வரம் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘இறுதி முயற்சி’.
இந்தப் புதிய படத்தில் ரஞ்சித், மெகாலி மீனாட்சி இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, மேலும் விட்டல் ராவ், கதிரவன், புதுப்பேட்டை சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எழுத்து இயக்கம் – வெங்கட் ஜனா, படத்தொகுப்பு – வடிவேல் விமல்ராஜ், ஒளிப்பதிவு – சூர்யா காந்தி, இசை – சுனில் லாசர், கலை இயக்கம் – பாபு M.பிரபாகர், பாடலாசிரியர் – மஷீக் ரஹ்மான், பாடகர் – அரவிந்த் கார்ணீஸ் , புகைப்படங்கள் – மணிவண்ணன், டிசைன்ஸ் – ரெட்டாட் பவன், பத்திரிக்கை தொடர்பு – வேலு.
இயக்குநரும், நடிகருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் உதவியாளரான வெங்கட் ஜனா இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
இந்த ‘இறுதி முயற்சி’ திரைப்படம் சாதாரண பெட்டி கடை வைத்திருப்பவர் முதல் பல கோடிகளில் வணிகம் செய்யும் பெரும் தொழில் அதிபர்களும் சந்திக்கும் ஒரு பிரச்சினையை நெஞ்சத்தை பதைபதைக்க வைக்கும் வகையில் சஸ்பென்ஸ், த்ரில்லர் ஜானர் திரைக்கதையில், அனைத்து தரப்பு மக்களும் குடும்பத்தினருடன் ரசித்து பார்க்கும்விதமாகவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாகவும் உருவாகியுள்ளது.
“கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்கின்ற வார்த்தையை வைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் வெங்கட் ஜனா.
ஹீரோ ரஞ்சித் துணிக் கடையை நடத்தி வந்தவர். அவருடைய கடையின் விரிவாக்கத்திற்காக தொழிலுக்காக பல லட்சங்களை கடனாக பெற்று இருக்கிறார். ஆனால், அந்த கடனுக்கான வட்டியை சில மாதங்கள் கொடுத்தவர் அதற்கு பிறகு அதைக் கூட கொடுக்க முடியாமல் தொழில் நசிந்து போக கடையை மூடி விடுகிறார்.
இப்போது கடன் கொடுத்த விட்டல் ராவ் ரஞ்சித்தை மிரட்டுகிறார். “ஒன்று கடனை திருப்பிக் கொடு. அல்லது உன் மனைவியை என் தம்பியிடம் அனுப்பிவிட்டு உன் மகளை என்னிடம் அனுப்பு…” என்று கொடூரமான ஒரு செயலை ரஞ்சித்தின் வீட்டுக்கே வந்து சொல்லி மிரட்டி விட்டு போகிறார்.
இப்போது இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க ரஞ்சித் பல வழிகளிலும் முயல்கிறார். ஆனால் பணம் கிடைக்கவில்லை .அதே நேரம் விட்டல் ராபின் ஆட்கள் எப்பொழுதும் ரஞ்சித்தின் வீட்டு வாசலிலேயே காவல் காக்கிறார்கள்.
இதே நேரம் சென்னையில் ஒரு சைக்கோ கொலைகாரன் இரவு நேரத்தில் பலரை கொலை செய்து கொண்டிருக்கிறான். அவன் ஒரு முறை கொலை செய்துவிட்டு தப்பிக்கும்போது துப்பாக்கி குண்டு பட்டு காயம் பட்ட நிலையில் ரஞ்சித்தின் வீட்டில் பயன்படுத்தப்படாத மாடியில் இருக்கும் ஒரு அறைக்குள் பதுங்கி இருக்கிறான்.
இவன் பதுங்கி இருப்பது ரஞ்சித்திற்கும், அவரது மனைவி, பிள்ளைகள் யாருக்குமே தெரியாது. ஆனாலும் இரவு நேரத்தில் அந்த வீட்டிலிருந்து வெளியில் வந்து படுகொலைகளை செய்து விட்டு மறுபடியும் அதே வீட்டுக்குள் ஒளிந்து கொள்கிறான்.
