full screen background image

சொட்ட சொட்ட நனையுது – சினிமா விமர்சனம்

சொட்ட சொட்ட நனையுது – சினிமா விமர்சனம்

இந்த உலகத்தில் ஆண்கள்தான் கொடுத்து வைத்தவர்கள். வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். பெண்களால் அவர்கள் அனுபவிக்கும் சுகங்களில் கால்வாசியைகூட தொட முடியவில்லை என்கின்ற வருத்தம் பெண்களுக்கு நிறையவே உண்டு.

ஆனால் அந்த ஆண்களுக்கு இருக்கும் சில பிரச்சனைகள் பெண்களுக்கு பெரிய விஷயமாக தெரியாது. அப்படி ஒரு பிரச்சனைதான் ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை தலை ஆவது.

ஆண்களுக்கு தலையில் வழுக்கை விழுந்தால் அவர்கள் அதை மறைப்பதற்கு என்னமோ செய்து பார்க்கிறார்கள் இப்போதுதான் அனைவருமே விக் வைத்துக் கொண்டு வர துவங்கியிருக்கிறார்கள் அதுவரையில் வழுக்கை தலை என்பது ஒரு கிண்டல் செய்யக் கூடிய ஒரு பாத்திரப் பெயராக அமைந்துவிட்டது.

அப்படி ஒரு வழுக்கை தலையை வைத்துக் கொண்டு அல்லல்படும் ஒரு சராசரி ஆணின் கதைதான் இந்த சொட்ட சொட்ட நனையுது என்ற திரைப்படம்.

கதாநாயகன் வழுக்கை தலை இருப்பதால் இன்னமும் திருமணம் செய்ய முடியாமல் தவிக்கிறார். இவர் பெண் பார்க்க சென்ற இடங்களில் எல்லாம் வழுக்கை தலை என்கின்ற ஒரே ஒரு குறைபாட்டை வைத்து இவருக்கு பெண் கொடுக்க மறுக்கிறார்கள். அதேபோல் காதலியும் கிடைக்காமல் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார் ஹீரோ நிஷாந்த்.

இந்த நேரத்தில்தான் அவரது எதிர் வீட்டுக்கு வரும் ஷாலினி என்ற இளம் பெண்ணை பார்க்கிறார். ஹீரோவுடன் பழகுகிறார் ஷாலினி. இந்தப் பழக்கம் காதலாக மாற வேண்டுமே என்பதற்காக நிஷாந்த் விக்கெல்லாம் வைத்துவிட்டு தனக்கு எந்த குறைபாடும் இல்லை என்பது போல காட்டி திருமணத்திற்கு நிச்சயம் செய்கிறார்.

ஆனால் துரதிஷ்டவசமாக அவருடைய திருமண தினத்தன்று கல்யாணம் நடக்காமல் போகிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு திருமணம் முடிக்கும் நேரத்தில் இப்படி ஒரு பிரச்சனையை எதிர்பார்க்காத நிஷாந்த் மனம் உடைந்து போகிறார். இதற்கு மேல் என்ன ஆனது? அவருக்கு திருமணம் ஆனதா? யாரை திருமணம் செய்தார்? என்பதெல்லாம் இந்த படத்தின் இரண்டாம் பகுதியின் கதை.

அதிகமாக அறிமுகம் இல்லாத நாயகனான நிஷாந்த் ரூஸோ முன்பே பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவை பெரிய அளவுக்கு கவனப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால், இந்தப் படத்தில் இவர் ஏற்றிருக்கும் இந்தக் கதாபாத்திரம் நிச்சயமாக ரசிகர்களிடமும் அவரை கொண்டு போய் சேர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

வழுக்கை தலை என்கின்ற ஒரு பட்டப் பெயரால் சுமந்து கொண்டு வாழ்நாள் முழுவதும் பல இடங்களில் அவமானப்படும் நிஷாந்த் ந்த அவமானங்களை தன் முகத்தில் காட்டும்பொழுதும், வசனத்தில் தெறிக்க விடும்பொழுதும் நம்முடைய பரிதாப உணர்வை மிக எளிதாக பெற்று விட்டார்.

இந்த வழுக்கை தலை மேக்கப் அணிந்து கொண்டு அவர் எப்படி இத்தனை நாட்கள் தொடர்ச்சியாக நடித்தார் என்பது ஆச்சரியமான ஒரு விஷயம். ஏனெனில், அந்த மேக்கப் போடுவதற்கு 3 மணி நேரம் ஆகும். அதன் பிறகு அதை கழட்டுவதற்கும் ஒரு மணி நேரம் ஆகும். இந்த அளவுக்கு டெடிகேஷன் மனதுடன் அவர் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பது அவருடைய நடிப்பு வேட்கையை காட்டுகிறது.

