில் சக்தி வாசுதேவன், சிந்தியா லூர்டே, குமாரவேல், இனியா, கபிர் துகான் சிங், அபிஷேக் வினோத், ஜென்சன் திவாகர், சிவா (கிளி), மேத்யூ வர்கீஸ், வினோத் சாகர், ஷிமாலி (குழந்தை நட்சத்திரம்) மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர் – சிந்தியா லூர்டே, தயாரிப்பு நிறுவனம் – சிந்தியா ப்ரொடக்‌ஷன் ஹவுஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – தினேஷ் தீனா, நிர்வாக தயாரிப்பு – M.பாலமுருகன், சண்டைப்பயிற்சி – ‘கலை மாமணி’ சூப்பர் சுப்பராயன், ஒளிப்பதிவு – ராமலிங்கம், இசை –  DC  (தீபன் சக்கரவர்த்தி), கலை இயக்குனர் – தாமு MFA, படத் தொகுப்பாளர் – ஜெகன் சக்கரவர்த்தி, நடன இயக்குநர் – விக்னேஷ், பாடலாசிரியர்கள் – கபிலன், அ.பா.ராஜா, யாசின் ஷெரிஃப், பாடகர்கள் – சைந்தவி, தீபன், யாசின், ரிஃப், விக்ரம், சிபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் கதை ஒரே இரவில் நடக்கக் கூடியது. கடத்தல் மன்னன் லால் சேட்டா, கான் பாய் மற்றும் ரங்கராவ் ரெட்டி, இவர்களிடம் மாட்டிக் கொள்ளும் ஜான்சி மற்றும் அவளது பத்து வயது குழந்தை.. இவர்களைப் பற்றி பேசுகிறது.

அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்து தமிழ் திரைப்பட உலகத்தில் ஒரு நாயகியாகவும், ஒரு தயாரிப்பாளராகவும் இருக்க வேண்டும் என்று நினைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ‘சிந்தியா’ என்கின்ற ஒரு பெண்மணி தயாரித்திருக்கும் படம்தான் இது.

‘அனலி’ என்றால் ‘நெருப்பு போன்றவள்’ என்று அர்த்தமாம். படத்தின் நாயகி நாயகன் இருவருமே சிந்தியாதான் என்பதால் அவரை முன்னிறுத்தி எடுக்கப்பட்டிருக்கும் கமர்சியல் திரைப்படம் இது என்பதாலும் கதைக்குப் பொருத்தமாக தலைப்பாக இதை தேர்வு செய்தார்களாம்.

ஒரு இரவு நேரத்தில் நாயகி சிந்தியா தன்னுடைய மகளுடன் சென்னைக்கு வருகிறார். தன்னுடைய நண்பரின் வீட்டிற்கு செல்வதற்காக கோயம்பேட்டில் இருந்து ஆட்டோவில் செல்கிறார். அந்த ஆட்டோவை ஒட்டி வரும் ஜங்ஷன் திவாகர் தன்னுடைய நண்பனான கிளி சிவா பிரியாணி செய்து வைத்திருப்பார் என்பதால் அதை வாங்கி கொண்டு போய் விடலாம் என்று பழைய கன்டெய்னர் குடோனுக்கு அழைத்து வருகிறார்.

உள்ளே போன ஜென்சன் அங்கே இருந்த சிச்சுவேஷனை புரிந்து கொள்ளாமல் சிவாவிடம் பிரியாணி கேட்க அவரை அங்கேயே அடித்து உட்கார வைத்து விடுகிறார்கள். உள்ளே போனவன் திரும்பி வரவில்லையே என்ற எண்ணத்தில் சிந்தியாவும் குடோனுக்குள் செல்ல அங்கே நடக்கும் சட்ட விரோத செயல்களை இவரும், இவரது மகளும் பார்த்து விடுகிறார்கள்.

இப்பொழுது சிந்தியாவை வெளியேவிட்டால் இங்கே நடந்ததையெல்லாம் வெளியில் சொல்லிவிடுவார் என்பதால் அவரை ஒரு கூட்டம் கொலை செய்ய துரத்துகிறது. இன்னொரு பக்கம் ஜென்சன் திவாகரும் அங்கிருந்து தப்பிக்க முயல்கிறார்.