இந்த சைக்கோவை கண்டுபிடிப்பதற்காக காவல் துறை தனிப் படைகளை அமைத்து வலை வீசி தேடிக் கொண்டிருக்க… இன்னொரு பக்கம் தன்னுடைய கடனை அடைக்க முடியாமல் தவிக்கும் ரஞ்சித் ஒரு முடிவை எடுக்கிறார்.
அந்த முடிவு என்ன? அந்த முடிவினால் அவருடைய கடன் பிரச்சனை தீர்ந்ததா? இல்லையா? கந்துவட்டி கொடூரர்களுக்கு என்ன நடந்தது? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஞ்சித் இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். ஆனால் மற்ற திரைப்படங்களைப் போல அல்லாமல் முதல் காட்சிகளிலிருந்து கடைசிவரையில் கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ள அமைதியான அடக்கமான ஒரு ஹீரோவாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.
அவருடைய அமைதியான குணமே அவருக்கு கெடுதலை தந்திருக்கிறது. அவ்வளவு பெரிய கொடூரமான வார்த்தைகளை பேசிய விட்டல் ராவை அவரால் வார்த்தைகளால் மட்டுமே திட்ட முடிகிறதே தவிர, வேறு எதுவும் செய்ய முடியவில்லை. இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சே இப்படித்தான் என்று இயக்குநர் தீர்மானித்திருப்பதால், அதற்குமேல் அவரால் செய்ய முடியவில்லை போலும்..!
குடும்பத்தினரோடு தற்கொலை செய்து செத்துப் போகலாம் என்று நினைத்து அவர் செய்கின்ற சில முன்னேற்பாடுகள், செயல்கள்… அனைத்துமே முட்டாள்தனமாக நமக்கு தெரிந்தாலும் இப்படி ஒரு கேரக்டர் ஸ்கெட்ச் உள்ளவர் இதைத்தான் செய்வார் என்று இயக்குநர் நமக்கு படம் காட்டியிருக்கிறார்.
இவருடைய மனைவியாக நடித்திருக்கும் மெகாலி மீனாட்சிக்கு குடும்பப் பாங்கான முகம். படத்தில் எந்த ஒரு ரொமான்ஸ் கட்சியும் வைக்காமல் படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் படம் சோகத்தையே கொண்டு செல்வதால் இவரும் கொஞ்சம் சோக வயப்பட்ட ஹீரோயினாகவே படம் முழுவதும் நடித்துள்ளார். ஆனால் அழகான நடிப்புதான்.
வில்லனாக நடித்திருக்கும் விட்டல் ராவ், இவருடைய தம்பியாக நடித்திருக்கும் புதுப்பேட்டை சுரேஷ் மற்றும் காவல்துறை அதிகாரியாக நடித்தவர்கள் அனைவருமே சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அதிலும் விட்டல் ராவின் அந்த வில்லத்தனம் நிச்சயம் நாம் எதிர்பாராதது. ஆனால் அவர் பேசுகின்ற பல வசனங்களை மியூட் செய்திருக்கலாம் அல்லது நீக்கியிருக்கலாம். குடும்பத்தோடு இந்தப் படத்தை பார்ப்பவர்கள் நிச்சயம் சங்கடப்படுவார்கள்.
ஒளிப்பதிவு செய்திருக்கும் சூரியகாந்தி பெரும்பாலான காட்சிகளை ரஞ்சித்தின் வீட்டுக்குள்ளேயே படமாக்கி இருப்பதால் கொஞ்சம் ரசிக்கும் வகையில் கேமராவின் கோணங்களை வேறுவேறுவிதமாக வைத்து தன் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.
ஒரு பக்கம் சஸ்பென்ஸ் திரில்லர் இன்னொரு பக்கம் கந்து வட்டி கடன் தொல்லை என்று சோக காவியத்தை இயக்குநர் கொடுத்து விட்டதால் அந்த சோகமான பீலிங்கை படத்தின் கடைசி காட்சி வரையிலும் கொண்டு வருவது போல படத்துக்கு பின்னணி இசை அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சுனில் லாசர்.