நாயகிகளாக நடித்திருக்கும் ஷாலினி மற்றும் பிக்பாஸ் வர்ஷினி இருவருக்கும் ஸ்கோப் பெரிதாக இல்லை என்றாலும் கிடைத்த இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

மேலும் அவ்வப்பொழுது சிரிப்பை வரவழைப்பதற்காக ரோபோ சங்கர் கே.பி.ஒய். ராஜா, வினோத் என்று விஜய் டிவியின் ஆஸ்தான நகைச்சுவை நடிகர்கள் அனைவருமே இந்த படத்தில் இடம் பெற்று கொஞ்சம் நம்மை சிரிக்கவும் வைத்திருக்கிறார்கள்.

வழுக்கை தலையை சரி செய்வதற்காக ஹீரோவின் அம்மாவும், அப்பாவும் பல்வேறு ஐடியாக்களை செய்து ஒவ்வொன்றும் சொதப்பலாகும் காட்சிகளில் கொஞ்சம் நகைச்சுவையை வரவழைத்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ரஹேஷ் தன்னுடைய கேமராவுக்கு மிக அதிகமான வேலையை கொடுத்திருக்கிறார். பல நேரங்களில் காரைக்குடியை பருந்து வடிவத்தில் பதிவு செய்துவிட்டு மீதிக் காட்சிகளை காரைக்குடியில் இருக்கும் வீட்டுக்குள்ளேயே  படத்தை எடுத்து வைத்திருப்பதால் கொஞ்சம் அழுகாமல், குலுங்காமல் தன்னுடைய பணியை நிறைவு செய்து இருக்கிறார்.

இசையமைப்பாளர் ரஞ்சித் துணியின் இசையில் பாடல்கள் ஒரு முறை மட்டுமே கேட்க முடிந்திருக்கிறது. பின்னணி இசையில் கொஞ்சம் நகைச்சுவை உணர்வை தூண்டி விடுவதுபோல இசையை அமைத்து தன்னுடைய வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார் இசையமைப்பாளர்.

இளம் வயதில் பல ஆண்களுக்கு முடி கொட்டி வழுக்கை தலை வருவது இயற்கை. அவர்களுடைய ஜீனில் அதுதான் பதிவாகி இருக்கும். இதற்காக யாரையும் குற்றம் சொல்ல முடியாது. அது நிச்சயமாக உடல் ஊனமும் அல்ல. அது ஒரு சின்ன பிரச்சனை.

முடி இருந்தாலும் ஒன்று.. இல்லாமல் இருந்தாலும் ஒன்று.. என்பதுதான் ஆண்களின் ஒரே கொள்கையாக இருக்க வேண்டும். ஆனால், வழுக்கைத் தலை விழுந்தவர்களை சக ஆண்களே கிண்டல், கேலி செய்து அதை ஒரு மிகப் பெரிய உடல் ஊனம் போல் பல ஆண்டுகளாக சித்தரித்து வந்திருக்கிறார்கள்.

அந்த சித்தரிப்புதான் இந்தப் படத்தின் ஹீரோவை போல பல ஆண்களுக்கு பெண் கிடைக்காமல் கல்யாணத்திற்கு பெண் கிடைக்காமல் அல்லல்படும் அளவுக்குக் கொண்டு போய்விட்டிருக்கிறது.

அப்படி ஒரு அல்லலை படும் ஹீரோவை முன்னிறுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம், முதல் பாதியில் ஓகே என்றாலும் இரண்டாம் பாதியில் கொஞ்சம் அப்படி இப்படியாக வளைந்து நெளிந்து செல்வதால் படம் ரொம்ப நேரம் ஆச்சோ என்கின்ற ஒரு கேள்வியை நமக்குள் எழுப்பி இருக்கிறது.

ஹீரோ நிஷாந்தின் அர்ப்பணிப்பான அந்த நடிப்பு திறமைக்காகவும், வழுக்கை என்கின்ற ஒரு விஷயத்தை முன் வைத்து அது ஒரு சாதாரண பிரச்சனை என்று புதிய சமுதாயத்திற்கு சொல்லிக் கொடுக்கும்விதமாக இந்தப் படத்தை எடுத்திருப்பதால் இந்தப் பட இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.

RATING : 3.5 / 5

Our Score