கன்டெய்னரில் சட்ட விரோதமாக ஆயுதங்களையும், போதை மருந்தையும்  கடத்தி பெரும் இலாபம் சம்பாதிக்கும் கடத்தல்காரர்களின் தலைவனான சக்தி வாசுதேவன், இன்னொரு தலைவன் அபிஷேக் வினோத், மும்பையில் இருந்து இவர்களை இயக்கி வரும் தாதாவான கபீர் துவான்சிங் ஆகிய மூவரும் அன்றைக்கு பார்த்து அந்த கன்டெய்னர் குடோனுக்குள் இருக்கிறார்கள். அவர்கள் மூவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் அவ்வப்பொழுது வந்து அவர்கள் கூட்டணியை கலைத்துவிட பார்க்கிறது.

இந்த நேரத்தில் சிந்தியாவும் அவரது மகளும் ஆட்டோ டிரைவர் ஜென்சனும் அங்கே நடப்பதை கண்டுவிட்டதால் அவர்கள் மூவரையும் தீர்த்துக்கட்ட அனைத்துவித வேலைகளும் நடக்கிறது.

சிந்தியா அங்கிருந்து தப்பிக்கும் பொழுது அவர் வைத்திருந்த ஒரு பேக்கும் அவரது குழந்தையும் மாட்டிக் கொள்கிறார்கள். அதை மீட்பதற்காக மீண்டும் அனலி அந்த குடோனுக்குள் செல்ல கதையே இப்போது மாறி இருக்கிறது. வெளியில் செல்ல வழியே இல்லாமல் போகிறது.

இந்தக் கும்பலிடம் இருந்து சிந்தியாவும் அவரது குழந்தையும் தப்பித்தார்களா.. இல்லையா.. இவர்களின் கடத்தல் வேலை வெற்றிகரமாக முடிந்ததா… இல்லையா… என்பதுதான் இந்த ‘அனலி’ என்ற படத்தின் திரைக்கதை.

ஹீரோயினாக ‘அனலி’ என்ற பாத்திரத்தில் தயாரிப்பாளரான சிந்தியாவே நடித்திருக்கிறார். அவருடைய முகமே வித்தியாசமாக இருக்கிறது. ஒரு நாயகிக்குரிய முக வெட்டும், அதற்கான தகுதிகளும் இல்லாமல் போக இரண்டு மணி நேரம் அவரை நாம் பார்த்து தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தை நமக்கு தந்து விட்டார்.

ஹீரோயின் சிந்தியா இடையிடையே சண்டை காட்சிகளிலும் ஈடுபட்டு நம்மை சோதித்து இருக்கிறார். இவர் யார் என்ற டிவிஸ்ட் தெரியும்போது பரவாயில்லையே என்று இயக்குநரை லேசாக பாராட்டலாம்.

படத்தில் ஹீரோயினை தவிர மீதி அனைவருமே ஏதோ தங்களால் முடிந்த அளவுக்கான நடிப்பை கொட்டி இருக்கிறார்கள்.

வில்லனாக நடித்திருக்கும் சக்தி வாசுதேவன் தன்னுடைய வித்தியாசமான குரல் வளத்தால் கவனிக்க வைத்திருக்கிறார். அவருடைய ஸ்டைலான குண்டர் கூட்டத்தின் தலைவன் கதாபாத்திரம் ரசிக்கும்படி உள்ளது. ஆனால் அவர் பேசுகின்ற பல டயலாக்குகள் அவருடைய குரலினால் நமக்கு புரியாமலேயே போய்விட்டது.

இன்னொரு வில்லனான கபீர் துவான் சிங், அபிஷேக் வினோத் இகுவரும் தங்கள் பங்குக்கு வில்லத்தனத்தில் நம்மை மிரட்டுவதாக நினைத்து நடித்திருக்கிறார்கள் அவ்வளவுதான்.

கஸ்டம்ஸ் அதிகாரியாக நடித்திருக்கும் இனியா, ஆணுக்குப் பின் பெண்களுக்கும் சளைத்தவர்களில்லை என்பதைப் போல லஞ்சம் பெறுவதற்காக சட்டத்தின் ஓட்டைகளை கடத்தல்காரர்களுக்கு சொல்லி அதில் மஞ்சள் குளிக்கும்விதமான வில்லி கதாப்பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.

மேலும் மப்டி போலீசாக நடித்திருக்கும் குமாரவேல், ஆட்டோ டிரைவர் ஜென்சன் திவாகர், கிளி சிவா, ஷிமாலி என்று படத்தில் நடித்த மற்றவர்களும் ஓரளவு நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கஸ்டம்ஸ் துணை அதிகாரியாக இருக்கும் வினோத் சாகர் லஞ்சம் வாங்குவதை கேஷூவலாக சொல்லி நடித்திருக்கிறார். அவருடைய பேச்சும், நடிப்பும் நம்மைக் கவர்கிறது.