அதேபோல் இந்தப் படத்தை தொகுத்து வழங்கியிருக்கும் வடிவேல் விமல்ராஜு படத்தின் திரைக்கதையில் கொஞ்சம்கூட ரிலாக்ஸ் கொடுக்காமல் படத் தொகுப்பு செய்துள்ளார். ஒலிப்பதிவு செய்தவர் ஏன் இப்படி அத்தனை நடிகர், நடிகைகளும் மூச்சு விடுவதைக்கூட துல்லியமாக பதிவு செய்தார் என்று தெரியவில்லை. நமக்கே வீசிங் பிராப்ளம் வந்துவிடும் போலிருக்கிறது.
கதைப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் இன்றைக்கும் தினமும் நடக்கும் உண்மை சம்பவத்தைத்தான் இந்தப் படத்தில் இயக்குநர் வெங்கட் ஜனா தன்னால் முடிந்த அளவுக்கு செய்து காட்டியிருக்கிறார்.
கந்து வட்டி கொடுமை என்பது சாதாரண மக்கள் மட்டுமல்ல… மிகப் பெரிய தொழிலதிபர்களே இதில் சிக்கிக் கொண்டு சின்னா பின்னமாகுகிறார்கள். ஆனால் இதை முறைப்படுத்த வேண்டிய அரசுகளோ லஞ்சம் மற்றும் ஊழல் காரணமாக பணக்காரர்களுக்கு மட்டுமே உதவி செய்து ஏழை, எளிய மக்களை அம்போவென விட்டுவிடுகிறது.
அதனால்தான் இந்த கந்து வெட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட பல மிடில் கிளாஸ் மக்கள், ஏழை மக்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அந்த தற்கொலை முடிவு தவறு என்பதை இந்தப் படத்தில் அழுத்தமாக சொல்லி இருக்க வேண்டும். ஆனால் இயக்குநர் சொல்லாதது ஏன் என்று தெரியவில்லை.
திரைக்தையிலும் பல சறுக்கல்களை படம் வைத்திருக்கிறது. வீட்டு வாசலில் ரவுடிகள் நிற்கிறார்கள் என்றால் 100-க்கு போன் செய்யலாம். போலீஸை அழைக்கலாம். புகார் கொடுக்கலாம். அழைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மேலும் புலம்பலாம். மீடியாவுக்குத் தகவல் கொடுக்கலாம். போலீஸூக்கே போகாமல் புருஷனும், பொண்டாட்டியும் வீட்டுக்குள் புலம்பிக் கொண்டேயிருப்பது எந்த ஊர்க் கதை இயக்குநரே..?
இப்போதைய காலச் சூழலில் இது போன்ற மிரட்டல்களை, தாக்குதல்களை சமாளிக்கவும், எதிர் கொள்ளவும் எத்தனையோ வழிகள் உள்ளன. அதை செய்யாமல் எதுவுமே தெரியாத தொழிலதிபராக ரஞ்சித் இருப்பதை நம்மால் நம்ப முடியவில்லை.
“அப்பா இறந்துட்டார்” என்று மெகாலி சொல்வதைக் கேட்ட பின்பும் இருவரும் ஊருக்குக் கிளம்பணுமே என்று நினைக்காமல் கடன் பிரச்சினை பற்றியே பேசுவதைக் கேட்கும்போது நமக்குத்தான் தலை சுற்றுகிறது.
துவக்கத்திலிருந்தே திரைக்கதை மெதுவாக நகர்வதும் அடுத்தடுத்து சோகமான காட்சிகளே திணிக்கப்படுவதுமாக திரைப்படம் முழுமையாக சோக மயமாக்கப்பட்டு வந்திருப்பதால் கொண்டாட்டத்திற்காக தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் நிச்சயமாக ஏமாற்றமடைவார்கள்.
ஆனாலும், இந்தப் படம் ஒரு சிறிய அளவிலான விழிப்புணர்வை ஏழை எளிய மக்களுக்கு கொடுக்கும் என்பதால் நிச்சயமாக இந்த ‘இறுதி முயற்சி’யை நாம் பாராட்டுவோம்.
RATING : 3 / 5