கன்டெய்னர்கள் குடோனிலேயே படம் முழுக்க எடுத்திருப்பதால் அந்த இடத்தை எவ்வளவு பிரம்மாண்டமாக காட்ட முடியுமோ அவ்வளவும் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராமலிங்கம். அதோடு அந்த குடோனுக்குள் இருக்கும் வில்லன்களின் இருப்பிடத்தை கலை இயக்குநரின் உதவியோடு அழகாக வடிவமைத்து படம் பிடித்திருக்கிறார்.

படத்திற்கு இசையமைத்திருக்கும் தீபன் சக்கரவர்த்தியின் இசையில் சைந்தவியின் அழகிய குரலில் ‘ஓர் மழைத் துளியும்’ என்ற பாடல் மற்றும்  அ.பா. ராஜாவின் வரிகளில் ‘குஜிலி கும்பா’ என்ற பாடலும் மிக அருமையாக வந்துள்ளது. இந்தப் படத்தின் திரைக்கதை தேடுதல் வேட்டை உடையது என்பதால் பின்னணி இசையை கொஞ்சம் அழுத்தமாகவே கொடுத்திருக்கிறார்.

ஹீரோயின் சிந்தியாவுக்கு சண்டைக் காட்சிகளை வடிவமைத்து கொடுத்திருக்கும் சூப்பர் சூப்பராயனை வெகுவாக பாராட்ட வேண்டும். ஒரு பெண் ணால் எந்தளவுக்கு சண்டைக் காட்சிகளில் நடிக்க முடியுமோ அதை அழகாக செய்து இருக்கிறார் சூப்பர் சூப்பராயன்.

கலை இயக்குநர் தாமு தன்னுடைய திறமைகளை எல்லாம் காட்டி அந்த இடத்தை அவ்வளவு அழகாக வடிவமைத்து கொடுத்திருக்கிறார். அவருக்கு நமது பாராட்டுக்கள்.

படத்தின் சில காட்சியில் எடிட்டிங்கில் தப்பும், தவறுமாக இருக்கிறது. நடிகர்களின் நடிப்பும் சுமாராகத்தான் வரவழைக்கப்பட்டிருக்கிறது. இயக்குநரின் இயக்குதல் திறமையில் போதாமையும் இருக்கிறது. இவ்வளவு போதாமைகளை வைத்துக் கொண்டு படத் தொகுப்பாளர் ஜெகன் சக்கரவர்த்தி, ஏதோ தன்னால் முடிந்த அளவுக்கு இந்தப் படத்தை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் திரைப்படங்களை தயாரிக்கலாம். நடிக்கலாம். அதை யாரும் குற்றம் குறை சொல்ல முடியாது. தடுக்கவும் முடியாது.

ஆனாலும் ஒரு மிகப்.பெரிய வியாபாரத் தலமான திரைப்படத் துறையில் பணத்தைப் போட்டுக் கொண்டே இருந்து நஷ்டம் ஆவதைவிட போட்டோ காசாவது திரும்பி வர வேண்டும் என்று நினைத்து தொழிலில் இறங்கினால் நிச்சயமாக தயாரிப்பாளர் சிந்தியாவுக்கு நல்லது. திரைப்படத் துறையினருக்கும் நல்லது.

நாயகி சிந்தியா  இதுவரையில் மூன்று படங்களை எடுத்திருக்கிறார். மூன்று படங்களுமே அதிகமாக மக்களை கவரவில்லை. காரணம், அவரே ஹீரோயின் பாத்திரத்தில் நடித்திருந்ததுதான்.

இந்த மூன்றாவது படத்தோடு அந்த சோதனை முயற்சியை நிறுத்திவிட்டு அடுத்தப் படத்தில் இருந்து ஒரு தயாரிப்பாளராக தன்னை முன்னிறுத்திக் கொண்டு சினிமா வியாபாரத்தில் யார், யார் இப்போது லைம் லைட்டில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து அவர்களை வைத்து படம் தயாரித்து கொடுத்தால் அவருக்கும் நல்லது. மற்றவர்களுக்கும் நல்லது.

திரைப்படத்துறையில் இருக்க வேண்டும் என்பதற்காக நடிகையாக மட்டுமே இருந்தால் ஜெயித்து விடலாம் என்று நினைக்க வேண்டாம் தயாரிப்பாளராகவும் ஜெயிக்கலாம். சிந்தியா அடுத்த படத்திலாவது மனம் வைத்து தான் ஒரு தயாரிப்பாளராகவே இருந்து படங்களை தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

RATING : 2.5 / 5

Our Score